அமெரிக்க எழுத்தாளர் ‘‘எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)’’ உலக இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அவரது எழுத்துகள் கச்சிதமானவை. அவருடைய இலக்கியப் பெருமைகளுக்குக் காரணம் அவரது கற்பனைத்திறனோ அல்லது பாத்திரப் படைப்பாக்கங்களோ அல்லது உரையாடலோ இல்லை.
மாறாக, அவரது இலக்கியப் பெருமை மொழியை அவர் கச்சிதமாகக் கையாளும் விதத்திற்காக இன்றும் போற்றப்படுகின்றது. ஒரு தச்சன் இழைப்பதைக் போல தன் படைப்புகளை அவர் வடிவ ரீதியாக செதுக்கியபின்பே அச்சுக்கு அனுப்புவார் . குறைவான சொற்களால் மட்டுமே ஆழமான உணர்ச்சியைத் தொட முடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். அவர் சொன்னது போலவே அவரது அளவில் பெரிய நாவல்களான ‘போரே நீ போ’, ‘யாருக்காக மணி ஒலிக்கிறது’, ‘கிளீமாஞ்சாரோ’ போன்ற நாவல்களுக்குக் கிடைக்காத நோபல் பரிசு அவரது மிகச் சிறிய - 100 பக்கங்களுக்கும் குறைவான - கடலும் கிழவனும் நாவலுக்குத்தான் கிட்டியது.
அவர் குறைவான சொற்களில் எழுதிய சிறுகதை அவருக்கு நோபல் பரிசைவிடவும் அதிகப் புகழைப் பெற்றுத் தந்தது. அந்தச் சிறுகதை இதுதான்
“For sale: baby shoes, never worn.”
யாரும் இது கதையின் தலைப்போ அல்லது கதையின் முதல் வரியோ என நினைக்க வேண்டாம். கதையே இதுதான்! இவ்வளவுதான்! வெறும் ‘‘ஆறு சொற்கள்” அவ்வளவுதான் மொத்த கதையும்!
“For sale: baby shoes, never worn.”
“விற்கப்படுகின்றன: குழந்தை காலணிகள், ஒருபோதும் அணியப்படாதவை.”
இந்த ஆறு சொற்கள் - உலகம் முழுவதும் இதுவரை எழுதப்பட்டவற்றில் மிகமீச் சிறுகதை - ‘‘shortest story ever written” எனப் புகழ் பெற்றது.
1930களில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஹெமிங்வே தன் நண்பர்களுக்கு ஒரு பந்தயம் வைக்கிறார். வெறும் குறைவான சொற்களில் ஒரே வரியில் கதை எழுதப் படவேண்டும் என சொல்ல, அனைவரும் ஆளுக்கொரு மூளைக்கு துண்டு காகிதங்களுடன் பறந்தனர்.
அவர் இப்படி ஒரு பந்தயம் வைக்கக் காரணம் மிகக் குறைந்த வார்த்தையைப் பயன்படுத்தி கதை எழுதுவதில் அவருக்கு இருந்த தீவிரமான ஈடுபாடு. அவருக்கு இந்த ஆர்வத்தை உண்டாக்கியவர் ஜெரார்டு ஸ்டெயின் . இவர்தான் உலகப் புகழ்பெற்ற “ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் ” என்ற வரிகளை எழுதிய பிரான்ஸ் தேசத்துப் பெண் கவிஞர்
பிரான்சில் ஹெமிங்வே 1922 இல் ஜெரார்டு ஸ்டெயினைச் சந்திக்கும் போது அவருக்கு வயது 23. ஸ்டெயினுக்கு வயது 48. அவர்தான் விவரணைகளைக் குறைத்து நேரடியாக, கதையைக் குறைந்த சொற்களில் எழுதும் புது உத்தியை அவருக்குப் போதித்தார் அதுதான் புகழ்பெற்ற “Iceberg Theory” அதாவது, ‘‘பதினைந்து சதவீதம் மட்டும் சொல்லவும், மீதியை வாசகர் உணர வேண்டும்.’’ இதுதான் அந்தத் தியரியின் உட்கிடக்கை. கொள்கை - கோட்பாடு.
இந்த ஆறு சொற்களும் அந்தக் கொள்கையின் மிகச் சிறந்த சான்று.
இதைத் தொடர்ந்து அவருக்குள் குறைவான சொற்களைப் பயன்படுத்துவதில் ஓர் ஆர்வம் உண்டானது. இந்த ஆர்வத்தின் விளைவுதான் ஹெமிங்வே தன் இலக்கிய நண்பர்களுக்கு அந்தச் சவாலை விடுத்தார் . ஆனால் அவர்கள் யாராலும் ஒரு வரியில் முழுமையான கதையை எழுத முடியவில்லை. பிறகு அவரே தான் எழுதிவிட்டதாகக் கூறி அனைவரிடமும் இந்தக் கதையை வாசித்தார். அனைவரும் மௌனமாகிப் போனார்கள். ஐஸ்பெர்க் அவர்களை அபரிதமாகத் தாக்கியிருந்தது . அந்த ஆறு சொற்களுக்குள் ஒரு வாழ்க்கை, ஒரு துயரம், ஒரு மரணம், ஒரு கனவு — அனைத்தும் நுழைந்திருந்தது.
“For sale: baby shoes, never worn.”
- “For sale” — விற்பனை செய்யும் கட்டாயம், ஓர் இழப்பு.
- “Baby shoes” — புதிய உயிரின் சின்னம்.
- “Never worn” — அந்த உயிர் பிறக்காதது அல்லது வாழாதது.
இவ்வாறு ஒரு சொல் கூட ‘‘மனித உணர்வின் பெரும் வலியைத்’’ தாங்கிக் கொள்கிறது.
ஹெமிங்வே, ஒரு வரியிலேயே, ‘‘மனித வாழ்வின் நொடியை நித்தியமாக்கினார்.’’ அந்தச் சொற்கள் ஒரு தாயின் அழுகையையும், ஒரு தந்தையின் நிம்மதியின்மையையும், ஓர் உலகத்தின் மௌனத்தையும் ஒலிக்கச் செய்கின்றன.
அவை வெறும் ஆறு சொற்கள் அல்ல —
‘‘ஒரு வாழ்வின் முழுக் கதை.’’
இன்று, “six-word story” என்ற வகைமை, இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணமாக வளர்ந்துள்ளது.
பல எழுத்தாளர்கள், வாசகர்கள் தங்கள் சொந்த ஆறு சொற்களால் கதைகளை உருவாக்குகிறார்கள் — ஆனால் அவையெல்லாம் ஹெமிங்வேயின் கதையைப் போல ஆழமான உணர்வைத் தருவது அரிது.
- அஜயன் பாலா