vocஉலகெங்கும் தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடுவதாக வல்லரசுகள் குற்றம் சாட்டுகின்றன. தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒன்றுபோல் காட்டுகின்றன. ஆனால் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. எல்லா விடுதலைப் போராட்டத்திலும் தீவிரவாதம் இல்லாமல் இல்லை.

தீவிரவாதம் என்பது கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பயங்கரவாதம் என்பது வன்முறையை நோக்கமாகக் கொண்டது. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆயுதங்களோடு போராடுகிறவர்களே பயங்கரவாதிகள். மக்களுக்காகப் போராடிய திலகரும், வ.உ.சி.யும் தீவிரவாதிகள். இந்த இரண்டையும் ஒன்று போலக் காட்டுகிறது ஊடக உலகம்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தை இரண்டாகப் பகுக்கலாம். முதல் கட்டம் திலகரின் சகாப்தம். இரண்டாவது கட்டம் காந்தியின் சகாப்தம். தீவிர தேசபக்தர்கள் திலகரை ஆதரித்தனர். மிதவாதிகள் காந்தியைப் பின்பற்றினர். வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் திலகரையே பின்பற்றினர்.

அன்றைய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். அதனால் வங்காளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி இந்தியா முழுவதும் பரவியது. சுதேசி இயக்கம் உருவானது. திலகரின் கோட்பாடுகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றன. வ.உ.சிதம்பரனாரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1897இல் சென்னையில் இராமகிருஷ்ண மடம் நிறுவப்பட்டது. இராமகிருஷ்ணரின் நேரடி சீடர்களில் ஒருவரான சுவாமி இராமகிருஷ்ணானந்தர் அதன் தலைவர். வ.உ.சிதம்பரனார் அவரைச் சந்தித்தார். அவர் வழிகாட்டுதலே அவரை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தியது. ‘கைத்தொழில் வளர் சங்கம்’, ‘தரும சங்கம்’ என்னும் அமைப்புகளை ஏற்படுத்தித் தூத்துக்குடியில் தமது சுதேசி இயக்கப் பணிகளைத் தொடக்கினார்.

இதன் அடுத்தக் கட்டமாக சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். ‘சுதேசி ஸ்டீம் நேசிகேஷன் கம்பெனி’ என்னும் அந்நிறுவனம் 1882 இந்தியன் கம்பெனிச் சட்டப்படி 1906 அக்டோபர் 16இல் பதிவு செய்யப்பட்டது. இக்கம்பெனியின் மூலதனம் 10 இலட்சம் என முடிவு செய்யப்பட்டது. பங்கு ஒன்றுக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அம்மூலதனத்தைத் திரட்ட திட்டமிடப்பட்டது.

இதன் இயக்குநர் குழுவில் 15 பேர் இடம் பெற்றனர். புகழ்பெற்ற வழக்கறிஞரும், தேச பக்தருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தார். பலவநத்தம் ஜமீன்தாரும், மதுரை நான்காவது தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான பாண்டித் துரைத் தேவர் தலைவராக இருந்தார். வ.உ.சி. துணைச் செயலாளர். இந்த முயற்சியை திலகர் பாராட்டினார்.

அன்றைய ‘சுதேசமித்திரன்’ அச்செய்தியைப் பிரசுரித்து இவ்வாறு பாராட்டியது: “திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடிக்கும், சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்...”

கப்பல்களை விலைக்கு வாங்கும் வரை காத்திருக்க விரும்பவில்லை. ‘மாங்கு சீட்டன்’ என்ற கப்பலை வாடகைக்கு அமர்த்தினர். மே, 1907இல் எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ என்ற இரு கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தன. அவருக்கிருந்த அளவற்ற செல்வாக்கின் காரணமாக சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக அமைந்தது. பி.ஐ.எஸ்.என். என்னும் பிரிட்டிஷ் கம்பெனி கட்டணமே இல்லாமல் பயணிகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தும் பயனில்லை.

வ.உ.சிதம்பரனாருக்கு இருந்த தேசிய உணர்வு கப்பல் கம்பெனி பங்குதாரர்களிடம் இருக்குமா? அரசியல் நெருக்கடி காரணமாக, கப்பல் வணிகம் பாதிக்கப்படக்கூடாதென்றும், அதற்கு வ.உ.சி. அரசியலை விட்டு விலக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். கப்பல் கம்பெனியின் வளர்ச்சியைக் கருதி பங்குதாரர்களின் நிர்ப்பந்தத்துக்கு வ.உ.சி. விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் 1907 ஒரு திருப்பு முனையாகும். சூரத் நகரில் நடந்த ஆண்டுக் கூட்டத்தில் இயக்கம் பிளவுபட்டது. புதிய தேசியவாதிகளின் கட்சிக்கு பம்பாய் மாநிலத்திற்கு திலகரும், வங்காள மாநிலத்திற்கு அரவிந்தரும், சென்னை மாநிலத்திற்கு வ.உ.சி.யும் செயலாளர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தூத்துக்குடியில் வெள்ளையருக்கு உரிமையான கோரல் நூற்பாலையில் பணிபுரிந்த ஏழைத் தொழிலாளர் நலனுக்காக வ.உ.சி. நடத்திய வேலைநிறுத்தம் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். தொழிலாளர்களை ‘சுதேசி இயக்கம்’ அரசியல் இயக்கத்துடன் இணையும்படி செய்து, ‘வந்தே மாதரம்’ முழக்கமிட வைத்தார். பொருளாதார கோரிக்கைகளுக்காக தொடங்கிய வேலை நிறுத்தம் அரசியல் வேலை நிறுத்தமாக மாறியது.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஆத்திரம் கொண்டனர். சிதம்பரனாரை அடக்கி ஒடுக்கினாலொழிய நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தைத் தடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். மாவட்ட ஆட்சியாளர் விஞ்ச் துரையின் ஆணையையும் மீறிப் பேசி மக்களைத் தூண்டியதாக அவரும், சிவாவும் கைது செய்யப்பட்டனர். இதனால் கலவரம் எல்லை மீறியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1908 மார்ச் மாதம் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா உள்ளடக்கிய உயர்மட்டத் தலைவர்கள் மேல் சதி வழக்குகள் போடப்பட்டன. இந்தியத் தண்டனைச் சட்டம் 124ஏ மற்றும் 153ஏ பிரிவுகளின்படி ஆட்சி எதிர்ப்புக் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு முன்னும், பின்னும் இப்படி ஒரு தீர்ப்பு வந்ததில்லை என்று வரலாறு கூறுகிறது. இந்தியாவில் இதுவரை யாருக்கும் விதிக்கப்படாத கடும் தண்டனை அரச நிந்தனைக்காக 20 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு உதவியதற்காக 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இரு வேறு தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டக் கூடுதல் நீதிபதி இ.எச்.வாலேஸ் முன்பு 1908 மார்ச் 26 - விசாரணைக்குப் பிறகு வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வந்தது. விசாரித்த நீதிபதி ஏ.எப்.பின்ஹே வழங்கிய தீர்ப்பு இது.

யாருக்கு இந்த தண்டனை?

திருநெல்வேலி மாவட்டம் ஒட்டப்பிடாரம் நீதிமன்றங்களின் இரண்டாம் நிலை வழக்கறிஞராகப் பணியாற்றியவர் உலகநாதர். அவரது துணைவியார் பரமாயி. இவர்களுக்கு மகனாக 5.9.1872 அன்று வ.உ.சி. பிறந்தார். திண்ணைப் பள்ளியில் தொடங்கியது கல்வி, திருச்சியில் சட்டம் பயின்று 1894இல் வழக்கறிஞரானார்.

ஆரம்பத்தில் அவர் மனம் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. அவர் நண்பர்களுடன் இணைந்து ‘விவேகபானு’ ஆன்மிக இதழை நடத்தினார். ‘தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை’யின் பணிகளிலும் செயலாற்றினார். ஆன்மிகத்திலும், இலக்கியத்திலும் கவனம் செலுத்திய அவரைக் காலம் அரசியலை நோக்கித் திருப்பியது. அவருக்குத்தான் இந்தத் தண்டனை. 40 ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் பேசிய பேச்சுகளுக்காகவும் சுப்பிரமணிய சிவாவிற்குத் தங்க இடமும், உணவும் அளித்ததற்காகவும் அரச நிந்தனை எனத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு இது.

இந்தக் கொடுமையான தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அரச நிந்தனைக்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் என்னும் ஓர் ஆயுள் தண்டனையை 6 ஆண்டுகள் நாடு கடத்தலாகவும், சிவத்திற்கு உதவியதற்காக விதிக்கப்பட்ட 20 ஆண்டுகளை நான்கு ஆண்டுகள் நாடு கடத்தலாகவும் குறைத்து இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும்படியும் உயர்நீதிமன்றம் 1908 நவம்பர் 4 அன்று தீர்ப்பு வழங்கியது. இலண்டன் ‘பிரிவீ கவுன்சில்’ முறையீட்டில் ‘நாடு கடத்தல்’ கடுங்காவல் தண்டனையாக மாற்றம் பெற்றது.

இவருடைய சிறை வாழ்க்கை கோவை மற்றும் கண்ணூர்ச் சிறையிலும் கழிந்தது. 1908 மார்ச் 12 சிறை சென்ற வ.உ.சி., 1922 திசம்பர் 24 அன்று விடுதலை. சிறைச் சாலையில் இவரது அனுபவம் தனி வரலாறு.

அக்காலத்தில் சிறைகளில் அரசியல் கைதிகள் அதிகம் இல்லை. அதனால் அவர் தன்னந்தனியாக வாடினார். சிறை உணவு மிகவும் மோசம். அரிசிச் சோற்றைக் கண்ணால் காண்பது அரிது. கேழ்வரகுக் களியும், கூழும்தான். ஆறு மாதத்தில் அவர் உடல் எடை 27 பவுண்டு குறைந்து போனது.

அவருக்குக் கடுமையான வேலைகள் தரப்பட்டன. சுட்டெரிக்கும் வெயிலில் கல் உடைத்தார்; செக்கிழுத்தார். சிறந்த வழக்கறிஞரும், தேசிய இயக்கத் தலைவருமான அவர் கைகளிலும், கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டு ஒரு விலங்கினைப் போல நடத்தப்பட்டார்.

இவ்வாறு தேசத்துக்காக சொல்லொனா துயரங்களை அனுபவித்து விடுதலையான அவரை வரவேற்க நாடே திரண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டுமே வந்திருந்தார் என்பது நன்றி மறந்த நாட்டுக்கு உதாரணம்.

இவ்வளவு தியாகங்களைப் புரிந்து வெளிவந்த அவரைச் சந்திக்கவும், பேசவும் கூட பயந்தனர். ‘ஆங்கில ஆட்சியாளரின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்ற அச்சம். விடுதலையாகி வெளியே வந்த இவருக்கு நாடே சிறை போலானது; தனிமையும் வறுமையும் தேடி வந்தன.

அரசு நிந்தனைக் குற்றத்துக்காக அவர் தண்டனை பெற்றதால் அவரது வழக்கறிஞர் தொழிலுக்கான ‘சன்னத்தை’ அரசு பறித்துக் கொண்டது. அதனால் அத்தொழிலையும் தொடர முடியவில்லை.

அஞ்சாநெஞ்சத்துடன் ஓர் அரிமா போல தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட அவருக்குத் தாய்நாட்டார் யாரும் உதவ முன்வரவில்லை. ஓர் ஆங்கிலேயரே உதவ முன்வந்தார்.

இ.எச்.வாலஸ் என்ற நீதிபதி அவரது நிலை கண்டு வருந்தினார். அவரது முயற்சியால் சிதம்பரனாரின் வக்கீல் சன்னத்து திரும்பவும் கிடைத்தது. காலத்தால் செய்த இந்நன்றியை மறக்காமல் தம் மகனுக்கு ‘வாலீஸ்வரன்’ என்று பெயர் வைத்தார். அவ்வப்போது பொருளுதவி செய்து வந்த தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையின் பெயரை மற்றொரு மகனுக்கும் இட்டு வழங்கினார்.

வழக்கறிஞர் தொழில் நடத்த மீண்டும் வாய்ப்பு கிடைத்ததும், சென்னையிலிருந்து கோயில்பட்டிக்கும், பிறகு தூத்துக்குடிக்கும் சென்று தொழிலில் ஈடுபட்டார். அப்போதும் அவர் நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும் விட்டு விடவில்லை. என்றாலும் தீவிர அரசியலில் ஈடுபட அவரால் முடியவில்லை.

இவ்வாறு எண்ணற்ற தியாகிகள் நாட்டுக்காகத் தங்கள் உடல், பொருள், உயிரை இழந்தனர். இந்தச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதம், மிதவாதம் இரண்டும் தனித்தனியாகச் செயல்பட்டன. தூக்குமேடை ஏறிய பகத்சிங், சுகதேவ் முதல் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட வாஞ்சு வரை, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா இவர்கள் எல்லாம் இந்திய சுதந்திரத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

இவர்கள் எல்லாம் தேச விடுதலையைத் தீவிரமாக நேசித்தவர்கள் என்பதனால் தீவிரவாதிகள். ஆனால் பயங்கரவாதிகள் அல்ல.

உதயை மு.வீரையன்

Pin It