மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டம் செய்தாப்பூரில் 9,900 மெகாவாட் அணுமின் நிலையம் கட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது மன்மோகன் - சோனியா ஆட்சி. இதற்காக பிரான்சு நாட்டின் அவேரா பன்னாட்டு நிறுவனத்துடன் அணு உலைக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது இந்திய அரசு.

அணுக்கதிர் வீச்சால் பேரழிவு ஏற்படும் என்று அப்பகுதி மக்களும், அணு உலை எதிர்ப்பு அமைப்புகளும் செய்தாப்பூர் அணுமின் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.

கடந்த 23.4.2011 அன்று தானே மாவட்டத்தில் உள்ள தாராப்பூர் அணுமின் நிலையத்திலிருந்து செய்தாப்பூர் வரை மூன்று நாள் அணு உலை எதிர்ப்புப் பரப்புரை செய்ய தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்தன.

23.4.2011 காலை தாராப்பூரில் புறப்பட்ட பேரணியில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ஜி. கோல்சே பாட்டீல், பி.பி.சாவந்தத், முன்னாள் கடற்படைத்தளபதி எல்.இராமதாஸ், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வல்சாலி பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தப் பரப்புரை அணிக்கு மராட்டியக் காவல்துறை தடை விதித்தது. அவர்களைக் காவல் நிலையத் துக்குக் கொண்டு சென்றனர். முன்னாள் நீதிபதிகள் கோல்சேவை விட்டு விட்டு மற்றவர் களைக் காவலில் வைத்தனர்.

பி.பி.சாவந்த பேசும்போது, "புகுசிமா, செர்னோபில், மூன்று மைல்தீவு (வடஅமெரிக்கா) ஆகிய இடங்களில் நடந்த அணு விபத்துகளை மறைக்க முடியாததால் அந்த அரசுகள் அவற்றை ஒப்புக்கொண்டன. உலகத்தில் வெளியே தெரிவிக்கப்படாமல் குறைந்தது 30,000 சிறுசிறு அணு விபத்துகளாவது நடந்திருக்கும்.அவற்றால் பலர் இறந்துள்ளனர்; பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தை ஆதிக்க சக்திகள் தாம் அணுமின் திட்டங்களைத் திணிக்கின்றன’’ என்றார்.

‘’பிரதமர் மன்மோகனும், அறிவியலாளர் அனில் கதோத் கரும் அவேரா நிறுவன முகவர்கள்’’ என்று பரப்புரை அணியினர் முழக்க மெழுப்பினர் 135 பேர் தளைப்படுத்தப்பட்டனர்.
Pin It