தென்னிந்திய கிராம தெய்வங்கள்’ எனும் நூல் மாமறைத் திரு. ஹென்றி ஒயிட்ஹெட் என்பவரால் 1907-இல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான நூலாகும். இந்நூலினைச் சந்தியா பதிப்பகம் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. இந்த நூலின் வாசிப்பு என்பது இன்றைய பிந்தையக் காலனியச் சூழலில் புதிய நோக்கு முறைகளைக் காண்பதற்கு இட்டுச் செல்லும். மேலும், ஐரோப்பியர்களின் இந்துமதம் பற்றிய பார்வையையும் ஆய்வினையும், பிற கருத்தினங் களையும் அறிவதற்கு உதவும் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும்.
ஐரோப்பியர் வருகை
தென்னிந்தியா பற்றிய மேலைப் புலத்தாரின் விவரிப்புகள் மிக அதிகம். அதிலும் சமயம் பற்றிய எழுத்துகள் மிகவும் கணிசமானவை. தொடக்கத்தில் பயணிகள், வணிகர்கள், சமய போதகர்கள் ஆகியோரின் பதிவுகள் மேலை மக்களிடம் மிக வேகமாகப் பரவின. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பயணம் செய்த போர்சுகல் பயணி பார்போசா சாதிகள் பற்றி எழுதிய குறிப்புகளும், பிரெஞ்சுப் பயணி டேவர்ணீ 72 சாதிகளைப் பற்றி எழுதியக் குறிப்புகளும் அக்காலக் கட்டத்தில் மிகவும் பிரபலமானவை. வரலாறு நெடுகிலும் இந்திய தேசத்தோடு அயல்நாட்டினர் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
ஐரோப்பிய வணிகர்கள் நறுமணப் பொருள்களுக்காகவும், ஜவுளி வகைகளுக்காகவும் இந்தியாவோடு நீண்ட காலமாகவே தொடர்பு கொண்டிருந்தார்கள். பழங்காலம் தொடங்கி, இடைக்காலம் ஊடாகக் காலனிய காலம் வரை, அதன் பின்னரும் அது தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1498) கிறித்துவர்களையும் நறுமணப் பொருட்களையும் தேடி மலபார் கடற்கரைக்கு வந்திறங்கியவர் போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் என்னென்ன மாறுதல்கள் நடக்கப் போகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டும் முகமாக வாஸ்கோடகாமாவின் வருகை அமைந்தது என்பதை இப்போது நம்மால் உணரமுடிகிறது.
போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பின்னர் 16. 17-ஆம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என அடுக்கடுக்காக வந்து இங்கு வணிக நிறுவனங்களை நிறுவினார்கள். 1526 - 1757 காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டு நன்கு கால்கொண்டது. வாணிகத்தைத் தொடர்ந்து காலனிய நிர்வாகமும் சமயப் பரப்பலும் காலூன்றி வேகமாக வளரத் தொடங்கின.
காலனியமும் கிறித்துவத்தின் வளர்ச்சியும்
காலனிய காலத்திற்கு முன்பிருந்தே கிறித்துவ போதகர்கள் தென்னிந்தியாவில் சமயப் பரப்பிகளாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். அவர்களில் ஒருவரே மாமறைத் திரு. ஹென்றி ஓயிட்ஹெட். இவர் இங்கிலாந்து நாட்டவர். தென்னிந்தியா முழுவதும் சென்று பணியாற்றியவர். அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருந்த கிராம மக்கள் பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தார்கள். தென்னிந்தியா முழுவதும் தொண்டூழியம் செய்த காலத்தில் நேரில் கண்டறிந்து ஏராளமான பதிவுகளைச் செய்து வந்தார்.
பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1907-ல் தென்னிந்திய கிராம தெய்வங்கள் (The village Deities of Southern India) எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். பின்னர் திருத்திய பதிப்பு 1921-இல் The village Deities of Southern India எனும் தலைப்பில் வெளியானது. இந்நூல் 90 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சந்தியா பதிப்பகத்தின் முயற்சியால் தமிழில் கிடைத்திருக்கிறது. வேட்டை எஸ். கண்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பானது பழகு தமிழில் மூல நூலை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
நான்கு முக்கியப் பதிவுகள்
காலனியத்தின் வருகையால் கிறித்துவத்தின் வருகையும் உடன் வந்தது. கிறித்துவத்தை அறிமுகம் செய்யவும், அதனைப் பரப்பவும் முற்பட்ட ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் இங்குள்ள சமயங்களை அறிந்து கொள்வதன் தேவையை உணர்ந்தார்கள். அத்தகைய முயற்சியால் ஏற்பட்ட எண்ணற்ற பதிவுகளில் நான்கு பதிவுகள் மிக முக்கியமானவையாகும்.
முதலாவதாக, 300 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த முதல் எழுத்து முயற்சி குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு வந்த முதல் புராட்டஸ்டண்ட் மிஷினரியைச் சேர்ந்த பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் (1682 - 1719) எழுதிய நூல். டச்சுக் காலனியின் சார்பாக வந்த சீகன்பால்க் ஒரு ஜெருமானியப் பாதிரியார். 1706-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி தரங்கம்பாடிக்கு வந்தார். இங்கு வந்தது முதல் தன் வாழ்நாள் முழுவதும் இங்கேயே வாழ்ந்தார்.
தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்து, அதன் இலக்கியங்களைப் பயின்று, மக்களோடு மக்களாக வாழ்ந்து அரும்பணியாற்றினார். தென்னிந்தியச் சமூகம், பண்பாடு, சமயம் பற்றிய சீகன்பால்கின் எழுத்துகள் அவருக்குப் புகழைத் தேடித்தந்தன. முதல் ஜெருமானிய திராவிடவியல் அறிஞரென இன்றைய ஆய்வாளர்களால் மதிக்கப்பெறுகிறார். இவர் 1713-இல் ஜெருமனியில் எழுதிய தென்னிந்தியக் கடவுள்களின் வம்சாவளி (Genealogy of the South Indian Deitites) எனும் நூல் மிக விரிவான, முக்கியமான நூலாகும். இதன் ஆங்கில மொழியாக்கம் அண்மையில் (2005) கிடைத்துள்ளது. இதனை அமெரிக்காவிலுள்ள பேரா. டேனியல் ஜெயராஜ் அவர்கள் மிகச் சிறந்த முறையில் மொழியாக்கம் செய்துள்ளார். ரூட்லெட்ஜ் கர்சன் வெளியீடாக வந்துள்ளது.
இரண்டாவதாக, அபே. ஜெ. எ. துபுவா (1765 - 1848) எனும் பிரெஞ்சு நாட்டுக் கத்தோலிக்கப் பாதிரியாரின் எழுத்துகள் முக்கியமானவையாகும். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சுப் புரட்சியின் போது தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்தவர் அபே துபுவா. கிறித்துவ மத போதகர்களிலேயே மக்களுடன் மக்களாக மிகவும் நெருங்கிப் பழகி தென்னிந்தியர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் துபுவா. மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு 31 ஆண்டுகள்ள இவர் சமயப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியானது இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறும் ஆவணங்களைக் கேட்டுத் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. அது முதல் அபோ துபுவா தேவையான ஆதாரங்களைத் திரட்டத் தொடங்கினார்.
இந்துக்களிடம் பழகியும், அவர்களுடைய மதநூல்களைத் தேடிக் கண்டுபிடித்தும், பலரிடம் கலந்து பேசியும், நேரில் கண்டுணர்ந்தும் செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். தென்னிந்திய மக்களிடம் நீண்ட காலம் வாழ்ந்தபோது அவர்களுடைய மதக் கோட்பாடுகள், சாதிய முறை, பழக்க வழக்கங்கள், சமய நிறுவனங்கள் என எல்லாவற்றையும் தொகுத்துத் தன் தாய்மொழியான பிரெஞ்சு மொழியில் எழுதி வைத்தார். எழுதியவற்றை அச்சிட வசதியில்லை. 1806-ல் ஆங்கில நிர்வாகம் இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை விலை கொடுத்து வாங்கி இந்திய மக்கள்: மதம் - பழக்கவழக்கங்கள் - நிறுவனங்கள் (A Description of the Charater, Manners and Custom of the People of India; and of Their Institutions, Religion and Civil) எனும் தலைப்பில் வெளியிட்டது.
மூன்றாவதாக, ஹென்றி ஓயிட்ஹெட்டின் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவையாகும். இவர் 19.12.1863-ல் இங்கிலாந்தில் பிறந்தவர். கிறித்துவ குருமாராகப் பயிற்சி பெற்றபின் இந்தியாவிற்கு வந்தார். கொல்கத்தாவில் பிஷப் கல்லூரியின் முதல்வராக 1883 முதல் 1889 வரை பணியாற்றினார். அதன்பின்னர் சென்னையின் ஐந்தாவது பிஷப்பாக 23 ஆண்டுக்காலம் பணியாற்றி 14.04.1947-இல் இறந்தார். இங்கிலாந்து நாட்டு மறை பரப்பாளராக வந்த இவர் தென்னிந்தியா முழுவதிலும் பல காலம் சமயப் பணியாற்றினார். இந்தியாவில் மொத்தம் 40 ஆண்டுக்காலம் பணியாற்றியிருக்கிறார். இக்காலக் கட்டத்தில் தொகுத்த ஏராளமான செய்திகளை அவர் தென்னிந்திய கிராம தெய்வங்கள் (Village Gods South India 1907 / 1921) எனும் நூலாக வெளியிட்டார்.
நான்காவதாக, மற்றுமொரு ஐரோப்பியப் பாதிரியார் வில்பெர் தியடோர் எல்மோர் 1915-இல் எழுதிய நவீன இந்து சமயத்தில் திராவிடக் கடவுளர்கள் (Dravidian Gods in Modern Hinduism) நூலும் மிக முக்கியமானது. கூடவே, இவற்றுக்கெல்லாம் முன்பே 1864-இல் ஜான் முர்டாக் தொகுத்த கிறித்துவ சமய போதகர்களுக்கான கையேடும் கூட (The Indian Missionary Manual-Or, Hindts to Young Missionries in India with List of Book) நாம் அறிய வேண்டிய ஒன்றாகும். இவ்வாறாக, இன்னும் பல நூல்கள் தொடர்ந்து வெளிவந்தன. அவையெல்லாம் காலனிய காலத்தில் கிறித்துவத்தின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவால் தோன்றியவையாகும்.
காலனியக் கருத்தியலைப் புரிந்து கொள்ளுதல்
ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ் இந்தியாவைத் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து காலனியாட்சியை வலுவான நிலையில் வளர்க்க முற்பட்டபோது அவர்கள் திட்டமிட்ட, அறிவு நிலை சார்ந்த செயல்முறைகளை மேற்கொண்டார்கள். பிரிட்டிஷ் இந்தியாவைக் கட்டியமைப்பதற்கு அவை மிகவும் முக்கியமானவை, ஆதாரமானவை எனக் கருதினார்கள். இந்த அடித்தளத்துடன் இந்தியா முழுமைக்கும் அத்திட்டத்தை ஒருசேர செயல்படுத் தினார்கள். அவற்றில் மிக முக்கியமாக எட்டு செயல் திட்டங்கள் அடக்கம். அவை:
1. இந்தியா முழுவதிலும் பயணம் செய்து நேரில் கண்டுணர்ந்தவற்றைப் பதிவு செய்தல் (observational / travel Modality). 17-ஆம் நூற்றாண்டில் மேற்கு கடற்கரைக்கும் சிலோனுக்கும் வந்த பயணிகள் வெகுவாகவே எழுதினார்கள். 18-ஆம் நூற்றாண்டுகளில் கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற துறைமுகங்களுக்கு வந்த வணிகர்கள் நிலம், கடல், கால்வாய் வாயிலாகப் பயணம் செய்து தம் அனுபவங்களை எழுதினார்கள்.
2. இந்து மக்களிடமும் பிற சமயத்தாரிடமும் கிறித்துவத்தைப் பரப்பும் பணியை மேற்கொள்ளுதல் (missionary modality). புனித தாமஸ், அன்றிக் அடிகளார், இரேனியஸ் ஐயர், பாப்ரிஷியஸ், சீகன்பால்க், சேவியர் பாதிரியார், இராபர்ட் நொபிலி, போப் ஐயர், வீரமாமுனிவர், ஒயிட்ஹெட் எல்மோர் போன்ற பாதிரியார்கள் தென்னாட்டில் சமயப் பணியாற்றினார்கள்.
3. சில விடயங்களை விரைவாகவும், மேலெழுந்த வாரியாகவும் புரிந்து கொள்வதற்குப் பரந்த நிலையில் "மதிப்பாய்வு" செய்தல் (Survey, Modality). பூர்விக மக்கள், வளமான நிலப்பகுதிகள், சமூகங்களின் தொழில்முறைகள், இயற்கை வளங்கள், சரக்குகள், பொருட்கள் ஆகியவற்றையெல்லாம் சோதித்து, மேற்பார்வையிட்டு, கணித்து, மதிப்பாய்வு செய்வது இதில் அடங்கும். ஜேம்ஸ் ரென்னால், வில்லியம் லேம்ப்டன், காலின் மெக்கன்சி, அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், பிரான்சிஸ் புக்கானன், ஹாமில்டன் ஆகியோர் இவ்வாறான பணிகளில் ஈடுபட்டனர்.
4. திடமான நிர்வாகத்தை மேற்கொள்ளுவதற்குத் துல்லியமான விடயங்கள் தேவைப்பட்ட சூழலில், கணக்கெடுக்கும் முறையை மேற்கொள்ளுதல் (enumerative modality). வணிகர்கள், உற்பத்திப் பொருட்கள், விலைகள், பழக்கவழக்கங்கள், எடைபோடும் முறைகள், அளக்கும் முறைகள், எண்ணிக்கை முறை, காசுகளின் மதிப்புகள் போன்றவற்றைப் பிரதேச வாரியாகக் கணக்கெடுத்தனர். முதல் குடிமதிப்பு 1871-இல் மேற்கொள்ளப்பட்டது. 1862-இல் மாவட்டக் கையேடு வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. 1880-களின் முடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் கையேடுகள் தயாரிக்கப்பட்டன.
5. இந்திய தேசத்தின் முகத்தையும், உருவத்தையும், அறிவையும், தொழில் நுட்பத்தையும் காணுகின்ற நிலையில் பழம்பொருட்களைச் சேகரித்து ஓரிடம் வைக்கும் "அருங்காட்சிய முறை"யை உருவாக்குதல் (museological modality). 1840-இல் கொல்கத்தாவில் பெரிய அளவு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. 1859-இல் கானிங் பிரபு இந்தியத் தொல்லியல் துறையைத் தொடங்கினார். இராணுவப் பொறியியல் வல்லுநர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இந்தியத் தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டினார்.
6. காலனி அரசின் மேலாண்மையை வளர்க்கவும் நிர்வாகத்தை மேம்படுத்தவும் "கண்காணிப்பு முறை"யை (sureveillance modality) மேற்கொள்ளுதல். 1835-இல் திருடுகளைக் கண்காணிக்கும் துறை ஏற்படுத்தப்பட்டது. அல்போன்ஸ் பெர்ட்டிலன் போலீஸ் துறையில் மனித உடல் அளவுகளைக் கொண்டு ஆராயும் முறையைக் கொண்டு வந்தார். வில்லியம் ஹெர்ஷல் விரல்ரேகையைக் கொண்டு பரிசோதிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். சர். பிரான்சிஸ் கால்டன் விரல் ரேகை முறையை போலீஸ் உதவியுடன் மேலும் செழுமைப்படுத்தினார்.
7. இந்திய தேசத்துக்கான விரிவான வரலாற்றை எழுதுதல் (historiographic modality). முதற்கட்டமாக 1770-களில் மேற்கு வங்கத்தில் "விசாரணைகள்" (enquries) என்னும் வகையில் நிலத் தீர்வை, வரிகள் தொடர்பான, வட்டார வரலாறு தொடர்பான விசாரணைகள் நடந்தன. அடுத்த கட்டத்தில் இந்தியப் பண்பாடு, நாகரிகம் தொடர்பான வரலாறு எழுதுதல் மேற்கொள்ளப்பட்டது. அலெக்சாண்டர் டவ், ராபர்ட் ஓர்ம், சார்லஸ் கிராண்ட், மார்க் வில்க்ஸ், ஜேம்ஸ் மில், ஜேம்ஸ் டாட் போன்றவர்கள் இத்தகைய பணியினை மேற்கொண்டார்கள். மூன்றாம் கட்டத்தில் அனைவருக்குமான எளிய வரலாறுகள் எழுதப்பட்டன.
8. இறுதியாக, உலகளாவிய நிலையில் அவர்களின் மேலாண்மையை நிறுவ கல்விப்புலம் சார்ந்த ஆய்வு முறைகளை உருவாக்குதல் (investigative modality). கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைத்தும் பிறவிடங்களில் தொடர்புடைய துறைகள் அமைத்தும் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பிந்தையக் காலனியச் சூழலில் எதிர்வினையாற்றுதல்
இன்றைய பிந்தைக் காலனியச் சூழலில் இவ்வாறான காலனிய காலப் பதிவுகளை, எழுத்துகளை, வரைவுகளை, ஆவணங்களை, இன்னபிற கருத்துருவாக்கங்களையெல்லாம் எவ்வாறு அணுகுவது? புரிந்து கொள்வது? இவற்றை யெல்லாம் எவ்வாறு எதிர்வினை செய்வது?
நம்மைப் பற்றி அயலவர்கள் கூறியுள்ளவை குறித்து நமக்கு மிகவும் தீவிரமான பரிசீலனை முறை, ஓர்மை முறை, கேள்வி முறை தேவைப்படுகின்றன. பிந்தைக் காலனியச் சூழல் என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான சுயத் தன்மையை முன்னெடுத்துச் செல்லும் அறிவு நிலையை முன்வைப்பதாகும். இந்நிலையில் பிந்தைக் காலனிய அறிவாராய்ச்சியானது "அறிவு என்பது அதிகாரம் சார்ந்தது" (knowledge is power) என்று அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறது. அறிவு என்பதை ஒவ்வொரு இனமும் தனக்கான சார்பு நிலையில் உருவாக்கிக் கட்டமைக்கிறது. உண்மையில் அறிவு என்பது உண்மையைச் சொல்வதல்ல. கூடவே அது உண்மை சார்ந்த, நடுநிலையான கருத்தாகவும் எப்போதும் அமைந்ததில்லை. சார்பு நிலை சார்ந்ததுதான். இதனை வரலாற்றின் பல்வேறு பரிமாணங்களிலிருந்து பிந்தைக் காலனியவாதிகள் மிக நுட்பமாக ஆராய்ந்து நிறுவியுள்ளனர்.
இந்நிலையில் காலனியவாதிகள் இத்தேசத்தின் மீது உருவாக்கிக் கட்டமைத்துள்ள பதிவுகள், எழுத்துகள், ஆவணங்கள் எனப் பல நிலைகளில் கட்டமைத்துள்ள "அறிவு" என்பதெல்லாம் அவர்களின் தேவைக்காக விளைவிக்கப்பட்ட ஒன்று என்பதே பிந்தைக் காலனியத்தின் மிக முக்கியமான கருத்து நிலையாகும்.
இந்திய தேசத்து மக்கள், சமூகம், பண்பாடு சார்ந்து மேலைத் தேய்த்தார் கொண்டு செலுத்திய பார்வையும் முன்வைப்புகளும் அவர்களுடைய சுயத்திற்கான தேவைகளாகும். இத்தகைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய அறிவுமுறையை இன்றைய பின்னைக் காலனிய அறிஞர்கள் " தேவை சார்ந்தவை" (essentialism) என்கிறார்கள். இந்தத் தேவை சார்ந்து
உருவாக்கப்பட்ட அறிவுக் கட்டமைப்பை நாம் இப்போது அப்படியே ஏற்க வேண்டிய தேவையில்லை அவசியமும் இல்லை. அது வரலாறு நெடுகிலும் அதிகாரமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது என்று மிஷல் ஃபூக்கோ போன்ற பிந்தைச் சிந்தனைவாதிகள் நுண்ணிய அணுகுமுறையுடன் ஆராய்ந்துள்ளனர். காலனியவாதிகள் கட்டமைத்த அறிவுமுறையை அவர்களுக்கான அதிகாரமாக எவ்வாறெல்லாம் விளங்கியது என்பதை ஃபூக்கோ "அறிவின் தொல்லியல்" எனும் நூலில் மிக நுட்பமாக ஆராய்ந்திருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
காலனியவாதிகள் அறிவு உருவாக்கத்தை அடிப்படை யான அதிகாரமாகக் கொண்ட நிலை ஒருபுறமிருக்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சூழலில் "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்று முன்வைக்கப்பட்டதை இங்கு நாம் ஒப்பிட்டுக் காணலாம். ஆக, அறிவு என்பது இருவேறு சூழல்களில் எவ்வாறான வடிவமாகக் கருத்தமைவு பெற்றது என்பதையும் இங்கு ஒப்பியல் நிலையில் இணைத்தறியலாம்.
ஆகவே, பிந்தைக் காலனியச் சூழலில் இருக்கின்ற நாம் காலனியத்தின் அனைத்து வகையான முன்னெடுப்புகளையும் கட்டவிழ்த்து, மறுபரிசீலனை செய்து, "காலனியத்தை அழித்து அதிலிருந்து விடுபடுதல்" (decolonization) என்பதை கவனமாகச் செய்ய வேண்டியுள்ளது. 1700-களில் சீகன்பால்க் எழுதிய தென்னிந்தியக் கடவுள்களின் குடிவழியாகட்டும் அபே துபுவாவின் இந்திய மக்கள் மதம் - பழக்கவழக்கங்கள் நிறுவனங்கள் நூலாகட்டும், ஒயிட்ஹெட்டின் தென்னிந்திய கிராம தெய்வங்களாகட்டும், எட்கர் தாஸ்டனின் தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளாகட்டும், மெக்கன்சி தொகுத்த ஆவணங்களா கட்டும், மாவட்டந்தோறும் எழுதிய மாவட்ட அரசிதழ், கையேடுகளாகட்டும், குடிமதிப்பு அறிக்கைகளாகட்டும், இவை போன்ற இன்னும் பிற பதிவுகளாகட்டும், அவை யாவும் கடந்த நூற்றாண்டுகளின் மிகப்பெரும் தகவல் களஞ்சியங்களாகும். விலைமதிக்க முடியாத வரலாற்றுக் கருவூலங்களாகும்.
இவற்றிலிருந்தே நாம் நம்முடைய கடந்த காலத்தை அறிந்து கொள்ள முடிகிறது. 18, 19-ஆம் நூற்றாண்டுகளின் சமூக, பொருளாதார, சமய, அரசியல், கலை சார்ந்த முறைகளை யெல்லாம் அறிவதற்கு இத்தகைய ஆவணங்களே அடிப்படையாக உள்ளன. மேலும், வரலாறு நெடுகிலும் ஏற்பட்டு வந்த மாற்றங்களையெல்லாம் அறிய உதவுகின்றன. அந்த வகையில் மிகுந்த உழைப்புடன் செய்யப்பட்ட அரிய பதிவுகளாக உள்ள இவற்றின் தேவைகளை இப்போது நம்மால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. எனினும் இத்தகைய பதிவுகளிலுள்ள பாரதூரமான விடயங்கள் மீதும், அணுகுமுறை மீதும் எதிர்வின¬யாற்ற வேண்டியுள்ளது.
இன்னும் சில சூழல்களில் சில பதிவுகள் எதிர்மறை யான கருத்துகளை நேரடியாகவும், வெளிப்படையாகவும் முன் வைப்பதைக் காண முடிகிறது. இத்தகைய போக்கினைச் சுட்டிக்காட்ட இரண்டு எடுத்துக்காட்டுகள் போதுமானவை. ஒன்று: மாக்ஸ்முல்லரின் ஆரிய வாத முன்வைப்புகளாகும். இரண்டாவது: காதரைன் மேயோ எழுதிய இந்திய மாதா: சமூக ஆய்வு (1928) போன்ற எழுத்துகளைக் குறிப்பிடலாம். மாக்ஸ்முல்லரின் எழுத்துகளையும், மேயோ போன்றோரின் எழுத்துகளையும் திறனாய்ந்து தமிழிலேயே நூல்கள் வெளிவந்துள்ளன.
மிஸ் காதரைன் மேயோ ஓர் அமெரிக்கப் பெண்மணி. விடுதலை பெறாத காலனியக் காலக்கட்டத்தில் இந்தியாவிற்கு வந்து அன்றைய காலத்தில் இந்தியச் சமூகத்தின் அவலங்களையெல்லாம் எள்ளி நகையாடும் பாணியில் எழுதியவர் மேயோ. குழந்தைத் திருமணம், சாமியிடம் பிள்ளை வரம் வேண்டும் முறைகள், கோயிலில் அழுக்குத் தண்ணீரைத் தீர்த்தமாகக் கொடுப்பது, இறந்தவரின் இறுதிச் சடங்குகள், பலிச் சடங்கில் இரத்தத்தை நக்குதல், தேவதாசிகள், அடிமைப்புத்தி, கோஷா மருத்துவமனையின் அனுபவங்கள், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பாலுறவு பிரச்சனைகள், இந்துக்களின் மடமை, அதிகமான பிள்ளைப்பேறு நாட்டம், விதவைகள் நிலை, பிராமணர் வஞ்சகம் என எண்ணற்ற தலைப்புகளில் இந்துக்களின் அவல நிலையை எழுதினார்.
"இவ்வளவு கேவலமாயிருக்கும் இந்தியர்கள் சுயராஜ்யத்திற்கு எப்படி லாயக்கானவர்கள்" என நிறுவும் கருத்தியலுடன் அமைந்த இந்த எழுத்துகள் மேலைப்புலத்தாருக்கு மகிழ்ச்சியளித்திருக்கலாம். ஆனால் நமக்கு? எண்ணற்ற சமூகக் கொடுமைகள் வரலாறு நெடுக எல்லா தேசத்திலும் இருந்து வந்துள்ளன. அதனால் அவர்களுக்கெல்லாம் விடுதலை வேட்கை இருக்கக்கூடாதா என்ன? இந்தியவியல் பற்றிய புரிதல்களில் இப்படிப்பட்ட நூல்களின் பாரதூரத்தை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. காலனிய அழிப்பு நோக்கிய (பீமீநீஷீறீஷீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீ) அக் காலனியக் கட்டத்தில் உள்ள நாம் இவற்றை நேரடியாக நிராகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
ஓயிட்ஹெட்டின் பங்களிப்பு
சீகன்பால்க், அபே துபுவா ஆகியோரின் எழுத்துகளில் பல அணுகுமுறைகள் உள்ளன. சீகன்பால்க் தம் காலத்தில் தென்னிந்தியா முழுமைக்கும் உள்ள தகவல்களைச் சேகரித்தார். இதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வினாநிரல்களை படிப்பறிவுள்ள, அனுபவமுள்ள பலருக்கும் கொடுத்து அவர்கள் கூறிய பதில்களை ஒழுங்கு செய்து, அவர்களின் குரல்கள் நூல் நெடுக ஒலிக்கும் வண்ணம் அவற்றை இணைத்துள்ளார். தாம் கண்ணுற்ற செய்திகளை விரிவாக எழுதியுள்ளார். கூடவே, இந்து மதம் குறித்த நூல்களைத் தேடிப் பிடித்து அவை கூறும் செய்திகளையும் இணைத்துள்ளார். இந்துக்களோடு, குறிப்பாக தமிழ் மக்களோடு சீகன்பால்க் ஏற்படுத்திக்கொண்ட புரிதல்களையெல்லாம் தமது நூலில் பதிவு செய்துள்ளார். ஏறக்குறைய இதே அணுகு முறையில் அபே துபுவாவின் முயற்சியும் அமைந்தது எனலாம். ஆனால் இவர் சமூகம், சமயம், பண்பாடு ஆகியவற்றையே பெரிதும் கவனித்தார் எனலாம். சீகன்பால்கோ சமயத்தையும் தெய்வத்தையும் முன்னிலைப்படுத்தினார்.
ஒயிட்ஹெட்டின் தென்னிந்திய கிராம தெய்வங்கள் சற்று மாறுபட்டது. இவரது நேரடி களப்பணி விவரங்களே நூலுக்கு முக்கிய ஆதாரமாகும். மிகச்சில இடங்களில் தகவலாளிகள் எழுதி அனுப்பிய செய்திகளைச் சேர்த்துள்ளார். காலனிய நிர்வாகிகள் வழங்கிய தகவல்களும் காணப்படுகின்றன. மைசூர் மகாராஜாவின் அரண்மனை அதிகாரி ராமகிருஷ்ணராவின் கூற்றினை ஓரிடத்தில் ஓயிட்ஹெட் பதிவு செய்கிறார். அலகு குத்துதல் மனிதப் பலிக்கு ஈடானது என்று ராமகிருஷ்ணராவ் சொல்லியிருப்பதை அப்படியே பதிவு செய்கிறார். இவ்விடத்தில் 1643-இல் போர்த்துக்கீசியர் ஒருவர் பூரி ஜெகந்நாதர் கோயிலில் நடந்த அலகு குத்துதல் பற்றி எழுதும்போது இந்நிகழ்வை மனிதப் பலிக்கு நிகரானது என்று குறிப்பிடும் இன்னொரு ஆய்வாளரின் கருத்தையும் இங்கு நாம் ஒப்பு நோக்கிப் பார்க்க முடிகிறது.
இவ்வாறாக பல்வேறு தனி நபர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே சேர்த்துள்ளார். மேலும், நூல் நெடுக திராவிடப் பகுதிகளின் ஒப்பியல் தன்மைகளை நம் முன் நிறுத்துகிறார். கிராம தெய்வங்கள் பாற்பட்ட ஒவ்வொரு நிகழ்வுக்கும் பொருள்கோடலைக் கண்டிருக் கிறார். இத்தகைய பொருள்கோடல் நமக்கு இப்போது பொருத்தமற்றதாக இருக்குமென்றால் நான்கு மொழிப் பிரதேசத்தையும் இணைத்து ஒரு பண்பாட்டுப் பகுதி என்ற நோக்கில் ஆராயும் திறம் திராவிடவியலில் இவர் ஏற்படுத்திய ஓர முக்கியமான ஆய்வு முறையாக அமைந்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஓயிட்ஹெட், இவரைத் தொடர்ந்து எல்மோர் ஆகியோர் திராவிடவியல் நோக்கு ஒரு புதிய ஆய்வுச் சூழலை, புரிதல் பார்வையை இங்கு அறிமுகப்படுத்தியது என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஐரோப்பியர்களுக்கும் கிறித்துவப் பாதிரியார்களுக்கும் மிகவும் வியப்பூட்டும் கற்சிலைகளை வணங்கும் முறை எங்கிருந்து தொடங்கியது என்பதை ஓயிட்ஹெட் புராதன காலத்திலிருந்து தேடுகிறார். இந்நூலின் மிக முக்கியமான தேடுதல்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. இவ்வாறே உயிர்ப்பலி உள்ளிட்ட பலவகையான படையல் முறைகளையும் தொல்படிவத் திலிருந்து (archetypal) தேடுகிறார். திராவிடப் பகுதியின் பொதுவியலுக்கான அடித்தளத்தைக் காணும் அதே வேளையில் ஒவ்வொரு பகுதியிலும் காணக்கூடிய புற வேறுபாடுகளுக்கான தன்மைகளையும் ஆராய்கிறார். இவ்விரண்டு முறையியல் நோக்கிய இவரது பார்வையும், தரவுகளும், அணுகுமுறையும் இவரது அசாதாரணமான உழைப்பைக் காட்டுகின்றன.
இவ்வாறாக இன்னும் எண்ணற்ற நம்பிக்கை முறைகளுக்கான காரணத்தையும் ஆராய்கிறார். இத்தகைய ஆய்வு முறைகளின் அடித்தளத்திலேயே பின்னாளைய கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகள் வளரத் தலைப்பட்டன. இன்றைய ஆய்வுகளில் கோட்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அவற்றிற்கான மூலாதாரம் காலனிய காலத்தில் தொகுக்கப்பட்ட எண்ணற்ற விவரணத் தொகுப்புகளின் தரவுகளை நாடி நிற்பதை இன்றும் நாம் நிதர்சனமாக உணர முடிகிறது. இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஓயிட்ஹெட்டின் தென்னிந்திய கிராம தெய்வங்கள் ஓர் அரிய முயற்சியாகும். நமது பண்பாட்டிலும் மரபிலும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசித்து, பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுச் சமயவியல் ஆவணமாகும்.
ஓயிட்ஹெட்டின் விவரிப்பும் பொருள்கோடலும் 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவப் பாதிரியார்களிடம் காணப்பட்ட பிரத்யேக அணுகுமுறையிலேயே இருந்தன எனலாம். இந்துக்களின் சிலை வழிபாடு, சமயச் சடங்கு சம்பிரதாயங்களோடு இவருக்குப் பரிச்சயம் ஏற்பட்டபோது ஓயிட்ஹெட் ஒரு வியப்பான பார்வையுடன் பார்த்தார். இவையனைத்தையும் தன்னுடைய மதம், பண்பாட்டின் பார்வையைக் கொண்டே பார்த்தார். தன் சமய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முறையிலிருந்து இவர் விலகவே இல்லை. இதனால் இவர் பெரும்பாலும் இன மையச் சார்புடைய கருத்துகளுக்கும், சில இடங்களில் எதிர்மறையான முடிவுகளுக்கும் கூட வர நேர்ந்துள்ளது எனலாம்.
சடங்கு சம்பிரதாயங்களில் பல கூறுகள் மூடநம்பிக்கை சார்ந்தும் அருவருப்பானதாகவும், தடை செய்யப்பட வேண்டியதாகவும் உள்ளன என்றே எழுதுகிறார். ஓயிட்ஹெட் கிராம தெய்வங்களின் வழிபாட்டு முறைகள், பலியிடும் முறைகள், திருவிழாக்களின் நடைமுறைகள், சிலை வணக்கம் முறைகள், நம்பிக்கை முறைகள் ஆகிய அனைத்தையும் அறிவுபூர்வ நிலைக்கு அப்பாற்பட்டது என்கிறார்; மூடநம்பிக்கை சார்ந்தது என்கிறார்; இத்தகைய மதக்கோட்பாடுகளிலிருந்து இந்துக்கள் விடுபட்டு வெறியேற வேண்டுமென்கிறார். மாற்றமுடியாத, அர்த்தமற்ற சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். இயற்கைக்கு நீதிக்கு ஒவ்வாத முறைகளைக் கடைபிடிக்கிறார்கள் என்கிறார்.
காலனிய காலத்தில் முன்வைக்கப்பட்ட இத்தகைய பரிந்துரைகளால் ஆங்கிலேய அரசு பல்வேறு பழக்கவழக் கங்களைத் தடை செய்தன. குழந்தைத் திருமணம், உயிர்ப்பலி, நரபலி, குழந்தைக் கொலை, உடன்கட்டை ஏறுதல், அலகு குத்திக் கொண்டு ராட்டினத்தில் தொங்கிக் கொண்டு சுற்றுதல் (hook-swinging) போன்ற இன்னும் சில முறைகளைச் சட்டத்தின் வழியும், காவல் துறை வழியும் தடை செய்தார்கள். வழக்கொழிந்து விட்ட அத்தகைய கூறுகளின் எச்சங்களும், வேறு சில உருமாறிய கூறுகளுமே இப்போது உள்ளன. இந்நிலையில் கடந்த காலத்தின் சடங்கு சம்பிரதாய முறைகளின் உண்மை வடிவங்களையும் செயல்பாடுகளையும் அறிய வேண்டும் என்றால் ஓயிட்ஹெட் போன்றோர் செய்துள்ள பதிவுகளிலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு சமூகத்தின் விழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள், இன்னும் பிற நிகழ்த்துதல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. இவையாவும் மாத இதழ்கள் போன்றதோ, வார இதழ்கள் போன்றதோ அல்ல. அவை சமூகத்தின் கூட்டு எடுத்துரைப்பாகும்; காலங்காலமாக சமூக நினைவு களைக் (social memory) கூட்டாக வெளிப்படுத்துவதாகும். இவற்றில் சமூகத்தின் வரலாறும் வாழ்வும் இரண்டறக் கலந்து வெளிப்படுகின்றன. பால் கன்னர்டன் எழுதியுள்ள சமூகங்கள் எவ்வாறு நினைவுப்படுத்துகின்றன (How Societies Remember, 1989) எனும் ஆய்வில் சமூகங்களின் ஞாபகப்படுத்தும் முறைகளை ஆராய்கிறார். சமூகங்கள் அவை சேமித்து வைத்திருக்கும் கூட்டு நினைவுகளைச் சடங்குகள், விழாக்கள் மூலம் வெளிப்படுத்துவதோடு அடுத்தடுத்த தலைமுறை களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கும் உதவுகின்றன என்கிறார்.
தமிழ்ச் சமுகம் போன்ற நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கொண்ட சமுகங்களில் இத்தகைய தன்மைகளை நாம் நன்றாகவே உணரமுடியும். சமுகத்தின் புனிதமான தளத்தில் இத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்தப் படுகின்றன, எடுத்துரைக்கப்படுகின்றன, நிகழ்த்துதலாகவும் நடத்திக் காட்டப்படுகின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று சொன்னால் இத்தகைய சடங்கு சம்பிரதாயங்கள் அதன் எடுத்துரைப்புகளாகும் (narrative). இவையாவும் கதை சொல்லுவதை விட வலுவானவை. உணர்வுபூர்வமானவை. பண்பாட்டின் கூட்டு ஞாபகம் சார்ந்தவை. இவற்றிலிருந்தே சமூகத்தின் ஆதி வரலாற்றை அறியவும் மீட்டெடுக்கவும் முடியும். தமிழ்ச் சமூகம் பற்றிய மீட்டெடுப்பு ஆய்வுகளுக்கு ஓயிட்ஹெட் போன்றோரின் ஆவணங்கள் மிகவும் பயனுடையவை.
தென்னிந்திய கிராம தெய்வங்கள் எனும் இந்நூலில் ஓயிட்ஹெட் ஒன்பது இயல்களை எழுதியுள்ளார். முதல் இயலில் இந்து சமயத்தின் தலைமையான கூறுகளை விளக்குகிறார். இரண்டாம் இயலில் கிராம தெய்வங்களின் பெயர்களையும் அவற்றின் குணாதிசயங்களையும் செயல்களையும் குறித்து எழுதுகிறார். மூன்றாம் இயலில் கோயில்களின் அமைப்பு, அங்குள்ள குறியீடுகள், கோயில் பூசாரிகள், திருவிழாக்கள் ஆகியவற்றை வழிபாடு எனும் தலைப்பின் கீழ் விளக்குகிறார். நான்கு முதல் ஆறு வரையுள்ள மூன்று இயல்களில் முறையே தெலுங்கு நாடு, கன்னட நாடு, தமிழ்நாடு ஆகிய மூன்று மொழித் தேசங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளை விவரித்துச் செல்கிறார்.
ஏழாம் இயலில் கிராம தெய்வங்களுக்கான மூல வேர்களை விளக்கும் நாட்டார் வழக்காறுகளையும் அவற்றிலிருந்து இன்றைய பெருஞ்சமயத்தில் சிவன், விஷ்ணு வழிபாடு வரைக்குமான தொடர்ச்சியையும் மாற்றங்களையும் விவரிக்கிறார். பழங்குடிச் சமயத்தின் தொடர்ச்சியை வெகுவாகச் சுட்டிக்காட்டுகிறார். எட்டாவது இயலில் கிராம தெய்வ வழிபாடு தோன்றியதற்கான மூலங்களைத் தென்னிந்தியா முழுமைக்குள்ள மரபுகளிலிருந்து ஒப்பிட்டு விளக்குகிறார். இறுதி இயலாகிய ஒன்பதாவது இயலில் சமூக, ஒழுக்க, மதவகைச் செல்வாக்கு குறித்து விளக்கும் முகமாக கிராம தெய்வ வழிபாட்டின் அடிப்படைகளை ஆராய்ந்து அது கிறித்தவத்தின்பால் அம்மக்களை ஈர்ப்பதில் எவ்வாறான வியூகங்களைக் காட்டுகிறது என ஆராய்கிறார்.
இந்நூலின் இறுதியில் இரண்டு பிற்சேர்க்கைகளை இணைத்துள்ளார்; ஒன்று: எகிப்து நாட்டுச் சடங்கை இங்குள்ள சடங்குகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். இரண்டு: கெட்ட ஆவிகளை விரட்ட இரும்பைப் பயன்படுத்துதல் பற்றி விவரிக்கிறார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப் பெற்ற இந்நூல் இன்று தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. பண்பாட்டியல், வரலாற்றியல், தமிழியல், சமயவியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர்களும் வாசிப்பு ஆர்வம் உள்ள ஆர்வலர்களும் பயன்கொள்ளத் தக்க வகையில் இந்நூலின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காகத் தமிழ்ப் புலமை உலகமும், பதிப்புலகமும் சந்தியா பதிப்பகத்தின் முயற்சியைப் பாராட்டும் என்பதில் ஐயமில்லை. மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்துள்ள வேட்டை. எஸ். கண்ணன் அவர்களும் பாராட்டுக்குரியவரே.
- பக்தவத்சல பாரதி