நாகர்கோவில் மணி அடிச்சான் கோவில் சந்திப்பில் கட்டபொம்மன் சந்தி சுடலைமாடன் கோவிலின் அருகே மஞ்சணை விற்றுக் கொண்டிருந்த வயதான. பெண் ஒருத்தியிடம் தென் திருவிதாங்கூரில் கடைசியாக பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கிய ஒருவனைப் பற்றிய ஒப்பாரி பாடலை கேட்கப் போனேன். இது 70களின் பாதியில் இருக்கலாம். அந்த மூதாட்டி என்னிடம் ஒப்பாரிப் பாட்டை விட்டுவிட்டு வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்தாள். அந்த விஷயங்களும் சுவையாகத்தான் இருந்தன. நான் எனக்குத் தேவையான இடத்துக்கு அவளை திசை திருப்பி பேச வைத்தேன். அந்த மூதாட்டி நாகர்கோவிலில் நடந்த கடைசி தூக்கு பற்றி செய்தியைக் கேட்டபோது,

"என்னை மயங்க வைத்த சீமானே தங்க கொடபுடிச்சு நீங்க தலைவாசல் போகையிலே பார்ப்பார்கள் கோடி உண்டு உன் வாசல் அழகுச் சம்பா கொத்தமல்லி சம்பா வச்சு நட்டு"

என்று பாடிக் கொண்டே போனாள். பாடும் போதே தான் அழுவது போன்று பாவனையைக் காட்டினாள். வடியாத மூக்கை துடைத்துக் கொண்டாள். நீர் பெருகாத கண்ணைக் கையால் நீவி விட்டாள். அந்தப் பாட்டி சொந்தக்காரர்களின் வீடுகளுக்கு ஒப்பாரி பாடப் போகின்றவள். அதற்கென்று கூலி வாங்குவதில்லை. 16 நாட்கள் துட்டி வீட்டில் சாப்பாடு, புதிய சேலை கிடைக்கும். ஊரில் யாராவது வயதானவர் செத்துப் போனால் ஒப்பாரி பாடத் தயார் ஆகி விடுவாள். அது அவளது பேச்சில் தெரிந்தது.sand horseமீண்டும் அவளிடம் தூக்கு பற்றிய செய்தியைக் கேட்டேன். நான் அறிந்த விஷயத்தைச் சாடை மடையாச் சொன்னேன். ஒரு விஷயத்தை நேரடியாக கேட்பதை விட செய்திகளைத் துணுக்குகளாக சொல்லி முழுமையான செய்திகளைச் சேகரிப்பது சரியான முறை என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். கேள்வி பதில் பட்டியல் என்பது சரியான நெறிமுறை என்று தோன்றவில்லை. சில ஆய்வுகளுக்கு அது வெற்றி தரலாம். ஆனால் இதுபோன்ற பழைய விஷயங்களைக் கேட்பதற்கு வேறு சில உத்திகளைக் கையாள வேண்டி இருக்கிறது. பாட்டி விரிவாகவே பேச ஆரம்பித்தாள். பாட்டி சொன்னதன் சுருக்கம் இதுதான்.

கடைசியாக தூக்கிலே தொங்கிய அந்த குற்றவாளி நல்லூர் என்னும் ஊரை அடுத்து இருந்த ஒரு சிறு குக்கிராமத்தில் பிறந்தவன். கூலி விவசாயி, ஊர் சூழல், குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு, பஞ்சாயத்து தலையீடு என பல காரணங்களால் குற்றவாளி ஆனான். வேறு வழியில்லை. கொலை, வழிப்பறி என அவனது. காரியங்கள் பெருகிக்கொண்டே போனது. அவன் செய்யாத குற்றங்கள் எல்லாம் அவன் மீது சுமத்தப்பட்டன. அந்தக் காலத்தில் போலீஸ் கண்காணிப்பு என்பது கடன்கழிப்புக்குத்தான். இப்படியான நிலையில் தான் அவன் அவளைக் கொலை செய்தான் என்று குற்றம் சாட்டப்பட்டான்.

பாட்டி இந்தக் கதைச் சுருக்கத்தையும் அவனைப் பற்றிய செய்திகளையும் சொல்லிவிட்டு அவன் கடைசியாக நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் தூக்கிலே தொங்குவதற்கு முன்பு பேசினானே ஒரு பேச்சு. எங்கிருந்து தான் அவனுக்கு அந்த ஞானம் வந்ததோ தெரியவில்லை. அவனது வைப்பாட்டி நல்லூர்காரியை அத்தாணிமார் குளத்தில் தள்ளி கழுத்தை நெரித்துக் கொன்றான் என்பது தான் அவன் பேரில் குற்றம். எல்லோரும் அதை உண்மை என்று சொன்னார்கள் என்று சொல்லிக்கொண்டே போனாள்.

அவன் கடைசி வரை தன் குற்றத்தை ஒத்துக் கொள்ளவில்லை, அவன் நான் இந்த கொலையைச் செய்யவில்லை, ஆனால் வேறு பலரைக் கொன்றிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு யாரை யாரைக் கொன்றேன் என்ற பட்டியலையும் வெளியிட்டானாம். செய்த குற்றங்களுக்கு எல்லாம் தப்பி தப்பி வந்தேன். செய்யாத குத்தத்துக்கு மாட்டி விட்டேன். இதுதான் கடவுள் தண்டனை என்று சொல்லிவிட்டு கூட்டத்தைப் பார்த்து கையை மேலே கூப்பி கும்பிட்டானாம். கூடி நின்றவர்கள் மவுனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அவனது உடல் ஒரு சிறு நடுக்கத்துடன் லேசாக அசைந்து நின்றது.

தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த ஆரச்சர் கீழே இறங்கி வந்தார். அவர் குற்றவாளியைத் தூக்கில் போடும் பொறுப்பை வகித்தவர். ஆரச்சர், ஆஜான பாகுவானவர், திடகாத்திரமானவர். மைக் கறுப்பு நிறத்தினர். தூக்கு மேடையின் கீழே கறுத்த கருமத்த மாட்டின் மேல் (எருமை) இரட்டைமுரசு இருந்தது. மாட்டின் இரண்டு பக்கமும் நின்று கொண்டிருந்த இருவரும் முரசை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கொம்பை ஊதினான்

இசக்கியம்மன் கோவிலில் குற்றவாளிக்குப் போடப்பட்ட கொலை சோற்று சாப்பாட்டிற்கு நடந்த பூசையில் பரவிய சாம்பிராணி வாசனை அங்கிருந்து போகவில்லை. அந்த இடத்தில் மேடு பள்ளமான இடங்களில் மாட்டு வண்டிகளில் வந்தவர்களின் கூட்டம் நிரம்பிவழிந்தது. அவர்கள் தூக்கு போடுவதை வேடிக்கை பார்க்க வந்தார்கள். அது அன்றைய நடைமுறை. தூக்காளியின் பேச்சு கூடி நின்ற மக்களைச் சலசலப்புக்கு உள்ளாக்கி விட்டது. ஆரச்சர் கையைக் காட்டினார். எருமையின் மேல் இருந்த முரசை அடிப்பவன் அமைதியானான். கொம்பு ஊதுபவனும் கொம்பைத் தாழ்த்திப் பிடித்தான்.

இந்தச் சமயத்தில் ஒரு குதிரை வேகமா வந்து ஆரச்சரின் முன்னே நின்றது. குதிரைக்காரன் லாவகமாக குதிரையிலிருந்து இறங்கினான். இடுப்பு பட்டையிலிருந்து சிறு ஓலையை எடுத்து ஆரச்சரின் கையிலே கொடுத்தான். ஆரச்சர் அதை வாங்கிப் படித்தார். குதிரைக்காரனைப் பார்த்து "அய்யா குற்றவாளியைத் தூக்கிலே போட்டு விட்டோம், அவனை விட்டு விடலாம், குற்றம் உறுதியாகவில்லை என்னும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறீரே! கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரக்கூடாதா! குதிரை தானே வேகமாக வரலாமே? என்ன பெரிய தவறு நடந்துவிட்டது? அரசரின் உத்தரவை ஏன் தாமதமாகக் கொண்டு வந்தீர்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்

குதிரைக்காரன் "நான் வேகமாக தான் வந்தேன் குதிரை தான் ஓடவில்லை. வழியில் சண்டித்தனம் செய்தது. அடித்துப் பிடித்து எழுப்பி வருகிறேன் என் மேல் தவறு இல்லை குதிரையின் மேல் தான் குற்றம்" என்று தழுதழுத்த குரலில் சொன்னான். இதைக் கேட்ட ஆரச்சர் "அப்படியானால், இவனைத் தூக்கிலே போட்ட பாவம் அரசனைச் சேராது, என்னையும் சேராது, உன்னையும் சேராது, பாவமெல்லாம் குதிரைக்குத்தான்" என்று சொல்லிவிட்டு முரசடிப்பவனைப் பார்த்து கையைக் காட்டினார். அவன் முரசை அடித்தான். கொம்பு ஊதப்பட்டது

குதிரைக்காரன் தலையைக் குனிந்த படி இசக்கியம்மன் கோவிலை நோக்கி நடந்தான். குதிரை பின்னே சென்றது. உண்மையில் இது ஒரு நாடகம். ஆரச்சர் குற்றவாளியைத் தூக்கில் போடும் போது குதிரைக்காரன் தொலைவில் ஒரு மரத்தின் கீழ் மறைந்து நிற்பான். குற்றவாளியைத் தூக்கில் போடுவது வரை காத்திருப்பான். முரசு சத்தம் கேட்டதும் குதிரை மேல் ஏறி ஓடி வருவதாக பாவனை செய்வான்.

இந்த நாடகத்தைப் பற்றி அந்தப் பாட்டி மட்டுமல்ல. வேறு சிலரிடமும் கேட்டிருக்கிறேன். எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு புளிய மரத்தின் கதை நாவலில் ஆசான் வாய்வழி இந்த நாடகத்தை எழுதி இருக்கிறார். ஏதோ காரணத்தால் அந்தப் பகுதி புத்தகமாக வரும்போது நழுவிவிட்டது. அவர் முதலில் சரஸ்வதி மாத இதழில் அந்த நாவலைத் தொடராக எழுதிய போது இந்தப் பகுதியைச் சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார். ஆனால் புத்தகமாக்கும் போது இல்லாமல் ஆகிவிட்டது.

மூதாட்டி கடைசியாக தூக்கில் தொங்கியவன் கதையைச் சொன்னபோது குதிரையின் மேல் பாவம் வரும்படி நடந்த நாடகம் கட்டுக்கதை அல்ல. அது உண்மை நிகழ்ச்சி என்பதைச் சிதம்பர நாடார் வில்லுப்பாட்டு ஏட்டைப் படித்த போது அறிந்து கொண்டேன்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் நாகர்கோவிலில் இருந்து ஆறு கிலோமீட்டர் தெற்கே உள்ள மதுசூதனபுரம் சிறு கிராமத்தில் நடந்த கொடை விழாவிற்குப் போயிருந்தேன். அது பெருமாள் சுவாமி கோவில் பெருமாள் சாமியைப் பற்றிய வில்லுப்பாட்டைப் பதிவு செய்யத்தான் போயிருந்தேன். இந்தக் கோவிலில் சிதம்பர நாடார் துணைத்தெய்வமாக இருந்தார் என்பதும் போன பிறகு தான் அறிந்தேன். அதற்கு என்று ஒரு கதை இருந்தது. அந்தக் கதையை முத்துசாமிப் புலவர் பாடிய போது சொன்னார்.

சிதம்பர நாடார் கதை அப்போது அச்சில் வரவில்லை. எனக்கு ஏடும் கிடைக்கவில்லை. வில்லிசை கலைஞர்கள் சிலரிடம் கையெழுத்து வடிவில் இருந்தது தெரியும். நான் முத்துசாமிப் புலவரின் நிகழ்ச்சியைப் பதிவு செய்தேன். அவரிடமிருந்த கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொண்டேன்

சிதம்பர நாடாரின் கதை நாஞ்சில் நாட்டு பறக்கை என்னும் கிராமத்துடன் தொடர்புடையது. புத்தளம் என்னும் கிராமத்தை அடுத்த பகுதிகளில் வரி பிடிக்கும் பொறுப்பில் சிதம்பர நாடார் இருந்தார். இவர் வைத்தியம் அறிந்தவர். மந்திரவாதியும் கூட. முனிசி என்ற பட்டத்தைச் சுமந்து வந்தவர். அவர் தன்னுடைய வெள்ளைக் குதிரையில் எப்போதும் வலம் வருவார். அழகான இந்த இளைஞர் திருமணமாகாதவரும் கூட. முறைப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்.

ஒரு நாள் காலையில் அவர் குதிரையின் மேல் ஏறி பறக்கை ஊர் பிராமண சுடுகாடு வழி சென்று கொண்டிருந்தார். அப்போது சுடுகாட்டில் பிராமணர்கள் கூடியிருப்பதைப் பார்த்தார். கூட்டம் கலைவது வரை காத்திருந்தார். கடைசியாகச் சென்ற பிராமணர் ஒருவரிடம் செய்தி கேட்டார். அந்த பிராமணர் 16 வயது பிராமணப் பெண் ஒருத்தி பாம்பு கடித்து இறந்த செய்தியைச் சொன்னார்.

அந்த முதியவர் சென்றதும் சிதம்பரநாடார் பிணக்குழியின் அருகே சென்றார். பிணத்தின் மேல் மூடப்பட்டிருந்த தேங்காய் தோட்டை அகற்றினார். பிராமணப் பெண்ணின் பிணத்தை தூக்கி சமதரையில் வைத்தார். பிராமணர் சொன்னதை நினைவு கூர்ந்தார். நல்ல பாம்பு அவளது பாதத்தை தீண்டி விட்டது. சிகிச்சையால் பலன் இல்லை. இறந்துவிட்டாள். பாம்பு கடித்த பாதம் எது என்பதை நோட்டமிட்டார். அதைக் கணக்கில் கொண்டு மந்திரம் ஓதினார். அவளைக் கடித்த பாம்பை வரவழைத்தார். அது வந்தது. அவளது பாதத்தில் இருந்து விஷத்தை உறிஞ்சியது. கொஞ்ச நேரத்தில் அவள் கண் விழித்தாள். அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்.

அவளுக்குப் பாம்பு கடித்தது நினைவுக்கு வந்தது. சிதம்பர நாடார் அவள் பிழைத்த வரலாற்றைச் சொன்னார். அவள் அவரை வாஞ்சையுடன் பார்த்தாள். அவர் பெண்ணே உன் வீட்டில் உன்னை ஒப்படைக்கிறேன். உன் ஆட்களை வரவழைக்கிறேன் என்றார். அவள் மறுத்தாள். நான் உம்முடன் வருகிறேன் நீரே என் மணவாளர் என்றாள். அவரும் அதற்கு இசைந்தார். அவளைக் குதிரை மீது அமர்த்தி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்

சிதம்பர நாடாரும் அந்தப் பிராமணப் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். அவள் கர்ப்பமானாள். இந்தச் செய்தி பறக்கை பிராமணர்களுக்குத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு இறந்து போன தன் மகள் பிழைத்து விட்டாள் என்பது சந்தோஷத்தை அளிக்கவில்லை. வேறு ஜாதிக்காரருடன் அவள் வாழ்கின்றாள் என்பது அவமானமாக இருந்தது.

பறக்கை ஊர்ப் பிராமணர்கள் சிதம்பர நாடார் பிராமணப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்று விட்டார் என்ற ஒரு பொய்ச் செய்தியைத் திருவிதாங்கூர் தளவாய்க்கு அனுப்பினர். அவர் விசாரித்தார். அன்றைய வழக்கப்படியே அது பெரும் குற்றம். அதிலும் பிராமணப் பெண்ணை கவர்ந்து சென்றால் மரண தண்டனை.

தளபதி சிதம்பர நாடாரைத் தூக்கில் போடும்படி உத்தரவிட்டார். அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆரச்சருக்கு என்று ஒலை அனுப்பினார். ஆரச்சர் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்தார். தூக்கில் போட வேண்டிய நாளை நிச்சயித்தார். குறிப்பிட்ட நேரத்தில் அவரைத் தூக்கிலே போட்டு விட்டார். அவர் தூக்கில் தொங்கிய கொஞ்ச நேரத்தில் ஒரு குதிரை வந்தது. குதிரைக்காரன் ஒரு ஓலையை ஆரச்சரிடம் கொடுத்தான். குதிரைக்காரனின் பதிவு நாடகம் நடந்து முடிந்தது.

சிதம்பர நாடாரின் மனைவி கணவன் இறந்ததை அறிந்தாள். தன் நாக்கைப் பிடுங்கி உயிரை மாய்த்துக் கொண்டாள். நாடாரின் உறவினர்கள் கணவன் மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்

நான் சிதம்பர நாடார் கதையைப் பதிவு செய்த போது (1983) வில்லிசைக் கலைஞர் முத்துசாமி புலவர் இந்தக் கதையை நான் ஏட்டில் உள்ளபடி மட்டும் பாடவில்லை. ஏற்கனவே நான் கேட்டதையும் சேர்த்துப் பாடினேன் என்று சொன்னார். குதிரைக்காரனுக்கும் ஆரச்சருக்கும் நடந்த உரையாடலை அவர் வில்லிசை நிகழ்ச்சியில் பாடினார். ஆனால் சுருக்கமாக இருந்தது.

நான் தனியாக முத்துசாமி புலவரைப் பேட்டி கண்டபோது ஆரச்சருக்கும் குதிரைக்காரனுக்கும் நடந்த உரையாடலை விரிவாகச் சொன்னார். ஆனால் அச்சில் வந்த சிதம்பர நாடார் கதையில் இச்செய்தி கொஞ்சம் மாற்றத்துடன் உள்ளது.

அச்சில் வந்த கதைப்பாடலில் (தங்கதுரை 1982) குதிரைக்காரன் தூரத்திலிருந்து ஆரச்சருக்கு சிதம்பர நாடாரைத் தூக்கில் போட வேண்டாம் என்று கை காட்டுகிறான். தூக்கில் போடும் பணியாளன் அந்த சைசையைப் புரியாமல் சிதம்பர நாடாரை தூக்கில் போட்டுவிட்டான். அதன் பிறகு குதிரைக்காரன் ஆரச்சரிடம் நான் சைகை செய்தேனே கேட்கவில்லையா என்று சொல்லுகிறான். பணியாளனோ அதைத் தவறாகப் புரிந்து கொண்டேன் என்கிறான் என்னும் செய்தி உள்ளது

திருவிதாங்கூரில் குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கு உரிய பொறுப்பு அதிகாரியாக இருந்த ஆரச்சர் பற்றிய விவரங்கள் குறைவாகத்தான் கிடைத்தன. இந்தச் சொல் எந்த மொழியில் உள்ளது என்பதும் தெரியவில்லை. ஆரச்சரைப் பற்றிய செய்திகள் வாய்மொழியாகக் கிடைக்கின்றன. தேவ சகாயம் பிள்ளை என்ற நாடக ஏட்டைப் பதிப்பிப்பதற்காக என் நண்பர் முயற்சித்த போது ஆரச்சர் பற்றிய செய்திகளைச் சேகரித்ததாகக் சொன்னார்.

தேவசகாயம் பிள்ளை இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறியவர். அப்போதைய அரசு அவர் மீது சில குற்றங்களைச் சுமத்தி மரண தண்டனை விதித்தது. அப்போது அவரை நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் என்ற இடத்தில் காவலில் வைத்திருந்தார்கள். தேவசகாயத்தைக் காவல் காக்கும் பொறுப்பு ஆரச்சருக்கு. இந்தச் செய்தி நாடகத்தில் வருகிறது. தேவசகாயத்தின் அற்புதங்களை நேரில் கண்ட ஆரச்சர் அவரை மரியாதையுடன் நடத்தி இருக்கிறார்

பண்டைய தென் திருவிதாங்கூரில் ஆரச்சர் பதவி வகித்தவர்கள் எல்லோருமே மக்கள் வழி வேளாளராய் இருந்தனர். இவர்களுக்கு வயல் ‘தோப்பு' வீடு என சொத்துகள் எல்லாம் காணியாட்சையாக கொடுத்திருந்தனர். சொந்தமாய் குதிரை வண்டி, ஆயுதம் தாங்கிய காவலர்கள் வைத்துக் கொள்ளும் உரிமை இருந்தது.

ஆரச்சர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகும்போது கறுத்த எருமை மாடு ஒன்று முன் செல்லும். அதன் மேல் இரண்டு முரசுகள் தொங்கும். பின் இரண்டு பக்கமும் இரண்டு பேர்கள் முரசை அடிப்பார்கள். மாட்டின் பின்னே ஒருவன் கொம்பை ஊதிக் கொண்டு செல்லுவான். ஆரச்சர் கறுப்பு குதிரையின் மேல் வலம் வருவார். ஆயுதம் தாங்கிய காவலர் புடைசூழ குற்றவாளி வருவான். இது "ஒரு வகையான விளம்பரம். பொதுமக்கள் எங்கோ தூக்கு நடக்கப் போகிறது" என்று ஊகித்து ஆரச்சரின் பின்னே செல்வார்கள்.

ஆரச்சரின் செய்திகளின் அடிப்படையில் ஒரு மலையாள நாவல் வந்து இருக்கிறது. எழுதியவர் கே.ஆர். மீரா. 552 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் (D.C.Books 2012) மாத்தியமம் இதழில் 53 வாரங்கள் தொடராக வந்தது. இதில் கி.பி.4 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே திருவிதாங்கூரில் மரண தண்டனை வழங்கிய ஒரு குடும்பத்தின் கதை விரிவாக பேசப்படுகிறது. இந்த நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றது. ஆரச்சர் வம்சத்தில் வந்த சேத்னா என்ற பெண்ணின் கதை இந்த நாவல். இதில் தென் திருவிதாங்கூர் ஆரச்சர் குறித்த முழு விவரம் இல்லை. அது ஓரளவு கதைப் பாடல்களில் தான் உள்ளது.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It