தமிழில் இலக்கியத் திறனாய்வு மற்றும் ஆராய்ச்சிகள் பல்கிப் பெருகுவதற்கு அடிப்படையாகத் தளம் அமைத்துக் கொடுத்தப் பெருமை தமிழின் சுவடிப் பதிப்பாளர்களையே சாரும். அவர்களின் பதிப்புப் பணி முயற்சிகளால் ஏடுகளிலிருந்து அச்சு வடிவம் பெற்ற பழந்தமிழ் இலக்கியங்களே தமிழின் தொடக்க காலத் திறனாய்வுகளுக்கும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் மூலமாய் அமைந்தன. தமிழ் நூல்களின் அச்சு வரலாறு தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலிலிருந்து தொடங்குகிறது. ஐரோப்பிய மிஷனரிகளால் தோற்றம் பெற்ற தமிழ் அச்சு மற்றும் பதிப்புப் பணிகள் தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட 1712ஆம் ஆண்டு தொடங்கிப் பல்கிப் பெருகின.
1810ஆம் ஆண்டிற்குப் பின்னரே தமிழில் இலக்கிய இலக்கணப் பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848இல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார்.. அதற்குப் பின்னர் 1885இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிட்டார்.
ஏடுகளில் இடம்பெற்றிருந்த தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் அச்சு வாகனம் ஏறியபின் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்க முயற்சிகளுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழி இலக்கியக் கல்வியில் பல புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது.
சங்க இலக்கியங்களுள் முதன்முதலாக அச்சேறிய நூல் பத்துப்பாட்டு இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை. ஆண்டு 1851, பதிப்பித்தவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். வா. மகாதேவ முதலியார் (பொருநர் ஆற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க இலக்கிய நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர். சற்றேறக் குறைய பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் நூற்றாண்டில் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்புப் பணி இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டில் நிறைவு பெற்றது.
சங்க இலக்கியப் பதிப்பு முயற்சிகளைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களை, சங்ககாலப் புலவர்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தமிழிலக்கிய உலகில் தொடர்ந்தன. சங்கத் தமிழ்ப் புலவர்களில் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரும் புலவர்கள் பலரில் முதன்மையானவர் கபிலர் ஆவார். 1936ஆம் ஆண்டிலேயே வே. வேங்கடராஜூலு ரெட்டியார் கபிலர் என்ற தலைப்பில் கபிலர் வரலாறு, கபிலர் இலக்கியங்கள் குறித்த விரிவான விளக்கங்களுடன் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து 1939ஆம் ஆண்டில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கபிலர் என்ற அதே தலைப்பில் ஒரு ஆய்வு நூலை வெளிட்டார். கடந்த நூற்றாண்டில் தொடர்ச்சியாகப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் கபிலர் தொடர்பாக வெளியிடப் பட்டன. கல்விப் புலத்திற்கு வெளியே இத்தகு முயற்சிகள் தொடர்ந்த நிலையில் கல்விப் புலத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வுக்கு உரிய பொருண்மையாகக் கபிலரைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையான ஆய்வினை வெளியட்ட பெருமை முனைவர் ஆ.விஜயராணி அவர்களையே சாரும். முனைவர் ஆ.விஜயராணி அவர்களின் முனைவர்ப் பட்ட ஆய்வேட்டின் நூலாக்க வடிவமே சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல்.
முனைவர் ஆ.விஜயராணி புதுச்சேரி அரசின் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். இவர் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் ”பிரஞ்சிந்திய விடுதலை இயக்கத்தில் காரைக்காலின் பங்கு” என்ற தலைப்பில் இளமுனைவர்ப் பட்ட ஆய்வினையும் ”சங்க காலக் கபிலர்” என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் முப்பத்திரண்டு இளமுனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் எட்டு முனைவர்ப் பட்ட ஆய்வுகளுக்கும் நெறியாளராக இருந்து வழிகாட்டியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ள இவர், சிறந்த கவிஞரும் ஆவார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ள பேராசிரியர் விஜயராணி பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு பல கருத்தரங்குகளுக்கு ஒருங்கிணைப் பாளராகத் திறம்பட செயலாற்றியுள்ளார். அவர் முதுகலைத் தமிழ் பயின்ற காலத்தில் அவருக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பு பெற்ற என்னை இன்றளவும் ஆசானாக ஏற்றுப் போற்றிப் புகழ்ந்து வருகிற பண்பாளர் என்ற பெருமை அவருக்குண்டு. ஆளுமை மிகுந்த பேராசிரியராக மட்டுமன்றி கல்லூரின் நிர்வாகப் பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் திறமை அவரின் தனிச்சிறப்பு. பேராசிரியர். ஆ.விஜயராணியின் அரிய ஆய்வுத் தேட்டத்தில் உருவான சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்த ஆய்வுநூல் அவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பயணத்தில் ஒரு தனித்த சிறப்பிற்குரிய படைப்பாகும்.
சங்க இலக்கியத்தில் கபிலர் என்ற இந்நூல் முன்னுரை, முடிவுரை தவிர்த்து நான்கு தலைப்புகளில் தமிழிலக்கியப் பெரும்புலவர் சங்க இலக்கியக் கபிலரின் வாழ்க்கை வரலாறு, அவரின் சமகால அரசர்கள், புலவர்களின் வரலாறு, அவரின் இலக்கியப் பணி மற்றும் அவர் கவிதைகளின் நடையியல் கூறுகள் முதலான செய்திகளை விரிவாகப் பேசுகின்றது.
- தமிழ் இலக்கியங்களில் கபிலர்
- சங்க காலக் கபிலர்
- வரலாற்று நோக்கில் கபிலர்
- நடையியல் ஆய்வில் கபிலர்
என்ற நான்கு தலைப்புகளும் தமிழிலக்கிய ஆய்வுலகில் இதுவரை பேசப்பட்டு விவாதிக்கப் பட்டு வந்துள்ள கபிலர் தொடர்பான அத்துணை சிக்கல்களுக்கும் தீர்வுகாண முயற்சி செய்கிறது. குறிப்பாகக் கபிலர் பலர் என்ற விவாதத்தை முன்னெடுத்து கால ஆய்வுகளின் துணையோடும், அரசர்கள், குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்களாகப் புகழப்படும் இனக்குழுத் தலைவர்களின் வரலாறுகளோடு சார்த்தியும் கபிலர் படைப்புகளின் நடையியல் கூறுகளின் துணையோடும் இலக்கியப் பாடுபொருளின் அடிப்படையிலும் முழுமையான ஆய்வினை நிகழ்த்தி விடைகாண முயன்றுள்ளது. நூலின் நான்காவது இயலாக இடம்பெற்றுள்ள நடையியல் ஆய்வில் கபிலர் என்ற இயலில் நூலாசிரியரின் அரிய உழைப்பினைக் காண முடிகிறது. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள பின்னிணைப்புகள் பதினேழும் வருங்கால ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் விளைக்கும் வகையில் பட்டியலிடப் பட்டுள்ளன.
நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் தமிழிலக்கிய வரலாற்றின் நெடும் பரப்பு தோறும் கபிலர் என்ற பெயரிலும் தொல்கபிலர், கபிலதேவர், கபில தேவநாயனார் என்ற பெயர்களிலும் பல்வேறு கபிலர்களை உள்ளனர் என்றும். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்கள் பாடிய கபிலர் மட்டுமல்லாது குறிஞ்சிக் கலி பாடிய கபிலர், ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பாடல்களைப் பாடிய கபிலர், பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தினைப் பாடிய கபிலர், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டை பாடிய கபிலர், பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இன்னா நாற்பதைப் பாடிய கபிலர் முதலான சங்க காலக் கவிஞர்கள் மட்டுல்லாது கபிலரகவல் பாடிய புலவர் பக்தி இலக்கியக் கபிலர், பிற்காலத் தனிப்பாடல்களைப் பாடிய கபிலர் என கபிலர்களின் பட்டியல் நீள்கிறது என்றும் இந்த ஆய்வு சங்க காலக் கபிலரைப் பற்றியது என்றும் வரையறை செய்து விடுகிறார்.
நூலின் முடிவுரையில்
சங்க காலக் கபிலர் என்ற ஆய்வின்வழி சங்க இலக்கியங்களில் கபிலர் என்ற பெயரில் நான்கு வேறுபட்ட புலவர்களால் பாடப்பெற்ற இலக்கியங்கள் உள்ளன என்றும்,
அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் கபிலர் பெயரில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய புலவர் ஒருவர்.என்றும் கலித்தொகையில் இடம்பெறும் குறிஞசிக் கலி பாடல்களைப் பாடிய கபிலரும், ஐங்குறுநூற்றில் இடம்பெறும் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடிய கபிலரும் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டினைப் பாடிய கபிலரும் வேறு வேறானவர்கள். இந்த மூன்று இலக்கியங்களையும் பாடிய கபிலர்கள் தொகைநூலில் இடம்பெற்றுள்ள அகப்புறப் பாடல்களைப் பாடிய கபிலருக்குக் காலத்தால் பிற்பட்டவர்கள் என்பதனைத் தெளிவுபட உரைத்துள்ளார். இக்கூற்று நூலாசிரியர் ஆய்வு உறுதி மற்றும் ஆய்வுத் திறத்துக்கு எடுத்துக்காட்டாகும்.
கபிலர் என்ற சங்க காலப் புலவர் என்ற மையப் பொருளில் இந்த நூல் அமைந்திருந்தாலும் ஒவ்வொரு இயலும் சங்க இலக்கியத்தின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்டு சங்க இலக்கியங்களின் முழுமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சங்க கால அரசர்கள், புலவர்கள் பலரின் வரலாறும் இலக்கியப் பாடுபொருள்களும் இடையிடையே பேசப்படுவதால் சங்க இலக்கியங்களை முழுமையாகக் கற்றுணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படுகிறது.
ஆய்வுக்கான கடுநடை இல்லாமல் எளிமையான இனிமையான தமிழில் சங்க இலக்கியச் செய்திகளை விவரித்துச் செல்லும் ஆய்வாளரின் மொழிநடை பாராட்டுதற்குரியது. ஆழ்ந்த இலக்கிய இலக்கணப் பயிற்சி இல்லாமல் சங்க இலக்கியங்களைக் கற்பதோ ஆய்வு செய்வதோ இயலாத செயலாகும். நூலாசிரியர் முனைவர் ஆ.விஜயராணி செப்பமாக இந்த ஆய்வினைச் செய்து முடித்துள்ளமை அவரின் ஆழ்ந்த நூலறிவினைப் புலப்படுத்துகிறது. தொடர்ந்து இத்துறையில் அவர் மேலும் பல ஆய்வுகளை நிகழ்த்தி பொதுமக்களிடம் நமது செம்மொழி இலக்கியங்களின் சிறப்பினைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன். நல்ல நூல்களை ஏற்றுப் போற்றிப் பராட்டும் தமிழுலகம் இந்நூலையும் போற்றிப் புகழும் எனபதில் ஐயமில்லை.
- முனைவர் நா.இளங்கோ