அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்திருக்கிற அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏ.ஐ. யு.டி.எஃப்) தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிற பதுருத்தீன் அஜ்மல், அண்மையில் அஸ்ஸாமில் நிகழ்ந்த வரலாறு காணாத முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதோடு, அஸ்ஸாம் போடோ தீவிரவாதிகள் மீதான நடவடிக்கைக்கும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட கொக்ராஜ்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களின் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களுக்கு உரிய பாதுகாப்புக்கும் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்.

இதன் விளைவாக கடந்த வாரம் கொக்ராஜ்ஹர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ராணுவத்தினர், அங்கு போடா தீவிரவாதக் குழுக்கள் மற்றும் பழங்குடி மக்களிடத்தில் இருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் வன்முறை மற்றும் அதன் பின்னணி, அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு ஆகியவை குறித்து முஸ்லிம் அப்சர்வர் என்கிற ஆங்கில வலைதளத்திற்கு பேட்டியளித்திருக்கிறார் பதுருத்தீன் அஜ்மல்.

அதில், “அஸ்ஸாமில் ஒரு மாதத்திற்கு முன் கலவரம் தொடங்கியது. இங்கே பெரிய அசம்பாவித சம்பவம் ஏற்படும் என்று முன்கூட்டியே மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்திருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதைய கலவரம் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வந்திருக்கிறது. படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இங்கே ஒருவர் படுகொலை என்றால் எதிர்தரப்பில் இருவர் படுகொலை. இங்கே இருவர் படுகொலை என்றால் அங்கே நால்வர் படுகொலை என்ற வகையில் அசம்பாவிதங்கள் நிகிழ்ந்து வந்துள்ளன. ஆனால் இவற்றின் மீது அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை.

அரசு உடனடியாக இவற்றின் மீது துரித நடவடிக்கை எடுத்திருக்குமேயானால் தற்போதைய வன்முறை கலவரம் என எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இதில் அரசின் அலட்சியப் போக்கு மிகப்பெரிய அளவில் இருந்திருக்கிறது. அரசு தொடர்ந்து அமைதியான பார்வையாளராகவே இவ்விஷயத்தில் நடந்து வந்திருக்கிறது.

முதல்வர் தருண் கோகாய் தனது மகனை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்த விரும்புகிறார். தனது மகனை மக்களவை உறுப்பினராக ஆக்குவதற்கு முதல்வர் விரும்புவதால்தான் கொக்ராஜ்ஹர் வன்முறைச் சம்பவங்களை அவர் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார் என்று இந்தியா டுடே பத்திரிகை எழுதியுள்ளது.

தருண் கோகாய் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரோ, தருண் கோகாய்க்கு சிறுபான்மையினரின் வாக்குகள் வேண்டாம் என்ற செய்தியை அவர் சொல்ல விரும்புகிறார் என வன்முறைச் சம்பவம் குறித்து முதல்வர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்.

இவர்களின் உட்கட்சிப் பிரச்சினைகள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் நடந்து முடிந்த வன்முறையும் இழப்பும் நியாயப்படுத்த முடியாதது.

சமீபத்தில் அஸ்ஸாமில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்தபோதும் அந்த வெள்ளத்தால் படகு ஒன்று கவிழ்ந்து பலர் பாதிக்கப்பட்டபோதும், நாங்கள் எங்கள் (முஸ்லிம்) மக்களிடம் வெள்ளப் பெருக்கு குறித்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக கவனியுங்கள் என்று சொன்னோம்.

இதன்படி 24 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் உடனடியாக வழங்கினோம். அதோடு அம்மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தோம்.

அஸ்ஸாம் வன்முறையின்போது இடம் பெயர்ந்து முகாம்களில் தஞ்சம் அடைந்த மக்களுக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து மருத்துவர் குழுவை நாங்கள் வரவழைத்தோம். நிறைய மருந்துகள் தேவைப்பட்டன. அரசாங்கம் கொடுத்த மருந்துப் பொருட்கள் போதுமானதாக இல்லை. கொக்ராஜ்ஹரில் மட்டும் உள்ள முகாம்களில் 45 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். பலர் காடுகளிலும், வேறு இடங்களிலும் மறைந்து வாழ்கின்றனர்.

சுமார் 55 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அஸ்ஸாமில் சாலைகள் பெயர்க்கப்பட்டுள்ளன. பெண்கள் சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு குழந்தைகளைச் சுமந்து கொண்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பலர் இறந்து விட்டனர். இது வரையில் 78 பேர் பலியாகி இருப்பதாக அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

(பதுருத்தீன் அஜ்மல் பேட்டியளித்த கால கட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 78. அதன் பின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது)

இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் மீள்குடியேறும்போதுதான் பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு என்று உறுதி செய்ய முடியும்.

இடம் பெயர்ந்தோருக்கான தங்குமிட முகாம்கள் மிகக் குறைவாகவே உள்ளன. பள்ளிக் கூடங்களில் 2 ஆயிரம் முதல் 2500 பேர் வரைதான் தங்க முடியும். இப்படி 12 ஆயிரம் பேர் தங்கி யுள்ளனர்.

தனி போடோ பிரதேசம் என்பது சாத்தியமற்றது. முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ராஜேஷ் பைலட் கூட, தனி போடோ பிரதேசம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், போடோ பிரதேசமாக அவர்கள் பிரகடனம் செய்த பகுதிகளில் அவர்கள் மிகக் குறைந்த அளவில் (சிறுபான்மையாக) இருக்கின்றனர் எனக் கூறியிருந்தார்.

போடோக்களுடன் அரசாங்கம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனைக்கும் மாறுதலுக்கும் உட்படுத்த வேண்டும் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இது ஒரு முஸ்லிம்கள் போடோகள் பிரச்சினை அல்ல. இது போடோக்களுக்கும் - போடோக்கள் அல்லாதவர்களுக்குமான பிரச்சினையாகும்.

போடோக்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்களைக் கொன்று குவித்தே வந்திருக்கிறார்கள். அவர்கள் இந்துக்களை, சந்தாள் இன மக்களை, நேபாளிகளை, மார்வாடிகளை, பெங்காலிகளையும் கொன்றிருக்கிறார்கள். முஸ்லிம்கள் முதல் முதலாக 1993-94களில் போடோக்களால் கொல்லப்பட்டனர். இதற்கு முன் அவர்கள் ஆதிவாசிகள் மற்றும் இந்துக்களில் பலரைக் கொன்றொழித்துள்ளனர்.

முஸ்லிம்களின் தேசப்பற்றை எவரும் சந்தேகிக்க முடியாது. தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு நிறைய வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இருந்தன. பாகிஸ்தான் மட்டும் அவர்களுக்காக இருக்கவில்லை. ஏனைய பல வழிகள் முஸ்லிம்களுக்கு இருந்தன. ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதைத் தான் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் தாய் நாட்டை முஸ்லிம்கள் நேசிக்கின்றனர்.

பிறப்பினாலும், பிரிவினையின் போது தேசத்தை தேர்வு செய்ததின் மூலமாகவும் முஸ்லிம்கள் இந்தியர்கள்தான். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இந்துக்களிலும் மற்றும் ஏனைய சமூக மக்களிலும் மதச் சார்பற்றதன்மையின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் இருக்கின்றனர். முஸ்லிம்களின் தேசப் பற்று குறித்து கேள்வியெழுப்பப்படும்போதெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. சிலர் வங்காள தேசத்தவர்களைப் பற்றி பேசுகிறார்கள். அதை நான் முழுமையாகவே வரவேற்கிறேன். வங்காள தேசத்தவர்கள் இருந்தால் அரசாங்கம் அவர்கûளை கண்டுபிடித்து கைது செய்யட்டும். அதற்காக அப்பாவி மக்கள் ஏன் துன்புறுத்தப் பட வேண்டும்?

நாங்கள் சட்ட உதவியை நாடுகிறோம். இப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் போராடிக் கொண்டு தான் இருப்போம். வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் கொக்ராஜ்ஹர் மக்களுக்கு நிவாரணமும், இழப்பீடும் கிடைக்க வேண்டும்.

இத்தருணத்தில் மத்திய குழுவை அனுப்பி பிரதமர் அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கையும், சோனியா அம்மையாரையும் கேட்டுக் கொள்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால்... இந்த இழப்பீட்டுத் தொகை மாநில அரசுக்கோ அல்லது போடோக்களுக்குகோ சென்றால் அவர்கள் நிகழ்த்திய வன்முறைக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையாகவே அது இருக்கும்.

எங்களுக்கு அமைதி வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். போடோக்கள் மற்றும் போடாக்கள் அல்லாதோர் என இரு தரப்பினரும் - இனியொருவர் கொல்லப்பட்டால் கொன்றவரின் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்பதை ஒப்புக் கொண்டு உடன்பாட்டு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

அஸ்ஸாம் வன்முறை சினிமா பாணியில் நடைபெற்றுள்ளது. இது ஒருமுகப்படுத்தப்பட்ட வன்முறை. பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரியது...'' என்றெல்லாம் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பதுருத்தீன் அஜ்மல்.

- ஃபைஸல்

Pin It