kareem bookசிறுகதை, சம்பவங்களின் பதிவுகள், கட்டுரை, மற்றும் அனுபவங்கள் என அனைத்தும் கலந்த ஒட்டுமொத்த கலவை என்றுதான் இப்புத்தகத்தக் குறிப்பிட தோன்றுகிறது,  ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனிப் பிம்பத்தைக் கொண்டுள்ளது.  இதில் கையாளப்பட்டிருக்கும் வட்டார வழக்குச் சொற்களும். இஸ்லாமியப் பெயர்களுடன் கூடிய நகர்வுகளும் எந்த வித நெருடலும் இல்லாமல் இப்புத்தகத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.

                ஒரு கலவரத்தைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் போதும், கலவரத்திற்குப்பின் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும்போதும் வெளிப்படும் சூடான வார்த்தைகள் அப்பட்டமான வசவுச் சொற்களாக மாறி சமூகத்தின்பால் மூர்க்கத்தனமாக திரும்பித்தாக்குகிறது

                இரு மதம் சார்ந்த சமூகத்தின் மேம்பட்ட உறவுகள் எவ்வாறெல்லாம் சின்னாபின்னமாகிப் போகிறது என்பதையும், எழுத்தறிவின் முக்கியத்துவத்தையும், இஸ்லாமியப் பெண்களின் உரிமையையும் கதைப்போக்கில் சொல்லிச் சென்றாலும் அதில் வெளிப்படும் வரிகளும் வலிகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை.

                ”மொஹல்லாவின் மய்யத்துகள்” என்ற சிறுகதை, ஏழாம் வகுப்போடு இடைநின்று போன பைரோஜாவின் வாழ்வியல் சிக்கல்களை கலவரப் பின்னணியோடு அலசுகிறது.  இது போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை கல்வியறிவு இல்லாத காரணத்திற்காக அடிநிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது என்ற ஆதங்கத்தை இதை வாசிக்கும் எல்லார் மனதிலும் விதைக்க முயற்சித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர்.

                இரண்டாவது கதையான, “மௌத்துகளின் காலமது” கலவர பூமியின் கதறலையும், கவலை தோய்ந்த மௌனத்தையும் ஒரு சேர விவரிகிறது.  தேசபக்தி என்ற பெயரில் தேச மக்களைக் காவு வாங்கிவிட்டு யாரிடம் போய் தேசிய நல்லிணக்கத்தை சொல்லி மார்தட்டிக் கொள்ளப்போகிறது? என்ற கேள்வியை எல்லோர் முன்னாலும் வைத்து விட்டு கைகட்டி வாய்மூடி மௌனம் காக்கிறது.

                கவரத்திற்கு முன், கலவரத்திற்குப் பின், படும் கீழ் நிலை மக்களின் சோதனைக் காலத்தை “வந்தாரை” என்ற சிறுகதை பதிவு செய்கிறது.  ஆங்காங்கே வாசிப்பாளர்களின் நெஞ்சில் நறுக்கென்று முள் தைக்கிறது.

புதுவிசையில் வெளிவந்த “கூடிழந்த பறவைகளின் சாபம்” இரு மத உறவுகளின் உள்ளார்ந்த உணர்வுகளை புரிந்து கொள்ள துடியாய் துடிக்கிறது.  யார் செய்தாலும் தப்பு,தப்புதான் என்று நாடி நரம்பு புடைக்க நடுநிலைக்காக போராடுகிறது.

“அன்புள்ள அத்தாவுக்கு” –இந்நூலின் மணிமகுடம்.  ஒரு இளைஞனின் இளகிய மனம் நடத்தும் போராட்டமும், பின் அவன் நடவடிக்கை அதனால் அவன் எதிர்கொள்ளும் ஏமாற்றம் என சிறுகதைக்கான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. 

பழைய நடைமுறைகள் காணக்காண கண்முன்னே வழக்கொழிந்து போவதைச் சுட்டிக்காட்டும் கதை “பிலால் என்கிற டேப் பசீர்”.  இது எல்லா மதமும் வாங்கி வந்த வரமா அல்லது சாபமா என பதில் இல்லாமல் முற்றுப்பெறும் கதையாகிய சம்பவம்.

“மொதோ கேள்வி” ஒரு விதவைப் பெண்ணின் உரிமையை நிலைநாட்ட முன் வைக்கப்படும் முதல் அடி.  மேல் எடுத்துச் செல்வதுதான் யார் என்ற கேள்விக் குழப்பத்தோடு பதில் இல்லாமலே முற்றுப் பெற்றுவிடுகிறது.  ஆனாலும் துணிச்சலான முயற்சிக்கு அனைவரின் மானசீகப் பாராட்டையும் பெற்றுவிடுகிறாள் சுபைதா என்ற கதாபாத்திரம்

வீட்டின் கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தால் மனிதர்கள் உயிர்வாழ்கிறார்கள் என்றும் வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தால்  உள்ளே வாழும் மனிதர்கள் எங்கோ வெளியில் சென்றிருக்கிறார்கள் என்றும் பொருள்.  ஆனால் வீட்டின் வெளிப்புறம் தாழிட்டுவிட்டு உள்ளே மூச்சுக்காற்றக்கூட மூடிவைக்க முயற்சிக்கும் வெற்று உடல்களாய் உணர்வுகளற்று தத்தளிக்கும் நிலை எந்த உயிரினத்திற்கும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தும் பதிவு “தாழிடப்பட்ட கதவுகள்”.  ஆகவேதான் அது இத்தொகுப்பிற்கு தலைப்பாகி இருக்கிறது.

“வெடிப்புக்குப் பின் காலம்” என்ற கதை 17 வருட தண்டனைக்குப்பின், குற்றமற்றவர் என்று தீர்பளிக்கப்பட்டு வெளிவந்த தந்தைக்கும் அவர் சிறுவயதில் பிரிந்து சென்ற மகளுக்குமான உறவை கடைசி வரியில் கண்ணீரோடு கரைந்து போகும் வைராக்கியக் கதை.

இத்தொகுப்பின் கடைசிக் கதையான “144” ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் ஒரு நிருபரின் அனுபவ வாழ்க்கை.  பல சம்பவங்களின் பதிவுகள்.

கரீம் எழுதி என்கைக்கு வந்த இந்தப்புத்தகம்தான் விமர்சனம் எழுத நீண்ட நாள் எடுத்துக் கொண்ட புத்தகம் என்பதை இந்த இடத்தில் நான் சொல்லியே ஆகவேண்டும்.  ஏனென்றால் மற்ற புத்தகங்களில் வரும் அழகியல் கூறுகளையோ அல்லது அதில் பட்டுத்தெறிக்கும் மாற்றுச் சிந்தனையையோ, வாசிப்பாளர்கள் மத்தியில் எழும் அதிவலைகளையையோ அல்லது முரண்பட்ட கருத்துக்களையோ விமர்சித்துவிடலாம்.  அதில் தவறு இருந்தாலும் பெரிதாய் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

ஆனால் இந்தப் புத்தகம் அந்த வரிசையில் இல்லை.  ஏனென்றால் ஆவணப்படுத்துதல் என்ற பெயரிலோ அல்லது விமர்சித்தல் என்ற பெயரிலொ எதைச் செய்தாலும் அதனால் ஏற்படும் எதிர்மறைச் சிந்தனையை ஒன்றுமறியாத அப்பாவி மனங்களில் பதிவேற்றம் செய்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணம்தான்.

சம்சுதீன் ஹீராவின் “மௌனத்தின் சாட்சியங்கள்” என்ற நாவலாகட்டும், ஏ.வீ.அப்துல் நாசரின் “கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்” என்ற நூலாகட்டும், தற்போது விமர்சிக்கப்படும் கரீம் எழுதிய “தாழிடப்பட்ட கதவுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பாகட்டும்,1998- கோவைக் கலவரம் குறித்த ஆவணம் என்ற பெயரோடு கண்டும் காணாமல் கடந்து செல்ல ஒருபோதும் முடியாது.  அது ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தாக்கி குற்ற உணர்வு கொள்ள செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது.  அது நம்மைச் சுற்றி இதுவரை உறவுகளைப் பேணிவந்த அனைத்து சமூக மக்களின் மனங்களையும்தான் என்பதில் உறுதியும் நம்பிக்கையும் இருக்கிறதா என்பதில்தான் வேறுபாடு எழுகிறது.

கொலை செய்யப்பட்ட காவலர் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  அவரின் அப்பாவிக் குடும்பம் பட்ட வேதனையையும் வலியையும் கவனத்தில் கொள்ளும் அதே வேளையில், அவர்கள் உமிழப்போகும் தீராத வெறுப்பு யார் பக்கமாய் இருக்கும் என்பதை நினைக்கும்போது, சற்றே தர்மசங்கடத்தில் நெளிய வேண்டியிருக்கிறது.  ஒரு கொலைக்கு பல கொலைகள் ஒருபோதும் தீர்வாகிவிடாது.

ஏனென்றால், மரணத்தின் வலி எல்லா மதத்திற்கும் ஒன்றுதான்.  அதன் பாதிப்பு கூடுதலாகவோ குறைச்சலாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது.  இதில் வேதனைப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், கீறப்பட்ட புண் ஆறாமல் பார்த்துக்கொள்வதில் அவரவர் மதம் எப்படியெல்லாம் கரிசனம் காட்டுகிறது என்பதுதான்.  ரணம் ஆறாததால் வெளிப்படும் மன எழுச்சி எந்தப்பக்கம் திசை திரும்பும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியாததால், முதலில் அனைவரும் கைகோர்த்து ரணத்திற்கு மருந்திடுவோம்.  வடுக்களைக் காணும்போதெல்லாம் வருத்தத்தை முன் வைப்போம்.  பின்பு உணர்வுப்பூர்வமாய் சிந்திப்பதைத் தவிர்த்து அறிவுப்பூர்வமாய் சிந்திப்போம்.

- வே.சங்கர்

Pin It