தமிழில் பதிப்பியல் நெறி 18 ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், அந்தப் பின்புலத்திலான வாசிப்பு 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் அதிகமாக வழக்கத்துக்கு வரத் தொடங்கியது. தமிழுக்குச் செவ்வியல் தகுதி கிடைத்த பின்னர் இத்தகைய வாசிப்புகள் மேலும் வளர்ச்சி பெற்றன. ஓரிரு ஆய்வுகள் தொல்லியலோடு தொடர்புப்படுத்திச் செவ்வியல் பனுவல்களை அணுகியது 20 ஆம் நூற்றாண்டுச் சூழல். இந்நிலையில், கீழடி அகழாய்விற்குப் பிறகு, செவ்வியல் பனுவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கும் நெறி அகழாய்வுகளில் தீவிரமானது. அதையொட்டி, செவ்வியல் பனுவல்களின் உள்ளடக்கம் மேலும் விரிவான ஆய்வுகளுக்கு இடமளிக்கிறது.

இந்தச் சூழலில் திருச்சியில் செயல்படும் ‘விழி’ ஆய்வு மன்றம் செவ்வியல் நூல்களை மீள்புரிதல் நோக்கில் ஆய்வு செய்யும் முனைவில் ஈடுபட்டது.

  • முதல் கட்டமாக, ஏராளமான முன்திட்டமிடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு, நோக்கம் வரையறுக்கப்பட்டது.
  • ஒரு கருத்தை, விளக்கத்தைப் புதிதாக இன்றைய தமிழாய்வுச் சூழலுக்கு வழங்குதலை நோக்கமாகக் கொண்டு செவ்வியல் இலக்கியங்களைத் தெரிவு செய்தது.
  • பதிப்பு வரலாற்றுப் பணியிலும் உரைவேறுபாட்டுப் பணியிலும் பங்காற்றிப் பட்டறிவு பெற்ற நபர்கள் ஒன்றிணைக்கப்பட்டு எவ்வகையிலான தலைப்புகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தது.
  • அனைத்துப் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏறக்குறைய ஒத்த தன்மை வாய்ந்த பொருண்மைகளில் ஒவ்வொரு செவ்வியல் நூலையும் சார்ந்த கட்டுரைகளைப் பெறுதல் என்று முடிவு செய்யப்பட்டது.
  • கட்டுரையாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்; பணிகள் தொடங்கப்பட்டன. சுவடு-பதிப்பு- வெளியீடு- உரை மரபு, பிற துறைகள் அழகியல் – வடிவியல் (இலக்கியக் கொள்கை) மொழியாக்கம் என வகைப்படுத்தப்பட்டு கட்டுரைகள் பெறப்பட்டன.
  • அறிஞர் குழுவின் பார்வைக்குக் கொண்டு சென்று திருத்தங்கள் செய்யப்பட்டன.
  • கூகுள் மீட் வழியாக கட்டுரைகள் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • இவையெல்லாம் நிறைவுற்று, கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் பன்னிரண்டு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீள்புரிதல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய…”

இவை சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் உள்ள சிறுபாணாற்றுப் படை நூலில் இடம்பெற்றுள்ள வரிகள். ‘வண்டுகள் மொய்க்கும் நறுமணம் கமழும் நாக மரங்கள் நிறைந்த நீண்ட வழியினில், தன்னுடைய பெரிய தேரை, படர இடமின்றித் தவித்த சிறுமுல்லைக்கு ஈந்து உதவிய’வன் வள்ளல் பாரி என்று போற்றப்படுகிறான்.

ncbh books ancient tamil literatureஒரு முல்லைக்கொடி படரத் தவிக்கக்கூடாது என்று இரங்கிய குழந்தை மனம் வள்ளல் பாரிக்கு. இது செய்தி!

பாரி பயணம் செய்யும் வழியில் வண்டுகள், நாக மரங்கள், முல்லைக்கொடி ஆகிய மூன்று உயிர்கள் மட்டுமே சுட்டப்பட்டிருந்தாலும், இன்னும் எத்தனையோ உயிர்கள் இருக்கலாம். ஓருயிரைச் சார்ந்து இன்னோர் உயிர் என்பது இயற்கைச் சுழற்சிதான். இந்நிலையில், நெடுவழியில் முல்லை செழித்து வளர வேண்டும் என்று விரும்பி, அதற்கு உதவுவது சுற்றுச்சூழலைப் பேணும் உயர்ந்த வழி.

பாரியை மையமாகக் கொண்ட ‘உலகு புரப்பவர் பாரி’ என்கிற கவிதை நூலில் பாவலர் அறிவுமதி இவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆம், பழைமையான இலக்கியங்களை மரபுவழிப் போக்குக்கு மாறாக, விமர்சன நோக்கில் ஆய்வு செய்து, அந்த இலக்கியங்களை இன்றைய காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பதுதான் மீள்புரிதலின் அடிப்படை நோக்கமாகும்.

அவ்வகையில், ஏற்கெனவே பல உரைகளைக் கண்டு பயணித்து வந்திருக்கிற செவ்வியல் இலக்கியங்கள் மீள்புரிதலுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன.

குறுந்தொகை

மீள்புரிதல் நோக்கில் குறுந்தொகை என்னும் நூலைப் பதிப்பித்திருக்கிறவர் இரா.அறவேந்தன். இந்த நூலில் இரா.அறவேந்தன் எழுதியிருக்கிற

1. ‘குறுந்தொகைப் பதிப்பியல்கள் இதுவரையும் இனியும்’ என்னும் கட்டுரையுடன் நூல் தொடங்குகிறது.

        இந்நூலில் இடம்பெற்றுள்ள பிற கட்டுரைகள்:

2.      தொல்காப்பிய விதிமீறலா? மொழி மாற்றமா? குறுந்தொகைச் சான்றுகள்,

3.      லக்கான் நோக்கில் குறுந்தொகை,

4. அகவன் மகளை ஆங்கிலப்படுத்துதல்: மொழிபெயர்ப்புகளின் ஊடாக ஒரு சிறு பயணம்,

5.      குறுந்தொகையில் கடவுட் கொள்கை ஒரு வரலாற்று வளர்ச்சி நோக்கு,

6.      குறுந்தொகை 259 ஆவது பாடலின் ஆசிரியர் யார்?

7.      குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்புகளும் அவற்றின் தன்மையும்,

8.      குறுந்தொகை-தொடரியல் பகுப்பாய்வு,

9.      தொல்காப்பிய முன்னம் நோக்கு அடிப்படையில் குறுந்தொகைப் பாடல்கள்.

இந்நூலின் கட்டுரைகள் பதிப்பியல், மொழிபெயர்ப்பியல், மானுடவியல், மொழியியல், யாப்பியல், உளவியல் உள்ளிட்ட வகைகளில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளன.

ஐங்குறுநூறு

இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறவர் முனைவர் ம. லோகேஸ்வரன்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      ஐங்குறுநூறு: பதிப்பு வரலாறும் உரைப்போக்கும்,

2.      கவிதையில் நோக்கில் ஐங்குறுநூறு,

3.      ஐங்குறுநூறு, மன்யோசு வேனிற் பாடல்களில் கருப்பொருள் பண்பாட்டு வயமாக்கல்,

4.      முன்ன நோக்கில் ஐங்குறுநூற்றுக் கூற்றுகள்,

5.      பெயரெச்சங்களின் தொடரமைப்பு: ஐங்குறுநூற்றை முன்வைத்துச் சில விளக்கங்கள்.

இந்த நூலில் ஜப்பானியப் பனுவலுடன் ஐங்குறுநூறு ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது. இலக்கண, மொழியியல் தொடர்பான புதிய பார்வைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அகநானூறு

இந்நூலின் பதிப்பாசிரியர்: முனைவர் மா. பரமசிவன்.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள்:

1.      அகநானூற்றுப் பதிப்பியல் அறிமுக நோக்கு,

2.      அகநானூறு: செவ்வியல் பொருத்தப்பாடு,

3.      அகநானூற்றுக் கவிதைகளில் மொழிப் பயன்பாடு: சில கூறுகள்,

4.      அகநானூற்றின் வடிவம்: நேரிசையும் நிலைமண்டிலமும்,

5.      அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களும் மலையான மொழி பெயர்ப்புகளும்.

அகநானூற்றுப் பதிப்பு, உரை வரலாறு குறித்த செய்திகளோடு அகநானூற்றுப் பாடல்களின் செவ்வியல் தன்மைகள், அகநானூற்று மலையாள மொழிபெயர்ப்புகளின் சிறப்புகள், அவற்றில் காணப்பெறும் சிக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தத் தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது.

புறநானூறு

இந்த நூலின் பதிப்பாசிரியர் அ. செல்வராசு. நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள்:

1.      புறநானூறு – பதிப்பும் பாடல் வைப்பும்,

2.      புறநானூற்றில் உந்தும் உத்தும்,

3.      புறநானூற்றிலும் ரோலானிலும் கருத்துப் புலப்பாடு,

4.      சீறூர்ச் சமூக அமைப்பும் இனக்குழுப் பண்புகளின் சிதைவும்.

சாதாரண வீரர் தொடங்கி அரசர் வரையிலான அனைவரது புற வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளது, இந்த நூல். புறநானூற்றைப் பதிப்பு நோக்கிலும் இலக்கண நோக்கிலும் ஒப்பீட்டு நோக்கிலும் சமூகவியல் நோக்கிலும் புதிய பார்வையைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்துகிறது, இந்நூல்.

மதுரைக்காஞ்சி - நெடுநல்வாடை - பட்டினப்பாலை

நூலின் பதிப்பாசிரியர் அ.புவியரசு. இந்நூலில் நான்கு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை:

1.      பதிப்பியல் நோக்கில் மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை பட்டினப்பாலை,

2.      பட்டினப்பாலை - ஆங்கில மொழிபெயர்ப்பு,

3.      திணைவெளி அழிவும் தெய்வீக வெளிக்கட்டமைப்பும்,

4.      கவர்ந்திழுக்கும் தலைமைத்துவம்: நெடுநல்வாடைப் பாட்டுடைத் தலைவனின் வேலை வாழ்க்கைச் சமநிலை.

பட்டினப்பாலை ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்தின் உட்கருத்து, பின்புலம், மரபுக் கோட்பாடு போன்ற கூறுகளை உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ள திறத்தை ஆய்கிறது இந்த நூல். திணைவெளியைத் தெய்வீக வெளியாக மாற்றிக் கட்டமைக்க முயலும் மதுரைக்காஞ்சியின் கருத்தியல் மாற்றத்தை முன்வைக்கிறது. அறத்தலைமையை முன்னிறுத்தும் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில், கவர்ந்திருக்கும் தலைமைத்துவம் உடையவனாக நெடுநல்வாடைத் தலைவனை நக்கீரர் படைத்துக் காட்டியுள்ள திறத்தை வெளிப்படுத்துகிறது.

கலித்தொகை ரூ.115/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: மு.முனீஸ்மூர்த்தி.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      கலித்தொகைப் பதிப்பு: வரலாறும் செல்நெறியும்,

2.      மானிடவியல் நோக்கில் முல்லைக்கலி,

3.      கலித்தொகையில் மொழியமைப்பு,

4.      கலித்தொகையில் கருத்தாடலியல், நகர்வுகள்,

5.      முப்பொருள் இயக்க வரலாறு: நிலமும் பொருளும் கலித்தொகையும்.

கலித்தொகையிலுள்ள மானுடவியல் தரவுகளைச் சமகால நிலவியல் அடையாளங்களுடன் பொருத்திக் காட்டுதல், கலித் தொகையின் திணைவைப்பு முறையின் பொருத்தப் பாட்டினை விவாதத்திற்கு உட்படுத்துதல், நாடகப் பாங்கிலான இந்நூற்பாடல்களைப் புலவர்(கள்) வாசகர்க்கு எடுத்துரைப்பதற்கு நடையியல் சார்ந்து கையாண்டுள்ள மொழி முறைமையை அடையாளப் படுத்துதல், கலியின் மொழியமையமைப்பு அதன் முந்தைய, பிந்தைய கால இலக்கியங்களோடு ஒத்தும், உறழ்ந்தும் வந்துள்ள பாங்கினை ஒப்பிட்டறிவித்தல் என்னும் நிலைகளிலான ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நற்றிணை ரூ.125/-

இந்நூலின் பதிப்பாசியர்: முனைவர் க. பாலாஜி.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      நற்றிணைப் பதிப்பாக்கமும் மரபுரைகளும்,

2.      நற்றிணையும் நல்ல திணையும்: சில கேள்விகள்,

3.      நற்றிணையில் கிளைமொழி,

4.      யாப்பியல் நோக்கில் நற்றிணை,

5.      நாடக நிகழ்த்துதல் நோக்கில் நற்றிணைத் தனிமொழிப் பாடல்கள் முன்னிறுத்தும் தனிமனித உடல்.

நற்றிணைப் பனுவல்களைப் பல்வேறு கோணங்களில் அணுகுவது இந்நூலில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது. நற்றிணை என்னும் அகவொழுக்கம் சார்ந்த ஒற்றைச் சொல்லின் கவிதையியல் பின்புலம் தொடங்கி, பதிப்பு முறையியல், பா மரபு, நாட்டார் வழக்காற்றியல், நிகழ்த்துகலை எனப் பல தளங்களில் ஆய்வு செய்துள்ளன, இந்த நூலின் கட்டுரைகள்.

பரிபாடல் ரூ.95/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: ம.லோகேஸ்வரன்.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      பரிபாடல் பதிப்பு வரலாறும் உரைப் போக்கும்,

2.      பரிபாடலில் மொழியாக்கக் கூறுகள்,

3.      வையைப் பாடல்களில் கிருதுமால்: வைதீகத்தை முரணிக்கும் நாட்டு மரபு.

பரிபாடல் பதிப்பு – உரைகளைப் பற்றியும், வையைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிருதுமால் நதியின் ஓட்டப்பாதை, கடலில் கலக்கும் இடத்தைப் பற்றியும் பரிபாடலின் சொல்லாளுகையைப் பற்றியும் மாற்றுச் சிந்தனைகளை எடுத்துரைக்கின்றன இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்.

பதிற்றுப்பத்து ரூ.150/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: முனைவர் இரா. மகிழேந்தி.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      பதிற்றுப்பத்து: பதிப்பு – உரை – உரை மரபு,

2.      பதிற்றுப்பத்து வெளி: குடியழிப்பும் வெளி விரிவாக்கமும்,

3.      காக்கைபாடினி நச்செள்ளையாரின் பதிற்றுப்பத்துப் பாடல்களில் பெண்மொழிக் கூறுகள்,

4.      வீரநிலை இலக்கிய ஆய்விற் பதிற்றுப்பத்து,

5.      அழகியல் நோக்கில் பதிற்றுப்பத்து,

6.      வேற்றுமைத் தொடர்களில் வேற்றுமைப் பொருள் புலப்பாடு: பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தை முன்வைத்து….

பதிற்றுப்பத்துப் பாடல்களில் இடம்பெறும் ‘வெளிகள்’ ஆக்கத்தோடும், பெண்மையோடும், அழிவோடும், ஆண்மையோடும் பொருந்தி நிற்கின்றன. இப்பாடல்கள் பதினான்கு வாய்பாடுகளில் வீரநிலை இலக்கியத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகின்றன; அழகற்றவையே அழகியலாக மாறி நிற்கும் பேரழகை விவரிக்கின்றன; பேரளவிலான இலக்கணப் புணர்ச்சி நுட்பங்களைத் தமக்குள் கொண்டுள்ளன என அரிய செய்திகளை இந்த நூல் விளக்குகின்றன.

முத்தொள்ளாயிரம் ரூ.110/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: அ.செல்வராசு.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      முத்தொள்ளாயிரம்: பதிப்பும், பாடுபொருளும்,

2.      முத்தொள்ளாயிரத்தில் பகைப்பெண்டிர் குறித்த சித்திரிப்புகள்,

3.      முத்தொள்ளாயிரம் முத்துமாலை ஆன கதை,

4.      முத்தொள்ளாயிர உரை வரலாற்றில் ஒரு மைல்கல்: சி. கணேசையர் உரைக்குறிப்புகள்.

முத்தொள்ளாயிரப் பாடல்கள் அழகியல் சார்ந்த பாடல்கள் என்னும் பொதுப் பார்வையிலிருந்து மாறி, அவற்றை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்துள்ள கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ரூ.175/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: நித்தியா அறவேந்தன்.

இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு: பதிப்பு வரலாறு,

2.      முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு – யாப்பியல்,

3.      வேறுபட்டு நின்றாய் முருகா! மீள் பார்வையில் குறிஞ்சி,

4.      பெருங்குறிஞ்சி (குறிஞ்சிப்பாட்டு)ச் சுவடிகள்,

5.      குறிஞ்சிப்பாட்டு: மீள்மொழிபெயர்த்து மதிப்பிடல்,

6.      முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டில் பெண்கள்,

7.      முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டில் ஆக்கப்பெயர்கள் – ஒப்பீடு.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு என்னும் இரு நூல்களைப் பதிப்பியல், மொழிபெயர்ப்பியல், சுவடியியல், மொழியியல், இலக்கணவியல் என்னும் நோக்குநிலைகளில் ஆராய்ந்துள்ள கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

தொல்காப்பியம் ரூ.170/-

இந்நூலின் பதிப்பாசிரியர்: மா. ஆசியாதாரா.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள்:

1.      ஆத்திரையனின் பொதுப்பாயிரமும் தொல்காப்பியப் பிரதிகளும்,

2.      தொல்காப்பிய நோக்கில் யூங்கியம்,

3.      தொல்காப்பிய யாப்பு,

4.      தொல்காப்பியத்தில் நாநிலப் பூதம்,

5.      தொல்காப்பியர், அரிஸ்டாட்டில் அடையாளங்கண்ட இயற்கைக் கூறுகள்,

6.      வினையெச்சம் – வினைமுதல் உறவின் ஐந்து நிலைகள்: தொல்காப்பியப் பின்னணியில் சங்க இலக்கிய வினையெச்சத் தொடர்கள்,

7.      தொல்காப்பியப் பதிப்புகள்: வளர்ச்சியும் வரலாறும்.

‘இலக்கியமுறை உளவியலின் தந்தை’ தொல்காப்பியர், தொல்காப்பியம் ஒரு பூதநெறி நூல், ஓர் உத்தியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும் யாப்பு, வைதிகப் பனுவல் என்ற அடையாளத்தைக் கடந்ததற்குத் துணையாகி நின்ற பதிப்புகள் என்பனவாக, தொல்காப்பியம் குறித்து ஆழ்ந்த ஆய்வுரைகளைக் கொண்ட நூல் இது!

மீள்புரிதல் என்பது பழைய பனுவலை, புதிய கண்ணாடியைக் கொண்டு பார்ப்பது. அதாவது, இக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்ததைப் போல, பாரியை வெறுமனே ஒரு முல்லைக் கொடியின் மீது இரக்கம் கொண்டவனாக மட்டும் பார்க்காமல், சுற்றுச் சூழலைப் பேணும் அக்கறை கொண்டவனாகப் பார்ப்பத்.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால், கண்ணகி ‘கற்பின் இறைவி’ என்று கொண்டாடப்பட்டார். மீள்புரிதலில் நீதிக்காகக் குரல் கொடுத்த புரட்சிப் பெண்ணாகப் பார்க்கப் படுகிறார்.

மீள்புரிதல் என்பது இன்றைய இலக்கியத் தளத்தில் ஓர் அறிவார்ந்த பயணமாகும். காண்கின்றவரின் அறிவாற்றலுக்கேற்ப எந்த ஓர் இலக்கியத்தையும் நெகிழ்த்திப் பார்க்க முடியும்.

- அன்பரசி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.