இலங்கை மட்டக்களப்பிலிருந்து, இ-மெயிலில் ஓர் அழைப்பு வந்தது. பேரா. சிவரத்தினம் என்பவரின் கடிதம் அது. செப்டம்பர் முதல் வாரம் அங்கு நடைபெற விருக்கும் கண்ணகி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், என்னுடைய புத்தகம், சிலப்பதிகாரம்: மறு வாசிப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) செய்த வேலை இது. இதனை விழாக் குழுவினர் சிலர் படித்திருக்கிறார்களாம். அழைப்பு, அதனை ஒட்டி வந்ததுதான். முதலில் எனக்குத் தயக்கம்.
1980 வாக்கில் இலங்கை மலையகத்திலிருந்து இப்படி ஓர் அழைப்பு வந்தது.மலையக இலக்கியம் பற்றிப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். போகவில்லை. அதே விழாவிற்கு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது. அவர்களுடைய பத்திரிகையில் செய்தியும் வந்தது. ஆனால், யாழ் பல்கலைக்கழகம் எரியூட்டப்பட்ட நேரம் அது. பெருந்தேசியப் பண்பாட்டு அரசியலின் அருவருப்பான முகம், அது. அப்போது போக முடியவில்லை. இப்போது மீண்டும் ஒரு அழைப்பு. இப்போது கண்ணகி - கலை இலக்கிய விழாவுக்காக. மூன்று நாள் நிகழ்ச்சி. செப்டம்பர் 7, 8, 9 நாட்கள். சரி என்று தகவல் அனுப்பினேன். உடன் என் மனைவியும் வருவாள் என்று கூறிவிட்டேன்.
செப்டம்பர் 6, வியாழன் மதியம் ஒரு மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டோம். கொழும்புக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் கொஞ்சம் குறைவு தான். கலாநிதி சிவரத்தினம் சொல்லியிருந்த படி எங்களை வரவேற்க விமான நிலையத்திற்குப ‘பாடும் மீன்’ சிறிகந்தராசா வந்திருந்தார். மூன்று மணி நேரத்துக்கு முன்னாலேயே அங்கு வந்து காத்திருந்தார். இப்போது அவர், ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். ஆனால், மட்டக்களப்புக்காரர். வருடந்தோறும் நடக்கும் கண்ணகி விழாவிற்கு அவர் வந்து விடுவாராம். தமிழ்ப்பற்றும், ஊர்ப்பற்றும் அவ்வளவு இருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து கலாநிதி சந்திரசேகரம் ஒரு கார் அனுப்பியிருந்தார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு 300 கிலோ மீட்டருக்கும் அதிகம். வழியெல்லாம் பேசிக் கொண்டு வந்தோம். வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தோம். மட்டக்களப்பு வந்தது. அதன் ஒரு பகுதியில் அவர் இறங்கிக் கொண்டார். நாங்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் விருந்தினர் மாளிகையில் அன்றிரவு தங்கினோம்.
மறுநாள் காலை, பேராசிரியர் செ. யோகராசா என்பவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். நல்ல அறிஞர். என்னுடைய பல புத்தகங்களை நன்றாக வாசித்திருக்கிறார். திறனாய்வுக் கலை நூலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த தமிழ் அழகியல் வரை நன்றாகவே வாசித்திருக்கிறார். நிறைய கேள்விகள். நிறைய விவாதங்கள். அவருடைய மனைவிக்கு உடல்நலமில்லையாம். அப்படி யிருந்தும் நேரம் கண்டுபிடித்து, ரொம்ப நேரம் இருந்தார். இரண்டு முறை வந்திருந்தார். எதிர் பாராத இடத்தில் நம்முடைய புத்தகங்களை ஆழமாக ஒருவர் வாசித்திருக்கிறார் எனும் போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் என்னென்பது! அதுவும் விவாதம் இலக்கியத்தைச் சார்ந்திருக்குமானால் கேட்பானேன்!
கண்ணகி விழா நிகழ்ச்சி, பிற்பகல் இரண்டு மணிக்குத்தான். இதற்கிடையில் அன்று மட்டக் களப்புப் பகுதி முழுக்கக் கடையடைப்பு. அது ஒரு புது அனுபவம் தான். வலிய நல்ல செய்திதான். மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை என்ற நீர்ப்பசையுடைய ஒரு நல்ல இடம். அதிலிருந்து நல்ல குடிநீரை உறிஞ்சியெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்ய வேலை நடக்கிறதாம். சிங்கள அரசின் அரசியல் தந்திரம் காரணமாகச் செல்வாக்குடைய ஒரு முசுலிம் அரசியல் வாதியான, வியாபாரி ஒருவர், நீர் எடுக்கும் ஒன்றை தொழிற்சாலை ஆரம்பித்திருக் கிறாராம். இதன் காரணமாக அந்தப் பகுதியில் தண்ணீர்ப் பஞ்சம் வரும் என்று மக்கள் பயப்படுகிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் உணர்வாளர் என்ற ஓர் அமைப்பு விடுத்த அறைகூவலை ஏற்றுக்கொண்டுதான் அந்தக் கடையடைப்பு. பஸ்கள் ஓடவில்லை, பள்ளிகள் திறக்கப்பட வில்லை.
முழுக்கடையடைப்பு, முழுவெற்றிதான் என்று அமைப்பாளர்கள் அறிவித்தார்கள். அரசாங்கம், மக்கள் குரலுக்குச் செவிமடுத்து உடனடியாகக் குடிநீர் ஆலையை மூடவேண்டும்; இல்லையென்றால், அடுத்துச் சிறை நிரப்பும் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தார்கள். அன்று நடைபெற்ற முழுக்கடையடைப்புப் போராட்டம் என்பது, சிங்கள அரசு, தமிழ் மக்கள் மீது ஏவிவிட்ட யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை உணர்த்துவதாகவே தோன்றுகிறது.
முதல்நாள், விருந்தினர் மாளிகையில் இருந்து விட்டு மறுநாள் கலாநிதி சிவரத்தினம் வீட்டிற்கு வந்து விட்டோம். அங்கு ஒரு மூன்றுநாள் தங்கல். அன்புடன் கூடிய நல்ல விருந்தோம்பல். சிவரத்தினத்தின் மனைவி திருமதி. அருந்ததி, ஓர் உடன் பிறப்புப் போலவே பழகினார். ஒருநாள், திருமதி அருந்ததியின் தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தோம். வகைவகையான மீன்களுடன் சுவையாக விருந்து படைத்தார்கள். ஒரு நேரம், பேராசிரியர் மவுனகுரு, சித்ரலேகாமவுனகுரு வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவர்கள் மதுரைக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயே எனக்கு நல்ல பழக்கம் தான்.
அன்று பிற்பகல், விழா தொடங்கியது. அருகில் தோற்றாத்தீவு எனும் பகுதியில் உள்ள கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் இது தொடங்கியது. கிராமத்து விழாவாகவே நடந்த இவ்விழா ‘கொம்பு முறி’ எனப்பட்டது. இது, பிற நிகழ்ச்சிகளுக்குத் தொடக்க மாக அமைந்தது. கிராமத்து மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்; எல்லாரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இலங்கையில் தமிழர்களின் நாட்டுப் புற வழிபாட்டில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு, மிகவும் மகிழ்ச்சி தந்தது.
அடுத்தநாள் காலை 7 மணிக்குப் பண்பாட்டுப் பவனி. கண்ணகியம்மனைக் கொண்டு அமைந்தது - இந்தப் பவனி - அருகில் உள்ள களுதாவளையைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலுள்ள கண்ணகியம்மன் ஆலயங்களிலிருந்து தனித்தனியே அணிவகுப்புகள் தொடங்க, முடிவில் இந்தத் தோற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகின்றது. பல சிறு சிறு அணிகள் ஒன்று திரண்டு, விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற களுதாவளை பிரதானவீதியில் உள்ள கலாச்சார மண்டபத்திற்குச் சிறிய ரதத்துடன் வருகின்றன. ஆங்காங்குள்ள கண்ணகி வழிபாட்டை ஒருங்கிணைக்கவும், சுற்றுப்புற மக்களிடையே இணக்கமான நல்லுறவை ஏற்படுத்தவும் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைகின்றது. கலாச்சாரமண்டபம், பெரியமண்டபம்தான். நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் தென்னங்குருத்து ஓலைகளாலேயே அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
பண்பாட்டு பவனி முடிந்தவுடன், ஏனைய பிற நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பெரும்பாலும் கண்ணகி தொடர்பான நிகழ்ச்சிகள் தான். கருத்தரங்குகள், பட்டிமன்றம், பல்வகைப்பட்ட நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், கண்ணகி வில்லுப்பாட்டு, கரகாட்டம், குறத்திப்பாடல், மாதவி சபதம் முதலியவை நடை பெற்றன. இவற்றில் பாதி, நாட்டார் மரபில் வந்தவை; பாதி, செவ்வியல் மரபில் வந்தவை. பேராசிரியர் சி. மவுனகுருவின் நெறியாள்கையில் ‘தமிழிசை யாத்திரை’ எனும் அற்புதமான நிகழ்ச்சியன்று நடைபெற்றது. இசை, நடனம், கருத்தமைவு என்ற மூன்றும் ஒருங்கிணைய, கண்ணுக்கும், செவிக்கும், கருத்துக்கும் அமுதம் படைப்பதாக இருந்தது. பண் பாட்டு வரலாற்று நிலையோடு கூடியதாக இருந்த இந்தத் தொடர் நிகழ்ச்சியில், பெண்விடுதலை, தலித்தியம் என்ற கருத்துநிலை என்ற இவற்றோடு, தாலாட்டு, ஒப்பாரி, திரைப்பட இசை என்று பல நிலைகள் கொண்டு இது நடந்தது. துணுக்குகளாக அமைந்த இந்த நிகழ்ச்சிகளினூடே நெறியாளர் சுருக்கமான விளக்கங்கள் தந்துகொண்டிருந்தார். ஆடியவர்கள், இளம் பெண்கள்; நன்றாகப் பயிற்சி பெற்றவர்கள். அங்கலாய்ப்பு இல்லாமல் அடக்க மாகவும் நாகரிகமாகவும் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
என்னுடைய உரை, ‘கண்ணகி எனும் தொன்மம்’ எனும் தலைப்பில் அமைந்திருந்தது. சங்ககாலச் சமுதாயத்தில் காணப்படுகின்ற பல தொல் படிமங்கள், கண்ணகி எனும் பத்தினித் தெய்வத்தை உணர்த்துவதற்கு எவ்வாறு அடிப்படையாக இருந்தன என்பதை விளக்குவதாக இருந்தது. மேலும், தமிழ் மரபுகளுக்கு உட்பட்டு, அதனை மீட்டெடுக்கும் விதமாக, கண்ணகியின் எழுச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் புலப்படுத்துகிற விதமாக என் பேச்சு அமைந்திருந்தது.
கருத்தரங்கம் முதற்கொண்டு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் நன்கு திட்டமிட்டு நிர்வகித்தது, செயற்குழு; இதன் தலைவர், மட்டக்களப்பைச் சேர்ந்த திரு. செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் என்பவர். இவரும் வரவேற்புக்குழுவைச் சேர்ந்த பிறரும், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார்கள். இவர்களை உற்சாகமாக வழிநடத்தியது தமிழ் உணர்வுதான் என்று சொல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் ஒருநாள், மதியம் ஒரு மணிக்கு, விழா மண்டபத்திற்கு அருகில் உள்ள ‘சுயம்புலிங்க விநாயகர்’ கோவிலுக்குப் போயிருந்தோம். அங்குள்ள லிங்கம், சுயம்புவாகத் தோன்றியது என்று மக்கள் நம்புகிறார்கள். மூலஸ்தானத்தில் லிங்கத்தோடு சேர்ந்து விநாயகர் திருவுருவமும் காணப்படுகிறது. அந்தக் கோயில் மதியம் மட்டும்தான் நடைதிறக்குமாம். கோயிலில் அருமையான பளிங்குக்கல் பதித்திருக்கிறார்கள். இதற்கு, ஒரு கோடிக்கு (இலங்கை நாணய மதிப்பில்) மேலே செலவாகியதாம். நம்முடைய மதிப்பில் ரூ. 50 லட்சம் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நிதி உதவி செய்தவர் கலாநிதி சிவரத்தினத்தின் மைத்துனர், ஸ்விட்சர்லாந்தில் வாழ்கின்ற திரு. சிறிகந்தராஜா ஆவார். இந்தப் பளிங்குக்கல்லைப் பதித்தவர்கள், மதுரைக்காரர்களாம். இந்தக் கோயிலுக்குத் தினந்தோறும் மக்கள், திரளாக வருகிறார்களாம்.
கண்ணகிவிழா முடிந்த மறுநாள் காலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டோம். அதன் ஒரு பகுதியான விபுலானந்த அடிகளார் நினைவு கலைகள் பயிலகம், கலாச்சார மண்டபத்திற்கு அருகிலே இருந்தது. தமிழ் இசை, நடனம் போன்ற கலைகளுக்கு இது பெயர் பெற்றது. விபுலானந்த அடிகள் ‘யாழ் நூல்’ என்ற அருமையான ஒரு திரவியத்தைத் தந்தவராயிற்றே; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் இந்த விபுலானந்தர் தான். இவருடைய பெயரும் புகழும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அடையாளமாக உள்ளது. இதற்கு, சுமார் 15 கி.மீ. தூரத்தில் பிரதான கிழக்குப் பல்கலைக்கழகம் இருக்கிறது. அங்கு ஓர் உரையாற்ற வேண்டும். நாங்கள் புறப்பட்டோம். அதில் பணியாற்றுகின்ற கலாநிதி சந்திரசேகரம் எங்களை அழைத்துப் போக அவருடைய காரில் வந்திருந்தார். உள்ளே நுழைந்தவுடன், அவர் எங்களைத் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல் ஆகிய துறைகளின் ஒருங்கிணைப்பாளரைச் சந்திக்க அழைத்துப் போனார். பிறகு, சொற்பொழிவு நிகழ்த்து கின்ற அரங்கிற்குச் சென்றோம். சிறிய அரங்குதான். அங்கு 50 மாணவர்கள் இருந்தார்கள். அங்கே அவர் களிடம் ‘தமிழில் கலைகளின் வரலாறு’ என்பது குறித்துப் பேசினேன். ஒரு முக்கால் மணிநேரம்; அதன் பின் சிறிய கலந்துரையாடல்; அதன்பின் ஒரு தேநீர் விருந்து; அதன்பின் நேரம் ஆகிவிட்டது என்பதால் அடுத்த நிகழ்ச்சி; உடனடியாக இலங் கையின் மத்தியப் பகுதியில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் நோக்கிப் புறப்பட்டோம். திரு. சந்திரசேகரம், அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கார் ஏற்பாடு பண்ணியிருந்தார். டிரைவருடன் இன்னொரு ஊழியரும் வந்தார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகம் சுமார் நூற்றிருபது கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
ஒரு நான்கு அல்லது ஐந்து மணிநேரப் பிரயாணம். முதலில் கொஞ்சத்தூரம், சில புதர்கள், சில மரங்கள், ஆங்காங்கே செடிகள் இவற்றுடன் நிலம் வறட்சி யாகவே தெரிந்தது. டிரைவரும் அவர் நண்பரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள்: இங்கே பல இடங்களில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்தார்கள் என்றும், அவர்களுக்கும் சிங்கள ராணுவத்தினர்க்கும் இங்கே யுத்தங்கள் நடந்தன என்றும், இதன் காரண மாகவே இந்தப் பகுதிகளைச் சிங்கள அரசு அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து விட்டது என்றும், சொல்லிக் கொண்டு வந்தார்கள். வழி யெல்லாம் சின்னச்சின்ன ஊர்கள், பழக்கடைகள் இருந்தன. சாலைகள், பளபளவென்று தார்ச் சாலைகள். நம்மூர் இணைப்புச் சாலைகள் போல் அல்லாமல் நன்றாக இருந்தன. சைனாக்காரன் போட்ட சாலைகளாம். சைனாவின் ஆதிக்கம் பல முனைகளில் வெளிப்பட்டது. இலங்கையின் சில பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கல்லையும், மண்ணையும் போட்டு மெத்துகிறார் களாம். மெத்திய புதிய நிலப் பகுதிகள் எல்லாம் சைனாவில் ஆதிக்கத்தில் இருக்குமாம்.
பாதித்தூரம் போனபிறகு மலையடிவாரம் தெரிந்தது. பயணம் இப்போது ரம்மியமாக இருந்தது. கார், மலையின் மேலே ஏறும் போது, சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. பெரிய மழை! மலையின் சரிவுகளிலிருந்து மழைநீர் பெருகி விழுந்தோடி வந்தது. மேலே சரிவிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து பாறைக்கற்களும் உருண்டு வந்தால் என்ன செய்வது என்று டிரைவர் நகைச் சுவையுடன் அங்கலாய்த்துக் கொண்டார். உயரமாகச் சென்ற பாதையில் எட்டு முனைகள்; திருப்பங்கள். எட்டுத் திருப்பங்களுக்குப் பிறகுதான் மலைச்சரிவு கீழ்நோக்கி வந்தது மாதிரித் தோன்றியது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. கண்டி நகரத்தை நெருங்குகின்ற போதுதான் மழையும் நின்றது.
கண்டி, கொழும்பிற்கு அடுத்த பெரிய (மகாநுவாரா) நகரம். இது மலைகளால் சூழ்ந்தது. நகரத்தில் எங்குப் பார்த்தாலும் வெள்ளைப் பளிங்குக் கற்களாலான புத்தர் சிலைகள். சிலைகளும், சடங்கு களும், ஆச்சாரங்களும் கூடாது என்று போதித்தவரா யிற்றே - அதனால் தான் இப்படி... மேலும், புத்தருடைய பல்களில் ஒன்று என்று கணக்கிட்டு இங்குப் ‘பல்கோயில்’ ஒன்றும் உள்ளது. வெள்ளைப் பளிங்குளால் கட்டப்பட்ட இந்தப் புத்த விகாரம் கண்டியின் ஓர் உச்சியில் அமைந்துள்ளது. பழைய அரண்மனை, அதற்கு நேர் எதிரே, சற்றுத்தூரத்தில் உள்ளது. பல்கோயில் உலக அளவில் பிரசித்த மானது. கண்டியின் மக்கள் தொகை ஒரு இலட்சத்து அறுபதினாயிரம். இதில் சிங்களவர்கள் மட்டும் 74.55 சதவீதத்தினர். தமிழர்கள் 19 ஆயிரம் பேர் 13 சதவீதத்தினர். தமிழகத்தின் பிரசித்தமான திரைப்பட நடிகரும், முதல்வருமான திரு. எம்.ஜி. ராமச்சந்திரன் இந்தக் கண்டியில் பிறந்தவர்தான்.
கண்டியில் அடிவாரத்தில் உள்ளது, பேராதனைப் பல்கலைக்கழகம் (University & Peredeniya). ஏறத்தாழ இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில், மலை சூழ்ந்த பிரதேசமாக இருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் 73 துறைகளைக் கொண்டது. இலங்கையில் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம் இது. இதன் நுழைவாயிலில் உள்ள தாவரவியல் தோட்டம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்றது. இந்தப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பெரியது; பிரசித்தமானது. பல்கலைக்கழகத்தின் மிகப் பழைமையான செனட் அரங்கத்தினருகே அமைந்துள்ளது இது.
கண்டிக்கு நாங்கள் வரும்போது, இரவு ஆகி விட்டது. முதலில் பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினோம். பின்னர்க் காலையில், பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி வ. மகேஸ்வரன் வீட்டிற்குச் சென்றோம். அங்கே இரண்டு நாள் தங்கல். அவருடைய வீடு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலருகே இருந்தது. அது, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான வீடு. சுற்றிவர பரந்த வெளியுடன் கூடிய அந்த வீட்டில் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரி இருந்தாராம். மகேஸ்வரன், யாழ்ப்பாணத்துக்காரர். அவருடைய மனைவி, இயல்பாகப் பழகக் கூடியவர். காலையில் 11 மணியளவில் நிகழ்ச்சி. தமிழ்த்துறை, விசாலமான அறைகளில் இருந்தது. ஆசிரியர்கள், ஏற்கெனவே தெரிந்தவர்கள் போல் நன்றாகப் பழகக் கூடியவர்கள். கூட இருந்து தேநீர் அருந்திவிட்டு, நிகழ்ச்சி நடக்கிற அரங்கத்திற்குச் சென்றோம். அரங்கம் மிக விசால மானது; நவீனமானது. 200க்கும் கூடுதலாக மாண வர்கள் இருந்தார்கள். பெரும்பாலோர் பெண்கள் தான். அங்கே எம்.ஏ. கிடையாது. பி.ஏ.யில் சிறப்புப் பாடமாகத் தமிழை எடுத்துக்கொண்டவர்கள் தான். அவர்களைத் தவிர, பிற துறை மாணவர்கள் சிலரும் வந்திருந்தார்கள். தமிழ்த்துறையின் ஆசிரியர்மார்கள் வந்திருந்தார்கள். மேலும், முன்னர் இத்துறையின் தலைவராக இருந்தவரும், சிறந்த திறனாய்வாளராக அறியப்பட்டவருமான எம்.ஏ. நுஃமான் அந் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இறுதியில் பேசவும் செய்தார்.
ஒரு மணிநேரத்திற்கு மேலிருக்கும். இலக்கியத் திறனாய்வு குறித்துப் பேசினேன். இதில் விசேட மென்ன என்றால், என்னுடைய ‘திறனாய்வுக் கலை’ (என்.சி.பி.எச். வெளியீடு) அங்கே ஒரு பாடநூல். மேலும், ‘கவிதையெனும் மொழி’ என்ற நூல் அங்கு ஒரு துணைப்பாட நூல். எல்லோரும் விரும்பிப் படித்திருப்பதாகத் தெரிந்தது. மிகுந்த அக்கறை யுடனும், கவனிப்புடனும் சொற்பொழிவைக் கேட்டனர். இறுதியில் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். கேள்விகள் கேளுங்களேன் என்று சொன்னேன். ஒரு அரை மணிநேரத்துக்கு மேல் மாணவ, மாணவிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார்கள். நல்ல கேள்விகள், நல்ல விசாரணைகள், நல்ல அவதானிப்புகள். தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல, பிறதுறை மாணவர் களும்தான். ஒரு தமிழ் மாணவி - இரண்டாம் ஆண்டு படிப்பவர் - பெயர் தீபா என்று நினைக்கிறேன்.
கூர்மையான கேள்விகள் ‘திறனாய்வுக் கோட் பாடுகள் பற்றி எழுதியிருக்கிறீர்களே எந்தக் கோட்பாடு உங்கள் சார்புடையது? நீங்கள் யாராக இருந்து திறனாய்வு செய்கிறீர்கள்? உங்கள் நிலைப் பாடு என்ன? என்று என்னை நோக்கி கேள்விகள். இப்படியரு கேள்வி, யாரும் கேட்டதில்லையே! நான் அசந்து விட்டேன். ஆனால் திருப்திப்படுத்த வேண்டுமே...
திருப்திப்படுத்தினேன் என்று நினைக் கிறேன். இப்படிப்பட்ட மாணவர்களைத் - தைரியமும் மறுவிசாரிப்பு மனமும் இருக்கிற மாணவர்களைச் - சந்திப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது, தெரியுமா!
நிகழ்ச்சி முடிய மதியம் ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதன்பிறகு, அதே இரண்டாம் தளத்தில் உள்ள ஒரு பொது அறையில் - அது ஒரு சிறிய சிற்றுண்டிச்சாலை மாதிரி இருந்தது. சமையலுக்குரிய வசதிகளும் உண்டு. அங்கு எல்லார்க்கும் உணவு வந்தது. சேர்ந்து சாப்பிட்டோம். அதன் பிறகு, ஆசிரியர் அறைக்குச் சென்று கொஞ்சநேரம் உரையாடி னோம். அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்து மதிய ஓய்வு எடுத்தோம். மாலைப்பொழுதின் பின்நேரம் கண்டி நகரத்தைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று பேராசிரியர் சொல்ல, நேரம் குறைவு என்றாலும் கிளம்பினோம். கடைவீதிகளின் வழியாகச் சுற்றி னோம். புத்தர் கோயில், உயரமான மலைப்பகுதியில் பளிங்குக்கட்டடத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. அங்கேதான் புத்தருடைய ‘பல்’ பாதுகாக்கப்படு வதாகச் சொன்னார்கள். நேரம் ஆகிவிட்டதால் அங்கு மேலே போகமுடியவில்லை. ஆனால், அடிவாரத்தில் பத்தினித்தெய்யோ, விஷ்ணுத்தெய்யோ, முருகன் தெய்யோ என்று சிறு கோயில்கள் இருந்தன.
தெய்யோ என்றால் தெய்வம் என்று பெயர். மேலே புத்தரை வழிபட்டுவிட்டுக் கீழே ஆண்களும் பெண்களும் வெள்ளை வெளேரென்று பளிச்சிடும் உடையுடன், இந்தத் தெய்வங்களை வழிபட்டார்கள். மணியடித்துத் தெய்வங்களை வழிபட்டார்கள். பத்தினித்தெய்யோ என்பவர் கண்ணகிதான். கண்ணகியின் ஓவியம், கம்பீரமான தோற்றத்துடன் இருந்தது. கையில் சிலம்புடன் நிற்கும் கோலம் கவனிக்கும் படியாக இருந்தது. புத்தரை வணங்கி வரும் சிங்களவர்கள் பயபக்தியுடன் தொழுதார்கள். புத்தரைப் போற்றலாம்; வணங்கலாம்; ஆனால் துயரத்தைச் சொல்லி அழ முடியாது; முறையிட முடியாது; ஆனால் இந்தப் பத்தினித் தெய்யோவிடம் மனத்துக்குள் சொல்லி முறையிட முடியுமே... கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடமும் காணப் படுகிறது என்பதையே இந்தச் சிறுகோயில்கள் காட்டுகின்றன எனலாம். இலங்கையில் கண்ணகி வழிபாட்டைக் கொண்டு வந்தவர் சிங்கள மன்னர் கயவாகுதானே!
மறுநாள் காலை, கொழும்பு விமானதளத்திற்குக் கிளம்ப வேண்டும். வீட்டிலே தேநீர் அருந்திவிட்டுக் கிளம்பினோம். பல்கலைக்கழகம் கார் அனுப்பி யிருந்தது. ஒரு பேராசிரியர் உடன் வந்தார். வழியில் பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரியின் நுழை வாயிலின் அருகே ஒரு அழகான திறந்தவெளியில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் காலைச் சிற்றுண்டி அருந்தினோம். அது வழக்கமான மேலைநாட்டுப் பாணியிலான ‘நவீனச்’ சிற்றுண்டிச் சாலை அல்ல. அதற்கு மாறானது; முரணானது.
மண் சார்ந்த இனவரைவுச் சிற்றுண்டியகம் அது;‘Ethnic Food’ தான் இதன் கோட்பாடு. பெண்களால் மட்டுமே நடத்தப்படுவது. அரசாங்கமே முன்னின்று இதனை நிறுவி, வளர்த்து வருவதாகச் சொன்னார்கள். அப்படி என்ன கிடைக்கிறது, இங்கே? ரசாயன உரங்கள் இல்லாமல் இங்கேயே விளைந்தவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிற்றுண்டிகள், எண்ணெய்களில் கருக்காமல் சமையல் ஆனவை. காய்கறி சூப்பு, இலைக்கஞ்சி, இடியாப்பம், அப்பம், புட்டு, தோசை, பணியாரம், காய்கறி உருண்டை, வாழைப் பூ வடை - இப்படிப் பல. எல்லாம் உடல் நலத்திற்கு உகந்தவை. ருசியோ அருமை, விலையோ குறைவு. மாணவர்களும் ஆசிரியர்களுமாக வாடிக்கையாளர் கூட்டமோ அதிகம். Ethnic Food என்பது வெறுமனே விற்பனைத் தந்திரமாக அல்ல; ஒரு சமுதாய நோக்குடன் காணப்படுகிறது.
ஒரு மன நிறைவுடன் பேராதனையை விட்டு நகர்ந்தோம். கொழும்புக்கும் கண்டிக்கும் ஆன தூரம் 120 கி.மீ. இருக்கும். வழியெல்லாம் பசுமையாக இருந்தது. விமானதளத்தின் அங்காடிகளில் சைனாப் பொருட்களும், சிங்கள மொழியுமாக இருந்தது. கொழும்பு-மதுரை செல்லும் விமானத்தின் அறிவிப்புகள் இந்தியில் மிதந்தன. மதுரை வந்து சேர்ந்தோம். நிகழ்ச்சிகளும் நினைவுகளும் நெஞ்சு நிறையக் கிடந்தன; இன்றும் கிடக்கின்றன.