சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் தொன்மையான நாகரிகம் இந்திய வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் மட்டுமின்றி தொன்மை வரலாற்றிலும் தொல்லியலிலும் ஆர்வம் கொண்டோரின் அறிவுத்தேடலுக்குத் துணை நிற்கும் வகையிலானான தரவுகளை இதனுள் கொண்டுள்ளது.அத்துடன் இன்றுவரை ஆரியர் திராவிடர் என்ற இருவேறு முரண்பட்ட கருத்து நிலைபாடுகளின் மையமாகவும் விளங்கிவருகிறது. இதன் அடிப்படையில் இந் நாகரிகம் குறித்த ஆய்வில் ஈடுபடுவோர் எதிர் எதிர் அணியினர் போன்று காட்சியளிக்கிறார்கள்.

ஆரியர்களின் தொன்மை நாகரிகச் சான்றாக ஒரு பிரிவினர் இந் நாகரிகத்தைக் கருத மற்றொரு பிரிவினர் திராவிட நாகரிகத்தின் தொன்மைக்கான சான்றாகக் கருதுகின்றனர். இதன் அடிப்படையில் ஒரு தொல்லியல் ஆய்வுக்களமானது ஆரியர் திராவிடர் முரண்பாடு குறித்த ஆய்வுக் களமாக மாற்றம் பெற்றுவிட்டது.

ஆய்வாளர்கள்:

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த தொல்லியல் அறிஞர்கள் எச்.டி. சங்காலியா, தொல்தமிழ் (பிராமி) எழுத்துக்கள் குறித்த ஆய்வுக்கு என்றே தன் வாழ்நாளைச் செலவிட்ட இந்திய ஆட்சிப்பணியாளர் ஐராவதம் மகாதேவன், சிறாரும் கூட இத் தொல்லியல் களத்தின் தொன்மைச் சிறப்பை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தால் “சிந்து வெளி இரகசியங்கள்” என்ற நூலை எழுதிய இராஜகோபாலன் ஆகியோர் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் பல்வேறு சார்புநிலைகளில் இந்நாகரிகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டோரின் எண்ணிக்கை மிகுதியானது என்பதுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

the wonder that was harappan civilisationஇன்று நடுவண் அரசின் ஒற்றை அடையாள அரசியல் பெரும்பாலோர் அறிந்த ஒன்றுதான்.இத்தகைய அரசியல் சூழலில் ஹரப்பா அகழ் ஆய்வுகள் இவரகளின் அடையாள அரசியலின் ஓர் உறுப்பாகிப்போனது. கொம்புகளுடன் கூடிய காளையின் உருவம் பொறித்த முத்திரை ஒன்று இங்குக் கிடைத்துள்ள நிலையில் கனினியின் துணையால் அதன் கொம்புகள் குதிரையின் காதுகளாக மாற்றப்பட்ட வேடிக்கையும் கூட நிகழ்ந்துள்ளது.

பண்டைய வரலாற்று வரைவுக்கான சான்றுகளின் கருவூலம் என்று ஹரப்பா அகழ்வாய்வுப் பகுதி அறியப்பட்டுள்ளது. என்றாலும் வரலாற்றியலர் தொல்லியலாளர் மட்டுமின்றி வேறு பல அறிவுத்துறை சார்ந்தோருக்கான கருவூலமாகவும் இது அமைந்துள்ளது. மானுடவியலாளர், தத்துவத் துறையினர். நாட்டார் வழக்காற்றியலாளர், நகர அமைப்பாளர், உலோகவியலாளர், நீர் மேலாண்மை ஆய்வாளர் என்போரின் ஆய்வுகளுக்கான தரவுகளும் இங்குக் காணப்படுகின்றன.தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, டி.டி. கோசாம்பி, என். என் பட்டாச்சார்யா ஆகியோரின் எழுத்துக்களுக்கு ஹரப்பா அகழ் ஆய்வு தரவுகளை வழங்கி உள்ளது. இனி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஹரப்பா குறித்து அறிமுகம் செய்து கொள்ளுவோம்.

ஹரப்பா

ஆங்கில ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக (டைரக்டர் ஜெனரல்)இருந்த ஜான் மார்ஷல் என்பவர்தான் சிந்துச் சமவெளி நாகரிகத்தை உலகத்தின் பார்வைக்கு முதலில் கொண்டுவந்தார். 1924, செப்டம்பர் 20 இல் இது குறித்த அவர் எழுதிய கட்டுரையில் இந்திய நாட்டின் தொன்மையான நாகரிகத்தின் சான்றான ஹரப்பாவை 1921 இல் கண்டறிந்தவராக

தயாராம் சின்கா, என்ற இந்தியரையும் ,1922-23 இல் மொகஞ்சதாரோவை முதலில் கண்டறிந்தவராக, ராகல் தாஸ் பானர்ஜி என்ற இந்தியரையும் தம் கட்டுரையில் ஜான் மார்ஷல் குறிப்பிட்டிருந்தார். இவை இரண்டும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கிய அடையாளங்கள். தற்போது இவை பாகிஸ்தானில் உள்ளன. இந்நாகரிகம் குறித்து ஜான் மார்ஷல் அறிவித்து நூறாண்டுகள் நிறைவடையும் நிலையில் (2024 செப்டம்பர் 20) இந்நூல் வெளிவருகிறது (Suresh Nambath:Editor, The Hindu).

சிந்துச் சமவெளி நாகரிகத்தின் தொல்லியல் தடயங்களை மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு இடங்கள் மட்டுமின்றி வேறு நான்கு ஊர்களும் தன்னுள் கொண்டுள்ளன. இவை நான்கும் இந்தியாவில் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு:

(1) லோதல் (குஜராத் மாநிலம்), (2) தோலவீராஹரிஹரி (குஜராத் மாநிலம்), (3) காலிபங்கன் (ராஜஸ்தான் மாநிலம்), (4) ராகிகார்கி (ஹரியானா மாநிலம்).

ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பு:

மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு குடியிருப்புகளின் கண்டுபிடிப்பில் இரு இந்தியர்களின் பங்களிப்பு இருந்தது என்ற உண்மையை ஜான் மார்ஷல் மறைக்கவில்லை. இது அவரது அறிவு நேர்மையின் வெளிப்பாடாகும். அத்துடன் அவரது துறையின் கோப்புகளுக்குள் இதை உறங்கச் செய்யாது உலகறியச் செய்தமை காலனிய நுகத்தடிக்குள் உழன்று கொண்டிருந்த இந்தியாவின் தொன்மைச் சிறப்பை உலகறியச் செய்தது. சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்து அவர் கட்டுரை எழுதியபோது அகழ்ஆய்வு நடந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட வில்லை.அது அவசியம் என்று கருதவும் இல்லை. அகழ் ஆய்வில் கிட்டிய முத்திரைகள், சுடுமண் பொருள்கள், செம்பினால் ஆகிய கலைப் பொருட்கள், என்பன நீண்ட காலமாக மறக்கப்பட்டிருந்த ஒரு நாகரிகத்தை வெளிப்படுத்தப் போதுமானவை என்று அவர் கருதியுள்ளார். 1925 இல் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு அகழ்ஆய்வுக் களங்களுக்கும் சென்றபோது அவரும் அகழ் ஆய்வுப் பணியில் பங்குகொண்டார். இப்பணியின் போதுதான் மொகஞ்சதாரோவில் குளியல் குளம் ஒன்றைக் கண்டறிந்தார்.

அகழ் ஆய்வில் கிடைத்த பொருள்களை அவர் வகைப்படுத்தி அவர் கண்டறிந்த செய்திகள் வருமாறு: இங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர். அங்குக் கிடைத்துள்ள முத்திரைகளில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

உணவு: மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, முதலையின் சதைப்பகுதி, புறாக்கறி, கோதுமை.

காட்டு விலங்குகள்: புலி, யானை, காண்டாமிருகம்.

நெசவு: பாபிலோனில் சிந்து என்றும் கிரேக்கத்தில் சிந்தோன் என்றும் பருத்தியைக் குறிப்பிட்டுள்ளனர். இச்சொற்கள் சிந்துப் பகுதியைக் குறிக்கின்றன.இதனால் இந்நாடுகளுக்கு சிந்துச் சமவெளிப் பகுதியில் விளைந்த பருத்தி சென்றுள்ளமை தெரிய வருகிறது. தக்களியால் நூல் நூற்றுள்ளனர்.நெசவுக் கலையையும் அறிந்திருந்தனர்.

அணிகலன்கள்: வெள்ளி, தங்கம் என்பனவற்றால் செய்த அணிகலன்களும் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு அணிகலன்களும் பயன்பாட்டில் இருந்துள்ளன. இவை தவிர சுடுமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்களும் கல்லால் செய்யப்பட்ட மோதிரங்களும் கிடைத்துள்ளன.

இவை பொருளாதார நிலையில் நலிந்தோரால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். கல் மோதிரங்கள் சடங்குகளுடன் தொடர்புடையனவாய் இருக்கலாம் என்று மார்ஷல் கருதுகிறார்.

உலோகங்கள்: தகரம், ஈயம் ஆகிய உலோகங்களை வீட்டில் பயன்படுத்த உதவும் கத்தி, அரிவாள், என்பன செய்யப் பயன்படுத்தி உள்ளனர். தாயத்துக்களும் செய்துள்ளனர்.

வழிபாடு: யோனி வழிபாடும் இலிங்க வழிபாடும் இருந்துள்ளது.

இவை தவிர தந்தம், கிளிஞ்சல், சுடுமண் என்பனவற்றால் செய்த பொருள்களும் பழக்கத்தில் இருந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய நாகரிகத்தின் தொன்மையையும் தம் அகழ் ஆய்வுகளின் வழி மார்ஷல் வெளிப்படுத்தி உள்ளார். இவரது ஆய்வுகளுக்கு முன்னர் இந்திய நாகரிகத்தின் தொன்மை என்பது 3,500 ஆண்டுகள் என்று கருதப்பட்டு வந்தது. அதே நேரத்தில் எகிப்து, மெசபடோமியா நாகரிகங்கள் இந்திய நாகரிகத்தை விடத் தொன்மையானவை என்று கருதப்பட்டன. சிந்துச் சமவெளி அகழாய்வானது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதி மக்கள் நன்றாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் கூடிய நகரங்களில் வாழ்ந்துள்ளதையும் எழுத்தறிவு பெற்றிருந்ததையும் உலகறியச் செய்ததானது இந்திய நாகரிக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.

இச் செய்திகளை எல்லாம் விரிவான முறையில் அழகிய ஒளிப்படங்களுடன் இந்நூல் வாசகனுக்கு அறிமுகம் செய்கிறது. தொல்லியல் ஆய்வுகள் என்பன வறட்சியானவை என்று ஒதுங்கும் வாசகர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்நூல் வழக்கமான வடிவமைப்பில் இருந்து விலகி காஃபி டேபிள் புத்தகம் அல்லது ஒயின் டேபிள் புத்தகம் என்றழைக்கப்படும் வடிவமைப்பில் உருவாகியுள்ளது.

இருபத்தெட்டு இயல்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாவது இயலில் இலண்டனில் இருந்து வெளிவந்த இதழில் (The Illustrated London News, 20-10-1924) மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ் ஆய்வுகள் குறித்து ஜான் மார்ஷல் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது அறிமுக உரை உள்ளிட்டு மொத்தம் பதினெட்டு இயல்கள் திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் (Former Associate Editor, Frontline) எழுதியவை. எஞ்சியவை இந்திய, அயல்நாட்டு ஆய்வாளர்கள் எழுதியவை.

இத்தகைய ஆய்வு நூல்கள் உருவாக்கத்தில் கூட்டு முயற்சி இன்றியமையாத ஒன்று. செஞ்சி நகரையும் அங்குள்ள கோட்டைகளையும் குறித்த ஆய்வு நூல் ஒன்று புதுச்சேரியில் செயல்பட்டுவரும் பிரஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பிற்குக் காரணமாக அமைந்தது பலரின் கூட்டு முயற்சியே.ஆயினும் தமிழில் இது அருகிய நிலையிலேயே உள்ளது. இவ்வகையில் கூட்டுமுயற்சியில் உருவான இந்நூலின் வரவு வரவேற்கத்தக்க ஒன்று. இருப்பினும் சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவும் சூழலில் விவாதத்திற்குரிய கருத்துக்களுக்கும் இடமளித்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

THE WONDER THAT WAS HARAPPAN CIVILISATION.
THE Hindu Group (2022).
The Hindu Group publishing private limited,
Chennai - 600 002.

ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It