காஷ்மீர் மகாராஜா தனது சமஸ்தானத்தில் உள்ள மக்களில் தீண்டாதார் என்பதாக ஒரு பிரிவு இருக்கக் கூடாதென்றும் அவர்களுக்குக் குளம், கிணறு, பள்ளிக்கூடம், தெரு முதலியவைகளில் எவ்விதத் தடங்கலுமிருக்கக் கூடாதென்றும் ஒரு பொது உத்திரவு பிறப்பித்திருப்பதுடன் காஷ்மீர சமஸ்தானத்தில் தீண்டாதார் என்பவருக்கும் மற்ற வகுப்பாரைப் போலவே சமமான தகுந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டு மென்றும் தீர்மானித்திருப்பதுடன், அவர்கள் கல்வியில் பிற்போக்காய் இருப்பதை உத்தேசித்து எல்லோருக்கும் கல்வி ஏற்படும்படி செய்ய இது வரை கல்விக் காக உபகாரச் சம்பளம் முதலியவைகள் கொடுத்து வந்ததை இவ் வருஷம் இரட்டிப்பாக்கிக் கொடுத்து வருவதாகவும் எல்லாவிதத்திலும் இதர பிரஜைகளுக்குச் சமமாகவே அவர்களையும் பாவிக்க வேண்டு மென்றும் அரசாங்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட சீர்திருத்தவாதிகள் ஒவ்வொரு வரும் ஆச்சரியத்தோடு மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இந்த உத்திரவிலிருந்து நாம் அதிகமாக மகிழ்ச்சி அடைவது எதுபற்றியென்றால் தீண்டாதார் கல்வி அபிவிருத்திக்கு உபகாரத் தொகையை தாராளமாகக் கொடுத்து உதவியதைப் பற்றியேயாகும்.
ஏனெனில் இப்போதைய நிலையில் நமது நாட்டுத் தீண்டாதார் எனப்படுபவருக்கு உத்தியோகம் உரிமை முதலியவைகள் கொடுக்கப்படுவதற்கு அதன் எதிரிகளால் சொல்லப்படும் காரணம் பெரும்பாலும் இரண்டேயாகும்.
அதாவது ஒன்று அவர்களுக்குக் கல்வியில்லை என்பது. இரண்டு அவர்கள் சுத்தமாகயில்லை என்பது ஆகிய இவையாகும். இவற்றுள் கல்வி கற்கவோ அவர்களுக்குப் பணம் கிடையாது.
சுத்தமாகவும், சுசியாகவுமிருக்கவோ குளம், கிணறு சுவாதீனம் கிடையாது. அவர்கள் அதிகமான பணம் சம்பாதிக்கவோ, அவர்களுக்கு சில இடங்களில் தெருவில் நடக்கும் உரிமையும், வீடுகளில், கடைகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் உரிமையும் கிடையாது. மற்ற படி மூட்டை முடிச்சுகள் தூக்கிக் கூலி வேலை செய்யவோ அவர்களுக்கு அப்படிப்பட்ட சாமான் எதையும் தொடவுரிமை கிடையாது.
காடுகளிலும், வயல்களிலும் அதுவும் வயிற்றுக்கு அரைக் கஞ்சிக்கும் போதாத அளவுக்கு வேலை செய்ய மாத்திரம் வழியுண்டு. ஆகவே இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களை சுசியில்லை, படிப்பில்லை என்று சொல்லிப் பொது உரிமைகள் கொடுக்க மறுப்பதானது அவர்களுக்கு மனித உரிமையைக் கொடுக்க மறுப்பதானது அவர்களுக்கு மனித உரிமையைக் கொடுக்க அந்தரங்கத்தில் இஷ்டமில்லை என்பதைத் தவிர வேறல்லயென்பது அறிவாளிகளுக்கு நன்றாய் விளங்கும்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீர அரசர் குளம் குட்டை முதலியவைகளை பொதுவாக்கினதோடு, படிப்புக்கு உதவித் தொகையும் கொடுத்தது தான் மிகவும் பாராட்டப்பட்டதாகும்.
நாமும் சென்றவருஷம் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் தீண்டாதார் என்பவர்கள் படிப்பு விஷயத்தில் அரசாங்கத்தார் சாப்பாடும், துணியும், புஸ்தகங்களும் வாங்கிக் கொடுத்து அவர்களைப் படிக்க வைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் செய்திருக்கின்றோம்.
அதை தஞ்சாவூர் முதலிய இரண்டொரு சுயமரியாதை இயக்கத் தலைவர்களைக் கொண்ட ஜில்லா போர்டுகள் தங்களால் கூடிய வரை முயற்சி எடுத்து சிறிதள வுக்காவது அமுலுக்குக் கொண்டு வந்திருப்பதுடன் சுயமரியாதைக் கொள்கையில் பற்றுள்ள கல்வி மந்திரியும் அது விஷயத்தில் சற்று கவனம் செலுத்தி வந்திருக்கின்றார்.
எனவே காஷ்மீர ராஜா அவர்களும் தீண்டாதாருக்கு கல்வி இல்லாததற்கு அடிப்படையான காரணம் என்ன வென்பதை உணர்ந்து அதற்காகப் பணம் தாராளமாய் ஒதுக்கி வைத்திருப்பதானது மிக மிகப் போற்றத் தகுந்த சுயமரியாதைக் கொள்கையாகும்.
நமது அரசாங்கமும் தீண்டாதார் கல்வி விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்ல வேண்டுமானால் இனி அவர்களுடைய சம்பளத்தை மாத்திரம் குறைப்பதாலோ அல்லது அடியோடு தள்ளி விடுவதாலோ ஒரு காரியமும் நடந்து விடாது.
மற்றபடி ஜில்லா ஒன்றிற்கு இத்தனை லக்ஷ ரூபாய் தீண்டாதார் கல்விக்கு என்று ஒதுக்கி வைத்து அதில் அவர்களுக்கு சாப்பாடு போட்டு படிப்புச் சொல்லி வைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் தான் அவர்கள் படிக்க முடியும். ஏனென்றால் தீண்டாதவர்கள் என்பவர்களின் பிள்ளைகள் அவர்களது வயிற்றிற்கும், அவர்கள் பெற்றோர்களது வயிற்றிற் கும் சம்பாதித்துத் தீரவேண்டிய அவ்வளவு ஏழைகளாகவும், சம்பாதிக்க வழியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆதலால் மேற்கண்டபடி பணம் ஒதுக்குவதுடன் அந்த இலாகா நிர்வாகத்தையும் கண்டிப்பாக பார்ப்பன உத்தியோகஸ்தரிடமும் பார்ப்பன உபாத்தியாயரிடமும் விடாமல் கூடுமான வரை தீண்டாதார் என்கின்றவர்களில் இருந்தே தெரிந்தெடுத்த கனவான் களிடமே ஒப்புவிக்கப் பார்க்க வேண்டும்.
தவிரவும், இந்தப் பணத்தையும், நிர்வாகத்தையும் ஸ்தல ஸ்தாபனங்களிடம் ஒப்புவிப்பது என்பதும் இன்றைய நிலைமையில் அவ்வளவு சரியானதென்று நாம் ஒப்புக் கொள்ளக்கூடவில்லை.
ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள தலைவர்கள் இதுவரை தங்கள் அதிகாரங்களை தீண்டாதார்கள் விஷயத்தில் எப்படி உபயோகித்தார்கள்; உபயோகிக்கின்றார்கள் என்று கவனித்துப் பார்த்தால் அதன் யோக்கியதைகளை ஒருவாறு அறிந்து கொள் ளலாம். சில இடங்களில் ஜில்லா போர்டு தலைவர்களாவது இவ்விஷயங் களில் சற்று யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறார்களென்னலாம்.
ஆனால் 100-க்கு 90 தாலூகா போர்டு தலைவர்கள் தீண்டாதார்கள் விஷயத்தில் மிகமிகக் கேவலமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தைரியமாகச் சொல்லுவோம்.
குறிப்பாய் கவனிப்போமானால் தீண்டப்படாதாருக்காக வெட்டும் கிணற்றுக் கிராண்டு பணங்களிலும் அவர்களுக்காகக் கட்டும் பள்ளிக்கூட கிராண்டு பணங்களிலும் கூட எத்தனையோ பேர்கள் நியாயத் தவறுதலாய் நடந்திருப்பதுடன் அவர்களது நாமினேஷன்களைப் பெரிதும் மறுத்தே வந்து இருக்கின்றார்கள்.
(பொதுவாக நாடு சமூக சீர்திருத் தமடைய வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு சந்தேகமற்ற நாணயங்கள் ஏற்பட வேண்டுமானால் முதலில் தாலூகா போர்டுகளை எடுத்துவிட வேண்டியது அவசியமாகும். ஆதலால் அடுத்த லோக்கல்போர்டு சட்டத் திருத் தத்திலாவது இந்த விஷயத்தை எதிர்பார்க்கலாமென்றேயிருக்கின்றோம்.)
இவ்விஷயத்தில் இவ்வளவு தூரம் நாம் எழுதுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் நம்மிடம் வந்து குவிந்து கொண்டிருப்பதேயாகும். அவை பெரிதும் என்னவெனில் கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் அப் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்றும், தீண்டாத வகுப்பு உபாத்தியாயர்களைச் சரியாய் நடத்துவதில்லையென்றும், நமக்குப் புகார் வராத நாளே கிடையாதென்று சொல்லலாம்.
அது மாத்திரமல்லாமல் பார்ப்பன கல்வி உத்தியோகஸ்தர்களும், பார்ப்பன உபாத்தியாயர்களும், தாலூகா போர்டிலுள்ள பார்ப்பன குமாஸ்தாக்களும் செய்யும் சூட்சிகளை அறிய சக்தியில்லாமலும் அவர்களின் தாட்சண்ணியங்களை மீற யோக்கியதையில்லாமலும் அவர்களது மாய்கையில் சிக்கி விடுவதும் மற்றும் தாலூகா போர்டு தலைவர்கள் பெரும்பாலும் கிராமவாசிகளாகவும் போதிய கல்வி அறிவில்லாதவர்களாகவும் ஜாதி ஆணவம் பிடித்திருப்பதுடன் உலக ஞானமில்லாதவர்களாகவும், வருணாசிரமக் கொள்கை மதக்காரர்களா கவுமிருப்பதால் கண்டிப்பாய் அவர்களை இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவோ, யோக்கியமாய் நடைபெறவோ சம்மதிக்கமாட்டார்கள் என்கின்ற உறுதி நமக்கு உண்டு.
ஆகையால் தான் அப்படிப்பட்டவர்களிடம் இந்த வேலையை ஒப்புவிப்பது என்பது தீண்டாதார் என்பவர்களுக்குச் சிறிதும் நன்மையைப் பயக்கும் படியான காரியமாகாது என்கின்றோம். மற்றபடி ஏதோ இரண்டொருவர்கள் தாலூகா போர்டு நிர்வாகங்களில் சற்று ஞான முடையவர்களாகவும் பொது நோக்கமுடையவர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட அந்த இரண்டொருவரை உத்தேசித்து மற்ற எல்லோரையும் நம்பி அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்புவிப்பது ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் தீண்டப்படாதார் என்பவர்கள் நிலைமையை உயர்த்துவதைப் பொறுத்த எல்லாக் காரியமும் சர்க்காரிடமேயிருக்க வேண்டுமென்பதும், அதன் பலனுக்கு அவர்களே பொறுப்பாளியாயிருக்க வேண்டுமென்பதும் நமது பலமான அபிப்பிராயமாகும்.
உதாரணமாக நம்மை ஒருவன் தாழ்ந்த ஜாதி என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனிடம் நமது நன்மையை ஒப்புவிக்க முடியுமா என்று கவனித்தால் விளங்கிவிடும்.
ஆதலால் எந்தக் காரணத்தினாலாவது சர்க்காருக்கு இவ் விஷயம் தாங்களே பொறுப்பேற்று நடத்துவது கஷ்டமாயிருந்தால் இப்போது மதுவிலக்குக்கு ஒரு பிரசாரக் கமிட்டி ஏற்படுத்தி அதற்காக கொஞ்சம் பணமும் ஒதுக்கி வைத்து அக்கமிட்டி வசம் அந்த வேலையையும் பணத்தையும் ஒப்புவித்திருப்பது போல் தீண்டாமை விலக்குக்கும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதில் பெரிதும் அவ் வகுப்பார்களையே நியமித்து அதன் வசம் அப்பொறுப்புகளை ஒப்புவித்து சர்க்கார் மேற்பார்வையிலேயே வேலை செய்யச் செய்வது மிக்கப் பயனளிக்கும்.
இப்போதுள்ள மதுவிலக்குக் கமிட்டியை விட இத்தீண்டாமை விலக்குக்கு கமிட்டி ஏற்படுத்தினால் அது மிக்க பிரயோஜனகரமாகவும் புத்திசாலித் தனமாகவும் நாணயமானதுமாகவும் கூட இருக்குமென்று சொல்லுவோம். இதுவும் முடியாத காரியமாகுமானால் கிறிஸ்துவ பாதிரிமார்களிடத்திலாவது இப் பொறுப்பை ஒப்புவிப்பது ஸ்தல ஸ்தாபனத்தினிடம் ஒப்புவிப்பதை விட மோசமானதாகாது.
ஆகையால் அடுத்த சட்டசபைக் காலாவதிக்குள் அடுத்த மந்திரி களாட்சியில் இவ் விஷயம் அவசியம் கவனிக்கப் படவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 07.09.1930)