கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்' நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் என்ற புத்தகத்தை நாம் படித்தால், இந்துத்துவா பற்றிய பார்வை நமக்கு சரியானதாக மாறும். தமிழ்நாட்டில் ஒரு கதை கூறுவார்கள், கண் பார்வை இல்லாதவர்கள் ஒரு பெரிய யானையைத் தொட்டுப் பார்த்துவிட்டு இது ‘தூண் போல இருக்கிறது’, ‘இது முறம் போல் இருக்கிறது’ என்று கூறுவார்கள். அதே போலத்தான் நாமும். ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் முழு உருவத்தையும், தோற்றத்தையும், வளர்ச்சியையும், பின்னணியையும், இன்றைக்கு அவர்கள் எப்படி ஆக்டோபஸ்போல எட்டுக் கால்களைப் போல தனது பகுதிகளை எப்படி விரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த புத்தகம் முழுவதுமாக கூறுகிறது. பத்து தலைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தை ‘கருஞ்சட்டைப் பதிப்பகம்’ ஏறக்குறைய பத்து புத்தகங்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையோடு புத்தகத்தைப் பற்றி கூறத் தொடங்குகிறேன்.

ajitha 3451925 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் அந்த வருடம் அது ஒரு விஜயதசமி நாள். அன்றைக்குத் தொடங்கியது தான் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியவர் ‘ஹெட்கேவர்’ என்கிற சித்பவன் பார்ப்பனர். ஏன் சித்பவன் என்று குறிப்பிடுகிறேன் என்றால், ‘மராட்டிய மாநிலத்தில் உள்ள பார்ப்பனர்களிலேயே உயர்ந்த பார்ப்பனப் பிரிவினர் என்று அவர்களை அவர்களே கூறிக் கொள்கின்றனர். ஹெட்கேவர் 1925 இல் இருந்து 1940 வரை தலைமை தாங்குகிறார். 1925இல் ஒரு அமைப்பை துவங்குவதற்கு முன்னால் அவர் என்னவாக இருந்தார்? அவரவர்கள் அவர்களது கட்சி தலைவர்களைப் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதை நாம் வரவேற்கலாம். ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அவ்வளவு பொய்யாகவும், புரட்டாகவும், ‘காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர், அவர் புரட்சிகர இயக்கங்களிலே பங்கு கொண்டார்’ என்றெல்லாம் அவரைப் பற்றி அவருடைய வாழ்க்கைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அது மொத்தமாக ஒரு பொய். ஏனென்றால் அவரைப் பற்றி, காந்தியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரான, பியாரிலால், டி.ஆர்.கோயல் ஆகிய இருவரும் எழுதிய புத்தகத்தில் “இவர்கள் கல்கத்தாவிற்கு சென்று புரட்சிகர இயக்கத்திலே கலந்துகொண்டார் பங்கேற்றார் என்கிறனர். ஆனால், அதற்கான ஆதாரம் ஒன்றுமேயில்லை” என்று எழுதினார்கள்.

அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் இருந்து ஜெ.ஏ.குரான் (cuarran) (குரான் என்றால் இஸ்லாமிய நூல் அல்ல) என்பவர் Militants of Hinduism என்ற ஆய்வு நூலை எழுதியவர். இந்துத்துவம் இந்தியாவில் எவ்வளவு மூர்க்கமாக இருக்கிறது என்பதை ஒன்றரை ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ். காரர்களோடு தங்கி எழுதிய புத்தகம். அவர் அந்த புத்தகத்தில் சொல்கிறார் ‘ஹெட்கேவர் என்கிற அவரது தலைவர் புரட்சிகர இயக்கங்களில் கலந்து கொண்டதாக எந்த வரலாறும், எந்த ஆதாரமும் இல்லை’ என்று.

அதற்கான நோக்கம் என்ன என்று பார்க்கும் போது மிக மிகத் தெளிவாக இருக்கிறது. காங்கிரசில் அப்போது ஒரு கொள்கை இருந்தது. காங்கிரசில் இருந்து கொண்டே அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கலாம். காங்கிரசில் இருந்து கொண்டே அவர்கள் இந்து மகா சபையில் உறுப்பினர்களாக இருக்கலாம். இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சினை காங்கிரசுக்குள் புயலைக் கிளப்பியது. 1934இல் ஒரு தீர்மானமாக நிறைவேற்றி காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் இந்து மகாசபையில் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

அதற்கு முன்னால் ஹெட்கேவர் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார், “காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் நாட்டின் எழுச்சி குறைந்து வருகிறது. அதன் காரணமாக தீய சக்திகள் கொடூரமாக தலை விரித்து ஆடுகின்றன. தேசிய போராட்டம் உச்ச கட்டத்திற்கு வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு வருடைய பொறாமை உணர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் தனிப்பட்ட தகராறுகளே இருக்கின்றது. பல்வேறு சங்கங்கள் இடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் போராட்டம் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது. யாவான் விஷ நாகங்கள் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயன்படுத்தி நாடெங்கும் கலவரங்களை நடத்துகிறது (யாவான் விஷ நாகங்கள் என்று இவர்கள் குறிப்பிடுவது முஸ்லீம்களை) என்று ஹெட்கேவர் வருத்தப்படுகிறார் சங்கங்களாக இருப்பவர்கள் இடையில் மோதல் இருக்கிறது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினை வருகிறது” என்கிறார்.

நாம் என்ன கவனிக்க வேண்டுமென்றால் அதே நேரத்தில் 1925ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வகுப்பு வாரி உரிமை கேட்டு தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்துகிறார். 1925இல் இங்கு பார்ப்பனருக்கு எதிரான வேகமான தீர்க்கமான தெளிவான மாநாடு அதற்கான தீர்மானம். அங்கு ஹெட்கேவர் சொல் கிறார் இந்த நாட்டில் குழப்பம் வந்துவிட்டது சங்கங் களுக்குள் மோதல். பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் பிரச்சினை தொடங்கி விட்டது’ என்கிறார். அப்படி யென்றால், ‘என் காலடியில் இருந்தவனெல்லாம் இப்போது பார்ப்பனரல்லாதவர் என்று சங்கம் வைத்துக் கொண்டெல்லாம் போராடுகிறார்கள்’. இப்போது ஒத்துழையாமை இயக்கம் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் இவருடைய வார்த்தைகளில் பார்த்தால் ஒத்துழையாமை இயக்கம் நாட்டின் எழுச்சியை ஒடுக்கி விட்டது என்கிறார். இதில் தெரிய வருவது என்னவென்றால், பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதவர்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது தான். இப்போது இரண்டு நாட்களுக்கு முன் மோகன் பகவத் கூறுகிறார், “இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்துக்கள் தான். அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டு அவர்கள் இந்துக்கள் தான்” என்கிறார்.

எவ்வளவு ஆணவமான, அரசியல் சாசனத்திற்கு எதிரான வார்த்தைகள் என்று பாருங்கள். நான் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களால் 1982இல் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

1925 முதல் 1940 வரை ஹெட்கேவர் தலைவராக இருந்தார். 1940 முதல் 1973 வரை கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் கோல்வாக்கர் தலைவராக இருந்திருக்கிறார். அவர் எழுதிய ‘The man and his mission’ புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக் கிறது. “பாரதத் தேசம் என்பது இந்துக்களின் தேசம். இராஷ்டிரம் என்பது இந்துக்களின் இராஷ்டிரமே! இந்த அரசியல் உண்மையை உணராமல் பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நடிப்புகளின் கற்பனையில் விழ டாக்டர் ஹெட்கேவர் தயாராக இல்லை. இதுதான் உண்மை. உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறோம். இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிக்க முடியும். இந்துக்களின் சக்தி மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த உண்மையி லிருந்து யாரையும் திசை திருப்ப முடியாது. எனவே இந்து இளைஞர்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். வேறு வழியில்லை, ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டது இதற்குத் தான். அந்த புனித நாள் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாள்” என்று எழுதுகிறார். இந்த இயக்கத்தைத் துவங்கியவர்கள் 5 பேர். டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, எல்.வி.பரஞ்சிபே, ஹெட்கேவர், தோல்கார், பாபாராவ் சாவர்க்கர். பாபாராவ் சாவார்க்கர் என்பவர் வீர் சாவர்க்கர் என்பவருடைய சகோதரர். அனைவருமே சித்பவன் பார்ப்பனர்கள்.

காந்தியைக் கொன்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். என்ன கூறியது, ‘எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. எப்போதுமே தொடர்பு இருந்தது இல்லை. கோட்சே எங்கள் அமைப்பில் இருந்ததே இல்லை. இந்து மகாசபையில் வேண்டுமானால் இருந்திருக்க லாம். இந்து மகா சபைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என்று கூறியது. ஆனால், மேலே கூறிய 5 பேர் தான் இந்து மகா சபையின் உயர்மட்ட தலைவர்கள். இந்த 5 பேர் தான் ஹெட்கேவரின் வீட்டில் கூடி 1925இல் ஆர்.எஸ்.எஸ் யை உருவாக்குகிறார்கள். எனவே இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ்.யும் வேறல்ல.

இவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக பங்கு கொண்டதாகக் கூறுகிறார்கள். அதைப் பற்றியும் இந்த புத்தகத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது. ‘இவர்கள் எல்லாம் சோரம் போன வீரர்களாக இருக்கிறார்கள்’. சிறையில் இருக்கும் போது கோல்வாக்கர், ‘நாங்கள் என்றைக்கும் உங்களின் (ஆங்கிலேயர்) கருத்துக்களுக்கு உடன்பட்டு அடிமைகளாக இருப்போம்' என்று எழுதினார். 'இங்கிருக்கும் மற்ற தலைவர்கள் காந்தி, நேரு போன்றவர்களைக் கேட்கிறேன், அவர்களெல்லாம் உங்கள் கருத்துகளைக் கேட்பவர்களாக இருக்கமாட்டார்கள். உங்களுக்கு நான் தான் சிறந்த அடிமையாக எப்போதும் இருப்பேன்' என்று இப்படியெல்லாம் சிறையில் இருந்து பிரிட்டிஷாருக்கு கடிதம் எழுதுகிறார்கள். இது எந்த சிறையில் இருந்து, எப்போது, யாருக்கு, யாரால் எழுதப்பட்டது என்று இந்த நூலில் தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்த நாட்டின் தேச பக்தர்கள் என்று கூறுவது போல அநாகரிகமான, அசிங்கமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஏன் இவர்கள் பிரிட்டிஷாரை ஆதரிக்கிறார்களென்றால், மராட்டியத்தில் இஸ்லாமியர்களை வென்று பேஷ்வா, வீர சிவாஜி போல முஸ்லிம்களை வென்று ஒரு இராஜ்ஜியமாக மாற்றுவதற்காக இவர்கள் பிரிட்டிஸ்காரர்களை ஆதரித்தார்களாம். இதில் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சிவாஜி சத்ரிய இனத்தில் பிறக்கவில்லை. பிறப்பில் சூத்திரர்; ஆட்சி உரிமை சூத்திரருக்கு இல்லை; சத்திரியருக்குத் தான் உண்டு. எனவே சிவாஜி முடிசூட பார்ப்பனர் எதிர்த்தனர். சிவாஜி காசிக்குச் சென்று அங்கே காகப்பட்டர் என்ற பார்ப்பனரிடம் 7000 தங்க காசுக்களை கொடுத்துத்தான் இவரை சத்தியராக மாற்றம் செய்ய மன்றாடுகிறார். இதற்காக 11000 பார்ப்பனர்களைக் கொண்டு வந்து பல கிராமங்களில் தங்க வைத்தார். நாட்டின் கஜானா காலியானது. மீண்டும் மீண்டும் சிவாஜி போருக்குச் சென்று உடல்நலம் பாதித்து தான் அவர் இறந்து போனார் என்பது வரலாறு. இப்படியான சிவாஜியை ஏன் இவர்கள் வீரனாகப் பார்க்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட சிவாஜியைப் போன்ற அடிமை இவர்களுக்கு வேண்டும் என்பதால் தான்.

காந்தியாரை கொலை செய்வதற்கு முன்னும் சரி பின்னும் சரி அந்த கொலை முயற்சிக்கும், கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் - க்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூச்சமே இல்லாமல் பொய் சொல்லியே வந்தார்கள். மொரார்ஜி தேசாயும், நேருவும் கூட காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த இரண்டே மாதங்களில் இந்தியா முழுவதும், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மேல் மட்டுமே 600 முதல் 700 வழக்குகள் வரை பதிவு செய்யப்படுகிறது. காந்தி கொலை வழக்கில் விசாரணை கமிசன் முன்னால் இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் இப்படி கூறுகிறார். நேரு ஆர்.எஸ்.எஸ்.யை தடை செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார். அதற்காக ஒரு ஆணையத்தையே அமைக்கிறார். புனேவில் உள்ள ஒரு மாவட்டக் காவல் தலைமை அதிகாரி, ‘இங்கே கலவரங்கள் அனைத்தும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் மட்டுமே நடத்தப்பட்டது' என்று கூறியிருக்கிறார். இவர்களால் 5000-க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்றுள்ளன. கிட்டத்தட்ட சுதந்திரம் கிடைத்தது முதல் காந்தி கொலை செய்யப்பட்ட காலங்களில் மட்டும் கிட்டத்தட்ட வகுப்புக் கலவரங்களால் 1700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதற்காக இவ்வளவு கலவரங்களை அவர்கள் செய் கிறார்கள் என்றால் ? இந்த நாடு இந்துக்களின் நாடு! இந்துக்களின் இராஷ்டிரமாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் (முஸ்லிம், கிறித்துவர்கள்) நம் நாட்டின் வளங்களையும், கலாச்சாரங்களையும் சூறையாடி விட்டார்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும். என்பதே இவர்களின் கூற்று.

(அடுத்த இதழில் முடியும்)

அஜிதா

Pin It