தொன்மையான இலக்கண, இலக்கியங்களுக்கு உரையெழுதப்பட்ட காலக்கட்டம் பொ.ஆ.பி.11 முதல் 14 வரை என்று இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். குறிப்பாகத் தொல் காப்பியம் எனும் இலக்கண நூல் ஒன்றுக்குத் தொடர்ச்சியாகப் பல உரையாசிரியர்கள் தங்கள் புலமையாற்றலை வெளிப்படுத்தி வந்த காலமாகக் கருதப்படுகிறது. தொல்காப்பிய இலக்கண விதி களுக்குச் சங்க இலக்கியங்களைச் சான்றிடல், அச்சான்றுப் பாடல்களுக்குச் சிறு விளக்கம் அளித்தல், சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதுதல் என்று ‘உரை’ என்கிற தனியொரு இலக்கிய வகைமையை உரையாசிரியர்கள் உற்பத்தியாக்கிய காலமாகவும் இது கருதப்படுகிறது.

முதலில், தொல்காப்பியம் எனும் ஒரு நூலுக்குப் பல உரையாசிரியர்கள் உரையெழுதியதைப் போன்று (நன்னூலையும் இணைத்துக் கொள்ளலாம்) எட்டுத் தொகை நூல்கள் ஒவ்வொன்றிற்கும் ஏன் முதற்கட்ட உரையாசிரியர்கள் (பொ.ஆ.பி.11-14) பலர் உரையெழுதவில்லை எனும் வினாவை முன்வைத்து இவ்வாய்வை நகர்த்தலாம்.

எட்டுத்தொகையில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிற்குப் ‘பழைய உரை’ என ஒன்றுண்டு. அவ்வுரையை எழுதியோர் பெயர் அறியப்படவில்லை. உரைகளின் உள்ளடங்கலை நோக்குகையில் வெவ்வேறு உரையாசிரியர்களால் எழுதப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. நற்றிணைக்குப் பழைய உரை ஒன்று இருந்திருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை. குறுந்தொகைக்கு 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரையும் எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையும் இருந்ததாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். ஆனால் அவ்விருவரின் உரையும் கிடைக்கப் பெறவில்லை. ஆக, எட்டுத்தொகையுள் கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களுக்கு முறையே நச்சினார்க்கினியர், பரிமேலழகர் என்கிற இருபெரும் உரையாசிரியர்களின் உரைகள் கிடைத்திருக்கின்றன.

பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய உரையாசிரியர்கள் சங்க நூல்களுக்கு உரை யெழுதியிருப்பதால் பெயரறியப்படாத ஏனைய நூல் களுக்கும் பழைய உரையாசிரியர்கள் உரையெழுதி யிருத்தல் கூடும். அதாவது பொ.ஆ.பி.11 முதல் 14 வரையிலான உரையியக்கப் பின்னணியில் உள்ள முதற்கட்ட உரையாசிரியர்கள் உரையெழுதியிருத்தல் கூடும். ஆனால், அவர்களின் பெயர் கிடைக்காமல் போனது பேரிழப்பு. தொல்காப்பியத்தைப் போன்று அல்லாமல் ‘ஒரு நூலுக்கு ஒருவர்’ என்கிற அடிப் படையில் சங்க நூல் ஒவ்வொன்றிற்கும் புகழ்பெற்ற உரையாசிரியர் ஒருவரால் உரையெழுதப்பட்டிருக்க வேண்டும். இதைக் குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல் உரையாளர்களைக் கொண்டு அறியலாம். மேலும் பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை மட்டும் கிடைத்திருப்பதையும் உடன்வைத்து எண்ணலாம். எனவே, சங்க நூல்களுக்கு உரை யெழுதப்பட்ட பழையவுரைகளைக் கருத்திற் கொண்டு நோக்குகையில் நிறுவனமயமாக்கப்பட்ட நிலையில் திட்டமிடப்பட்டு ‘புகழ்பெற்ற உரை யாசிரியர்களால்’ உரைகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அவ்வுரைகள் பிற்கால உரைப் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வுரைகள் முறையாகப் பேணிக் காக்கப்படவில்லை என்பதை ஐங்குறுநூறு, பரிபாடல் உரைகளின் விடுபாடுகளைக் கருத்திற்கொண்டு தெளியலாம்.

படைப்பாளர் X உரையாளர்

ஒரு படைப்புத் தோன்றும் போதே அதற்கான விமர்சனங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வெளிப்படுகிறது. அதன்பின் அப்படைப்பு மீது தொடுக்கப்படுகின்ற வாசிப்பு என்பது வாசகனின் மனநிலை அல்லது அறிவுவயப்பட்டதாகும். சங்ககாலச் சமூகச் சூழலுக்கேற்றவாறு இயற்றப்பட்ட பாடல்களை உரை எனும் கருவி கொண்டு துலக்கும் பொழுது, பாடலை அணுகுதல், பாடலை விளக்க மாக்குதல், பாடலை விட்டுப் பிரிதல் ஆகியன நிகழக்கூடும். இதனால் படைப்பாளர் தாமே தமது பாடலை விவரித்து முழுமையடையச் செய்தல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைச் சில ஆக்கங்கள் வழிக் காண முடிகிறது.

நூலாசிரியரே உரை எழுதிவிட்டால் கட்டி முடித்த கட்டடம்போல், உரை வளர்ச்சி நின்றுவிடும். மற்றோர் உரை தோன்ற வாய்ப்பு இல்லை. நூலைப் படிப்பவர்களுக்கு வேறு வகையான விளக்கமோ கருத்தோ தோன்றினாலும் அவற்றைக் கொள்ளத் தடையாக இருக்கும். காலந்தோறும் தோன்றும் புதிய கருத்திற்கு அந்நூலில் இடமில்லை என்ற எண்ணம் தோன்றும். நூலின் சிறப்பு, பாடலின் நயம், கருத்தழகு ஆகியவற்றை நூலாசிரியரே வியந்து, தம் உரையில் பாராட்டிக் கொள்வது சிறப்பாக இருக்காது. (மு.வை.அரவிந்தன், 2008:74)

எனவே, பாடலின் செறிவை உள்வாங்கிக் கொள்ளுதல் என்ற நிலையைக் கடந்து, பாடலை இயக்கத் தன்மையாக்கிக் காலந்தோறும் பயணிக்க வழிவகை செய்வதாகவே உரை முயற்சிகள் தொடர்ந்து தோன்றி யிருக்கின்றன. இதன் காரணமாக, உரையாசிரியர் களால் வாசிப்புக்குட்படுத்தப் பெற்ற பழம்பிரதிகள் மீள் வடிவம் பெறத் தொடங்கின. புதிய புதிய அர்த்தங்களைப் பனுவல்கள் கொண்டிருப்பதாகக் கருதி உரையாசிரியர்கள் தங்களின் அறிவுப் புலமையால் விவாதிக்கத் தொடங்கினர்.

ஒரு பண்பாட்டுச் சூழலில் உருவாகும் இலக்கியம் காலங்கடந்து வேறு ஒரு பண்பாட்டுச் சூழலுக்குப் பயணம் செய்யும் போது அதன் அர்த்தங்களை எளிதில் அறிய முடிவதில்லை. எனவே, உரை யாசிரியர் இவ்விரு பண்பாட்டுச் சூழலையும் இணைத்து உரைகாண்கிறார் (அ.சதீஸ், 2008:23).

உரையாசிரியர்கள் தங்கள் காலத்திற்கு முந்தைய பனுவல்களுக்கு உரை காண முயல்கையில் சமகாலத்தைய சமூக வரலாற்றியலுக்கும் அகவயச் சார்புநிலைகளுக்கும் ஆட்பட்டுத்தான் பனுவலைக் கண்டடைகின்றனர். இதனால் தாம் எழுதுகின்ற உரைவரைவில் அறிந்தும் அறியாமலும் சில வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. அவற்றையே உரைவேறுபாடுகள் என்று குறிக்கப்படுகின்றன.

உரைவேறுபாட்டு எழுத்தியல்

உரையாளராக ஒரு படைப்பை அணுகுவதற்கு முன்னர்த் தேர்ந்த வாசகர்களாக இருப்பது அவசியமாகும். வாசகர்களால் தான் புதுமைகளைத் தோற்றுவிக்க முடிகிறது. வாசகர் நிலையிலிருந்து படைப்பாளி நிலைக்குச் செல்லும் பொழுது, தாம் கண்டவற்றிலிருந்து அல்லது அறிந்தவற்றிலிருந்து மாற்றுச்சிந்தனையை முன்வைத்தல் என்கிற நிலை தோற்றம் பெறுகிறது. இதனால் ஒரு பனுவலின் அகப்புற நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உரையாசிரியர்களாகத் தமக்கான உரைவரைவில் செய்திருக்கின்ற மாற்றங்களை,

  • முன்னோரிலிருந்து மாற்றுக் கருத்தை முன்வைத்தல்
  • தாம் கற்றதை / அனுபவத்தை தொடர்பு படுத்துதல்
  • கட்டமைப்புகளைத் தளர்த்திக் கொள்ளுதல்

என்று பகுத்து விளக்கலாம். இத்தகைய படிநிலை களைப் புறநிலையில் உள்வாங்கிக் கொண்டாலும் அகநிலையில் சமூகவியல் சார்புகள் (மொழி, பண்பாடு, பழக்கவழக்கம், நடப்பியல் சிக்கல்கள்) வெளிப்படுவதைக் காண முடிகின்றது.

ஆய்வுக் களமாகும் உரைவேறுபாடுகள்

ஒவ்வொரு உரையும் திறனாய்வு என்றுரைப்பர். பண்டைய உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்கள் என்றும் உரைகள் யாவும் திறனாய்வு நூல்கள் என்றும் வி.நா. மருதாசலக் கவுண்டர் குறிப்பிட்டுள்ளதை மு.வை.அரவிந்தன் (2008-127) சுட்டிக்காட்டுகின்றார். ஒரு பாடல் இயற்றப்படும் பொழுதே பல்வேறு ஆய்வுகளுக்கான வாயிலைத் திறந்துவிடுகின்றது. இதனால் வாசகன் பொருள்கொள்ளும் கருத்துகளும் பாடலுடன்கூடுதலாகஇணைந்து கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. இக்கடத்தல் முறை எவ்வளவு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து தான் உரைவேறுபாட்டாராய்ச்சி முக்கியமானதாகிறது. உதாரணமாக ‘யாய்’ எனும் சொல் சங்க இலக்கியங்களில் தாய் என்ற பொருளில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐங்குறுநூற்றின் முதல் பத்தான வேட்கைப்பத்தில் யாய் என்பதற்குத் ‘தலைவி’ என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதை இன்னும் கூடுதலாக இனி ஆராயலாம்.

யாய் என்பதற்குத் தாய் எனும் பொருளில் வினவினள் யாயே (நற்.55-7), யாயும் யாயும் (குறுந்.40-1), யாயே கண்ணினுங் கடுங் காதலளே (அகம்.12-1), யான் யாய் அஞ்சுவலே (புறம்.83-2), முதிர்வினள் யாயும் (புறம்.159-5) என்று குறிப்பிடப் பெற்றுள்ளன. ஐங்குறுநூற்றின் வேட்கைப்பத்து அல்லாத ஏனைய பாடல்களிலும் தாய் என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளன. என்றனள் யாயே (ஐங்.186-5), மன்றலு முடையள்கொ றோழி யாயே (ஐங்.253-4), வரும்வரு மென்ப டோழி யாயே (ஐங்.272-5), வஃதென் யாய்க்கே (ஐங்.280-5), யாய்நயந் தெடுத்த (ஐங்.384-3), அறனில் யாய்க்கே (ஐங்.385-6). ஆனால், வேட்கைப்பத்தின் பத்துப் பாடல்களிலும் (வேட்டோளே யாயே) பயின்று வருகின்ற யாய் என்பதற்குத் தலைவி என்று பொருள் கொள்ளுமாறு கற்பிக்கப்படுகின்றது. இதற்குப் பழைய உரைகாரர் அளிக்கும் விளக்கம் வருமாறு,

“தலைவியை யாயென்றது புலத்தற்குக் காரண மாயின உளவாகவும் அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி” (ஐங்.ப.2). என்று முன்னைந்து பாடல்களுக்குக் குறிக்கின்றார். பின்னைந்து பாடல்களுக்கு, ஈண்டுத் தலைவியை யாயென்றது எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப்பூண்டொழுகுகின்ற சிறப்பை நோக்கி (ஐங்.ப.4).

என்று குறிப்பிடுகின்றார். அதாவது தலைவன் மீது வெறுப்புக் கொள்வதற்கான காரணங்கள் பல இருந்தும் அவற்றை மனத்துள் கொள்ளாமல் இருக்கின்ற சிறப்பைக் கருதி, தலைவியை யாய் என்று கொள்கின்றார் பழையவுரைகாரர். இவ்வாறு பொருள் கொள்வதால் ‘வெறுப்பை மனத்துள் கொள்ளாத சிறப்பு’ தாய்க்கான வரையறையாகவும் பழையவுரைகாரர் உருவாக்கிச் செல்கிறார். இரண்டாவது கூற்றுக் குறிப்பை, தலைவனைக் கண்ட பொழுதே கற்புத்திறம் கொண்டதால் தலைவியைத் தாய் என்று பொருள் கொண்டுள்ளார். பழையவுரைகாரரின் இப்பொருள்கோடலையே பின்வந்தோர் பலரும் எடுத்தாண்டுள்ளனர். ஆனால், ச.வே.சுப்பிரமணியன்,

“யாய் -என்பதைத் தாய் என்று கொள்வதே பொருந்தும் தலைவி என்று பொருள் கூறுதல் சிறப்பாகத் தோன்றவில்லை” (ஐங்.ப.29).

என்று குறிப்பிடுகின்றார். ச.வே.சு.வின் இக்கருத்து வேட்கைப் பத்தின் பத்துப் பாடல்களையும் மீள் வாசிப்புக்குட்படுத்த காரணமாகிறது. சங்கப் பாடலுக்கும் உரைகாரருக்கும் இடையில் கூற்றுக் குறிப்பு என்பது வாசகநிலையில் முக்கியமானதாகும். வேட்கைப்பத்தின் முன்னைந்து பாடல்களுக்கான கூற்றுக் குறிப்பானது, பரத்தையோடு ஒழுகிய காலத்து நீயிர் நினைத்த திறம் யாது? என்று வினவுவதாகவும் பின்னைந்து பாடல்களுக்கு, நான் வரையாது ஒழுகிநின்ற காலத்து நீங்கள் இழைத்திருந்த திறம் யாது? என்று வினவுவதாகவும் இடம் பெற்று உள்ளன. அதாவது, கற்புக்காலத்துப் பிரிவு, களவு காலத்துப் பிரிவு என்று கருதலாம். இவ்விரண்டு கூற்றுகளிலும் ‘நீயிர்’ எனும் முன்னிலைப் பன்மையே ‘யாவர்’ என்னும் கேள்வியை உண்டாக்குகிறது. தலைவி -தோழியா? அல்லது தாய் -தலைவி தோழியா?

பழையவுரைகாரர் முதலான பலரின் கருத்துப் படி, நெற்பல பொலிக, பொன் பெரிது சிறக்க எனத் தலைவி விரும்பினாள்; நீயும் வாழ்க, பாணனும் வாழ்க என்று நாங்கள் (தோழியர் கூட்டம்) விரும்பினோம் என்றுள்ளது.

ச.வே.சு.வின் கருத்துப்படி நெற்பல பொலிக, பொன் பெரிது சிறக்க எனத் தாய் விரும்பினாள்; நீயும் வாழ்க, பாணனும் வாழ்க என்று நாங்கள் (தலைவி, தோழி) விரும்பினோம் என்று அமைத்துள்ளார்.

இவ்விரு கருத்துகளிலும் எந்தச் சிக்கலும் இல்லை. இரண்டும் பொருத்தமாகத்தான் உள்ளன. ஆனால், களவிலும்கற்பிலும்தலைவன்வினவுவதற்குத் தாயின் விருப்பத்தை நேரடியாக இணைத்துக் கூறுவது பாடலின் சூழலுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாறாக, தாயின் தன்மையோடு பொருத்திப் பார்ப்பதாகவே அமைந்திருக்கிறது. இதுபோன்ற சொற்கள் உரைவேறுபாட்டுக்குரிய களமாவதுடன் ஒரு பாடலின் கோடல்முறையை மேலும் வளப்படுத்துவதாக அமைவதையும் அவதானிக்க இயலுகிறது.

பாடலை அணிமையாக்கும் உரைவேறுபாடு

ஒரு பாடலுக்கு உரை எழுதுகையில் முந்தைய உரைகளிலிருந்து வேறுபடுத்தி எழுத வேண்டும் என்கிற ஆர்வம் உரையாசிரியர் பலருக்கும் மனத்துள் எழுவது இயல்பு.

இவ்வாறே ஒரு நூலின் பல உரைகளை ஒப்பிடுவதோடு, ஏதேனும் ஒரு சொல், ஏதேனும் ஓர் இலக்கணக் குறிப்பு, ஏதேனும் ஒரு விளக்கம் ஆகியவை பற்றி வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு நூலின் உரையாசிரியர்கள் என்ன என்ன கருதினர் என்பதை அறிந்து இன்புறலாம். (மு.வை.அரவிந்தன், 2008:680).

உரையாசிரியர்கள் பெரும்பாலும் கருத்து நிலையில் வேறுபடாமல் வெவ்வேறு சொற்களைப் பொருத்தமாக நிரப்பி எழுதுவதில் கவனம் செலுத்தியுள்ளனர். கருத்து வேறுபடுதல், ஒரு சொல்லுக்கான பொருள் வேறுபடுதலுடன் தற்சார்புநிலையும் இணைந்து விட்டால் பாடலின் மையத்தை இழக்கச்செய்கின்ற முயற்சி நிகழக்கூடும். உதாரணமாக, பல்கதிர்த் தீயின் ஆம்பல் (ஐங்.57) எனும் தொடருக்கு, வேள்வித்தீ என்று பழையவுரைகாரர், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பொ.வே.சோ., அர.சிங்கார வடிவேலன் ஆகியோர் உரையெழுதி யுள்ளனர். யாழ்ப்பாண உரைகாரர் பல ஒளியை யுடைய தீ எனக் குறித்துவிட்டு, விளக்கப் பகுதியில் வேள்வித்தீ என்று குறிப்பிட்டுள்ளார். பலவான நாக்குகளோடு சுடரிட்டு எழுந்து எரியும் பெருந்தீ எனப் புலியூர்க் கேசிகன் குறிப்பிட்டுள்ளார். பல கதிர்களையுடைய தீ என்று சோ.ந.கந்தசாமியும் பல கதிர்களையுடைய வேள்வித்தீ என்று த.கோவேந்தனும் பல கதிர்களையுடைய தீயைப் போல என்று ம.பொன்னுசாமியும் பல கதிர்களையுடைய ஒளி என்று ச.வே.சுப்பிரமணியனும் விளக்கமளித்து உள்ளனர்.

பாடலில் வேள்வித்தீ என்று குறிப்பிடும் படியான சூழலோ சொல்லோ காணப்படவில்லை. ஆனாலும் வேள்வித் தீ என்கிற குறிப்பைத் தொடர்ச்சியாக உரையாசிரியர்கள் பின்பற்றி யுள்ளனர். பழையவுரைகாரர் மூலப்பாடலை எடுத்தாண்டு, அதனைத் தொடர்ந்து சிறுவிளக்கம் அளிக்கின்ற முறையைப் பலவிடங்களில் பின்பற்றி யுள்ளார். ‘பல்கதிர்த் தீயின் ஆம்பல்’ எனும் மூலப் பாடலை ‘வேள்வித்தீயினையும் ஆம்பலஞ்செறு வினையும்’ என்று எடுத்தாண்டுள்ளார். பல கதிர்களை யுடைய தீயைப் போல ஆம்பல் மலரும் என்பது நேரடியான கருத்தாகும். சோ.ந. கந்தசாமி, அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ, வெள்ளந்தீப் பட்டதென வெரீஇ எனும் பாடலையும் பகலெரி சுடரின் மேனி சாயவும் எனும் நற்றிணைப் பாடலையும் (128) சான்றுகாட்டி வேள்வித்தீ என்பது பொருந்தாது என நிறுவுகின்றார். பல கதிர்களை யுடைய தீயைப் போன்ற ஆம்பல் மலர் எனும் குறிப்பிலேயே பாடல் புலப்படுகின்றது. இதற்கு ‘வேள்வித்தீ’ என்று பழையவுரைகாரர் குறிப்பிடுவதன் வழி அவரது சார்புநிலை தென்படுகிறது. அதை ஏனைய உரையாசிரியர்களும் ஏற்றுரைப்பதால் சடங்கியல் தன்மையுடனான புனைவாக அப்பாடல் மாற்றம் பெறத் தொடங்குகிறது. இக்கருத்தில் உடன் பாடில்லாத புலியூர்க் கேசிகன், ம.பொன்னுசாமி, சோ.ந.கந்தசாமி ஆகியோர் பாடலை அதன் போக்கில் கண்டெடுக்கின்றனர். இத்தகைய ஏற்பு, மறுப்புகள் தான் ஒரு பனுவலைக் காலங்கடந்தும் கடத்து கின்றன என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

கருத்தியல்

எட்டுத்தொகை நூல்கள் ஒவ்வொன்றும் பதிப்பாக்கம் பெற்ற காலத்திலிருந்து தற்பொழுது வரை அவற்றிற்கு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. இந்த நீள்தொடர்ச்சி இயக்கத்திற்கு உரையானது பல்வேறு பரிமாணங்களைத் தன்னுள் உள்ளடக்கியிருப்பதுதான் காரணமாகும். ‘இப்படியும் அணுகலாம்’ என்கிற மாற்றுச் சிந்தனைப் போக்கு உரையைத் தனித்ததொரு பிரதியாக அடையாளப்படுத்தி யிருக்கிறது. எனில், ‘வேறுபடுதல்’ என்கிற தன்மையைப் புறந்தள்ளக்கூடிய ஒன்றாகக் கருத வியலவில்லை. அதிலிருந்து பல்வேறு ஆக்கங்கள் உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்வியலுகிறது.

தொல்காப்பியம், நன்னூல் ஆகியவற்றைப் போன்றே சங்க இலக்கியங்களுக்கும் பழைய உரையாசிரியர்கள் உரைகண்டிருக்க வேண்டும் என்பதை நச்சரின் பத்துப்பாட்டு உரை, குறுந்தொகை உரைகள், கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றிற்கான உரைகளைக் கொண்டு தெளியலாம்.

சமூகவியல், பண்பாடு, மொழி, நடப்பியல் சிக்கல்கள், தற்சார்புநிலை ஆகியன ஓர் உரையாசியரின் உரையில் வெளிப்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் புறந்தள்ளாது வாசிப்பின் நகர்த்தலுக்குத் துணையாக்கிட வேண்டும்.

பாடலின் சூழலை மையமிட்டு ஓர் உரையாசிரியர் உரை எழுதுகின்ற பொழுது அப்பனுவல் வாசகருக்கு மிக நெருக்கமானதாக மாறுகிறது. அதற்குக் கூற்றுக் குறிப்புகள் உரையாசிரியர்களுக்குத் துணைபுரிந்து உள்ளமையை அறிய முடிகிறது.

எனவே, தமிழாய்வில் உரைவேறுபாட்டு ஆராய்ச்சி என்பது உரையாசிரியர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து இயங்கி வந்திருக்கிற இலக்கிய வகைமை. அவ்வாராய்ச்சியைச் சொல், பொருள், கருத்து ஆகிய நிலைகளில் அணுகினால் சமூகவியல், பண்பாடு, மொழி சார்ந்த கருத்தியல்கள் மாற்றுச் சிந்தனையாக்கம் பெறக்கூடும் என்பதை இவ்வாய்வுரை முன்வைக்கிறது.

துணைநின்றவை

அரவிந்தன், மு.வை. (2008 இ.ப.) உரையாசிரியர்கள். சென்னை : மணிவாசகர் பதிப்பகம். சதீஷ், அ. (2008 மு.ப.) சங்க இலக்கிய உரைகள். திருச்சி : அடையாளம் பதிப்பகம்.

சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.) எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழைய உரையும் (1920 இ.ப.) சென்னை : கணேச அச்சுக்கூடம்.

தட்சிணாமூர்த்தி (உ.ஆ.) ஐங்குறுநூறு மூலமும் உரையும் (2004 மு.ப.) சென்னை :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்.

சுப்பிரமணியன், ச.வே. (உ.ஆ.) சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு தெளிவுரை (2009 மு.ப.), சிதம்பரம் : மெய்யப்பன் பதிப்பகம்.

- முனைவர் ம.லோகேஸ்வரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர்

Pin It