நம் தொன்மங்களை நவீன காலத்திற்கேற்ப மறுபடைப்புகளாக, சிறுகதைகளாக மீள்படைப்பு செய்யமுடியுமா- அதே வேளை அவை நவீனகாலத்திலும் சமூகத்திற்குப் பயனாகுமா? நவீன காலத்திற்கேற்ற தொன்மங்களைப் படைக்க முடியுமா- நிச்சயமாக முடியும் என்று தனது பஞ்சவர்ண குகை என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பில் நிறுவிக் காட்டியிருக்கிறார் கவிஞர்.நட.சிவகுமார். 15 சிறுகதைகளைக் கொண்ட அச் சிறுகதைத் தொகுப்பில் நான்கு கதைகளைத் தவிர மற்ற அனைத்துமே சர்ரியலிசம் மற்றும் மாந்திரீக யதார்த்தம் போன்ற கோட்பாடுகள் சார்ந்தவை. வழக்கமான யதார்த்தப் படைப்புகளினின்றும் வேறுபட்டு நிற்பவை. ஆயினும் சமூகத்தைப் பற்றிய உண்மைகளை வேறொரு கோணத்தில் தருபவை. அந்த வகை எழுத்துமுறையில் தமிழவன், பிரேம், எம்ஜி சுரேஷ், குமார செல்வா போன்றோரது வரிசையில் இடம்பெறுகிறார், கவிஞர் நட.சிவகுமார்.

panjavarna kugaiஇவரது கதைகள் சிறந்த சர்ரியலிச எழுத்தாளராக அடையாளம் காட்டும் அதேவேளை தமிழ் சமூக வரலாறு சொல்ல மறந்த சரித்திர உண்மைகளை நிழல்வடிவில் சிறுகதைகளூடாக விவரித்துச் செல்கின்றன. அந்த கதைகளுக்கான கதைக்கருக்களைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்புற இலக்கியங்களினின்றும் நம்பிக்கைகளிலிருந்தும் எடுத்துக் கையாண்டுள்ளார்..அதேவேளை அவரும் புதிய தொன்மங்களை உருவாக்கியுள்ளார். இது போன்ற கதைகள் தொடக்க காலத்தில் தமிழவனால் எழுதப்பட்ட போது பலரும் நிராகரித்தனர். ஆனால் அத்தகைய எழுத்துக்கள் இலக்கிய உலகில் இன்னும் ஓர் அழகியலைத் தருகின்றன; புதிய சிந்தனைகளைத் தருகின்றன. அவ்வகையில் பஞ்சவர்ண குகை கதைகள் புதிய நடைமுறை வாழ்வியல் குறித்த புதிய சிந்தனைகளைத் தருகின்றன; நிழல் தன்மையையும் ஒரு வகையான நகைச்சுவையையும் ஒருங்கே கொண்டுள்ளன.

உதிரம் குடிக்கும் அழகியின் அந்தரங்கப் பல் என்ற முதல் சிறுகதையை வாதைக்கதை மற்றும் நீலிக்கதையை ஒருங்கிணைத்து இன்னொன்றாகப் படைத்துள்ளார் . இக்கதையானது இளைஞர்களைக் கவர்ச்சி காட்டி உதிரம் குடிக்கும் மோகினியைப் பற்றியது. அதை அடக்க அரசன் மந்திரவாதிகள் மூலம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைகிறது. இது போன்ற கதைகள் 1980 கள் வரை பேய்க்கதைகள் என்றோ அல்லது மூடநம்பிக்கை சார்ந்தவை என்றோ முத்திரை குத்தப் பெற்றிருக்கும். இது போன்ற பேய்க்கதைகளை எழுதுவதற்காகவே அக்காலத்தில் பேய்க்கதை மன்னர்கள் இருந்தனர்.அவர்களது நோக்கம் வாசகரின் மனதில் முடிந்த அளவு திகிலை ஊட்டுவதும், பேயிடமிருந்து தப்பிக்க அம்மன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதுமே ஆகும். ஆனால் இந்தக் கதையோ பேய்களின் மீது அனுதாபத்தை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் உயர்தட்டில் இருந்தோர் பெண்களைச் சீரழித்த உண்மையைப் புலப்படுத்துகிறது. அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களே கொடுந்தெய்வமாக மாற்றப்பட்ட சமூக உண்மையைப் புலப்படுத்துகின்றது. நவீன காலத்திற்கேற்ப இந்தக் கதையில்லையே என்ற கேள்வி கேள்வி கேட்போர் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். இது போன்ற பேய் சார்ந்த விசயங்களோடு இரண்டற கலந்துதான் நமது இந்திய சமூகம்.. ஒரு காலத்தில் பேய்கள் உண்மை என்ற நிலையில் கதைகள் எழுதப்பட்ட நிலையை மாற்றி அதனுள் புதைந்து கிடக்கும் உண்மையைப் புரிய வைப்பதற்கான எழுத்து முறைதான் இந்த மாந்திரீக யதார்த்தக் கதை.. இக்கதையின் மொழிநடை 18 ஆம் நூற்றாண்டிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது..

காக்கை சாம்பலில் ஒரு சிகப்பு கண் என்ற இரண்டாவது கதை இந்தியப் பண்பாட்டு வாழ்க்கையில் இரண்டறக் கலந்த மாந்திரீக நம்பிக்கையைப் பற்றிப் பேசும் அதேவேளை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அத்தகைய நம்பிக்கையைக் கொண்டு வாழும் மனிதர்களை அடையாளப் படுத்துகிறது. காக்கையைக் கொன்று அதன் சாம்பலுடன் எருக்கம்பூ, வெத்திலை போன்ற பொருட்களைச் சேர்த்து எரித்துச் சாம்பலாக்கி எதிரியின் வீட்டு மேற்கூரையில் போட்டால் அந்த வீட்டில் துர் மரணம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கைதான் கதையின் கரு.எனவே காக்கையைப் பிடிக்கும் முயற்சியும் காக்கைச் சாம்பலைத் தயாரித்தவனுக்கு ஏற்படும் வேதனையான விந்தையான அனுபவங்களுமே சுவைபட கூறப்படுகின்றன. ஒரு காலத்தில் மக்கள் மனதை ஆட்சி செய்து கொண்டிருந்த மாந்திரீக நம்பிக்கை சிறப்பாகப் பதிவு பெற்றுள்ளது..

இது போலவே, அடுத்தடுத்து இடம்பெறும் சிறுகதைகள் பெற்றிருக்கும் - தற்கால சமூகம் மறந்து போகும் நிலையில் இருக்கக் கூடிய -  நம்பிக்கைகளையும் அவற்றின் அடிப்படையில் செயல்படும் மக்களையும் சித்திரிக்கின்றன.

ஆத்துக்கடவு அம்மை என்ற கதை விளிம்பு நிலை மக்கள் தங்கள் சாமிகளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சித்திரிக்கிறது... துணி துவைக்கும் விளிம்பு நிலை உழைப்பாளி ஆற்றின் கரையில் உள்ள தெய்வத்தை நேரடியாகப் பார்த்ததாகவும் அதன் மூலம் அவன் மனது புளகாங்கிதம் அடைவதையும் சுட்டும். பொதுவாகவே அடித்தட்டு மக்களிடம் இத்தகைய கதைகள் இது போல் உலவுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இந்தச் சிறுகதையோ நமக்குள் வேறு விதமான சிந்தனையை எழுப்புகிறது. அந்த அம்மன் சாமி குளிப்பதைப் பார்த்த - கொடுத்து வைத்த - துணி துவைக்கும் தொழிலாளிக்கு ஏன் அம்மன் சாமி பொருளாதார நிலையில் அருள் தரவில்லை? அம்மன் குளிப்பதைக் கண்டதால் மட்டுமே மனநிறைவுடன் வாழமுடியுமா என்ற கேள்வியை வாசகன் மனதில் தவறாமல் ஏற்படுத்துவதோடு இத்தகைய நம்பிக்கைகளோடுதான் அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் அமைதியாகக் கடந்துப் போகிறார்கள் என்ற உண்மையை நமக்குள் உணர்த்துகிறது.

நான்காவது கதை 22 வரிகளுடன் முடிவடைகிறது. தமிழவனின் ஏற்கெனவே சொல்லப் பட்ட மனிதர்கள் நாவலில் ஒரு கதாபாத்திரம் நாயாக உரு மாறுவதும் மந்திரத்தால் மீண்டும் மனித உருவம் பெறுவதாகவும் அக்கதை அமைந்திருக்கும்... அதை நினைவூட்டுகிறது இந்தக் கதை... இந்தக் கதையில் வரும் "அவன்" திடீரென்று 5 வயது சிறுவனாகிவிடுகிறான். பிறகு மந்திரம் போட்டதும் தன் உருவம் அடைகிறான்..

ஐந்தாவது கதை யதார்த்தக் கதை என்றாலும் கூட ஆடு வளர்ப்பவர்களைப் பற்றிய நுட்பமான செய்திகள் தருகிறது. ஆனாலும் அதன் மொழிநடை வட்டார வழக்கு அந்த மொழி தெரிந்தோரை மட்டுமே மகிழ்விக்கும்.. வட்டார மொழியில் அமைந்த ஒரு படைப்பு எந்த அளவுக்குப் பிற வட்டாரத் தமிழர்களைக் கவரும் என்பது கேள்விக்குறி. ஆடுவளர்க்கும் அந்த பெரியவருக்குத் தனது வீட்டிலுள்ள குழந்தைகளை விட இறைச்சிக்காக விற்கப்படும் ஆடுகள்தான் முதன்மையாகத் தெரிகின்றன.

Mr.இஸ்திரி என்ற கதை சர்ரியலிச நடையில் அமைந்துள்ளது. இந்திய பாரம்பரிய தொன்மத்தை ஒத்த புதியதொரு தொன்மமாக உருவாக்கப் பட்டுள்ளது..பசி போக்கும் மருத்துவம் கண்டு பிடிக்கிறார் Mr இஸ்திரி. அதனால் அந்த ஊர் அடித்தட்டு மக்கள் உணவுக்காகப் பிறரைச் சார்ந்திராத நிலைமை ஏற்படுகிறது..எனவே அரசாங்கம் அவரைப் பிடிக்கப் பெரும் படையை அனுப்புகிறது.. ஆனால் அவர்கள் எல்லாருமே அழிந்து விடுகிறார்கள்... இந்த கதையின் சர்ரியலிச மொழிநடை நம்மைச் சிரிக்க வைப்பதுடன் கதையின் பொருண்மையை ஆராயத் தூண்டுகிறது.. இருபது வருடங்களுக்கு முன்பு மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த இராமனுக்கு நேரிட்ட உண்மையை ஏனோ நினைவுப் படுத்துகிறது இந்த கதை... கதையிலுள்ள சில வாக்கியங்களை இங்கு எடுத்துக் காட்டலாம் -"ஒரு மாதத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் மட்டுமே உறங்கும் மீசைக்காரர் தனது கடையைப் பூட்டிவிட்டு ......"Mr இஸ்திரி ஆய்வின் மூலம் கண்டு பிடித்த உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கோடு மரக்கிளையிலும் துணி துவைக்கும் கல்லுக்கு அடியிலும் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள கழுதைகளின் கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்"

இம்மாதிரியான மொழிநடை இந்த சிறுகதைத் தொகுப்பை வெற்றியடையச் செய்து விட்டது என்று கூறிட முடிகிறது.

அலுமினியத் தட்டில் அரிசி காய்த்துக் கொண்டிருந்தது என்ற தலைப்பிலான ஏழாவது கதை நவீன வாழ்வியலையும் தொன்மக்கதையையும் இணைத்துள்ளது. இந்த தொன்மத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார் படைப்பாள். அரிசி காய்க்கும் மரம் பற்றியும் அதை வளர்ப்பதைப் பற்றியும் பேச ஆரம்பித்து, வேளாண்மையை அழித்து அறிவியல் முன்னேற்றத்தை மட்டும் முன்னிறுத்தி அரசு இயங்குவதைத் தொன்மக்கதையாக விளக்கிச்செல்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குலதெய்வமே துணையென்பதால் அந்தக் குலதெய்வமே தன் மக்களுக்காகப் பசி, பஞ்சம் போக்கும் மாங்கனியைத் தேடி 7 மலைதாண்டி சிக்கலான குகைக்குள் போகிறது. ஆனால் திரும்ப முடியவில்லை – இந்தக் கதையில் குலதெய்வம் மக்களுக்காகக் கண்ணீர் சிந்துவதும் குலதெய்வம் அரசை எதிர்க்கமுடியாமல் மக்கள் குறை தீர்க்க மாங்கனியைப் பறிக்கப் போவதுமாக சித்திரிக்கப்படுவது புதுமையாக உள்ளது. கடவுள் கூட அரசை எதிர்க்கமுடியாது என்ற கருத்து பூடகமாகச் சுட்டப்படுகிறது. குகைக்குள் போன தேவதை திரும்பவே இல்லை. குகையில் இருந்து தேவதை திரும்பி வரும் போது அந்த மக்கள் அதன் வரவுக்காகக் காத்திருப்பார்களா என்றும் தெரியவில்லை என்று கதை முடிகிறது. அழகியலாக நகரும் அதேவேளை அறிவுத் தளத்தில் இருந்து நம்மைச் சிந்திக்கவும் வைக்கிறது. நமக்காக வாழ்வைத் தியாகம் செய்யும் தலைவர்களை ஒரு காலகட்டம் கழிந்து போற்றுவோமா என்ற சிந்தனையை நமக்குள் எழுப்புகிறது . இந்தக் கதையின் வடிவமும் கவனிக்கத்தக்கது.. காவியங்களில் போல இடையிடையே உபத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. காடுகாண் காதை, விமலையார் இலம்பகம் என்பது போல போல பேசியது காட்டுப் பூனை, இறைச்சியைப் புசிக்க வந்த காகம், தேவதை சொன்ன குறிப்புகள், போகும் வழியிலுள்ள சில செய்திகள், காக்கைகள் வாழும் குகை என்ற உபத்தலைப்புகள் அழகியல் உணர்வை ஏற்படுத்துகின்றன.

பல்கலைக்கழகத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இரத்தம் படிந்த கைவிரல்கள் என்ற 8 ஆவது கதை தற்போதைய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்கும் கூத்துகளைப் பேசுகிறது. யதார்த்த நடையில் கூட இந்த அளவுக்குச் சித்திரிக்க முடியாது.. சர்க்கஸ் கண்ணாடியில் நமது உருவம் நமக்கே சிரிப்பூட்டும் வண்ணம் கோணல் மாணலாக அமைந்திருப்பது போல வாக்கியங்கள் வேறுபட்ட தன்மையில் அமைந்து நம்மைச் சிரிக்க வைப்பதுடன் அது தொடர்பாக இன்னும் பல விஷயங்களை நமக்குள் நினைவூட்டுகின்றன. நம் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறுப்பான அதிகாரிகள். பேராசிரியர்கள் போன்றவர்களின் இயல்புகளை நகைச்சுவையுடன் கலந்து குத்திக்காட்டுகிறது. ஒரு பல்கலைக்கழகம் திடீரென மாணவ மாணவியருடன் புதைந்து போனது பற்றியும் அது தொடர்பாக அரசாங்கம் அமைத்த விசாரணை குழு பற்றியும் அந்த விசாரணைக் குழு எந்த மாதிரியான அறிக்கை தந்தது என்பதுதான் கதை..

அடுத்த கதை அன்னை உண்ட தீ. தீயோடு வாழப் பழகிவிட்ட நவீன மனித வாழ்க்கை பற்றியது. தற்போது நாம் அனுபவித்து வரும் பிரச்சினைகள் நமக்கு மாறப்போவதில்லை. நாளாவட்டத்தில் அதுவே வாழ்க்கையில் பழக்கமாகிவிடும் என்பதை நகைச்சுவையாக எடுத்துச் சொல்கிறது. எலி ஒருவனது வாய்க்குள் புகுந்து விடுகிறது; அது காதின் வழியாக 14 மணிநேரத்தில் வெளிவரும் என்றெல்லாம் பேசுகிறது. தீயுடன் மனிதன் இனிமேல் இணைந்தே பயணிப்பான் என்ற உண்மையைச் சிறப்பாகச் சுட்டுகிறது .

கேரளபுரம் எனும் சிறுகதை சாதியப் பிரச்சினையை மையமாகக் கொண்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கேற்ற சாதியப் பிரச்சினை அது. எந்த சாதி என்று குறிப்பிடாமலே ஒடுக்கப்பட்டவர்கள் யார், ஒடுக்கியவர்கள் யார் என்ற விபரத்தை வாசகன் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. ஒடுக்கப்பட்டோர் தங்கள் எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதும் குறிக்கத்தக்கது.

11 ஆவது கதையான "அரிஷ்டம்" மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. யதார்த்த மொழிநடையில், அண்மை காலம் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த அரிஷ்டம் எனும் மதுபான உற்பத்தி குறித்துப் பதிவு செய்கிறது. அதை விற்பனை செய்வது, அதன் மூலம் வாழ்க்கை நடத்துவது, போலிசார் அதன் மூலம் வருமானம் பார்த்தது போன்ற வாழ்வியல் உண்மைகளை முதல்முதலில் பதிவுசெய்துள்ளது. இதில் பேசப்படும் , பனைகளை வைத்து உயிர் வாழ்ந்து வந்தவர்கள் அவற்றை அழித்து விட்டார்கள் என்ற கருத்து மனதில் வலியை ஏற்படுத்துகிறது.

220 அண்டங்களும் பதினேழு அறைகளும் என்ற கதை சித்தர்கள் குறித்த நம்பிக்கையை மையமாக்கி சித்தர்கள் உலகைப் புதிய பரிமாணத்தில் விவரிக்கிறது. சித்தர்களைப் பற்றிய கதைகளைப் போலவே அமைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதை. பாரதியாரின் குயில்பாட்டு ஒரு மர்மத்தன்மை கொண்டிருப்பது போல இந்தக் கதை வேறொரு மர்மத்தன்மை கொண்டுள்ளது. ஒரு சித்தர் குளிகை ஒன்றை இன்னொருவனிடமிருந்து பறித்துக் கொண்டு பறந்து போவார். அவரைத் துரத்தி பல உலகங்களுக்கும் பறந்து செல்வதாக அமைகிறது இக்கதை.

மொத்த நிலையில் பார்க்கும் போது, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள யதார்த்த, மிகையதார்த்த (சர்ரியலிச) கதைகள் அனைத்துமே மேற்போக்காக வாசிக்கும் போது ஓர் அர்த்தமும் கொஞ்சம் சிந்திக்கும் போது சமூகத்தைப் பற்றிய வேறொரு அர்த்தத்தையும் தருவனவாக உள்ளன. சர்ரியலிசக் கதைகள் யதார்த்த எழுத்துகளை விட சமூகத்தைப் பற்றிய உண்மைகளைக் குறியீடுகள் மூலம் உணர்த்த வல்லன என்பதை நிறுவிக்காட்டுகின்றன பஞ்சவர்ணக் குகையில் இடம்பெற்றுள்ள கதைகள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுச்சித் தமிழர் திருமாவளவன் விருது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(பதிப்பகம்- நாதன் பதிப்பகம், சென்னை, 2022. விலை ரூபாய்-140)

- முனைவர் த.பிரகலாதன், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, சிந்திக் கல்லூரி, சென்னை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.