stanley gunasekaran 400நேர்காணல்

உங்களின் இளமைக்காலம், பள்ளிப் பருவம் கல்வி மற்றும் குடும்பச் சூழல் பற்றிச் சொல்லுங்கள். எனது தந்தையார் தங்கமுத்து பொது வாழ்வில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். ஊராட்சி மன்றப் பொறுப்புக்களிலும், பொது உடைமை இயக்கப் பணிகளிலும் மக்கள்- பணியை அயராது செய்தவர். எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே எனது தந்தையார் செய்து வந்த பொதுப்பணிகளும் - எங்கள் இல்லம் நோக்கிப் பிரச்சனைகளோடு வந்தவர்களை வழிகாட்டியாக முன் நின்று எனது தந்தையார் தீர்த்துவைத்த பாங்கினைக் கவனிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்தக் காலத்திய ஐந்தாம் வகுப்புப் படித்த எனது தகப்பனார் எங்கள் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகம் வைத்திருந்தார். அவர் புத்தகம் வாசிப்ப தோடு தினசரிகள் வார மாத இதழ்களையும் தவறாது வாசிப்பவராக இருந்தார்.

எங்களை அதாவது என்னையும் தங்கை மலர்க் கொடி, தம்பி பிரபாகரனையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே எங்கள் ஊரான மாணிக்கம்பாளை யத்தில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவுள்ள ஈரோடு நகரத்தில் கலைமகள் கல்விநிலையத்தில் ஆரம்பக் கல்விக்காகச் சேர்த்தார்.

எங்கள் தந்தையார் கல்வியை மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்வதை முற்றிலும் வெறுத்தார். அவருக்கிருந்த பொது உடைமை இயக்கப் பின்புலமும் கருத்துக் களும் கூட காரணமாக இருக்கலாம். இந்தப் பின்னணியே என்னை இன்றைய நிலைக்கு உயர்த்தக் காரணம் என்றால் - கொஞ்சம் கூட மிகையில்லை.

பள்ளி நாட்களில் நீங்கள் படித்த புத்தகங்கள் - சிந்திக்கவும் செயல்படவும் - தூண்டிய பத்திரிகைகள் பற்றிக் குறிப்பிடுங்கள்

எங்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிப் பத்திரிகையான ஜனசக்தி, இலக்கிய இதழ்களான சாந்தி, தாமரை மற்றும் சோவியத் நாடு, சோவியத் பலகணி ஆகியவைகளும் எங்கள் வீட்டிற்கு இடை வெளி இல்லாமல் தொடர்ந்து வந்து கொண் டிருக்கும். இவை தவிர பொதுவான தினசரி இதழ்களும் பருவ இதழ்களும் வரும். எங்கள் வீட்டில் இரைந்து பரவலாகக் கிடக்கும் பத்திரிகைகள் முதலில்- படம் பார்க்கவும் - எடுத்துப் புரட்டவும் தூண்டின. விண்வெளி வீரர்களான வாலன்டினாவையும், யூரிதுகாரினையும்- விண்வெளி உடையில் சோவியத் பத்திரிகைகளில் பார்த்தது பரவசமூட்டியது. அப்போதைய சோவியத் பத்திரிகைகளின் தாளும், தரமும், படங்களும் நெஞ்சில் ஆழப்பதிந்தன.

இந்தச் சூழலில் நான் ஆரம்பக் கல்விபயின்ற கலைமகள் கல்வி நிலையத்தில் “சத்திய சோதனை” நூலை எல்லா மாணவர்களுக்கும் வழங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் - தொடர்பான வகுப்புக் களையும் நடத்துவார் - எங்கள் அய்யா ஆங்கிலத்திலும் தமிழிலும் தடையின்றி சொற்பொழிவாற்றும் ஆற்றல் கொண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள்- சத்திய சோதனை - புரிந்தும் புரியாமலும் ஐந்தாம் வகுப்பிலேயே அறிமுகமானது.

இந்நிலையில்தான் கலைமகள் கல்வி நிலை யத்துக்கு நேரெதிரில் உள்ள செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். என்னுடைய பின்னாளைய பல செயல்பாடுகளுக்கு அடித்தளமிட்டது இந்தக் கல்விக்கூடம்.

எங்கள் இல்லத்திலேயே முற்போக்கு, அரசியல் இலக்கிய நூல்களை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த எனக்கு ஈரோட்டில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினர்- நடத்திய சிறு சிறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். அந்தச் சமயத்தில்

 “சோவியத் நாட்டில் ஒரு தமிழ் மாணவி” - “புதிய உலகம் புதிய பறவைகள்” போன்ற நூல்களை ஈடுபாட்டுடன் வாசித்தேன். வகுப்பறையில் ஆசிரியர் வகுப்பு நடத்தாத போது “சாந்தி” இதழில் வெளி வந்திருந்த “எழுபத்தியிரண்டினிலே எதிர்பார்த்த தேர்தலின்று எப்படியோ வந்திருச்சிப் பாருங்க” என்று சந்தலயத்துடன் கூடிய கவிதையினை வாசித்துக் கொண்டிருந்ததை வகுப்பாசிரியர் கண்டித்தார். வகுப்பாசிரியரின் கண்டிப்புக்குக் காரணம் இதுவரை தெரியாவிட்டாலும் கவிதை இன்றும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

இளமைக் காலத்தில் நீங்கள் தொடங்கிய அமைப்புக்கள் குறித்துப் பேசுங்கள்

முதன் முதலாக “மாணவர் முன்னேற்றச் சங்கம்” எனும் அமைப்பைத் தொடங்கினோம். காலப்போக்கில் எங்களிடமும் என்னிடமும் ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் “பாரதி மாணவர் மன்றம்” - பாரதி இளைஞர் மன்றம்- பகத்சிங் இளைஞர் மன்றம் ஆக மாறி வளர்ந்தது. இந்த அமைப்புக்களின் தொடர்ச்சியாகவே “அனைத் திந்திய மாணவர் மன்றம்” பின்னர் “அனைத் திந்திய இளைஞர் மன்றம்” என வளர்ந்தோம்.

இளைஞர் பெருமன்ற மாநாடு ஒன்றில் அறந்தை நாராயணன் அவர்கள் பகத்சிங் பற்றி ஆற்றிய உரை ஏற்கனவே பகத்சிங் பேரில் இருந்த பற்றினை வளர்த்தது. அறந்தை “பகத்சிங்” வரலாறை எழுதத் தூண்டினேன். அறந்தை “பகத்சிங்” வரலாறை எழுதியதோடு என்னையும் அந்நூலில் குறிப் பிட்டிருக்கிறார்.

கல்லூரி நாட்களில் உங்களது பணிகள் பற்றி...

எனது கல்லூரிப் பருவம் மறக்கமுடியாத அனுபவங்களைக் கொண்டது. புகுமுக வகுப் பையும் இளங்கலைக் கணித வகுப்பினையும் ஈரோடு இளங்கலைக் கணித வகுப்பினையும் ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் பயின்றேன். இந்த நாட்களில் தான் எனது பொதுவாழ்வுப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டேன். கல்லூரியில் இயங்கிய Planning forum, Social Service League மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகிய அமைப்புக்களில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றினேன். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போன்ற அமைப்புக்களிலும் பணி யாற்றினேன்.

எல்லாவகையிலும் என்னை முழுமை யான சமூக மனிதனாக்கியதில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரிக்குத் தனிப் பங்குண்டு. இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும்போது மாணவர் பேரவைத் தலைவராகவும், அடுத்து மாவட்ட அளவிலான அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவைத் தலை வனாகவும் தேர்வு செய்யப்பட்டேன். இந்த அமைப்புக்களில் முற்போக்குச் சிந்தனைகளை உருவாக்க முயற்சி செய்தேன். இந்த அமைப்பு களால் நானும் என்னால் அமைப்புக்களும் சிறப் படைந்தன.

பள்ளி நாட்களிலேயே கேட்போர் பிணிக்கும் பேசும் தகுதி பெற்றுள்ளீர்கள். தமிழகத்தில் மேடைப் பேச்சுக்கே ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. நீங்கள் யாரையாவது முன் மாதிரியாகக் கொண்டு உள்ளீர்களா?

பள்ளி நாட்களிலிருந்தே எனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டிருகிறேன். கல்லூரி நாட்களில் பேச்சுக்கலையில் எனது தனித்துவத்தைத் தேடத் தொடங்கி எனது பாணியை உருவாக்கிக் கொண்டேன். மேடைப்பேச்சில் சிகரத்தைத் தொட்டுள்ள தா.பாண்டியன், பாமரர்களுக்கும் புரியும் வகையில் பேசிய கே.டி.ஆர். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், இனிய தமிழில் பேசிய அறந்தை - கணீரென்று வெங்கலக்குரலில் பேசிய எத்தனையோ தலைவர்கள் சிந்தனையாளர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன்.

மேலும் காற்றில் கலந்துள்ள பேரோசையாகப் போய்விட்ட ஜீவா, அண்ணா போன்றவர் களின் பேச்சுக்களை வாசித்து அவர் களைப் போலவே எனது பாணியில் தொடர்ந்து பேசுவது எனத் தீர்மானித்துச் சொற்பொழி வாளனாக உள்ளேன். நாடறிந்த நல்ல சொற் பொழிவாளனாக வேண்டும் என்றெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கவில்லை.

என்னுடைய கருத்தை இந்தச் சமூகத்துக்கு தேவையான கருத்தை வரலாற்று வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கருத்தை அறிவியல்பூ ர்வமாக எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்பதே எப்போதும் எனது சொற்பொழிவின் அடிநாதமாக இருக்கும். எப்போதும் சமூக வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் சிந்தனை யினைப் பேசியதில்லை. இம்மாதிரி சமூக வளர்ச்சிக்குத் துணைநிற்கும் 100 இளம் சொற்பொழிவாளர் களைப் பயிற்றுவிக்கும் எண்ணமும் உள்ளது.

மக்கள் சிந்தனைப் பேரவை சரியாக எந்த ஆண்டு தோன்றியது?

மக்கள் சிந்தனைப் பேரவை 1998-இல் தோன்றியது. விரிந்த தளத்துடன் கூடிய பொது மக்களையே களமாக வைத்து ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்ற பொது நோக்குத்தான் மக்கள் சிந்தனைப் பேரவையைத் தோற்றுவித்த காரணம். அவர்களுக்கு இவர்களுக்கு என்று ஏராளமான அமைப்புக்கள் உள்ளன. அவைகளும் தேவைதான். ஆனால் ஒட்டுமொத்தப் பொது மக்களுக்கும் பொதுத் தன்மையோடு பொதுப் பார்வையோடு ஒரு நல்ல அமைப்பு உருவாக்கப் படவேண்டும் என்ற பொதுவான நல்லெண்ணம் தான் மக்கள் சிந்தனைப் பேரவை உருவான வரலாறாகும்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் நோக்கம் செயல் பாடுகள். எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகக் கூறுங்கள்...

மக்கள் சிந்தனைப் பேரவை ஒற்றைச் செயல் பாட்டு முறையோடு செயல்படுகிற அமைப்பு அல்ல. மக்கள் சிந்தனைப் பேரவையின் சிறப்பே அதன் பன்முகத்தன்மைதான். இதில் தொழிலாளியும் உண்டு, முதலாளியும் உண்டு. சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் ஒரே பொதுநோக்கோடு இணைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். இது சாதி, மதம், மொழி, இனம் கடந்த அமைப்பு.

இப்படிச் சொல்லும்போது இது ஏதோ அவியல் போல கதம்பம் போல என்று எண்ணக்கூடாது. நல்லது கெட்டது இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற பொதுப் புத்தி பேரவைக்கு இல்லை. மக்கள் நல்வாழ்வுக்கு, சமூக வளர்ச்சிக்கு எது தேவையெனப் பகுத்தறிந்து செயல்படும் அமைப்பு. மக்களின் கருத்தை எதிர்பார்ப்பை மக்கள் பக்கம் நின்று மக்களுக்காகச் செயல்படுகிற அமைப் பாகும். இது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படையான இயக்கமாகும்.

ஒரு சமூகத்தின் சகலவிதமான பரிமாணங் களுடனும் கூடிய வளர்ச்சிக்குக் கல்வி மிக முக்கிய மானது என்பதில் பேரவை மிகுந்த கவனம் செலுத்துகிறது. நீங்கள் பேரவையின் செயல்பாடு களைக் கூர்ந்து பார்த்தீர்களானால் இது தெரியும். பேரவை கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், வாசிப்பு, சமூக சேவை எனப் பல தளங்களில் செயல் படுவதும் அவற்றையெல்லாம் சரிவிகிதமாகக் கலந்த செயல்பாட்டு அமைப்பாக பேரவையின் மையப்புள்ளி இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஏதோ ஈரோட்டோடு நின்றுவிடுகிற இயக்கம் அல்ல பேரவை. இது தமிழகம் மட்டு மல்ல, தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் செயல் படும் மாபெரும் அமைப்பாக மாற வேண்டும்.

அதற்கான முனைப்போடு செயல்படுகிறோம். இன்றில்லாவிட்டால் நாளை, இல்லையேல் நாளை மறுநாள் இந்தக் கனவு நனவாகும். இது ஸ்டாலின் குணசேகரனுடைய அமைப்பல்ல. இது மக்களின் அமைப்பு, மக்களுக்காக, மக்களின் அறிவார்ந்த, பொருளியல் சார்ந்த, சமூகம் சார்ந்த எல்லா வற்றிற்கும் சிந்தித்துச் செயல்படும் அமைப்பாகும். சமூக நீரோட்டத்தில் ஓயாது இயங்கிவரும் இந்த அமைப்பின் இப்போதைய முன்னணிச் செயல் பாட்டாளன் என்ற பொறுப்பில் மட்டுமே நான் உள்ளேன்.

சற்றேறக்குறைய முப்பதாண்டுகளாகப் பொது வாழ்வில் இருக்கிறீர்கள். வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்ட நீங்கள் அந்தப் பணியினையும் செய்யவில்லை. அரசியல் பேரவை எனப் பொது வான மாமூலான வாழ்க்கைப் பணியில் இருந்து விலகிக் கொண்டுள்ளீர்கள். இவைகளை உங்களது குடும்பத்தினர் எவ்வாறு பார்க்கிறார்கள்?

எனது துணைவியார் புவனா, மகன் அரவிந்த பாரதி மகள் நிவேதிதா எல்லோரும் எனது கருத்துக் களைப் புரிந்துகொண்டு உடன் பயணிப்பவர்கள் எனது குடும்பத்தினர் எல்லா நாட்களிலும் தவறாது புத்தகத் திருவிழாவில் பங்கேற்பார்கள். அரவிந்த்

பாரதி பேரவையின் தன்னார்வத் தொண்டராகச் செயல்படுபவர். என்னையும், எனது கருத்துக்கள் செயல்பாடுகள் எல்லாவற்றையும் குடும்பத்தினர் புரிந்துகொண்டு- என்னை என் வழியில் இயங்க ஊக்கப்படுத்துகிறார்கள். எத்தனையோ இன்னல்கள்- இடர்பாடுகள் வந்தாலும் எல்லாவற்றையும் எதிர் கொண்டு பணியாற்ற முடிகிறது. என்னுடைய பணிகளின் பின்னணியில் எனது குடும்பமும் உள்ளது. இது எல்லோருக்கும் அமையாது.

பேரவையின் செயல்பாடுகள் அதிகமாகக் கல்விப் புலம் சார்ந்தே இருப்பதாகத் தெரிகிறது. வேறு தளங்களில் பேரவையைக் கொண்டு செல்ல நடவடிக்கையெடுக்கப்படுமா?

கல்விப் புலங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துவது போலத் தோற்றமளித்தாலும் பேரவை எல்லாத் தரப்பினர் மத்தியிலும் செயல்படுவதில் உறுதியாக உள்ளது. இளைய தலைமுறையினரிடையே பேரவையைக் கொண்டு செல்லக் கல்வி நிலையங் களை அணுகுவது எளிதாக உள்ளது, அவ்வளவு தான். வணிகர்கள், தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்கத் தொகை வழங்கும் திட்டத்தையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

பேரவை அனைத்துத் தரப்பினருக்குமான பொது அமைப்பாகவே செயல் படுகிறது. எதிர்காலத்திலும் அப்படியே. இன்னும் சொல்லப்போனால் கலைஞர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், பெண்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் இப்படிச் சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் செயல்படுகிறவர்களை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்குப் பாடுபடுவதே பேரவையின் நோக்கம். இதற்குரிய வழிகாட்டுதலை யோசனைகளை யார் வேண்டுமானாலும் எங்கேயும் எப்போதும் தெரி விக்கலாம். பேரவை வரவேற்கத் தயாராய் உள்ளது.

பேச்சாளர்களை உருவாக்கும் திட்டம் பற்றிக் குறிப் பிட்டீர்கள். அதே போல படைப்பாளிகளை உருவாக்கும்- ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளதா?

பேச்சாளர்களை மட்டுமல்ல. படைப்பாளி களை அதிலும் இளம் படைப்பாளிகளை. அறிவியலாளர்களை அடையாளப்படுத்துவதிலும் ஊக்குவிப்பதிலும் பேரவை அதிகம் கவனம் செலுத்திவருகிறது. படைப்பாளிகளின் நூல்களை நல்ல பதிப்பாளர்கள் மூலம் வெளியிடப் பேரவை ஏற்பாடு செய்துவருகிறது. நல்ல படைப்பாளர் களைப் பாராட்டவும் பேரவை செயல்படுகிறது. கணிதமேதை இராமானுஜரையும் பேரவை கொண்டாடியது. ஏன் திரைப்படக் கலைஞர் ஞானராஜசேகரனையும் பேரவை பாராட்டியதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஆண்டில் இருந்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

சமூகத்தின் சரிபாதியான மகளிருக்குரிய திட்டங்கள உள்ளதா?

பேரவை பெண் ஆண் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. இருபாலரையும் ஒன்றாகவே பார்க்கிறோம். இருப்பினும் மகளிருக்குரிய திட்டங்கள் ஏதேனும் இருப்பின் யார் வேண்டு மானாலும் சொல்லலாம். பேரவையின் கருத்துக் களோடு முரண்பாடில்லாமல் இருப்பின் நிறை வேற்றக் காத்திருக்கிறோம். மகளிர் கல்லூரிகள் பலவற்றில் பேரவையின் கிளைகள் தொடங்கப் பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

பெண்கள் பங்கேற்பு இல்லாத எவ்விதச் சமூகச் செயல்பாடும் நிறைவடையாது என்பதைப் பேரவை உறுதியாக எண்ணுகிறது. பேரவை இந்த ஆண்டு நடத்திய மாநிலம் தமுவிய பேச்சுப்போட்டியில் பெண் களே பாதிக்கும் மேல். முதல் மூன்று பரிசுகளும் மகளிருக்குத்தான். பெண்கள் மேம்பாட்டிற்குரிய திட்டங்களை எதிர்காலத்தில் வடிவமைப்போம். நீங்களும் சொல்லுங்கள்.

எல்லா இடங்களிலும் புத்தகச் சந்தை புத்தகக் கண்காட்சி என்ற பெயரில் நடத்துகிறார்கள். நீங்கள் மட்டும் “ஈரோடு புத்தகத் திருவிழாஎன்று நடத்துகிறீர்களே?

தமிழர்கள் தொன்று தொட்டு இன்றுவரை விழாக் கொண்டாடுவதில் நிகரற்றவர்கள். சில வாரக்கணக்காக நடைபெறும் திருவிழாக்கள் ஊர்கள்தோறும் நடைபெறுகிறது. திருவிழாக் களைக் கொண்டாடுவதில் தமிழருக்கிருக்கும் உற்சாகம் நாமறிவோம். எனவே BOOK FAIR – BOOK EXIBITION என்பதைக் காட்டிலும் BOOK FESTIVAL சரியாக இருக்கும் என்றுதான் சந்தை- திருவிழா ஆனது. தேர்த் திருவிழாவுக்காக, மாரியம்மன் பொங்கல் - விழாவுக்காக, கருப்பராயனுக்குக்கிடா வெட்டும் விழாவுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்போரிடையில் ஆண்டுதோறும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் கடந்த பதினோராண்டு களாக ஈரோட்டிலும் - சுற்றுப்புறங்களிலும் வசிப்போர் புத்தகத் திருவிழாவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

சந்தை என்பதில் வணிக நோக்கம் இருக்கும். ஆனால் திருவிழா என்றால் இது நமது விழா என்ற எண்ணம் இருக்கும். எனவே தான் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். கலைஞர்கள், படைப்பாளிகள் ஏன் வாசகர்கள் கூடக் கொண் டாடும் திருவிழாவாக இருக்கிறது. இந்த விழாக் கோலம் ஆண்டுதோறும் - வெவ்வேறு - வடிவங் களில் தொடர வேண்டும். குநளவiஎயட ஆடிடின என்கிறார் களே அப்படியொரு ஆசை எல்லோருக்கும் வர வேண்டும் என்பதாலேயே இந்தப் பெயர்.

புத்தகத் திருவிழா நடத்தத் தூண்டிய காரணங்கள்

சிறு வயதிலிருந்தே எனக்கிருந்த படிக்கும் ஆசை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினர் நடத்தி வந்த சிறு சிறு புத்தகக் காட்சிகள் என்னைப் புத்தகத் திருவிழா நடத்தத் தூண்டியது.

உலக முழுவதிலும் நடைபெற்று வரும் புத்தகக் காட்சிகளுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள் ஆண்டு தோறும் ஃபிரேங்பர்ட்டில் நடைபெறும் சர்வதேசப் புத்தகச் சந்தை தான் சிறப்பானது என்கிறார்களே?

ஃபிரேங்பர்ட் புத்தகக் காட்சியுடன் கல்கத்தா டில்லி ஆகிய நகரங்களில் நடைபெ ற்றுவரும் புத்தகக் காட்சிகளையும் சொல்லலாம்.

 ஃபிரேங்பர்ட்டில் வாசகர்களைவிடப் பதிப் பாளர்கள், படைப்பாளர்கள் மொழியாக்கம் செய்பவர்களே அதிகமாகக் கலந்து கொள் வார்கள். வாசகர்கள் அதிகம் வருவதில்லை. இருப் பினும் சர்வதேச அளவில் வெளியாகும் நூல் களை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பாகும்.

டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மதுரை போன்ற புத்தகக் காட்சிகளில் இருந்து ஈரோடு புத்தகத் திருவிழாவினைச் சிறப்பாகச் செய்ய என்ன செய்திருக்கிறீர்கள்? இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்?

ஈரோடு புத்தகத் திருவிழாவை எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்திட ஏராளமான திட்டங்கள் உள்ளன. தேசியத் தரத்தோடு மாநில அளவிலான திருவிழாவாக நடத்த வேண்டும் என்பதே பேரவையின் திட்டம். எந்த நாட்டில் - எந்த மொழியில் வெளியாகியுள்ள புத்தகமானாலும் அது ஈரோடு புத்தகத் திருவிழாவில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வாசிப்பே சுவாசிப்பாக இருக்க வேண்டும் என்ற பேரவையின் கொள்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்களை - மாணவர் களை திரட்டி மராத்தான் ஓட்ட நிகழ்வொன்றை நடத்தினோம். இளைஞர்களை - மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் எல்லோரும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை நடத்தினோம். நூல் ஆர்வலர் திட்டம், சிறிய அலமாரி வழங்கும் திட்டம், தொழிலாளர்களுக்கு - அவர்களது நிருவாகம் நூல் வாங்கத் தொகை யளிக்கும் திட்டம், உண்டியல் திட்டம் - இப்படி யான திட்டங்களோடு தொடர்ந்து பயணிக்கிறோம்.

மக்கள் சிந்தனைப் பேரவை புத்தகத் திருவிழா மட்டும் நடத்துவதில்லை - நல்லாசிரியர்கள் - படைப்பாளிகள் கலைஞர்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறீர்கள் - பாரதி விருது வழங்குகிறீர்கள். திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் கூட வசூலிப்ப தில்லை - எல்லடிச் சமாளிக்கிறீர்கள்?

நிதிச்சுமையைப் பொறுத்தமட்டில் பேரவை என்றும் நித்திய கண்டம் பூரண ஆயுள்தான். திருவிழாவில் புத்தக அரங்குகளுக்கு வசூலிக்கப் படும் தொகைகூட மற்ற இடங்களில் உள்ள தொகையினைவிடக் குறைவானதே. இந்த வருமானம் ஆண்டுச் செலவில் 35 சதம்தான். மீதி 65 சதம் தொகையினை பொது மக்களிடம், கல்வி நிறுவனங்களிடம், தொழில் முனைவோரிடம் பெறுகிறோம். அது கூட பேரவையின் கொள்கை களோடு ஒத்துப் போகிறவர்களிடம் மட்டுமே உரிமையோடு கேட்டுப் பெறுகிறோம்.

மத்திய அரசு நிறுவனமான “நேசனல் புக் டிரஸ்ட்” நிறுவனத்தினர்கூட அரசுக்குச் சொந்த மான “பிரகிதி தான் மைதான்” என்னும் இடத்தில் நுழைவுக் கட்டணம் நபருக்கு ரூபாய் 20/- வசூலித்துக்கொண்டே நடத்துகிறது. சில இடங் களில் புத்தகச் சந்தைகளில் பங்குபெறும் பதிப் பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடம் - அரங்க வாடகை தவிர விற்பனையில் குறிப்பிட்ட அளவு தொகை வசூலிக்கப்படுகிறது. இங்கு இந்த நடைமுறைகள் இல்லை.

 மாறாக பதிப்பாளர்கள் - புத்தக விற்பனையாளர்கள் தங்குவதற்கும், விழா நாட்களில் பதிப்பாளர்கள் படைப்பாளிகள் தங்களது நூல்களை வெளியிட இடங்களையும் பேவை - சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து தருகிறது. ஆனால் பேரவை இன்று வரை எல்லா இந்தியக் குடிமகன் போலவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த போதிலும் நம்பிக்கையோடு செயல்படுகிறோம்.

இறுதியாக ஒரு கேள்வி, சற்றேறக்குறைய கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழக அரசியல் பண் பாட்டுச் சூழலில் இயங்கி வருகிறீர்கள். மக்கள் சிந்தனைப் பேரவையையும் இடைவிடாது தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். இந்தப் பணியிலிருந்து ஏன் ஒதுங்கிக்கொண்டு சராசரி மனிதனாக இருந்து விடலாம் என்ற எண்ணம் எப்போதாவது ஏற்பட்ட துண்டா?

இப்படியான சோர்வு, தளர்வு, நம்பிக்கை யின்மை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. எத்தனையோ நேரங்களில் பேரவையை நடத்து வதில் சிக்கல்களும் சிரமங்களும் நேர்ந்த சமயங் களில் ஈரோடு வாழ் மக்கள் பேரவையின் வளர்ச்சி கருதி என்பேரில் காட்டிய அன்பும் பரிவும் கரிசனமும் என்னை எப்போதும் நிலைகுலைய வைக்க வில்லை. “அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம்” என்ற பாரதியின் வார்த்தைகளோடு தொடர்ந்து பயணிக்கிறோம்.

-இடதுசமூக, அரசியல் பண்பாட்டுக் காலாண்டிதழின் பொறுப்பாசிரியர் ஓடை.பொ.துரைஅரசன் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்.

Pin It