(NEW DHARSHANS) ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா

8-12-16 வியாழன் அன்று, கொச்சியில் நடைபெற்ற சர்வதேச புத்தகத்திருவிழாவில்  நாவலாசிரியர் பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள் (NEW DHARSHANS) நாவலின் ஆங்கிலப்பதிப்பை பிரபல மலையாள இலக்கியவாதி திருமதி ஸ்ரீ குமாரி ராமச்சந்திரன் வெளியிட, இளம் மலையாள நாவலாசிரியர் திருமதி லதா லெட்சுமி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.  புத்தக வெளியீட்டு விழாவுக்கு பேராசிரியரும், தமிழ் இலக்கியத் திறனாய்வாளருமான டாக்டர் பா.ஆனந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் பா. ஆனந்தகுமார் தன் தலைமை யுரையில், புதிய தரிசனங்கள் நாவலின் முக்கியத் துவத்தைப் பற்றியும், தமிழ் நாவல்களின் வரலாற்றில் அதன் இடத்தைப் பற்றியும், அது தமிழ்க் கலை இலக்கிய உலகில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் மிக விரிவாகப் பேசினார்.  அவர், பொன்னீலனை மலையாள இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டுப் பேசும்போது, திரு. கேசவதேவ், தகழி சிவசங்கரப்பிள்ளை போன்றவர்களைப் போல் தமிழ் இலக்கியத்தில் 1970-க்குப்பின், முற்போக்கு இலக்கிய ஜாம்பவான்களாக தொ.மு.சி. ரகுநாதன், டி.செல்வராஜ் போன்றவர்களின் வரிசையில் வந்தவர் என்றும், அவர்களைப் போல் தமிழ் இலக்கியத்தில் புதிய தடம் அமைத்தவர் என்றும் சுட்டிப் பேசினார்.

மேலும், “மலையாள இலக்கியத்தில் தகழி, வர்க்க அடிப்படையில் சமூக ஆய்வு செய்து சிறந்த இலக்கியங்களைப் படைத்தளித்தது போல், (செம்மீன், ஏணிப்படிகள், தோட்டியின் மகன், அனுபவங்கள் பாளிச்சைகள், கயறு - போன்ற நாவல்கள்), தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’தான் தமிழில் முதன் முதலாக வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொண்டு படைக்கப் பட்ட முதல் தமிழ் நாவலாகும்.  இவருடைய இலக்கியப் பாதையைப் பின்பற்றி எழுதி வருபவர், நாவலாசிரியர்.  பொன்னீலன் அவர்கள்!” என்று தன் தலைமை உரையில் குறிப்பிட்டார் பா.ஆனந்த குமார். 

அதோடு, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு இலக்கியப் படைப்பு மொழி மாற்றம் செய்யப்படும்பொழுது, ஒரு மொழி பெயர்ப்பாளன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? அவன், எவ்வாறு அந்த வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்? அவன் வெறுமனே மொழிபெயர்க்கவில்லை; மூலத்தை நோக்கிப் பயணம் செய்து, இன்னொரு புதிய படைப்பைப் படைத்து நமக்கு அளிக்கிறான் என்றும், அவர்தன் தலைமையுரையில் குறிப்பிட்டார்.

நூலை வெளியிட்டு உரையாற்றிய மலையாள நாவலாசிரியை திருமதி.  ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் அவர்கள், ஒரு மொழிபெயர்ப்பு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்றும், மலையாள கலை இலக்கிய உலகம், பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வரும், மொழிபெயர்ப்பு நூல் களை ‘இரண்டாம் வகை’ நூல்களாகவே கருதுகிறது என்றும், மூல நூல்களுக்கே இங்கே முதல் மரியாதை வழங்கப்படுகிறது என்றும் தன் அனுபவத்தின் அடிப்படையிலிருந்து பேசினார்.  ஸ்ரீகுமாரி ராமச்சந்திரன் நாவலாசிரியர்; சிறுகதை எழுத்தாளர்; சங்கீத வித்துவான்; சிறந்த மொழி பெயர்ப்பாளர். 

மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் ஒரே மாதிரி எழுதவும், பேசவும் பாண்டித்தியம் பெற்றவர்.  கேரளத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் மிகப்பெரிய நூலான திரு. கொட்டாரம் சங்குன்னி எழுதிய ‘ஐதீக மாலை’ நூலை மலை யாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்; இவைதவிர பல ஆங்கில நூல்களையும் மொழி பெயர்த்திருக்கிறார்.

முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு பேசிய இளம் மலையாள நாவலாசிரியையான லதா லெட்சுமி ‘இந்த நாவலிலிருந்து நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்’ என்றும், ‘இந்த நாவலிலிருந்து நிரம்ப அரசியல் விஷயங் களைக் கற்றுக் கொண்டேன்’ என்றும், திரு. பொன்னீலனைப் போல் நானும் ஒரு மார்க்சீய வாதி’ என்றும் ‘என்னை அரசியல் விஷயங்களைப் படிக்க இந்த நாவல் தூண்டிவிட்டிருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார்.

kochi international bk fair 600

அதோடு, இடதுசாரி எழுத்துக்களும்,  இடது சாரி அரசியலும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், நாவலாசிரியர் பொன்னீலன், தன்னை ஒரு மார்க்சீய இலக்கியவாதி என்று எடுத்துக் காட்டியிருப்பது என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது என்றும், இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது போல், விரைவில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்தால், மலையாள கலை இலக்கிய உலகில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நாவலாசிரியர்.  எம். முகுந்தனைத் தவிர இங்கே எவரும் தன்னை இடதுசாரி இலக்கியவாதி என, தைரியமாக அடையாளப்படுத்தியதில்லை என்றும் லதா லட்சுமி குறிப்பிட்டுப் பேசினார்.

எர்ணாகுளம் தமிழ் ஐக்கிய சங்கத்தின் தலைவர் திரு. சப்பாணி முத்து அவர்கள் உரையாற்றும் போது, ஒரு எழுத்தாளனின் கடமை உணர் வினையும், தன்னுடைய எல்லா வேலைகளை அவர்கள் இதற்காக ஒதுக்கி வைத்துவிட்டு, என்ன பாடுபட்டு எழுதுகிறார்கள் என்றும், அவர் களுடைய இலக்கியக் கரிசனையைப் பற்றியும் அவர் சுட்டிப் பேசினார்.

நாவலாசிரியர் பொன்னீலன் தன் ஏற்புரையின் போது, புதிய தரிசனங்கள் நாவலை எழுதிமுடிக்க கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் எடுத்தன என்றும், இந்திய அரசியலில் ஏற்பட்ட மாறுதலின் அடிப் படையில் இந்த நாவலை 8 தடவை திருத்தி, திரும்பத்திரும்ப எழுதியதாகவும், அழகுபடுத்திய தாகவும் கூறினார்.  அது மட்டுமன்றி, நாவலுக்குள் வந்து போகும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களைப் பற்றியும், அவற்றின் பிரத்தியேகத் தன்மை களைப் பற்றியும், திருமதி. இந்திரா காந்தி அம்மை யாரின் சில முற்போக்கான அரசியல் நடவடிக்கை களில் மயங்கி, அவர் நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வரப்போகிறார் என்று நினைத்து காங்கிரஸ் கட்சிக்காக வேண்டி கொடிபிடிக்கப் போனதையும், பின் அம்மையார் அவர்களின் ஏகாதிபத்திய அரசியல் நடவடிக்கைகளைக் கண்டு மனம் நொந்து, நாட்டின் அரசியல் போக்கை ஜனநாயக உணர்வுடன் அணுகி, அவருடைய போக்கினை எதிர்த்தபோது, காங்கிரஸ்காரர்கள் அவரை ஓட, ஓட விரட்டி கொலை பண்ணுவதற்கு முயற்சித்ததையும், அவையெல்லாம் நாவலின் கதாநாயகனாக ராகவனின் கண்ணோட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் திரு. பொன்னீலன் எடுத்துக்காட்டிப் பேசினார்.  திரு. ஏ.எம்.சாலன் எல்லோரையும் வரவேற்க, திரு. பொன்னீலன் ஏற்புரையுடன் நன்றி சொல்ல, கூட்டம் நிறை வடைந்தது.

Pin It