JAACT logoசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் படுகொலைகளின் ஓராண்டு நினைவாக சாத்தான்குளம் பிரகடனம் வெளியீடு

சாத்தன்குளம் காவல் நிலையத்தில் திரு.ஜெயராஜ், அவரது மகன் திரு. பென்னிக்ஸ் இருவரும் கொடூர சித்திரவதைக்கு பலியாகி ஜூன் 19 ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்திய குடிமக்களின் மனசாட்சியை உலுக்கிய இந்த கொடூர படுகொலைகளைக் கண்டு நாடே கொந்தளித்தது.

இப்படுகொலைக்குக் காரணமான சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் துணை ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷணன் உள்ளிட்ட 10 காவல்துறையினர் மீது கொலைக் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு முதலில் அனுப்பப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தான் இருக்கிறது.

காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகி குற்றுயிராக கிடந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் மனச்சாட்சியின்றி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய சாத்தான்குளம் நீதித்துறை நடுவர், கொடூர சித்திரவதைக்கு பொறுப்பேற்க வேண்டிய உயர்காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பரிசோதனையை முறையாக செய்து அறிக்கை வழங்காத சாத்தன்குளம் அரசு மருத்துவர், சிறையில் அனுமதித்த கோவில்பட்டி சிறை அதிகாரிகள் ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கருப்பின அமெரிக்கரான ஜார் ஃபிளாய்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் வெள்ளை நிறவெறிப்பிடித்த காவல்துறை அதிகாரிகளால் கொடூரமான முறையில் வீதியில் கழுத்து நெறியப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்ட மக்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

அக்கொலையைச் செய்த காவல்துறை அதிகாரிகள் அமெரிக்க நீதிமன்றத்தால் முறையாக விசாரிக்கப்பட்டு, தண்டனையும் பெற்று இப்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்.

ஆனால் இங்கே இன்னும் சாத்தான்குளம் காவல் படுகொலையில் நீதிமன்ற விசாரணையே நடைபெறவில்லை என்பது வேதனை. தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் காவலில் கைதிகள் கொடூரமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகி மாறிவிட்டன.

இதுபோன்ற காவல்நிலைய படுகொலைகளைத் தடுத்தும் நோக்கில் இனி இதுபோன்று காவல்படுகொலையோ, சித்திரவதையோ நடக்காவண்ணம் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமல்ல, குடிமைச் சமூக அமைப்புகளுக்கும் உள்ளது.

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலைக்குப் பின், தமிழகத்தில் காவல் சித்திரவதையை முற்றிலுமாக தடுத்த நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்கள் இயக்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுக் காலக் கட்டத்தில் இணைய வழியில் தொடர் கூட்டங்களை நடத்தி பெருமளவில் மக்களை இணைத்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, இவ்வழக்கு தொடர்பாக உரிய நீதிமன்றத் தலையீடுகளையும் இந்தக் கூட்டியக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் படுகொலையின் ஓராண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வேளையில் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களின் உரிமைகள், கைது செய்யபடுவோருக்கு உள்ள சட்டப் பாதுகாப்புகள், காவல் அடைப்பு, நீதிமன்றக் காவல் போன்ற நிலைகளில் காவல்துறையினருக்கு உள்ள சிறப்புக் கடமைகள் ஆகியவற்றை தொகுத்து, சாத்தான்குளம் பிரகடனத்தை இக்கூட்டியக்கம் 19.06.2021 சனிக்கிழமை அன்று வெளியிடவிருக்கிறது.

இந்தப் பிரகடனத்தை உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமிகு. நித்யா இராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவருமான திருமிகு. கனிமொழி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஐ.நா.அவையால் அறிவிக்கப்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமாக ஜுன் 26-ஆம் தேதி உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படும் நாளை ஒட்டி, ஜுன் 19 முதல் 26 வரை எட்டு நாட்களாக சித்திரவதை தொடர்பாக தினந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் இணைய வழிக் கருத்தரங்கம் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணி வரை எமது கூட்டியக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறைகளில் சித்திரவதைகள், குழந்தைகள், மாற்றுத் திறானாளிகள், பெண்கள், திருநங்கைகள், தலித்துகள், ஆதிவாசிகள், சீர்மரபினர் ஆகியோர் மீதான சித்திரவதைகள், UAPA, NIA சட்டங்களில் புனையப்படும் பொய் வழக்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் இந்தக் கருத்தரங்குகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான ஜுன் 26-ஆம் தேதி அன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் சிறப்புக் கூடுகை நடைபெற உள்ளது.

வழக்கறிஞர்கள், இளைஞர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொழிலாளர்கள், சிறு, குறு வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலதரப்பட்டோரும் கலந்து கொள்ளும் இந்த இணையவழி பொதுக் கூட்டங்களில் நீங்களும் உணர்வுப் பூர்வமாக கலந்து கொள்ள கூட்டியக்கம் அன்போடு அழைப்பு விடுக்கிறது. சித்திரவதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் இணைந்து குரல் கொடுக்க காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் அனைவரையும் அழைக்கிறது.

- தோழர் தியாகு, அமைப்பாளர் & திரு.மீ.த.பாண்டியன், செயலாளர்