நான் முதன்முதலில் ராம்சரண்சர்மா அவர்களை 1950 களில் இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேய ஆப்பிரிக்க ஆய்வுப்பள்ளியில் (School of Oriental and African Studies) சந்தித்தேன். நான், அப்போது முனைவர் பட்ட ஆய்வினைத் தொடங்கியிருந்தேன். நான் இளங்கலையின் சிறப்புப்படிப்பில் (B.A., Honours) பண்டைய இந்தியவரலாற்றினை கற்றறிந்தேன். பேராசிரியர் ஏ.எல்.பஷாம், ஆர்.சி.மஜூம்தார், எச்.சி.ராய்சவுத்திரி, வின்செண்ட் ஸ்மித் போன்றோரின் நூல்களைக் கற்பதற்கு பரிந்துரைத்தார். ஆனால், ஆர்.எஸ்.சர்மாவின் ஆய்வியல் அணுகுமுறை மாறுபட்டது என்றும் டி.டி.கொசாம்பி இன்னும் மாறுபட்டவர் என்றும் கூறினார். இது தென்னிந்திய வரலாற்றியல் பற்றிய கருத்தரங்கில் (Conference on South Indian Historiography) உறுதிபட்டது. அதில், ஆ.சி.மஜும்தாரைத் தொடர்ந்து ஆர்.எஸ்.சர்மா ஆய்வுரை வழங்கினார். அதன் தலைப்பு:பண்டைய இந்தியாவின் சமூக, வரலாற்று வரைவியல் (Historiography of ancient Indian Social History).

மற்றொரு நினைவில் நிற்கும் தருணம் யாதெனில் ஏ.எல்.பஷாம், டி.டி.கொசாம்பியை School of Oriental and African Studiesக்கு இந்துத்துவம் பற்றி சொற்பொழிவிற்காக அழைத்தது. அவருடைய சொற்பொழிவு பண்டைய வரலாறு பற்றிய ஒட்டுமொத்தமான புதுப்பார்வையினை அளித்தது. அது மரபுரீதியிலான வரலாற்றை எழுதுவதில் அறிவுச் சமூகத்திற்கு சவாலாக அமைந்தது. இவ்விரு அறிஞர்களும் அச்சிந்தனைப் பள்ளியின் ஆய்வுப்புலத்தில் ஒரு புதிய தடத்தினை ஏற்படுத்தினர். அதுவரை 50 ஆண்டுகளாக ஆசியாபற்றி பழமையான ஆய்வுமுறையினை மாற்றியது.

ram charan sharmaஆர்.எஸ். சர்மா School of Oriental and Afri­can Studies இல் நீண்ட காலம் இருந்தார். அங்கு மாணவர்களுடன் பண்டைய காலம் பற்றியும், நவீனகாலம் பற்றியும் அடிக்கடி உரையாடுவார். எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆய்வாளர்களுக்கு ஆய்வுத்துறையில் சிக்கலிருப்பின் சரிசெய்தார். ஆய்வுத்தளங்களைக் கண்டறிவதில் பெரிதும் உதவினார். சான்றுகளைத்தேடுவதில் உதவினார். முழுவதுமாக மாணவர்களுக்கு,குறிப்பாக ஆய்வில் ஆர்வமுள்ள மாணவர்க்ளுக்கு ஊக்கமளித்தார். அவருடைய மார்க்சியஆய்வு சமூக, பொருளியல், வரலாற்றுஆய்வில் பிரதிபலித்தது. இந்தியாவில் அன்று நிகழ்ந்த உழவர்இயக்கம் பற்றியஆய்வில் பிரதிபலித்தது. அவர் மூலமாகத்தான் இராகுல் சங்கிருத்யாயனின் ஆய்வினைக் கற்றேன்.

தொடக்கநிலை வளர்ச்சி

பண்டைய இந்தியா பற்றிய ஆர்.எஸ்.சர்மாவின் ஆய்வு வரலாறு எழுதுதலில் இரு முக்கிய வளர்ச்சியினை அடுத்த அரைநூற்றாண்டு காலத்திற்கு ஏற்படுத்தியது. முதலில் ஆய்விற்கான சான்றுகளைத் தேடும் களத்தினை விரிவாக்கினார். இலக்கிய பனுவலில் சித்தரிக்கப்பட்ட பொருள்களை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களோடு ஒப்பிட்டு வரலாறு அறியப்பட்டது. இம்முறையானஆய்வு பல கேள்விகளுக்கு விடையளித்தது. மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் எவ்வகையான பொருள்களைப் பயன்படுத்தினர் என்பதனையும் எளிதில் அறிய முடிந்தது. அதன்முதல் எவ்வகையான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தினர் என்பதனை அளவிட முடிந்தது. பொருளியல் நிலையினையும் அளவிட முடிந்தது. நூல்வழி பெற்ற விவரணை பலவற்றையும் கூறியது. ஆனால், அவை சரியானவையன்று.

ஆர்.எஸ்.சர்மாவின் அடுத்தமுக்கியமான பங்களிப்பு சான்றுகளைப் பகுப்பாய்வு செய்யும்முறை. அதாவது, சான்றுகளின் நம்பகத்தன்மையினை சோதிக்கும் முறையாகும். எம்மாதிரியான சூழல்களில் அச்சான்றுகள் உருவாயின. அவற்றிலிருந்து எப்படி கருத்துகளைப் பெறலாம் என்பதாகும். அவ்வாறு பெறப்பட்டவற்றை மார்க்சிய வரலாற்று பொருள்வாதக் கொள்கையோடு பொருத்துவதாகும். இவ்வணுகுமுறை நிலவுகிற ஆய்வுமுறையினை மாற்றியது. வரலாற்றில் சரியான/பொருத்தமான கேள்விகள் கேட்கப்பட்டு விடைகளும் பெறப்பட்டன. வரலாற்றில் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது அது எவ்வாறு உருபெற்று வளர்ந்து மாறியது என்றும் அறியப்பட்டது. முன்பும் இதுபோன்ற கேள்விகள் முன்னோடி வரலாற்றறிஞர்களால் கேட்கப்பட்டன. ஆனால் காத்திரமான கேள்விகளை டி.டி.கொசாம்பி எழுப்பினார்; ஆர்.எஸ்.சர்மா தொடர்ந்தார். இருவருமே மார்க்சிய ஆய்வுமுறையில் கேள்வியெழுப்பினர். எனவே, இருவர் கேள்விமுறையும் ஒரேமாதிரியாக அமைந்தது. ஆனால், வேறுமாதிரி கேள்வி கேட்டவர்களும் உண்டு.

மார்க்சிய ஆய்வுமுறை

தற்போது வேண்டுமானால் இவ்வாய்வுமுறை பொதுவாக மாறியிருக்கலாம். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு இது ஒருபுதிய ஆய்வுமுறையாகும். அப்போதும் கூட, அறியாமை மார்க்சிய சிந்தனையை தவறாகப் புரிந்து கொள்ள வைத்தது. அதாவது மார்க்சிய ஆய்வுமுறை பொருளியல் நிர்ணயம் பற்றிய ஆய்வு என்று தவறாகக் கருதினர். ஓர் ஆய்வியல் முறையாக மார்க்சிய சிந்தனை மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையினையும் கணக்கில் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட கருத்தில் மையம் கொண்டிருந்தது. சான்றுகளை சில சிந்தனைப்புள்ளிக்குள் இழுத்தது. இது மார்க்சிய முறையினைப் பயன்படுத்துவோரின் மனநிலையினை பொறுத்து அமைந்தது. இம்முறை சிலவேளைகளில் பிறபகுப்பாய்வு முறையுடன் சேர்த்து பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற முறையினை டி.டி.கொசாம்பி செய்தார். அவர், நாணயங்களை இம்மாதிரியான முறையில் பகுப்பாய்வு செய்தார். பண்டையகாலத்தில் ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களை விளக்கலாம். ஆனால், வரலாற்றாசிரியர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்களோ அக்கருத்திற்கு பக்கபலமாக சான்றுகளைப் பயன்படுத்துவர். காத்திரமான வரலாற்றாசிரியர்கள் இம்முறையினைப் பெரிதும் பின்பற்றினர்.

வரலாற்றாய்வு தொடக்கத்தில், அரசியல், அரசகுடும்பங்களின் மேல் மையம் கொண்டிருந்தது. ஆனால், அது ஓரளவிற்கே பயன்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் நடுகூற்றில் இப்போக்கு மாறியது. இந்நிலையில் சமூக, பொருளாதார, வரலாற்று ஆய்வு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.சர்மா, டி.டி.கொசாம்பி ஆய்வுகள் ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்தியது. இருவரும் சான்றுகளின் வகையினை விரிவாக்கினர்.

இலக்கியப் பனுவல்களில் பதியப்பட்ட சான்றுகள் தொல்லியல் சான்றுகளோடு பொருத்திப் பார்க்கப்பட்டன. சமூகத்தின் உண்மை நிலையினை அறிவதற்கு இவ்வாய்வு முறை பயன்பட்டது,பொருத்தமாகவும் அமைந்தது.

இலக்கியப் பனுவல்களின் பயனும் தொல்லியல் சான்றுகளின் பயனும்

ஆர்.எஸ்.சர்மா இலக்கியச் சான்றுகளை தொல் பொருளியல் சான்றுகளோடு பொருத்திப்பார்ப்பதன் மூலம் சான்றுகளின் வலுத்தன்மையினை விரிவாக்கினார். இங்கு இரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அதில் ஒன்று கங்கைச்சமவெளியில் தொடக்கத்தில் தோன்றிய நகர்மயமாதல் பற்றியது. அது எவ்வாறு கி.மு 5-6 ஆம் நூற்றாண்டுகளில் நகர்மயமானது பற்றியதாகும். அது தொடர்பான கேள்வி நகர்மயமான குடியிருப்புகளைக் கண்டறிவதற்கான சான்றுகளைக் கண்டறிவது தேவையான ஒன்று. இலக்கியச் சான்றுகள் நகர்மயமாதல் பற்றி போதிய அளவிற்கு விவரிக்கவில்லை. ஆனால், தொல்லியல் சான்றுகள் நகர்மயமாதலில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களை விளக்குகின்றன. முக்கியமாக இரும்புத் தொழில் நுட்பம். மற்றொன்று, வெண்கலம், செம்புத் தொழில்நுட்பம் எவ்வாறு மெள்ள மெள்ள இரும்புத் தொழில்நுட்பத்திற்கு மாறியது என்பதாகும். இரும்பு, காடுகளை அழிப்பதற்கு பேருதவி புரிந்தது. உழவுத் தொழிலிற்கு நிலத்தினை ஆழ உழுவதற்கு இரும்பினாலான கலப்பை பெரிதும் ஏற்றதாக அமைந்தது. முக்கியமாக நெல்விளைச்சலுக்கு இத்தொழில்நுட்பம் பெரிதும் பயன்பட்டது. இது நகர்மயமாதலுக்கும் விரைவாக இட்டுச்சென்றது என்பார் ஆ.எஸ்.சர்மா. இக்கருத்து பெரிதும் வாதிக்கப்பட்டது, அடுத்தகட்ட ஆய்விற்கு இட்டுச்சென்றது.

அவருடைய இன்னொருவாதம் குப்தர்காலம் பொற்காலம் பற்றியது. இந்தியாவின் வடக்கில் அகழாய்வில் கிடைத்த சான்றுகளைத் தொகுத்தார். ஆனால், குப்தர்காலத்தில் பொருளியல் பண்பாடு நகர்மயமான குடியிருக்கைகளில் சரிந்தது எனபதைக் கண்டார். இக்கருத்தினை தம் Urban Decay in India (C 300-C1000) என்ற நூலில் வாதித்துள்ளார். பொற்காலம் என்ற கருத்தினைத் தவிர்த்தால் இக்காலத்தில் வாழ்க்கைத்தரமும் சரிந்தது. இச்சரிவினைப் பொதுமைப்படுத்துவதை வாதிக்கலாம். ஆனால், இது தொடர்பான காத்திரமான கேள்விகளை எழுப்பலாம். குறிப்பாக, பொற்காலம் என்ற கருத்தினை எவ்வாறு விளக்க வேண்டும், அது ஒரு கருத்தியலாக இருந்தால். மேலும், இக்காலகட்டம் பொருளியல் சரிவான காலமாக இருந்ததால் அரச குடும்பத்தினர், கோயில்கள், மடாலயங்கள் போன்றவற்றை எவ்வாறு போற்றினர் என்பதனை அறிய வேண்டும்.

கலைப்பண்பாட்டு வளர்ச்சிக்கு பெருமளவில் பொருளியல் தேவைப்படும். இப்பொருளியல் வளர்ச்சிக்கு எம்மாதிரியான மூலவளங்கள் அமைந்தன. இதுபோன்ற இலக்கியம், தத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு ஓரளவு பொருளியல் போதுமானது; பெருமளவில் தேவைப்படாது. எதிர்மாறாக, குப்தர்காலத்தினைவிட அடுத்துவந்த காலத்தில் கலைவெளிப்பாடு, கட்டிடம் போன்றவை சிறப்பானவை. அப்படியானால், குப்தர்காலத்தின் கலைவெளிப்பாடு அதற்கு முந்தைய காலகட்டத்தின் கலைவெளிப்பாட்டின் தொடர்ச்சி எனலாமா? காட்டாக, இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் புத்ததூபிகள் எழுப்பப்பட்டன. இவற்றை உருவாக்கியவர்கள் அரச குடும்பத்தினர் மட்டுமன்று, வணிகர்களின் கூட்டமைப்புமாகும். வணிகர்கள், கைவினைஞர்கள், சிறுநிலக்கிழார்கள், துறவிகள், பெண்துறவிகள் என பலதரப்பினரும் இதுபோன்ற கட்டிடங்களை எழுப்புவதற்கு உதவினர். அவர்கள் செய்த உதவிகள், நன்கொடைகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

பிறிதொரு உலகம்

கல்வெட்டுகள் சமூக, பொருளியல், வரலாறு பற்றிப் பேசுகையில் அவை வரலாற்றில் இன்னொரு உலகினைத் திறக்கிறது. குறிப்பாக, பெண் கொடையாளர்கள். அவர்களின் சமூகநிலை, பண்டைய இந்தியவரலாற்றில் எவ்வாறு இருந்தன என்பதனை அறியலாம். வரலாற்றில் இவ்வாறு அறியப்பட்ட பெண்களின் உயர்ந்த நிலைக்கு நேர்மாறான கருத்தினை தர்மசாஸ்திர நூல்கள் கொண்டுள்ளன. செல்வம், சாதி, அலுவல்நிலை போன்றவற்றைப் பொறுத்து பெண்களின் மதிப்புநிலை அமைந்ததனை கல்வெட்டுகள் விளக்குகின்றன.

இன்றைக்கு பால்பற்றி பல ஆய்வுகள் காத்திரம் பெற்றுள்ளன. பண்டைக் காலத்தின் பால்பற்றிய ஆய்விற்கு போதுமான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, இந்தியச் சமூகம் பற்றிய முழுப்பார்வையினைத் தரும். இது சாதியச்சமூகம் பற்றிய பலகோணங்களையும் விளக்குகிறது. இப்பார்வை முந்தைய ஆய்வுகளில் இடம் பெறவில்லை. சாதிய இயக்கம் உயர்நிலையில் இருப்பவருக்கு மட்டும் இருக்கவேண்டும் என்பதற்காக பிற சமூக அமைப்புகள் நசுக்கப்பட்டன. பெண்கள்நிலை பொதுவாக அமைந்தது. பெண்களை அடக்குதல் சாதிய இயக்கத்தினை உறுதிப்படுத்தியது. இருந்தாலும், சில மாற்றுஉண்டு. அடிசாதி மக்களைக் கட்டுப்படுத்துவதன்மூலம் கூலிவேலையாட்கள் தடை­யில்லாமல் கிடைத்தனர். இவர்களின் நிலை இன்றைய தலித்துகளின் நிலைபோல இருந்தது. சாதியடையாளம் பிறப்பிலிருந்து தோன்றுவதால் சாதிநிலையினை மாற்றுவது மிகக்கடினமானது. எனவே, அடித்தட்டு மக்கள் உழைப்பதற்கே பிறந்தவர் எனப்பட்டனர். எனவே, தலைமுறை தலைமுறையாக அவர்களின் உழைக்கும்நிலை தொடர்ந்தது. இதுபோன்ற கருத்து ஆர்.எஸ்.சர்மாவின் Sudras in Ancient India, 1958 நூலில் விளக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும்படியாக Aspects of Political Ideas and Institutions in Ancient India, (1968,2nd revised edition) என்ற நூல் பல கருத்துகளை விளக்குகின்றது. இதுமாதிரியான ஆய்வு பெருமளவில் வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது, ஆய்வுகளை விரிவாக்கியது.

கல்வெட்டுச் சான்றுகள்

ஆர்.எஸ்.சர்மா கல்வெட்டுகளை சான்றுகளாக வரலாறு எழுதுவதற்காக பெரிதும் பயன்படுத்தினார். அவற்றிலிருந்து புதியவகைச் சான்றுகளைத் திரட்டினார். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே கல்வெட்டுகள் ஆராயப்பட்டன. ஆனால், அவை பெரும்பாலும் வரலாற்றின் காலநிரல்களை சரிசெய்யவே பயன்பட்டன. அக்காலகட்டத்தில் காலநிரல்களின்படி அரசியல் நிகழ்வுகளை சேகரிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. குப்தர் காலத்திற்குப் பிந்தியகாலத்தில் சமூக, பொருளியல், வரலாற்று ஆய்வுகளுக்கு வரலாற்றாசிரியர்கள் தொடக்கத்தில் இலக்கியத்தினையே பெரிதும் நம்பினர். அக்காலத்திற்கான அகழாய்வுகள் பொதுவானதாக இல்லை. ஆனால், வரலாற்றாசிரியர்கள் மீண்டும் கல்வெட்டுகளை ஆயும்போது குப்தர் காலத்தினை தொடர்ந்து வந்த பல அரசுகளின் சமூக, பொருளியல் வரலாற்றினை மீளாய்வு செய்தனர். தொடக்கத்தில் வரலாற்றாசிரியர்கள் சமூக மாற்றத்தினை சற்றே தொட்டுக் காட்டினர். தொடர்ந்து இந்தியச் சமூகத்தினை மேற்கு ஐரோப்பாவின் இடைக்காலத்திய நிலமானிய முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். நிலமானிய சமூகம் ஒரு பிரமிட் அடுக்குநிலையில் காட்டப்பட்டது. அனைத்து அதிகாரமும் பெற்ற அரசர் அதன் உச்சியில் இருப்பார். அடுத்த நிலையில் இருக்கும் தலைவர்கள், இடைநிலையில் இருப்பவர்கள், எல்லைகளை ஆளும் தலைவர்கள் அரசகட்டளையின்படி இயங்குவர். அடுத்தநிலையில் குடிகள் உழைப்பவர்களாக இயங்குவர். இவர்கள் உழைக்கும்குடிகள். ஆனால், சில வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் நிலமானியமுறை அமைவதற்கு வாய்ப்பில்லை என்று வாதிட்டனர்.

வரலாற்றில் உற்பத்திமுறை 5 கட்டங்களாக நிகழ்ந்தது என்று மார்க்ஸ் பரிந்துரைத்தார். ஐரோப்பிய வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் சமூக, பொருளியல், வரலாற்று மாற்றம் மெள்ள மெள்ள ஒருநிலையிலிருந்து அடுத்தநிலைக்கு மாறியது. இதில் முக்கியம் என்னவென்றால் ஒவ்வொரு கட்டத்தின் மாற்றமும் ஒன்றிலிருந்து ஒன்றாக எழுந்தது. ஆனால், அம்மாற்றம் இன்றைய முறையிலிருந்து வேறுபட்டது என்றார்.

வேறுமாதிரியான உற்பத்திமுறை ஆசியாவில் நிலவியது என்று மார்க்ஸ் கூறினார். அதனை ஆசிய உற்பத்திமுறை என்றார். அது ஆசிய சமூகம் மாறாநிலைகொண்டது கொடுங்கோலர்களால் ஆளப்பட்டது என்று புரிந்துகொள்ளப்பட்டது. இக்கருத்து ஆசியாவின் மார்க்சிய அறிஞர்களால் பெரிதும் ஆராயப்பட்டது, தற்போது கைவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசியாவின் பெரும்பாலான மார்க்சிய அறிஞர்கள், மார்க்ஸ் ஐரோப்பா பற்றி கூறியவற்றை கூர்ந்து கவனிக்கவில்லை. இது நிலமாணியமுறைபற்றி ஆய்வுமேற்கொள்வதற்கு பெரிதும் ஆர்வத்தினைத் தூண்டியது. அது, ஓரளவிற்கு சமூக மாற்றத்தினை விளக்குவதுபோல் இருந்தது. ஆனால், ஓர் எச்சரிக்கை. இந்திய நிலமானிய முறை ஐரோப்பிய நிலமானியமுறையுடன் ஒத்திருப்பதுபோல் தோன்றவில்லை. கி.பி.8ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் கல்வெட்டுச்சான்றுகள் அரசியல், வேளாண்பொருளியல் நிலைமையுடன் ஒத்துப்போவதைக் காட்டும்.

டி.டி.கோசாம்பி இம்முறையின் அடிப்படையில் குப்தர்காலத்தினைத் தொடர்ந்துவந்த காலத்தினை ஆய்ந்தார். பகுப்பாய்வின்மூலம் அரசு, பொருளியல், சாதி, சமயம் போன்ற கூறுகளை ஆய்ந்தார். ஆனால், சில மாறுபாடான கருத்துகளை முன்வைத்தார். அவர், நிலமானியமுறையினை சமூகத்தின் மேல்நிலையிலிருந்து தோன்றியது என்பார். அதாவது அரசர் மேலிருந்து வட்டாரத் தலைவர்களைக் கட்டுப்படுத்துவார் என்றார். மற்றொரு கருத்தினையும் முன்வைத்தார். நிலமானியமுறை சமூகத்தின் கீழ்நிலையிலிருந்தும் தோன்றியது என்றார். அதாவது, இம்முறையில் வேளாண்குடிகளுக்கும் வட்டாரத் தலைவர்க்ளுக்கும் இடையிலான உறவுகள் மையமாக செயற்படும் என்றார்.

இந்திய நிலமானியமுறை

ஆர்.எஸ்.சர்மா கருத்துரு செய்த இந்திய நிலமானியமுறை மார்க்சிய சிந்தனைக்கு மாதிரியாக அமைந்தது. ஆனால், ஒரு தனித்துவமான கருத்தாக அமையவில்லை. ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம் பரவலாக வட்டாரத்தலைவர்களின் கைகளில் இருந்தது என்றார். இம்முறையில் அரசர் பிராமணர்களுக்கும், உயர்நிலை அலுவலர்களுக்கும், அவர்களுடைய அரசு அலுவலுக்காக நிலக்கொடைகளை வழங்கினார் என்றார். ஆனால், உண்மையில் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டது நிலத்திலிருந்து விளைந்த வருமானமே; நிலமன்று. ஆனால், அவர்கள் அடுத்து நிலத்தின்மீதான உரிமையினைக் கோரினர். நிலவுடைமையாளர்கள் என்ற அமைப்பு பெரிய சமூகசக்தியாக நிலைபெற்றது. இது போன்று பெரும் நிலப்பரப்பினைப் பெற்றவர்கள் அதனை ஒரு மூலதனமாக வைத்து மெள்ள மெள்ள ஒரு சிற்றரசினையே உருவாக்கினர்.

பண்டைக்காலத்திலிருந்து வேறுபட்ட புதிய கூறுகளைக் கொண்ட புதிய சமூகங்கள் எழுந்தன. ஆட்சிக்குடும்பங்கள், சத்திரியர் நிலையினைப் பெறுவதற்காக கீர்த்திகளை எழுதினர். புதியதொழில்முறைகள் புதிய சாதிகளை உருவாக்கின. இடைநிலை சாதிகளில் பெருத்த மாற்றம் நிகழ்ந்தது. காட்டாக, கயஸ்தர் சமூகத்தினர் அதிகாரமிக்க நிர்வாகத்தினராயினர். சமூகத்தில் உயர்நிலையில் இருந்த பிராமணர்கள் அடிநிலையில் இருந்த தலித்துகள் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அவ்வப்போது சில புதியகுழுக்கள் சமூகத்திற்குள் வந்தன. இன்றுவரைக்கும் தலித்துகளும், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களும் உடல் உழைப்பினைக் கொடுக்கின்றனர். குடியானவர்பற்றி பெரிதும் வாதிக்கப்பட்டுள்ளது. குப்தர் காலத்திற்கு அடுத்த காலத்திலிருந்து கிடைக்கின்ற கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆர்.எஸ்.சர்மா நகரங்களும், வணிகமும் சரிந்தன என்று வாதிட்டார். இது சில சிக்கல்களையும் உருவாக்கியது. வணிகத்தில் சிலதொய்வுகள் ஏற்பட்டாலும் பிறகு மெள்ள சூடு பிடித்தது. இந்திய வணிகர்கள், புத்ததுறவிகள், பிராமணர்கள் ஆசியா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனம் வரைக்கும் தொலைதூரப் பயணத்தினை மேற்கொண்டனர்.

பண்பாட்டு மாற்றம்

பண்பாடும் மாறியது. சம்ஸ்க்ருதம் முழுமையாக அரசவை மொழியானது. அரசின் உதவியால் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், பனுவல்களும் பொதுவாயின. ஆனால், கி.பி.1000 க்குப் பிறகு வட்டாரமொழிகளின் எழுச்சியால் சம்ஸ்க்ருதம் ஒதுக்கப்பட்டது. ஆட்சிமொழிநிலையில் இருந்தும் அரசவை நிறுவனத்திலிருந்தும் விலக்கப்பட்டது. அரசர்கள், இடைநிலையில் உள்ளவர்கள், செல்வமிக்க வணிகர்கள் போஷகராயினர். புதிய சமயங்கள் பக்தியினைப் போற்றின. விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்கள் பெரிதும் போற்றப்பட்டனர். அதே சமயத்தில் வட்டார சமய நிறுவனத்தின் வழிபாட்டு நெறிமுறைகள், கடவுளர்கள், மையநீரோட்டத்துடன் இணைக்கப் பட்டன. இது நிலமானிய முறையில் ஏற்பட்ட முக்கியமாற்றம். இம்மாற்றம், அரசியலிலும் பொருளியலிலும் நிகழ்ந்தது. ஆனால், இவற்றுடன் மட்டும் இம்மாற்றம் நிற்கவில்லை. புதிய சமய பண்பாட்டு இயக்கங்கள், புதிய சாதிகள், தோன்றியதற்கான சான்றுகளும் உண்டு. இக்கூறுகளை நிலமானியமுறை பற்றி ஆய்ந்தவர்கள் பெரிதும் வாதிட்டனர். ஆனால், சிலர் இம்மாற்றத்தினை கண்ணுற்றனர். அரசுருவாக்கம் பற்றிப் பேசினர். புராண இந்துத்துவம் பற்றிப் பேசினர். இனக்குழு அடையாளங்கள சாதிய அடையாளங்களாக மாறியது பற்றியும் பேசினர். இம்மாற்றங்கள் பெரிதும் இந்தியாவின் வடக்கில் நிகழ்ந்தன.

ஆர்.எஸ்.சர்மாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட feudal mode of production என்ற கருத்து இக்காலகட்டம் பற்றி வரலாறு காத்திரமான வாதத்திற்கு மடைதிறந்தது. இவருடைய ஆய்விற்கு ஆதரவும் உண்டு; விமர்சனமும் உண்டு. விமர்சனங்களுக்கு Early Medieval Indian Society, 2001 என்ற நூலில் விடையளித்தார். இவ்வாய்வுப்புலத்தில் இவருடைய சிறப்பான பங்களிப்பு வகை வகையான புதிய கேள்விகளை எழுப்பி வாதத்தினை தொடர்ந்து அதற்கான விடை காண்பதற்கு புதிய சான்றுகளை தேடவைத்தார். இவருடைய ஆய்வின் அணுகுமுறை பொருளியல் பண்பாட்டினை பனுவல் இலக்கியத்தோடு பொருத்த்திப்பார்ப்பது, அதனைக் கேள்விகேட்டு பகுப்பாய்வு செய்வது, அவரை ஆய்வுலகில் நிலைநிறுத்தியது. அவருடைய அனைத்து ஆய்வுகளிலும் எழுத்திலும் முதன்மை பெறுவது பண்டைய இந்தியாவின் சமயசார்பற்ற நிலையினைப் புரிந்து கொள்வதாகும்.

இத்தனைக் காத்திரமான ஆய்வாளராக இருந்தும் இந்து வலதுசாரிகளின் காத்திரமான விமர்சனங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணுதல் வழக்கில் இருந்தது என்பதனை தக்க சான்றுகளுடன் நிரூபித்தார். இதுபற்றி தாம் எழுதிய நூலில் பதிவிட்டார். பாபர்மசூதி பற்றி எழுதினார். இவ்விரு விடயத்திலும் இவருக்கு சார்பாக பல வரலாற்று ஆசிரியர்களும் இருந்தனர். ஆர்.எஸ்.சர்மா விமர்சனங்களை பொறுத்தார்; போரிடவும் செய்தார். சமயசார்பற்ற வரலாற்றாய்வு செய்பவருக்கு ஊக்கமளித்தார். அவருடைய இறுதி பத்தாண்டுகளில், அவருடைய கருத்துகள் பலரையும் ஊக்கப்படுத்தியது. அவர் தொடங்கி வைத்த வாதம் வரலாறு எழுதுவதை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன்.

Sep,17, 2011 Vol.XLVI NO.38 Economic and Political Weekly

- ரொமிலா தாப்பர்

தமிழில்: கி.இரா.சங்கரன் - ந.கதிரவன்

Pin It