‘‘பள்ளியில் எனது வகுப்பு மாணவர்களிடையே எனது தகுதி வரிசைப்படி நான் உட்காரக்கூடாது, ஒரு மூலையில் தனியாகத் தான் உட்கார வேண்டும். வகுப்பில் நான் உட்காருவதற்காக என்னிடம் தனியாக ஒரு சாக்குத்துணி இருக்கும். பள்ளியைச் சுத்தம் செய்யும் வேலைக்காரன் நான் உபயோகித்த சாக்குத் துணியைத் தொடமாட்டான். அந்தச் சாக்குத்துணியை மாலையில் வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு, மறுநாள் காலையில் திரும்பவும் பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும்’’ - அம்பேத்கர்.

‘‘பறையன் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவனாகவும் சமூக ரீதியில் தாழ்த்தப்பட்டவனாகவும் இருக்கிறபடியால் நல்லநிலை யிலுள்ள அவனுடைய அயலகத்தார் எவ்வித மன உறுத்தலும் இன்றி அவனை விழுங்கப் பார்க்கிறார்கள்’’ - ஆல்காட்.

சாதி இந்துக்கள் தலித்துகளை விழுங்குவதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் தலித்துகள் கல்வி கற்றாக வேண்டும் என்பதனை ஆல்காட்டின் வரிகள் உணர்த்துகின்றன. இதனை உணர்ந்திருந்த தலித்துகள் காலனிய ஆட்சியினால் அறிமுகம் செய்யப்பட்ட மேற்கத்திய கல்வியைக் கற்பதற்கு முயற்சித்தனர். காலனிய ஆட்சி நிர்வாகத்தின் மிகமுக்கியப் பணிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. எனினும் கல்வி கற்பதென்பது தலித்துகளுக்குத் தவிர்க்க இயலாத தேவையாய் இருந்தது. கல்வி தலித் மற்றும் பழங்குடியினரை முன்னேற்றி யிருக்கிற அதே சமயம் அது அவர்களின் சொந்தபந்தங்களிட மிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்ற வாதம் தலித் மக்களுக்கு மட்டுமின்றி இதர சாதியினருக்கும் பொருந்தக் கூடியதுதான். ஆனால், அது தலித்துகள் மீது மட்டும் வைக்கப் படுவது விவாதிக்கப்பட வேண்டும். கல்வி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் கல்வி கற்காத ஒருவர் அறிவின்மை என்ற நிலையில் மட்டும் இருப்பதில்லை.

அறிக்கை ஒருவரை வறுமையில் மட்டும் உழலச் செய்வதில்லை கூடுதலாக தான் வஞ்சிக்கப்படுதலைத் தடுக்க இயலாமை, தனக்குரிய அரசியல் உரிமையினைச் செயற்படுத்த இயலாமை, தனக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கின்ற உரிமை குறித்த அறிவின்மை என சமூகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்பதிலிருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கம் செய்கிறது. எனவே, இந்த இயலாமைகள் இல்லாதிருக்க வேண்டும் என்றால் ஒருவர் கல்வி கற்பது அவசியமாகிவிடுகிறது. கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்திருந்த தலித்துகள் காலனிய ஆட்சிக் காலத்தில் கல்வி கற்பதற்கு முயற்சி செய்தபொழுது அவர்கள் அச்செயல்பாட்டி லிருந்து திட்டமிட்டே விலக்கப்பட்டனர். காலனியாட்சிக் காலத்தில் தலித்துகள் கல்வி கற்பதிலிருந்து எவ்வாறு விலக்கப் பட்டனர், கல்வி கற்றல் என்ற செயல்பாட்டில் பங்கேற்பதற்குத் தலித்துகளும் காலனிய அரசாங்கமும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன என்பதை இக்கட்டுரை விவாதிப்பதற்கு முயற்சிக்கிறது.

கற்பதற்கான வழிமுறை

தலித்துகள் கல்வி கற்பதற்கான மூன்று வழிமுறைகள் காலனியாட்சிக் காலத்தில் இருந்திருக்கின்றன. அவை

1. அரசாங்கப் பள்ளியை நாடுதல், 2. கிறித்துவ மிஷனரி மற்றும் இதர அமைப்புகள் தொடங்கிய பள்ளிகளில் படித்தல்,

3. சுயமாகப் பள்ளிக்கூடம் நிறுவுதல். சுயமாகப் பள்ளிக்கூடம் நிறுவும் முயற்சியைத் தலித்துகள் எடுத்திருக்கின்றனர்; இது தமிழகத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. சென்னைப் பகுதியில் தியாசபிகல் சொசைட்டி பறையர்களுக்கெனப் பள்ளியைத் தொடங்கியது. மாதிக இரவுப் பள்ளி - புளியந்தோப்பு, மாதிகா இரவுப் பள்ளி - பெரம்பூர், மக்டூன் செரிஃப் தெரு இரவுப் பள்ளி - பெரியமேடு மற்றும் அருந்ததிய மகாசபா பள்ளி என ஐந்து பள்ளிகளை அருந்ததியர் மகாசபை 1921ஆம் ஆண்டு தொடங்கி 1929ஆம் ஆண்டு வரை நடத்தியிருக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவர் குருசாமி மற்றும் ஜகநாதன் ஆகியோர் இப்பள்ளிகளை நிறுவுவதில் முனைப்புடன் செயல்பட்டிருக்கின்றனர்.

இப்பள்ளிகளைக் குருசாமி நிர்வகித் தார். ஆசிரியர்களின் ஊதியம் உட்பட இதர செலவினங்களுக் கான நிதி தொழிலாளர்துறை சார்பில் குருசாமி மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், குருசாமி எவ்வித சம்பளமும் பெற்றுக் கொள்ளவில்லை. சுமார் ஒன்பது ஆண்டுகளாக இந்த ஐந்து பள்ளிகளுக்கும் குருசாமியே தாளாளராக இருந்து நிர்வகித்து வந்தார். இச்சூழலில் காலனி ஆட்சியாளர்களின் கொள்கை நடவடிக்கையினால் இப்பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் உருவானது. இதில் மூன்று பள்ளிகளைத் தொழிலாளர்துறை எடுத்துக்கொண்டது, மற்ற பள்ளிகளைக் குருசாமியே நிர்வகித்து வந்தார். இரட்டிப்புச் செலவினை தவிர்க்கும் பொருட்டு அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவந்த நிதி நிறுத்தப்பட்டுவிட்ட காரணத்தினால் அப்பள்ளிகளையும் மூடவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருந்ததியர் மகாசபை தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘‘மாநகராட்சி நிர்வாகம் அருந்ததிய மகாசபை பகல் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி கொடுக்க இருக்கிறது. எனவே, இனிமேல் அருந்ததிய மகாசபை பகல் பள்ளிக்கு நிதிஉதவி வழங்கப்பட மாட்டாது’’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, அருந்ததிய மகாசபை, தானாகவே நிதியினைத் திரட்டி அப்பள்ளிகளை நடத்துவதற்கு முடிவு செய்தது. ஆனால், போதிய நிதி ஆதாரமின்றி அப்பள்ளி மூடப் பட்டது. அருந்ததியர் மகாசபையைப் போல் பறையர்களின் இயக்கமும் பள்ளிக்கூடங்கள் நிறுவுகின்ற முயற்சியை எடுத்தது. கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டு அவற்றில் சில இன்றும் செயல்பட்டு வருகின்றன. தலித்துகளால் சுயமாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் அரசாங்கத்தின் நிதியுதவியின்றி சிரமப்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. இதனால் தலித்துகளுக்கு அரசாங்கம் இலவசக் கல்வி கொடுக்கவேண்டும் என்பதனைத் தலித் இயக்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றன.

கிறிஸ்துவ மிஷனரி மற்றும் இதர அமைப்புகள் தொடங்கிய பள்ளிகள் தலித்துகளுக்கு மட்டுமென இருந்திருந்தால் அவற்றில் தலித்துகள் படிப்பதில் சிக்கல் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஒருசில கல்வி நிலையங்களில் தலித்துகள் சேர்க்கப் படுவதனை அவர்களையத்த சமூக ஒடுக்குமுறையினை அனுபவித்து வந்த சாதியினராலேயே எதிர்க்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியிலுள்ள தூய ஜான்ஸ் கல்லூரியில் தலித் மாணவர்கள் சேர்க்கப்படுவதை நாடார் சாதியினர் எதிர்த்தி ருப்பதனை இதற்கான உதாரணமாகக் கூறலாம். பெரும்பாலான கிராமங்களில் அரசாங்கம் பள்ளிக்கூடங்களை நிறுவியிருந்த காரணத்தினால் தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களிலுமுள்ள தலித்துகள் மிக எளிதாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய கல்வியினைப் பரப்புவதற்குக் காலனியாட்சி நிர்வாகம் பார்ப்பன‌ர் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சாதியினருக்கே வாய்ப்பளித்தது. மேலும், தலித்துகளிடம் மேற்கத்திய கல்விமுறை வேரூன்றினால் அது ஒருபோதும் பரவாது என்று அஞ்சி தலித்துகளுக்குக் கல்வி வாசலை அடைத்தது.

பார்ப்பன‌ர் மற்றும் மேல்சாதி ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுப்பதற்கு விரும்பிய காலனியாட்சியினர் தலித்துகளுக்கு அக்கல்வி கொடுப்பதை வெறுத்திருப்பதனை 1850-51ஆம் ஆண்டுக்கான பம்பாய் மாகாணக் கல்வி வாரிய அறிக்கையின் பின்வரும் வரிகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். அவ்வரி இவ்வாறு இருக்கிறது: ‘‘அரசுக் கல்வி நிறுவனங்களில், ஏழைகளின் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்கும்போது இழிவாகக் கருதப்படும் தெட்கள், மகர்கள் முதலிய பல்வேறு சாதியினரும் பெரும் எண்ணிக்கையில் மந்தைக் கூட்டம் போல் வருவதைத் தடுப்பதற்கு என்ன இருக்கிறது?’’. இவ்வரிகள் காலனியாட்சியினர் தலித் குழந்தைகள் கல்வி கற்பதனை வெறுத்திருக்கின்றனர் என்பதை தெளிவு படுத்துகிறது. காலனியாட்சியினரின் இந்த நிலைப்பாட் டின் காரணமாகத் தலித்துகள் கல்வி கற்பதில் சிக்கல் உருவானது. இந்த நிலைப்பாட்டினைக் காலனியாட்சியினர் பின்னர் மாற்றிக் கொண்ட போதிலும் அந்த வெறுப்பு என்ற இடத்தை விலக்கு தலும் அக்கறையின்மையும் ஆக்கிரமித்துக் கொண்டதென்கிறார் அம்பேத்கர். இது திட்டமிட்டே நிகழ்ந்திருக்கிறது, இது குறித்து விரிவாகக் காணலாம்.

புழங்கு உரிமை அனுமதி மறுப்பு

தலித்துகள் கல்வி கற்பதனைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகப் பள்ளிக் கூடங்களின் அமைவிடம் இருந்திருக்கிறது. இந்தச் சமூக அமைப்பில் வசிப்பிடம் சாதி வாரியாக இருக்கின்ற காரணத்தினால், தலித்துகள் தலித்தல்லாதோரின் வசிப்பிடத்தில் புழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசாங்கத்தின் பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் தலித்துகளுக்குப் புழங்கு உரிமையற்ற பகுதிகளிலேயே அதாவது சாதி இந்துக்களின் வசிப்பிடத்திலேயே அமைக்கப்பட்டது. இப்பள்ளிக்கூடங்கள் மக்களிடம் வசூல் செய்யப்படும் வரியிலிருந்து அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட காரணத்தினால் அதனைப் பொதுப் பள்ளி என்று அழைக்கலாம். பொதுப் பள்ளிக் கூடத்திற்கான கட்டடம் புதிதாகக் கட்டப்பட்டி ருக்கிறது அல்லது தனியார் கட்டடங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறது. இப்பள்ளிக்கூடங்களில் பார்ப்பன‌ர் மற்றும் சாதி இந்து குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டி ருக்கின்றனர். இதில் தலித் குழந்தைகளைச் சேர்ப்பதை பார்ப்பன‌ர் மற்றும் சாதி இந்து பெற்றோர்கள், தனியார் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியோர் எதிர்த்திருக்கின்றனர். தலித் குழந்தைகள் இப்பள்ளிக் கூடங்களை அணுகுவதிலிருந்து முற்றிலுமாக விலக்கப்பட்டனர். தலித்துகள் காலனியாட்சிக் காலத்தில் கல்வி கற்பதில் அவர்கள் சந்தித்த தலையாய பிரச்சினை பள்ளிக்கூடங்களை அணுகுதலே. இதற்கு அவர்கள் சாதி இந்துக்களின் தெருக்களைப் புழங்குவதற்கான போராட் டத்தையும் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.

அட்டவணை - 1

தலித்துகளுக்கு அணுகும் உரிமையுள்ள பள்ளிகள்

வ.எண் - மாவட்டம் - பொதுப் பள்ளிகளின்  எண்ணிக்கை - தலித்துகள் அணுக முடிகின்ற பள்ளிகளின் எண்ணிக்கை - தலித்துகள் எளிதாக அணுகமுடிகின்ற எண்ணிக்கை

1    சென்னை    143    143    143

2    செங்கல்பட்டு      746    620    202

3 வட ஆற்காடு 662    537    320

4 தென்னாற்காடு       970    885    270

5 தஞ்சாவூர்     936    899    241

6 திருச்சிராப்பள்ளி     889    796    388

7 மதுரை 740    729    388

8    இராமநாதபுரம்     649    644    417

9 திருநெல்வேலி       428    427    317

10 கோயம்புத்தூர்       921    869    383

11 சேலம்       720    702    431

12 நீலகிரி       98      97      42

மொத்தம் 7902   7348   3542

ஆதாரம்: கல்விக்கான சேர்க்கை குறித்த 1932-33க்கான ஆண்டு அறிக்கை

அட்டவணை - 1

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுப் பள்ளிகளின் எண்ணிக்கை, இதில் தலித்துகள் அணுகும் பள்ளிகளின் எண்ணிக்கை, சிக்கலின்றி அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன. சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் தலித் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவதில் பெரும் சிக்கல் இருந்திருப்பதனைக் காணமுடிகிறது. மேலும், பொதுப் பள்ளி களின் எண்ணிக்கையிலிருந்து தலித்துகளுக்கு அணுகு உரிமையிருந்த பள்ளிகளின் எண்ணிக்கையினை நோக்கினால் அவை இரண்டுக்குமிடையில் சிறிய இடைவெளியே இருக்கிறது. ஆனால், தலித்துகளுக்கு அணுகு உரிமையிருந்த பள்ளிகளில் அணுகுரிமை கோட்பாட்டளவிலேயே இருந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மொத்தப் பொதுப் பள்ளிகளின் எண்ணிக்கையிலிருந்து தலித்துகள் எளிதாக அணுகமுடிகின்ற பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது. இதிலிருந்து பெரும்பாலான பொதுப் பள்ளிகளி லிருந்து தலித் குழந்தைகள் விலக்கம் செய்யப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. மேலும் 1931-32 மற்றும் 1932--33ஆம் ஆண்டு களில் 1,238 மற்றும் 1,004 பள்ளிகள் முறையே தலித்துகளுக்குப் புழங்கு உரிமையற்ற பகுதிகளிலேயே அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தலித் குழந்தைகள் எந்த அளவிற்குக் கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர் என்பதனை அறிந்துகொள்ள இயலும்.

பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு தலித் குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்கிற சமயங்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது என்று பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்து தலித் குழந்தை களைக் கல்வி கற்பதிலிருந்து விலக்கியிருக்கிறது. சேலம் வட்டாட்சியிலிருந்த ராக்கிப்பட்டி மற்றும் எட்டி மாணிக்கம் பட்டி, சங்ககிரி வட்டாட்சியிலிருந்த வட்டாட்சி வாரியப் பள்ளி போன்றவற்றில் தலித் மாணவர்களுக்கு நேரடியாகவே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவங்களை இதற்கான உதாரணமாகக் கூறலாம். பள்ளிப் படிப்பினை முடித்துவிட்டு உயர்கல்வி கற்கச் சென்ற ஒருசில தலித்துகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டி ருக்கிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளிங்கிரி என்ற தலித் ஒருவர் கோயம்புத்தூர் அரசு கல்லூரிக்கு விண்ணப்பித்த பொழுது அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. பல்வேறு போராட் டங்களுக்குப் பின்னரே வெள்ளிங்கிரிக்கு அக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. தலித்துகளின் போராட்டங்களுக்குப் பின்னர் தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் அனுமதிக்கப் பட்டிருந்த போதிலும் அவர்கள் அங்கு வேறு வடிவங்களில் கல்வி கற்பதிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.

தலித் குழந்தைகள் சேர்க்கப்பட்ட காரணத்தினால் சாதி இந்துக் குழந்தைகள் அப்பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறி விடுதலென் பது விலக்குதலின் ஒரு வடிவம். சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்னர மேல்நிலை தொடக்கப் பள்ளியில் தலித் மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் அப்பள்ளியில் 20 ஏப்ரல் 1933இல் 183ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 24ஆக குறைந்துவிட்டது. தலித் குழந்தைகள் சேர்க்கப்படும் பள்ளிகளில் நாங்கள் எங்கள் குழந்தைகளைப் படிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்ற சாதி இந்துக்களின் நிலைப்பாடு தலித் குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கலையே உருவாக்கியது. இச்சிக்கலைத் தீர்ப்பதற்குத் தலித் குழந்தைகளுக்கென ஒரே வகுப்பில் தனி இருக்கைமுறை மற்றும் ஒரே பள்ளி வளாகத் திலேயே தனி வகுப்புமுறை செயல்படுத்தப்பட்டது. தலித் குழந்தைகள் அனுபவித்த சமூக விலக்கத்தின் மற்றொரு வடிவமானது தலித் குழந்தைகளுக்குச் சாதி இந்து ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு மறுத்ததும், தலித் ஆசிரியர்கள் பொதுப் பள்ளியில் நியமிக்கப்படுவதை சாதி இந்துக்கள் எதிர்த்ததனையும் குறிப்பிடலாம். இவை இரண்டும் கல்வி கற்றல் மற்றும் கற்றுக் கொடுத்தல் என்ற செயல்பாட்டிலிருந்து தலித்துகளை விலக்குவதையே அடிப்படை இலக்காகக் கொண்டிருக்கிறது.

வறுமை மற்றும் அச்சம்

வறுமையில் உழலும் நிலை, தலித்துகள் அவர்களின் குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்பவது குறித்து சிந்திப்பதற்குக்கூட இடம் தருவதில்லை. சாதி இந்துக்களின் ஆடு மாடுகளை மேய்த்தல், சாணம் சேகரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் தலித் குழந்தைகளுக்கு இருந்திருக்கிறது. அவ்வாறு அனுப்பாவிட்டாலும் சாதி இந்துக்களால் அச்சுறுத்தப்படுவோம் என்ற ‘பயம்’ தலித்துகளுக்கு இருக்கின்ற காரணத்தால் அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு வதில்லை என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் தலித் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று தலித்துகள் அச்சுறுத்தப்பட்டனர். தலித் குழந்தைகள் கல்வி கற்பதனால் தங்களின் விவசாய வேலைக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்வதற்குக் குறிப்பாக மாடு மேய்ச்சலுக்கு ஆட்கள் இல்லாது போகிவிடும் என்பதால் சாதி இந்துக்கள் தலித் குழந்தைகள் கல்வி கற்பதனை எதிர்த்திருக்கின்றனர். இராமநாத புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் சாதி இந்துக்களான கள்ளர்கள் தலித் குழந்தைகளைப் படிக்கக் கூடாது, அவர்கள் மேய்ச்சல் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றனர்.

இத்தகைய நிகழ்வு பல பகுதிகளிலும் நடந்திருப்பதனை கள ஆய்வின்போது தெரிந்து கொள்ள முடிந்தது. பொதுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதனைச் சாதி இந்துக்கள் விரும்பவில்லை என்ற அச்சத்தின் காரணமாகவும் தலித்துகள் தங்கள் குழந்தைகளைப் பொதுப் பள்ளியிலிருந்து விலக்கிக் கொண்டதாக கல்வித் துறை அதிகாரியின் அறிக்கையிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது. தலித் குழந்தைகள் கல்வி கற்பதிலிருந்து விலக்குவதில் தலித்து களின் வறுமை மற்றும் அச்சம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. சொத்து சேர்த்துக் கொள்ளுதல் கல்வி கற்றல் போன்ற உரிமைகளிலிருந்து விலக்கப்படுகின்ற காரணத்தினாலேயே வறுமையும் இதனோடு அன்றாட வாழ்வைக் கழிப்பதில் இருக்கின்ற சிக்கலிலிருந்தும் தான் அச்சம் உருவாகிறது. எனவே, சமூக விலக்கத்தினால் உருவாகும் வறுமை மற்றும் அச்சம் மீண்டும் தலித்துகளைக் கல்வி கற்பதிலிருந்தும் விலக்கி வைத்துவிடுகிறது. ஒரு தனிநபர் மீது அல்லது குழு மீதான சமூக விலக்கம் ஒரு புள்ளியில் நடைபெறும் பொழுது அது அப்புள்ளியில் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது தொடர்சங்கிலி போல் பல புள்ளிகளிலும் நடைபெறும் என்பதையே இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இணைப்புக்கான செயல்பாடு

மேற்கத்திய கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்டு அது பரவலாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் தலித் குழந்தைகள் தங்களின் பள்ளிகளில் இணைந்து படிப்பதனை விலக்கம் செய்த காலனியாட்சி பின்னர் தங்களின் கொள்கையினை மாற்றிக் கொண்டு அவர்களைக் கல்வி கற்கும் நிகழ்ச்சிப் போக்கில் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்திருக்கிறது. கல்விக் கொள்கையைப் பரிசீலனை செய்வதற்கு 1882ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஹண்டர் ஆணை, ‘‘சர்க்கார் கல்லூரி அல்லது பள்ளியில் எவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்திய அதே சமயம் ‘‘இந்தக் கோட்பாடு போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தியது. காலனியாட்சியின் இக்கொள்கையில் பின்னர் மேலும் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனைக் காணமுடி கிறது. மெட்ராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920 பிரிவு 40 (2) விதி எண். 8 பள்ளிகள் அனைத்து சாதி மற்றும் சமூகத்தினர் புழங்குவதற்கு ஏற்ற இடத்திலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே புழங்கு உரிமையற்ற பகுதிகளில் அமைக்கப் பட்டிருந்த பள்ளிக் கூடங்களைத் தலித்துகள் புழங்குவதற்கு ஏற்ற இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தியிருப்பதனையும் காணமுடிகிறது.

1932 - 33ஆம் ஆண்டு அறிக்கையின்படி புழங்கு உரிமையற்ற பகுதி யிலிருந்த 113 பள்ளிகளும் வாடகைக் கட்டடத்திலிருந்த 98 பள்ளிகளும் தலித்துகளுக்குப் புழங்கு உரிமையுள்ள பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், கட்டடங்களின் பற்றாக்குறையினால் இத்தகைய இடமாற்றம் இயலாத சூழலும் நிலவியிருக்கிறது. தலித் மாணவர்கள் பொதுப் பள்ளிகளில் இணைத்துக் கொள்ளப்படுவதனை ஊக்குவிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அனைத்து நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது, ஆசிரியர்கள் குழந்தைகளிடத்தில் எந்தவித பாகுபாட்டு டனும் நடந்து கொள்வது கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. கோட்பாட்டளவில் தலித்துகளுக்கெனத் தனிப் பள்ளிக்கூடம், தனி வகுப்பறை மற்றும் தனி இருக்கை முறையை எதிர்த்திருக்கிற காலனிய அரசு தலித்துகளுக்கெனச் செயல்பட்டுக் கொண்டிருந்த தனிப் பள்ளிகளைப் பொதுப் பள்ளியோடு இணைத்திருக்கிறது.

மேலும் தலித்துகளுக்கெனப் புதிய தனிப்பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கான அனுமதியையும் மறுத்திருக்கிறது. காலனியாட்சி யின் இத்தகைய கொள்கை நிலைப்பாடு தலித்துகளுக்கு அவர்களின் குழந்தைகளைப் பொதுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கியது. இது தலித்துகளுக்கு அனுகூலமாக இருந்திருப்பினும் காலனியாட்சியின் கொள்கையின் மீது ஒரு விமர்சனக் கண்ணோட்டம் அவசியம். அதாவது, தீண்டாமை என்ற சமூகக் கொடுமையினை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து காலனியாட்சி மேலே கூறப்பட்டி ருக்கின்ற கொள்கை நிலைப்பாட்டினை எடுத்திருக்கவில்லை. மாறாக, அது அநாவசியமான பொருளாதாரச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டே தனிப் பள்ளிக்கூட முறையினை எதிர்த்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விமர்சனம் இருப்பினும் காலனியாட்சி ஏற்படுத்திய அனுகூலமான நிலையினைப் பயன்படுத்திக் கொண்டு தலித் குழந்தைகள் பொதுப் பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்படும் சமயங்களில் தங்கள் குழந்தைகளைப் பொதுப் பள்ளிகளில்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்ட ரீதியாகப் போராடு வதற்கு அக்கொள்கைகள் வித்திட்டன.

பொதுப் பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் இணைக்கப்பட வேண்டும் என்று போராடியதில் குறிப்பிடத்தக்கவர் சென்னை மாகாண அவைக் கான தலித் பிரதிநிதி ஆர். வீரையன். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசப்படும் இந்த ஜனநாயகச் சூழலில் ஆதி-திராவிடர்களுக்கெனத் தனிப்பள்ளி என்ற கொள்கையை அரசாங்கம் ஆதரிக்கிறதா? என்ற கேள்வியைச் சென்னை மாகாண அவையில் எழுப்பினார் ஆர். வீரையன். இக்கேள்விக்குக் கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: தனிப் பள்ளிக்கூடம் சேரி மக்களின் கோரிக்கையினால் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர் ஆணையரின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வரும் பல சேரிகளில் தனிப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குத் தொடக்கக் கல்வி கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் அதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

வீரையன் மீண்டும் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: தனிப் பள்ளி என்பது எப்பொழுதும் ஆதி திராவிடர்களைத் தனியாக வைத்திருப்பதாகப் பொருள் கொள்கிறதா? ஆதிதிராவிட மாணவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் அனுமதி கோரும் பொழுது மட்டும் தனிப்பள்ளி என்ற கருத்து நகராட்சி அவையிடமிருந்து தோன்றுகிறதா? இதற்கு முன்னர் தோன்றவில்லையே ஏன்? தனிப்பள்ளி இல்லாதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கை. ஆனால், ஆதி திராவிடர்கள் தங்களுக்கெனத் தனிப்பள்ளி வேண்டும் என்ற சிறப்புக் கோரிக்கையை முன்வைத்தால் நாங்கள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று கல்வி அமைச்சர் பதிலளித்தார். இதனால் வீரையன் பின்வரும் கேள்வியை எழுப்பினார்: 300 பேர் வசிக்கிற சேரியில் 10 பேர் தனிப்பள்ளி கேட்கிற பொழுது 290பேரின் உணர்வுகளைப் புறக்கணிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? நீங்கள் யாருடைய உணர்விற்கு மதிப்பு கொடுக்க இருக்கிறீர்கள்? 290 பேரின் கோரிக்கையையா? அல்லது 10 பேரின் கோரிக்கையையா?

பொதுப் பள்ளியில் தலித் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும் என்பதற்காக மனு கொடுத்தல் மற்றும் சென்னை மாகாண அவைக்குள் தனிப்பள்ளி முறையை எதிர்த்துக் கேள்வி எழுப்புதல் போன்ற போராட்ட வடிவத்தைக் கைக் கொண்டார் ஆர். வீரையன். இப்போராட்டம் காலனியாட்சியினரை தலித் குழந்தைகள் பொதுப் பள்ளியில் இணைத்துக் கொள்வதற்கு நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. அனைத்து தலித் தலைவர்களும் தலித் குழந்தைகள் பொதுப் பள்ளியில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்திருக்கவில்லை. கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தனிப்பள்ளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களும் இருக்கின்றனர். தலித் தலைவர் சகஜானந்தா சென்னை மாகாண அவையில் இவ்வாறு பேசியிருக்கிறார்: ‘‘ஒவ்வொரு ஜில்லாவிலும் அவசியமாக ஆதிதிராவிடர்களுக்கு ஐஸ்கூல்களேற்படல் வேண்டும். தென்னார்காடு ஜில்லாவில் ஆறுலட்சம் ஆதிதிராவிடர் களிருக்கிறார்கள். ஆறுலட்சம் ஜனங்களிலும் ஸ்கூல் பைனல் படித்தவர் ஒருவருமிலர். இதைவிட எங்கள் துர்ப்பாக்கியத்தைச் சொல்லிக் காட்ட வேண்டாம். இவ்விஷயமாக அரசாங்கத் தாரைக் கேட்டால் எல்லாக் கல்லூரிகளிலும் ஆதிதிராவிட மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். சட்டம் இயற்றப்பட்டிருக் கிறது. உங்களுக்கெனத் தனிக்கல்லூரிகள் வேண்டாமெனக் கூற முயல்கிறார்கள்.

அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம். அந்தச் சட்டத்தை செய்கையில் காண்பது அரிதாகவிருக்கிறது. நாங்களே, வைதீகம் பாராட்டுமிடங்களிலுள்ள கல்விச் சாலைகளுக்குச் சென்று எங்கள் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டால் சட்டத்திற்குப் பயந்து சேர்த்துக் கொள்வார்கள் அல்லது சாக்கு போக்கு சொல்வார்கள். அது விஷயத்தில் அழுத்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டால் பகைமையும் மாணவன் முன்னுக்கு வரமுடியாத கஷ்டங்களும் ஏற்படுகின்றன. பலவித சிக்கல்களிருக்கின்றன. உயர்ந்த வகுப்பின ராகிய வலியுள்ளவர்களிடத்தில் நாங்கள் சென்று சண்டையிட்டுக் கொண்டு உள்ளதையுங் கெடுத்துக் கொள்வதைவிட தனியே விரும்புவது நலமாகும். ஆதித்திராவிட மாணவர்களைச் சேர்ப்பதால் கஷ்டமுண்டாகுமென்று தோன்றும் இடங்களி லெல்லாம் ஆதிதிராவிடர்கட்குத் தனிப்பாடசாலைகள் அமைத்துக் கொடுத்தால் அது எங்கள் சமூகத்திற்குப் பெரிதும் பயன்படும்’’. தலித்துகளுக்கெனத் தனிப்பள்ளிகள் என்ற சகஜானந்தாவின் நிலைப்பாடு அவருடைய சுயவிருப்பத்தினால் உருவாகியிருக்கவில்லை. மாறாகச் சாதி இந்துக்கள் தலித்துகளை விலக்கம் செய்கின்ற காரணத்தினால் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவருடைய உரையிலிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தனிப்பள்ளி என்ற கோரிக்கையின் இலக்கு தலித் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதே. மேலே விவாதித்ததிலிருந்து தலித்துகளைக் கல்வி கற்கும் செயல்பாட்டில் இணைத்துக் கொள்வதற்குக் காலனிய ஆட்சியும் தலித் தலைவர்களும் முயற்சி எடுத்திருக்கின்றனர் என்பது திண்ணம்.

முடிவுரை

மேலே விவாதிக்கப்பட்டதிலிருந்து சில முடிவுகளை இங்கு முன்வைக்கலாம். தலித்துகள் கல்வி கற்பதென்பது மிக எளிதில் நடைபெற்றுவிடவில்லை. அதற்குத் தலித்துகள் பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். காலனியாட்சி தலித்துகளுக்கு அனுகூலமான நிலைப்பாட்டினைக் கொள்கை அளவில் எடுத்திருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தலித்துகள்தான் போராட்டம் நடத்த வேண்டிய சூழலே நிலவியிருக்கிறது. மேலும், தலித்துகள் ஒன்றைப் பெறவேண்டும் என்றால் அவர்கள் பல்வேறு தளங்களிலும் பல கட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருப்பதனை உணர முடிகிறது.

சான்றுகள்

Ambedkar Pechum Ezhuthum, Vol.19 (Tamil), (New Delhi: Ambedkar Foundation, 2000).

Kamat, A.R. Education and Social Change amongst Scheduled Castes and Scheduled Tribes, EPW (August:1981), pp. 1279-1284.

Kusum K Premi, ‘Education for Scheduled Castes: Role of Protective Discrimination in Equalization’, EPW, Vol. IX (November:1974), pp. 1902-1910.

Rush Brook Williams, L.F. India in 1920 (Calcutta: Superintendent of Government Printing, 1921).

Suma Chitnis, ‘Education for Equality: Case of Scheduled Caste in Higher Education’, EPW, Vol. VII (August:1972), pp. 1675-1681.

Madras Legislative Council Debates:

25 March 1924.

26 August 1925, Vol. XXIV

14 December 1925.

04 March 1926, Vol.XXVIII

06 September 1926, Vol. XXXIII

04 March 1927, Vol. XXXIV

24 February 1930, Vol. LII

27 January 1932, Vol. LIX

01 November 1933, Vol. LXVIII

28 November 1938, Vol. VIII

Government Department Files

G.O. No. Law (Education), 06 January 1922.

G.O. No. 797 - 98, (Education), 05 December 1925

G.O. No. 1288 Law (Education), 21 May 1934.

- கோ.இரகுபதி

Pin It