இன்று மக்களின் புறக்கணிப்புக்கு அதிகம் உள்ளாகி இருக்கும் இடம் எதுவென்று கேட்டால் அது பொது நூலகம் என்றுதான் பதிலளிக்க முடியும்.  நூலகத்தைத் தேடி மக்கள் போகாவிட்டாலும் மக்களைத் தேடி நூலகம் போகும் என்று தமிழ் நாட்டின் 32 மாவட்டங்களுக்கு ‘நடமாடும் நூலகம்’ என்ற திட்டத்தை கல்விஅமைச்சர் அறிவித்திருக்கிறார்.  இது நல்ல செய்தியே!

நூலகத்தின் அமைவிடம் முக்கியம் என்று தோன்றுகிறது, மக்கள் அதிகமாகப் புழங்குமிடத்தில் நூலகம் அமைந்தால் அது அவர்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும்.  அமெரிக்காவில் பெரும்பாலும் நூலகம், குழந்தைகள் அதிகம் வரும் பூங்கா, விளையாடுமிடம் ஆகியவற்றின் அருகில் அமைந்துள்ளது. காரணம் அவர்கள் நூலகத்தை குழந்தை களுக்குரியதாகக் கருதுகிறார்கள்.

childrens library 600நூலகம் குழந்தைகளுக்குரியது என்ற எண்ணமே நமக்கு இல்லை என்று நினைக்கிறேன்.  நம்முடைய பொது நூலகங்களில் சிறுவர் பகுதி என்ற ஒன்று இல்லை என்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.  தமிழ்நாடு முழுவதற்கும் சிறுவர் பகுதி உள்ள நூலகமாக 50 வருடங்களுக்கு முன் ஒன்றே ஒன்று அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகம் (மத்திய நூலகம்) இருந்தது.  ஆனால் இன்று இல்லை. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் சிறுவர் பகுதி உள்ள நூலகமாக இருக்கிறது.  அது என்னவோ, சிறுவர் பகுதி உள்ள நூலகமாக ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டுமென்று யாராவது சாபம் போட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை!

பொது நூலகத்தில் சிறுவர் பகுதிதான் இல்லையே தவிர சிறுவர் நூல்கள் இருக்கின்றன.  குழந்தை இலக்கிய நூல் தடை சொல்லப்படாமல் வாங்கப்பட வேண்டுமென்ற விதி நூலகத் துறைக்கு இருப்பதால் குழந்தை இலக்கியத்திற்கு தகுதி யில்லாத நூல்கள் நிறைய இருக்கின்றன.

மேலும், நூலகரின் அக்கறையைப் பொறுத்து தான் சிறுவர் நூல்கள் தனி அலமாரிகளில் அடுக்கப் பட்டிருக்கும்.  இல்லையென்றால் அவியல் மாதிரி பெரியவர்களுக்கான நூல்களோடு கலந்து கிடக்கும்.

நமது வருங்காலமாக விளங்குகிற குழந்தைகளே நமது செல்வமாகும்.  அவர்கள் அறிவும் திறமையும் பெற்று விளங்கிட அறிவுக் கோவிலாக இருக்கின்ற நூலகமே உதவிட முடியும்.  அதனால் நமது பொது நூலகம் இன்றுள்ள நிலைமையில் தொடர்ந்திட முடியாது.  அதில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமாகயிருக்கிறது.

நூலகத்தில் சிறுவர் பகுதி ஏற்படுத்துவதின் மூலம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறுவர் பகுதி சிறப்பாக உள்ளது.  அப்பகுதிக்கென்று தனி நூலகர் இருக்கிறார்.  குறைந்தபட்சம் முதலில் மாவட்ட நூலகங்களிலாவது சிறுவர் பகுதி ஏற்படுத்தி தனி நூலகர் போட வேண்டும்.  தொடர்ந்து முழு நேர கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்களில் சிறுவர் பகுதி ஏற்படுத்த வேண்டும்.

வண்டுகளை வரவழைக்க மலர்கள் கூட பல வண்ணங்களில் மணங்களில் இருக்கின்றன.  இது இயற்கை.  நாம் ஏன் இயற்கையை மீற வேண்டும்? சிறுவர் பகுதி வாண்டுகளான குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்க வேண்டும்.  3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மழலைகள்.  அவர் களைக் கவரும் விதத்தில் பலவித அலங்காரங்கள், இருக்கை வசதிகள், அலமாரி வசதிகள் இருக்க வேண்டும்.

இன்று நமது நூலகங்களில் இடவசதி, புத்தகங் களை அடுக்குவதற்கான வசதிகள் இல்லை.  மாட்டுக் கொட்டகையில் மாடுகளை அடைப்பது போல் புத்தகங்களைத் திணித்து வைத்திருக்கிறோம்.  மழலையர்களுக்கான புத்தகங்கள் கெட்டி அட்டை யுடன் பெரிய அளவுகளில் வெளியிடப்படுகின்றன.  அம்மாதிரி புத்தகங்களை நேராக வைக்கக்கூட நமது நூலக புத்தக அலமாரி இடந்தரவில்லை.  படுக்க வைக்கப்படுகின்றன.  அப்புத்தகங்கள் நிம்மதியாகத் தூங்குகின்றன.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைப்பது என்பதும், வந்த குழந்தைகள் நூல்களைப் பயன் படுத்துவது என்பதும் முக்கியமான விஷயம்.

புத்தகங்கள் வாங்குவதும் வாங்கிய புத்தகங் களை இரவல் கொடுத்து வாங்கி வைப்பதும் மட்டுமே நூலகரின் வேலை என்று நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நூலகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டிய கடமை நூலகருக்கே! அவர் பேசும் புத்தகங்களை ஊமையாக்கி விடக்கூடாது.

வளரும் தலைமுறையினர் குழந்தைகள்,  அவர்களுக்கு முறையான நூல்களை அறிமுகப் படுத்த வேண்டும்.  புத்தகக் கடலில் குழந்தைகளை தள்ளி விடலாம்.  அவர்கள் நீந்துவதற்கு பயிற்சிகள் வேண்டும் அல்லவா!

புத்தகங்களை கதை, பாடல், கட்டுரை, நாவல், நாடகம் என்று பிரிவு வாரியாக கண்டிப்பாக அடுக்கி வைக்கப்பட வேண்டும்.  இன்று திக்குத் தெரியாத காட்டிற்குள் நுழைந்தது போல் நூலகம் இருக்கிறது.

சிறந்த புத்தகங்களின் அறிமுகம் குழந்தை களுக்கு அவசியம்.  அவற்றைத் தனியாக அடுக்கி வைக்கலாம்.  புதிய புத்தகங்களின் வரவை எப்படித் தெரிந்து கொள்வது? அவற்றைத் தனித் தட்டுகளில் வைக்கலாம்.

அமெரிக்க நூலகங்களில் இம்மாத எழுத்தாளர் என்று எழுத்தாளரின் புகைப்படத்துடன் அவர் எழுதிய புத்தகங்கள் தனி மேசையில் அடுக்கி வைக்கப்படுகிறது.  இதை ஒவ்வொரு மாதமும் செய்கிறார்கள்.  குழந்தைகள் இம்மாதம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று சிறு வெளியீடு நூலகங்களில் பார்வைக்கு இருக்கிறது.  அதுவும் வயது வாரியாக அவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நம் ஊர் நூலகங்களில் குழந்தைகளின்  கைகளுக்கு எட்டாத உயரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறோம்.  புத்தகங்களை குழந்தைகளோடு உறவாடவிட வேண்டும்.  புத்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவதின் மூலம் இந்த உறவை ஏற்படுத்த முடியும்.

நூலகங்களில் குழந்தைகளுக்காகக் கடைப் பிடிக்கப்பட வேண்டிய கதை நேரம் (Story Time) உறவுப் பாலமாகும்.  கதை நேரம் என்பது குழந்தை களுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சி (Story Telling) ஆகும். குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைப் பதற்கும் புத்தகங்களோடு அவர்களுக்கு உறவை ஏற்படுத்துவதற்கும் இதைவிடச் சிறந்த உத்தி வேறெதுவும் இருக்க முடியாது.  அமெரிக்க நூலகங் களில் கதை நேரம் வெகு சிறப்பாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. நமக்கும் குழந்தைகளுக்கு நூலகங்களில் கதை சொல்லுதல் பற்றிய விழிப்புணர்ச்சி சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது.

அண்ணா நூற்றாண்டு நூலக சிறுவர் பகுதியில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  சென்னையிலுள்ள குறிப்பிட்ட சில கிளை நூலகங்களில் நூலகத் துறை ஏற்பாட்டின் பேரில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபெற வேண்டும்.

புத்தக வாசிப்பு (Book Reading) எனும் நிகழ்ச்சி குழந்தைகளை வாசிப்புக்கு பயிற்றுவிக்கிறது.

எழுத்தாளர் சந்திப்பு என்ற நிகழ்ச்சி அமெரிக்க நூலகங்களில் நடைபெறுகிறது.  நம்மூர் நூலகங் களிலும் எழுத்தாளர்கள் விழாக்களுக்கு அழைக்கப் படுகிறார்கள்.  வாசகர் வட்ட நிகழ்ச்சிக்கோ அல்லது உலக புத்தகத் தின விழாவிற்கோ வருகிறார்கள்.  சிறுவர் பகுதியில் நடைபெறும் குழந்தை எழுத்தாளர் சந்திப்பு பற்றியே நான் குறிப்பிடுகிறேன்.

குழந்தை எழுத்தாளர் தன்னுடைய படைப்புகளைப் பற்றி குழந்தைகளிடம் உரையாடுவது என்பது இருவருக்கும் பயனளிக்கும் விஷயமாகும்.

மழலைக் கவிஞர் குழ.கதிரேசன் அவர்கள் சாகித்ய அகடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற போது அவரைக் கூப்பிட்டு குன்றத்தூர் நூலகத்தில் (காஞ்சிபுரம் மாவட்டம்) குழந்தைகளுக்கு மத்தியில் அவரைப் பாராட்டினோம்.  அது அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.  தன்னுடைய பாடல்களை குழந்தைகளுக்கு பாடிக் காட்டினார்.  படைப்பாளரிட மிருந்து பாடக் கேட்ட பெரும்பேறை குழந்தைகள் அனுபவித்தனர்.  இந்த அரிய நிகழ்வுக்குக் காரண மாக அமைந்தது குன்றத்தூர் நூலகத்தில் இருந்த சிறுவர் பகுதிதான்.

 நூலகத்தில் அமையும் சிறுவர் பகுதி என்பது நூலகத்தின் இன்றைய முகத்தை மாற்றி அமைக்கிறது.

நூலகத்திற்கும் குழந்தைகளுக்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்காக அரசுப் பள்ளி மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டுமென்று உத்தரவு இடுகிறது.  நூலகத்தின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்படாமல் உத்தரவுகளால் என்ன பயன் விளைய முடியும்? அரசின் உத்தரவை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக நூலகர் ஒரு கொடை வள்ளலைப் பிடித்து மாணவர்களை வெறும் சந்தாதாரர்களாக்கி விடுவார்.  உத்தரவு நிறைவேற்றப்பட்டது.  ஆமென்!

ஆகா! நூலகத்திலுள்ள ஒவ்வொரு புத்தகமும் ஓர் உயிர் அல்லவா! வாழ்க்கையின் ஆயிரம் கதை களைப் பேசும் ஜீவனுள்ளவை அவை.  ஒரு புத்தகம் என்பது படைப்பாளியின் ரத்தமும் சதையும் ஆன உணர்வின் உருவம் என்று மதிக்கப்படும் போதே சம்பிரதாயங்கள் அகலும்.

புத்தகம் பற்றிய உயரிய மதிப்பீட்டை குழந்தை களிடம் உருவாக்க வேண்டும்.  அத்தகைய மதிப்பீட்டை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகள் நூலகத்தில் வேண்டும்.  கல்வி அல்லது அறிவின் நோக்கம் குழந்தைகளிடம் படைப்பாற்றலை வளர்ப்பதுதான்.  குழந்தைகளிடம் படைப்பாற்றலை உருவாக்கும் திறன் புத்தகங்களிடமே உள்ளது.

இந்த நேரத்தில் புத்தகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும்.  புத்தகங்கள் குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் வகையில் அவர்களைக் கவர்வதாக இருக்க வேண்டும்.  நூலக அலமாரிகளில் வெறுங் குப்பைகளை நிரப்பி விடக்கூடாது.  பதிப்பகங்கள் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் கற்றல், கற்பித்தல் நிகழ்வுக்கு குழந்தை இலக்கிய நூல்கள் பெரிதும் பயன்படுகின்றன.  ஆங்கிலத்தில் வெளிவரும் சிறுவர் நூல்களைப் (Children Literature) பார்த்தாலே இது புரியும்.

நூலகத்தோடு தொடர்பு இல்லாமல் ஆசிரியர் தன்னுடைய பணியில் சிறப்புப் பெற முடியாது.  ஒவ்வோர் ஆசிரியரும் உள்ளூர் நூலகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும்.  இன்று அவ்வாறு இருக்கிறார்களா என்று கேட்டால் பதில் உங்களுக்கே தெரியும்.  மாணவர்களைத்தான் படி, படி என்று ஆசிரியர்கள் கூறுவார்களே தவிர அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற பழிச்சொல் இருக்கிறது.  தொடக்கப் பள்ளிகளில் இன்று நூலகம் இல்லாத நிலையில் குழந்தைகள் உள்ளூர் நூலகங்களைப் பயன்படுத்த ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.  உறுதுணையாக இருக்க வேண்டும்.

நூலகத்தைப் புறக்கணித்து விட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்கே நூலகங்களுக்கு அழைத்து வருவார்கள் என்றே நான் கருதி இருந்தேன்.

குன்றத்தூர் நூலகத்தில் சிறுவர் பகுதி ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை கதை சொல்லும் நிகழ்ச்சி நடை பெற்றது.  முதலில் குழந்தைகள் சரியாக வரவில்லை.  நாளடைவில் நிலைமை மாறியது.  இன்று முப்பதுக்கும் குறையாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கதை நேரத்துக்கு அழைத்து வருகிறார்கள்.  அது மட்டுமல்ல, பூவிருந்தவல்லி, மாங்காடு, மலையம் பாக்கம் நூலகங்களிலும் சிறுவர் பகுதி செயல் படுகிறது.

நூலகத்தைக் குழந்தைகளுக்குரியதாக மாற்றும் பொறுப்பை நூலகர் என்ற ஒருவர் தலையில் மட்டும் சுமத்திவிட முடியாது.  அதற்கு ஆசிரியர், பெற்றோர் ஆகியோரும் பொறுப்பேற்க வேண்டும்.

நூலகத் தந்தை திரு.ரங்கநாதனை தந்த பெருமையுடையது நம் நூலகத்துறை.  நூலகத்தில் நூல்களைப் பகுத்து அடுக்கி வைக்கும் முறைக்கு வித்திட்டவர் அவர். அத்தகைய பெருமைக்குரிய நம் நூலகத்துறை, நூலகங்களில் சிறுவர் பகுதியை ஏற்படுத்தி நூலகத்தை குழந்தைகளுக்குரியதாக்கும் சீரிய பணிக்கு துணை நிற்கும் என்று நம்புவோம்.

Pin It