தமிழ்ச்சூழலில் விக்ரமாதித்யனின் படைப்புகளுடன் சேர்த்து அவரது வாழ்வனுபவமும் உற்று நோக்கத்தக்கது.

அரை நுற்றாண்டுக்கும் மேலாக அவர் பன்முகப் படைப்பாளியாக வாழ்ந்ததைவிடவும் பொருள்வயின் பிரிவாகவும், வேறு பல நொய்மைகளாலும், அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளாலும், ஆழ்மனத் தேடல்களுக்காகவும் இந்தியாவின் பல்வேறு திசைகளுக்கும் இலக்கோடும் இலக்கற்றும் அலைக்கழிந்த அவரது ஐம்பதாண்டு அனுபவங்களின் தொகுப்பு ‘காடாறு மாதம் நாடாறு மாதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் வெளியீடாக வெளிவந்துள்ளது.

vikramathithyan 320இன்றளவும் அவர் எந்நிலையிலும் தன் அவலமான இருப்பு குறித்து பரிகாசங்கொண்டதில்லை என்பது அவரையறிந்த பலரும் அறிந்திருக்கலாம்.

அவரும் கைலாஷ் சிவனும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கி வருகிற பக்தர்களிடம் யாசகம் வாங்கிச் சாப்பிட்டு விட்டுத் திரும்பும் வழியில் எங்கள் ஊருக்கு வந்திருந்தனர். அப்போது சிரிப்பும் கேலியு மாகவும், பக்திபூர்வமான பரிகாரமாகவும் அதனைப் பற்றி அவர் நிகழ்த்திய உரையாடல் இன்றளவும் ஒரு சித்திரமாகக் கண்முன் விரிகிறது.

எப்போதும் ஏதாவதொரு பயணத்திட்டத்துடனிருக்கும் அவரது பயணங்களையும் நோக்கங்களையும் முன்வைத்து தொடர்ந்து இயங்கியும் எழுதியும் வரும் அவர், தன் வாழ்வில் தான் கண்டடைந்ததாகக் கூறும் இவ்வரிகளில் யதார்த்தத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

‘ஒட்டுமொத்த இந்தியாவிலுமே என் வாழ்வனுபவத்தில் நான் கண்டது, இல்லாதவனுக்கு எதுவுமே கிட்டாதுதான், இருப்பவனுக்குதான் எல்லாமே, பின்னே, ஜனநாயகம், சோசலிசம் என்பனவெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான். இன உணர்வு, மொழி உணர்வு என்று சொல்வதெல்லாம் இந்திர ஜாலம்தான், இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன ஆகும், ஆகவேண்டியது ஆகும் காலத்தில் ஆகாமல் போகாது.” (126)

ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக தனது தொடக்கப் பள்ளி நாட்களைய அவரது நய்ச்சியமான வாழ்க்கைப் பாடுகளிலிருந்தே நூல் தொடங்குகிறது.

பால்யகால நிலக்காட்சிகளையும் மனிதர்களையும் தனது கவித்துவமிக்க நடையில், 1963 - 64ஆம் வருடத்தில் சிதம்பரம் சீர்காழி சாலையில் கிழக்கே மகேந்திரபள்ளி போகிற பாதையில் மாதரவேளுரில் தொடங்கப்பட்ட பள்ளியின் அறிமுகம்.

“ஊருக்கு வடக்கே ஆறு, அதற்கும் முன்னதாகவே வாய்க்கால், கிழக்கே மாதலீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், தெற்கே பள்ளிக்கூடம், சுற்றிச் சூழவும் வயல், மின்சாரம் கிடையாது, பேருந்து விடவில்லை, வண்டி, சைக்கிள் வரும் போகும். கீற்றுக் கொட்டகையில் பள்ளி. அக்ரஹாரத்தில் ஒரு வீட்டில் தங்கிக்கொள்ள வேண்டும், காலையில் நொய்க்கஞ்சி அல்லது பழையது. மதியமும் இரவும் சோறு. ஏதாவது ஒரு குழம்பு கறி மோர். பிள்ளைகள் ஏதும் தவறு செய்துவிட்டால் பள்ளியின் அதிகபட்ச தண்டனை ‘மீல்ஸ் கட்’ அதாவது தவறு செய்தவர்களுக்கு உணவு கிடையாது.” (ப.13)

இப்படித் தொடங்கும் அவரது கல்விப்படிப்பு யாசிப்பு வகையிலாகவே அமைந்துவிட்டதை முதல் மூன்று கட்டுரைகளிலும் தொடர்வதைக் காண முடிகிறது. இடையில் ஐந்தாண்டு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சுண்டல் வியாபாரம் செய்வது, வயலில் பருத்தி எடுப்பது என்றிருந்தபின் மேற்கு மாம்பலம் மாநகராட்சிப் பள்ளியில் மீண்டும் படிப்பைத் தொடர்ந்ததைப் பற்றி,

“பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த இலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்தாம் மறுபடியும் கல்வியைத் தொடர வைத்தன. இவை இரண்டும் இல்லையென்றால் எப்படி வாழ்ந்திருப்பேனோ, தெரியாது, நிச்சயம் பாமரனாகத்தான் இருந்திருப்பேன், என் வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்த நல்வாழ்வுத்திட்டங்கள் அவை.”

“...காலையில் இட்லி விற்றுவிட்டு வரவேண்டும், பழைய மாம்பலம் எல்லையம்மன் கோவில் தெருவிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் ஜாபர்கான் பேட்டை வரை போய்விட்டு வருவதற்குள் ஒன்பது மணிக்கு மேலாகிவிடும். அநேகநாட்கள் வகுப்பு ஆரம்பித்த பிறகுதான் செல்லும்படியாகும்.” (ப.38)

எனப் பதிவு செய்கிறார்.

வேலையில்லை, காசில்லை, வேறு வழியேயில்லை என்ற நிலையிலும் பெரும்பாலான கட்டுரைகள் விக்ர மாதித்யனின் நெகிழ்ச்சியான அன்பை மொழிகின்றன. அப்பா அம்மா அத்தை மாமா இவர்களோடு ஆசிரியர்கள், நண்பர்கள், தமிழறிஞர்கள் எனப் பலரோடு விக்ரமாதித்யன் கொண்டிருந்த உறவும் அவர்கள் உவந்தளித்த ப்ரியமும், இலவசமாக அவருக்கு வாசிக்கக் கிடைத்த புத்தகங்களைப் பற்றியும் அவர் எழுதியிருப்பவை மனச்சுமை தருபவை.

பல்வேறு பத்திரிகை அலுவலகங்களில் அவர் பணியாற்றியதைப் பற்றிய அனுபவக் கட்டுரைகள் ஏராளமான புதிய தகவல்களை உள்ளடக்கியவை. இந்துமதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘அஸ்வினி’, நா.காமராசன் நடத்திய ‘சோதனை’ மற்றும் இளவேனிலின் ‘கார்க்கி’ இதழ்களில் வெளிவந்த கட்டுரை களைப் பற்றிய குறிப்புகள் ரசமும் கனமுமானவை.

எண்பதுகளில் எழுதத் தொடங்கிய அநேக படைப் பாளிகளுக்கு முதல் புத்தகம் போட்ட ‘அன்னம்’ பதிப்பக மீராவைப் பற்றிய முக்கியமான நினைவுகளை உள்ளடக்கிய கட்டுரையும், திட்டமிட்டபடி எடுக்கப்படாத ‘தனுஷ்கோடி’ ஆவணப்படம் குறித்த கட்டுரையும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

‘நித்ய கண்டம் பூர்ணாயுசு’ என்பதாக பதிப்புத் துறையும் பத்திரிகைத் துறையும் இருந்த எழுபதுகளின் காலக் கட்டத்தில் எளிய நிலையிலிருந்த பல கலைஞர்கள் எப்படியெல்லாம் இன்னல்களுக்கு ஆளாக நேர்ந்தது என்பது பலவிடங்களில் பதிவாகியுள்ளது. அவற்றில் வண்ணநிலவனும் தஞ்சை பிரகாசும் வேலைதேடி அலைந்த குறிப்புகள் துன்பந் தருபவை.

இந்துமதியை ஆசிரியராகக் கொண்ட ‘அஸ்வினி’ இதழ் குறித்தவற்றில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய தொடர்கதைகள் வெளிவந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

நிரந்தரமற்ற பத்திரிகை வேலையே தனது குடும்ப வாழ்வின் அலங்கோலத்துக்குக் காரணமாக அமைந்து விட்டதாக விக்ரமாதித்யன் இப்படி முடிவு கொள்கிறார்.

“பத்திரிகையை நிறுத்திவிட்டதாகச் சொன்னார்கள். யாருமே இல்லை மாடியில். மனைவியிடம் சொல்வதா வேண்டாமா என்றுதான் யோசனை ஓடியது. அதற்கு முந்தைய ஆண்டில்தான் ‘விசிட்டர்‘ வேலையை விட நேர்ந்தது. வீட்டில் என்மீது நம்பிக்கை வைக்கமுடியாமல் போனதற்கு இவையே ஆரம்பமாக இருந்தன.” (ப.48)

காசி, கல்கத்தா, கேரளத்துக் கண்ணகிக்கோயில் களோடு திருப்புங்கூர் தொடங்கி தமிழகக் கோவில்கள் வரை கணக்கின்றி அவர் பயணித்த கோவில்களின் தரிசனங்களும் மகத்துவங்களும் பதிவாகியுள்ளன. அவற்றில் காசிப் பயணம் வேறுபட்ட அனுபவம். புகைப்படக் கலைஞர்களுக்கு பொக்கிஷமாகக் காட்சி யளிக்கும் காசி எனக் குறிப்பிடும் விக்கிரமாதித்யன், பிஸ்மில்லாகான் இறந்த பிறகு அவரது இல்லத்துக்குச் சென்று நினைவில் மருகி உருகுமிடம் துயர இசையின் அலாதியான தருணம். திகட்டுமளவு ஆன்மீக மகத்துவங்களைப் பேசும் கட்டுரைகளுக்கிடையே ‘தந்தை பெரியார் பேசுகிறார்’ என்ற கட்டுரையில் பெரியாரைப் பற்றிய தெளிவான பார்வை இடம் பெற்றிருப்பது விக்ரமாதித்யனின் விசேசமான அடையாள மன்றி வேறில்லை.

“தமிழினம் கிடந்த கிடையிலிருந்து உசுப்பி எழ வைத்த தலைவர் அவர். வணக்கத்துக்குரிய வன்றொண்டர். நான் அறிவுஜீவியல்லன். உணர்வுவழிப்பட்ட கவிஞன். என்னதான் ஆன்மீகமாக இருக்க முயன்றாலும் ஜோதிடமெல்லாம் கற்றுத் தேர்ந்தாலும் இன்னமும் உள்ளம் விரும்புவதையே கையில் எடுத்துக்கொள்கிறேன். பெரியார் மீதான பிரியமும் இவ்விதம் வந்ததுதான். இன்றைய தமிழ்ச்சமூகத்தில் ஐயா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப் படுகிறது.” (ப.118)

சென்னையில் ஹோட்டலிலும் குற்றாலத்தில் பொருட்காட்சியிலும் வேலை பார்த்த அனுபவங்களைப் பகிர்ந்திருக்கும் கட்டுரைகள் ஒரு எளிய படைப்பாளியின் துயரத்தை விழுங்கிச் செறித்தவை. ஒரு கலைஞனுக்கு இப்படியெல்லாம் நேரவேகூடாது எனச் சொல்லத் தக்கவை.

நவீன இலக்கியத்திலிருந்து சற்றே விலகிச் செயல் பட்ட இன்குலாப், இளவேனில், நா,காமராசன் எனப் பலருடனும் பழகிய அனுபவங்களில் தனித்துவமான அவர்களின் குணநலன்களை வியந்தோதி எழுதியிருக் கிறார். (தன்னைப் பற்றிய ‘ஆன்ட்டி கம்யூனிஸ்ட்’ என்ற இளவேனிலின் விமர்சனம் உட்பட).

தொடர்ந்து வாசிக்கவியலாமல் அங்கங்கே மூடி வைத்துவிட்டு அசாதாரண நிலைக்கு வாசகனைக் கொண்டு செல்லும் காட்சிகளும் மனிதர்களும் கவித் துவமாகக் கண்முன் நிழலாடுவதைத் தவிர்க்கயியல வில்லை. தன் படைப்பின் மீது மட்டுமே தீராத நம்பிக் கையும், சக மனிதர்களின் மீதான அன்பையும் மட்டுமே சாசுவதமாகக்கொண்ட ஒரு எளிய படைப்பாளியின் துயரத்தையும் வாழ்வின் மீதான ஏக்கத்தையும் தவிப் பையும் அழுத்தமாக உணர்த்திச் செல்வது இந்நூலின் மையமான கலையம்சம். அச்சு வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

புத்தகத்தின் நிறைவாக விக்ரமாதித்யன் இப்படி எழுதுகிறார்.

“வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணடிக்கும் படியே நேரிட்டிருக்கிறது எனக்கு. குழந்தை உழைப்பாளனாக, வேலை தேடி அலைபவனாக, ஊர் சுற்றுகிறவனாக, ப்ரூப் ரீடராக, அதிரடி அரசியல் பத்திரிகைக்காரனாக, ரீ ரைட்டராக, காசு பணம் கைப்பற்ற பிரயத்தனப்படுகிறவனாக, நிதியுதவி வேண்டி நிற்பவனாக, இந்தச் சள்ளைகள் ஏற்படுத்தும் வெறுமையைப் போக்கடிக்க மிடாக்குடியனாக எவ்வளவோ காலம் விரயமாயிருக்கிறது.” (ப,142)

‘வீணடித்து வீணடித்து

வெகுமானம் அதிகம்’

எனச் சொல்லும் விக்ரமாதித்யன் அநேகம் பேர் கண்டிராத கேட்டிராத அனுபவங்களுக்குச் சொந்தக் காரர். அவ்வகையில் குறைந்த அளவாகவே இந்நூலில் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

பெரும் அனுபவசாலிப் படைப்பாளி கொஞ்சம் போலச் சொல்லியிருப்பதை நோக்குகையில் இத் தொகுப்பில் விக்ரமாதித்யன் எழுதியிருக்கிற ‘புருசை கண்ணப்பத் தம்பிரானைப் பற்றிய கட்டுரை’யில் வரும் அவரது வரிகளே இந்நூல் குறித்த நமது அபிப் பிராயமாகவும் பொருந்திப் போகிறது.

“அமிழ்தத்தைக் குவளை குவளையாகப்

பருகவேண்டும் என்பது இல்லையே

உள்ளங்கையளவு கிட்டியதே போதாதா” (ப.49).

***

காடாறு மாதம் நாடாறு மாதம்

விக்ரமாதித்யன்

வெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான்கான் சாலை,

இராயப்பேட்டை, சென்னை - 14.

விலை ரூ.90

Pin It