சுமேரிய மொழியே சுமேரிய நாகரீகத்திற்கான பெயரைக் கொண்டுவந்தது. கி.மு. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பே சுமேரியாவில் பன்னிரெண்டு பெரு நகரங்கள் இருந்தன. பெரு நகரங்கள் என்றால் துல்லியமான நகரத் திட்டமிடல், நீர் மேலாண்மை, நகரச் சுத்திகரிப்பு, மருத்துவ வசதிகள் என்று இன்றைய நவீன நாகரீக நகரங்களுக்கு நிகரானவைகள். கிஷ், ஊர்க், ஊர், சிப்பார், அக்ஷாக், இலராக், நிப்பூர், அடாப், ஊம்மா, லகாஷ், பேட்-டிபிரா மற்றும் லார்சா. இந்த நகரங்கள் அனைத்தும் சொல்லிவைத்தாற்போல மிக நீளமான மற்றும் பெரிய சுற்றுச் சுவர்களால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மேற்குல ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரையில் மனித நாகரீகத்தின் முதல் நகரை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். முதல் எழுத்து முறை – குனிபார்ம் – சக்கரம் கொண்ட முதல் வண்டி, முதல் சமூக சட்டதிட்டங்கள் என்று பல முதல் மனித தொழில் நுட்பங்களுக்கு மூலமாக இருப்பவர்கள் சுமேரியர்கள் (ஆனால் தெற்காசியாவில் தமிழர்களும், சீனர்களும், சுமேரியர்களுக்கு முன்பே இவைகளை வழக்கில் கொண்டிருந்தார்கள் என்பது வேறு விசயம்.) என்று கருதுகிறது மேற்குல ஆராய்ச்சிகள்.

sumeriaசுமேரிய நாகரீகம் என்றவுடன் நினைவிற்கு வரும் அடுத்த விசயம் முத்திரைகள். சிந்து நாகரீகத்திலும் முத்திரைகள் மிகப் பிரதான இடம் வகிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சதுர மற்றும் உருளை வடிவ முத்திரைகள் சுமேரிய சிற்பக் கலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுமேரியர்கள் முத்திரைகளை பண்ட பரிவர்த்தனைகளுக்காக உபயோக்கப்படுத்தியிருக்கிறார்கள். இதைத் தவிர சுமேரிய முத்திரைகள் மற்றொரு முக்கிய மனித சிந்தனை வளர்ச்சிக்கான கருவியை வளர்த்தெடுத்திருக்கிறது. சுமேரிய மொழி எழுத்து வடிவம் பெற பெரும் பங்களிப்பு செய்தது முத்திரைகள். சுமேரிய நாகரீகம் நாம் மேலே பார்த்த முக்கிய நகரங்களின் எழுச்சியிலிருந்தே தொடங்குகிறது. ஒன்றுக்கு ஒன்று குட்டி நாடுகளைப் போல பிரிந்து தங்கள் போக்கில் கலை, அரசியல் என்று வளர்ந்து கொண்டிருந்த இந்த நகரங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நகரமும் மற்ற அனைத்து நகரங்களையும் வென்று, ஒன்றுபட்ட பெரிய சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்க முனைந்த நடவடிக்கை சுமேரிய நாகரீகம் காலம் முழுவதிலும் தொடர்ந்த சங்கதி.

சுமேரிய நாகரீக வரலாற்று கால எல்லையை நான்கு கட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள் இன்றைய ஆராய்ச்சியாளர்கள். உபேயத் காலகட்டம் (சுமார் கி.மு. 5000 – 4100), ஊருக் காலகட்டம் (சுமார் கி.மு. 4100 – 2900), பழைய வம்சாவளி காலகட்டம் (சுமார் கி.மு. 2900 – 2334) மற்றும் ஊருக் III காலகட்டம் (சுமார் கி.மு. 2047 – 1750). இதில் ஊருக் III காலகட்டத்தை சுமேரிய நாகரீகத்தின் பின்நவீனத்துவ காலக்கட்டம் என்றும் வரையறை செய்கிறார்கள். இதற்குக் காரணம் இடையில் சுமார் இருநூறு ஆண்டுகள் சுமேரிய நாகரீக மக்கள் அக்கேடிய (சுமார் கி.மு. 2334 – 2218) மற்றும் குட்டியர்களுக்கு (சுமார் கி.மு. 2218 – 2047 ) கீழ் அடிமைப்பட்டு கிடந்தது. இறுதியாக சுமார் பதினெட்டாம் நூற்றாண்டு (கிருஸ்துவுக்கு முன்) வாக்கில் பாபிலோனிய நாகரீகத்திடம் வீழ்ச்சி கண்டது சுமேரியா. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் செழித்திருந்த நாகரீகம் சுமேர்.

சுமேரிய நாகரீகக் கலைகள்

சுமேரிய நாகரீகத்தின் கலைகளைக் குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள சுமேரியர்களின் கடவுளர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கற்கால மனிதர்களின் கலைகளில் உணவிற்கான வேட்டை மிருகங்கள் எத்தகைய முக்கியமான மையக் கருவாகவும், பேசுபொருளாகவும் இருந்ததோ அதேபோல உலகின் முதல் நகர நாகரீகத்தில் கடவுளர்களும், அரசர்களும் கலைகளின் மையக் கருவாகவும், பேசுபொருளாகவும் இருந்தார்கள். இது மற்ற மூன்று நகர நாகரீகங்களான சிந்து, எகிப்து மற்றும் சீன நாகரீகங்களுக்கும் பொருந்தும் பொதுவான ஒரு அம்சமாகும். விவசாயத் தொழிலைக் கண்டுபிடித்ததின் மூலம் அன்றாட உணவிற்காக மிருகங்களுக்குப் பின்னால் இடம் பெயர வேண்டிய கட்டாயம் மனித சமூகத்திற்கு இல்லாமல் போனது.

ஓரிடத்தில் நிலையாகத் தங்கி அவனுக்கான உணவை அங்கேயே உற்பத்தி செய்வதற்கான - மனித வரலாற்றைப் புரட்டிப்போடும் – மிகப் பெரும் வசதியை விவசாயம் உண்டாக்கிக் கொடுத்தது. இதன் காரணமாக நிலையான கிராம குடியிருப்புகள் தோன்றின. மனித சமூகம் ஓரிடத்தில் நிலைபெற்ற நிலையான குடியிருப்புகளை உண்டாக்கிய பிறகு, சமூகத்தில் பல அடிப்படை மாற்றங்களும் தேவைகளும் தோன்றின. மனித வாழ்வு குறித்த புதிய சிந்தனைகள் ஊற்றெடுத்தன. அவைகளில் முக்கியமான இரண்டு கருத்துக்கள், கடவுள் கோட்பாடு மற்றும் கடவுள் தன்மை கொண்ட அரசர்கள். இந்த இரண்டு கருத்துக்களுக்கும் பின்னால் இருப்பது சமூக நிர்வாகமும், வாழ்விட எல்லை விரிவாக்கமும் (நகர விரிவாக்கங்களின் வழி நாடு உருவாக்கம்).

சமூக நிர்வாகப் (சமூக ஓழுங்கு மற்றும் கட்டுப்பாடு) பணியை மத நிறுவனம் கவனித்துக்கொள்ள, நாடு உருவாக்கத்தை அரசன் கவனித்துக் கொண்டான். இதன் காரணமாக இந்த இரண்டும் விவசாய நகர நாகரீகத்தில் புனைவு புனித தன்மையைப் பெற்றன. இவைகளே முதல் விவசாய நகர நாகரீகக் கலைகளிலும் பிரதிபலித்தது. கடவுளுக்குப் பலியிடும் சடங்கு, மத ஊர்வலம், கடவுளர் குறித்த புனைவு கதைக் காட்சிகள், அரசனின் போர் வெற்றி காட்சிகள், போர்க்கள காட்சிகள் இவைகளே ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை போன்ற கலைகளின் பேசுபொருள்களாக இருந்தன. ஆக, மனித சமூகத்தின் முதல் நகரை உருவாக்கிய சுமேரியாவின் கலைகளை அறிந்து கொள்ள நாம் அறிந்து கொள்ள வேண்டியது சுமேரியாவின் கடவுளர்களைக் குறித்து.

சுமேரியக் கடவுளர்கள்

இயற்கை பூதங்களே (காற்று, நீர், கோள்கள் போன்றவைகள்) சுமேரியர்களின் பிரதான கடவுளர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு பாதி மனித, பாதி பரம்பொருள் தன்மையைக் கற்பித்தன சுமேரிய கடவுள் கோட்பாட்டுப் புனைவுக் கதைகள். ஆன் இவர் வான் கடவுள் (Sky-God). நானா இவர் நிலாக் கடவுள். நின்கள் இவர் பெண் நிலாக் கடவுள். இனானா இவர் பெண் கடவுள். இவரை சுவர்கத்தின் பெண் (லேடி ஆப் ஹெவன்) என்று சிறப்பித்தார்கள் சுமேரியர்கள். பூமி மற்றும் சுவர்க்கத்தின் கடவுள் இவர். வளமை மற்றும் செழுமையின் கடவுளும் இவரே. நகர காவல் தெய்வமும் இவரே. சுமேரியர்களின் பிரதானக் கடவுளும் இவரே. இவர் சுமேரிய நாகரீகம் முழுவதும் மிகப் பிரசித்தி பெற்ற தாய் தெய்வக் கடவுள் போன்றவர். இவர், அன் கடவுளின் மகள் என்றும், நானா மற்றும் நின்கள் கடவுளர்களின் மகள் என்றும் இரு கருத்துக்கள் இருக்கின்றன. ஊர் மற்றும் ஊர்க் ஆகிய இரு நகரங்களிலும் இவருக்கு கோயில்கள் இருந்தன. ஊர்க் இனானா கடவுளின் சிறப்பு நகரம். இவருடைய சகோதரி ஈரஸ்சிகியால். ஈரஸ்சிகியால் பாதாள உலகின் கடவுள். இனானா கடவுளின் சகோதரன் ஊட்டு. இவர் சூரியக் கடவுள். இனானா கடவுளின் காதல் கணவர் தாமுழி. இவரை தாமுழ் என்றும் அழைப்பார்கள். இவர் மேய்ப்பின் கடவுள் (Shepherd God). இனானா கடவுள் குறித்து சுமார் நான்காயிரம் வருடத்தியப் பழமையான இரண்டு இலக்கிய எழுத்துப் பதிவுகள் இருக்கின்றன. ஒன்று உலகின் முதல் நாவலாகக் கருதப்படும் கில்காமேஷ் காவியம். இது சுமேரிய வீரன் கில்காமேஷின் கதையைச் சொல்லும் காவியம். அடுத்தது, சைக்கிள் ஆப் இனானா. இது சுமேரிய கவிதைத் தொகுப்பு. சமேரிய புனைவுக் கதைகளின் தொகுப்பான இனானாஸ் டிசன்ட் டு த அண்டர்வோல்டிலும் இஸ்தார் கடவுள் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. என்கி, இவர் நீர் கடவுள். எரிடு நகரம் என்கி கடவுளுக்கான சிறப்பு நகரம்.

இஸ்தார் மற்றும் தாமுழியின் திருமண சடங்கை ‘ஹோலி மேரேஜ்’ என்கிறப் பெயரில் புது வருடப் பிறப்பு விழாவாக சுமேரியர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். வருடத்தின் முதல் அறுவடையை கொண்டாடும் விழா இது. இந்த சடங்கு குறித்த சித்தரிப்பு காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக திரும்பத் திரும்ப சுமேரிய சிற்பக் கலைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே மற்றொரு முக்கிய விசயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சுமேரிய கடவுளர்களின் பெயர்களில் இருக்கும் தமிழ் சாயல். இது குறித்த ஆராய்ச்சிகளை நம்மவர்கள் எவ்வளவு தொலைவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது அந்த இஸ்தார் கடவுளுக்கே வெளிச்சம். நம் கடமை இது குறித்து சிறிதாக புலம்பிவிட்டுப் போக வேண்டியதுதானே. போவோம். சொல்லப்போனால் இனானா மற்றும் தாமுழி கடவுளின் இறப்பும் மறுபிறப்பும் குறித்த புனைவுக் கதையே தொடக்க கால (உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம்) சுமேரிய கலைகளுக்குப் பின்னால் இருந்த கலை சிந்தாந்தம். இனானா தன்னுடைய சகோதரி ஈரஸ்சிகியாலின் பாதாள உலகத்தையும் தன்னுடையதாக்கிக் கொள்ள பாதாள உலகத்திற்குச் செல்கிறாள். இதை அறிந்த ஈரஸ்சிகியால், இனானாவை சிறைப்பிடித்து அவளைக் கொன்றுவிடுகிறாள். பூமியைக் காப்பவள் இனானா அவள் இறந்துவிட்டால் பூமியில் வளமைக்கும் செழிப்பிற்கும் வழியில்லாமல் போய்விடும் என்பதால் நீர்க் கடவுளான என்கி இந்த விசயத்தில் தலையிட்டு ஈரஸ்சிகியாலிடம் முறையிடுகிறார்.

இனானாவின் இடத்தில் யாரையாவது பிணையக் கைதியாக தன்னிடம் கொடுத்தால் இனானாவை மீண்டும் உயிர்பித்து பூமிக்குத் திரும்ப அனுப்புவதாக ஈரஸ்சிகியால் சொல்கிறாள். தன்னுடைய காதல் மனைவியைக் காக்க தாமுழியும் இந்த உடன்பாட்டிற்கு சம்மதித்து ஈரஸ்சிகியாலின் கைதியாக பாதாள உலகத்திற்குச் செல்கிறான். ஆறு மாதங்கள் அங்கே கைதியாக இருந்துவிட்டு அடுத்த ஆறு மாதங்கள் தன்னுடைய மனைவியைக் காண பூலோகத்திற்கு வருவது வழக்கம் என்று சொல்கிறது அவனைக் குறித்த புனைவுக் கதை. இனானா பாதாள உலகத்தில் இறந்ததும், தாமுழி பாதாள உலகத்தில் கைதியாக இருப்பதும் பூமியில் இறப்புக்கு நிகராகவும், இனானாவின் மறுபிறப்பும், தாமுழி தன் மனைவியைப் பார்க்க பூலோகத்திற்கு வருவதும் பூமியில் மறுபிறப்பிற்கு நிகராவும் பார்க்கப்பட்டது சுமேரியாவில். இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும், தாமுழி கடந்து செல்லும் இறப்பும் மறுபிறப்புமே தொடர்ந்து ஒரு சக்கரம் போல நிகழ்வதாகக் கருதினார்கள் தொடக்க கால சுமேரியர்கள். மனித வாழ்வு பூமியில் தாவரங்கள் மற்றும் கால்நடைகளை நம்பியிருப்பது போலவே கடவுளர்களின் தெய்வீகத் தன்மையையும் நம்பியிருக்கிறது என்றும் நம்பினார்கள். இந்த சிந்தனையானது அவர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் நேச்சுரலிசமாகவும், அப்ஸ்டிராக்ட் ரெப்ரஷன்டேஷனாகவும் கலந்து வெளிப்பட்டது. அறுவடை, கால்நடை விலங்குகள், இவைகளின் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களை இஸ்தார் கடவுளுக்கு அர்பணிக்கும் காட்சிகள் ஆகியவை நேச்சுரலிசத் தன்மையுடன் சித்தரித்தார்கள் தொடக்க சுமேரியக் கலைஞர்கள். இதில் புது வருட விழா ஊர்வலக் காட்சிகளும் அடங்கும். போர்கள் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் மரணங்கள் ஆகிய காட்சிகளை அப்ஸ்டிராக்ட் ரெப்ரஷன்டேஷனாக சித்தரித்திருக்கிறார்கள்.

சுமேரியக் கலையின் கால எல்லைகள்

சுமேரிய கலையை தொடக்க கால உபேயத் மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம், இடைக்கால மெசிலிம் காலகட்டம், இறுதிக் கால இம்டுகட் – சுக்குரு காலக்கட்டம் மற்றும் சுமேர்-அக்கேடிய புத்தெழுச்சி காலக்கட்டம் என்று நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். சுமேர்-அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் என்பது அக்கேடிய பேரரசு வீழ்ந்த பிறகு மூன்றாம் ஊருக் வம்சாவளி அரசர்கள் மெசபட்டோமிய நகரங்களைக் கைப்பற்றி மீண்டும் சுமேரிய அரசை நிறுவிய காலகட்டம். இந்த காலகட்டத்தை சுமேரியக் கலைகளின் பின்நவீனத்துவக் காலம் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It