தமிழ் பேசும் மக்கள் உலகெங்கும் நிறைந்து வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறை நிலம் சார்ந்து மாறுபடுகின்றது. அவ்விதமாக நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பதிவாக மலர்ந்துள்ள “ஒரு நெய்தல் நிலத்தின் கதை” பலகாலமாக ஏகாதிபத்திய ஒடுக்குதலின் ஒரு அங்கமாக விளங்கும் நவீன முதலாளிமார்களின் கொடுமைதனை உலகப்பதிவாக ஈழவாழ் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் உறவுமுறைகளின் பின்னல் களின் கோலமாக நமக்கு வரைந்து காட்டுகிறது.

kandasamy_muthuraja_450நாவலாக மலர்ச்சி பெற்றுள்ள இக்கதை பல வாழ்வியல் நியதிகளின் நிகழ்கால தரிசனத்தைப் பதிவேற்றுகிறது. ஆசிரியர் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் அவர் தம்மின் கடந்த வாழ்வின் எச்சங்களின் பதிவுகள் நாவல் முழுவதுமாக விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.

காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவேற்ற உலகெங்கும் தோழர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்களின் வரிசையில் கந்தசாமி முத்துராஜாவும் இந்த நெடுந்தொடர் உலா மூலம் இடம்பிடிக்கிறார். இன்னும் சொல்லப் போனால், அவர்களின் வாழ்வுப் பின்னலை உடன் இருந்து ஒரு தேர்ந்த கதை சொல்லியாக நம் மனக்கண்முன் நடமாட விடுகிறார்.

சம்மட்டியார்களின் வாழ்வுதனைப் பாங்குறவே விவரம் சொல்லி விளங்கிடச் செய்கிறார், சுப்பைய்யா சம்மட்டியார். அவர் வளர்ச்சி, அவர் துரோகம் செய்யப்பட்டு வீழ்தல் ஆகியவை நன்கு செதுக்கப் பட்டுள்ளன. கரைவலை உழைப்பாளி சுப்பையா சம்மட்டியார் (இவரும் ஒரு சம்மட்டியாக பரிணாம வளர்ச்சி பெறுகிறார்) அழ, நாமும் அழுகிறோம். மற்றொருவர் செல்லையா சம்மட்டி என்று சம்மட்டியார்களின் கதைகளின் சோகம் / உயரம்/தாழ்வு யாவும் தெளிவுறவே நமக்குச் சொல்லி உளம் பிடிக்கிறார்.

ஆனந்தனை விரும்பும் மாலா, மாலாவிற்குத் தூதாகச் செயல்படும் சீதா டீச்சர், மாலாவின் மரணம், ஆனந்தன் தோல்வி அடைதல், இவை நேர்த்தியாக வேகமுடன் சொல்லப்பட்டு உள்ளன. வைரமுத்து சம்மட்டியின் ஒரே மகனான ஆனந்தன் அரைப் பைத்தியமாக மாறிவிடுதல் நம் நெஞ்சினைச் சுடுகின்ற காட்சி ஆகும்.

மேலும் சம்மட்டியார்கள் தொழிலாளர்களை நடத்தும் முறையும் வாழ்வும், தாழ்வும் செம்மை யுறவே சொல்லப்படுகின்றன. சோகம் கொப்பளிக்கும், ஒப்பாரிப் பாடல்கள் நம் நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றன. நாம் விம்முகிறோம். வேதனை பொங்கி மனம் துயர் உறுகிறது.

என்ர அய்யா... என்ர சீதேவி... என்ர செல்வம்... என்ர பவுண் குஞ்சு... என்ர மஹராசா... எங்கட தெய்வமே... எங்கட அர்ச்சுனா... எங்கட கடவுளெ... என்று கோவிலார் மகன் உட்பட இறந்தோரைச் சொல்லி அழும் சனங்கள், உலகெங்கும் சோகப் பரவலை எப்போதும் உலகம் பாமர சனங்களின் வாழ்வின் ஊடுருவல் ஆகவே அமைத்து உள்ளது நமக்குப் புரிகிறது.

நாவல் பழைய ஈழக் கடலாடிகளின் வாழ்வு, தொன்மங்கள், உறவுமுறைகள், வாழ்வியல் நெறி களை நமக்குக் கண்ணாடி போல் புரிய வைக்கின்றது. நமக்கு (தமிழ் நாட்டில்) புதிய முறை பேச்சு மொழி களைப் புரிய வைக்கிறது. புலம் பெயர்ந்தாலும் மனிதர்கள் மனித நேயத்தை, வாழ்வியல் கூறுகளை மறப்பதில்லை என்ற உண்மைதனை இந்த நாவல் உலகிற்கு உணர்த்திடுவதால் இது சரித்திர ஆவணம் ஆகும் என்பதில் வியப்பில்லை.

தரமான நூல்களைத் தெரிவு செய்து வெளியிடும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் மற்றுமொரு மனிதநேயப்படைப்பு.

ஒரு நெய்தல் நிலத்தின் கதை

ஆசிரியர் : கந்தசாமி முத்துராஜா

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.170/-

Pin It