ஒரு நாட்டின் வளர்ச்சியை விருப்பு வெறுப்புக்களுடன் பகுப்பாய்வு செய்து மதிப்பீடுகளை முன் வைக்கும் போக்கு உலக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. இயல்பான மனித சமுதாய வளர்ச்சியைப் பகுப்பாய்வு செய்து மதிப்பீடுகளை உருவாக்கி விரிவான தளத்தில் அதைப் புரிந்து கொள்ளுவதற்கான வாய்ப்புகளை கல்விக் கூடங்களோ, ஊடகங்களோ உருவாக்குவதில்லை. அதனால் தாறுமாறான பல வகைக் கண்ணோட்டங்கள் வளர்ந்து குழப்பங்களும், வேறுபாடுகளும், பகைமையும் மக்களிடையே பரவலாகின்றன. மனித சமுதாய வரலாற்றின் வளர்ச்சியை சமூக இயங்கியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மதிப்பீடுகளை உருவாக்கி நடைமுறைக்கு உகந்த வகையில் அவற்றைப் பயன்படுத்துவதே முறையான போக்காக அமையும். இதைப் புலப்படுத்தத் தகுந்த ஓர் ஆதாரமாக அமைந்திருப்பது அமிர் ஹைதர்கான் அவர்களின் “தென்னிந்தியாவைக் கண்டேன்.” இது முற்றிலும் மாறுபட்ட தன் வரலாற்று நூல். இந்தியாவின் விடுதலைப் போரில் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கைப் போராட்டத்தை அதன் பின்னணிகளோடு விளக்கும் ஓர் அருமையான நூலாக இது அமைந்துள்ளது.

ameer_450அமீர் ஹைதர்கான் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் தோன்றி வளர்வதற்கு ஒரு முன்னோடியாக விளங்கியவர். இவருடைய வாழ்க்கையைச் சொல்லும் இந்த நூல் முன்னும் பின்னுமாக எழுதப்பட்டு அதே அடிப்படையில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அமிர்ஹைதர்கானின் பின்பகுதி வாழ்க்கையை “தென்னிந்தியாவைக் கண்டேன்” என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டு நூலின் முன்பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரது முன்பகுதி வாழ்க்கை “தலைமறைவாதலும் மீட்டழைப்பும்” என்ற தலைப்பின் கீழ் இரண்டா வதாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் இந்திய வரலாற்றுப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சமூக மனிதனாக இயங்கிய அமீர் ஹைதர்கானின் அர்த்தம் மிகுந்த வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் சொல்லு கிறது. இந்த நூல் ஆங்கிலத்தில் வடிவமைத்தவர் டாக்டர் அதிகாரி அவர்கள். இயல்பான தமிழ் நடையில் மொழிபெயர்த்து வாசிப்பில் ஆவலைத் தூண்டுபவர் ஆர். பார்த்தசாரதி சிறப்பான முறையில் தகவல்களையும், தகுந்த ஆவணங்களையும் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்துள்ளவர் ஸி.எஸ். சுப்பிர மணியம். அனைவரின் முழுமையான ஈடுபாட்டின் முயற்சியால் மிகச் சிறந்த ஒரு வரலாற்று ஆவண மாக இந்த நூல் தமிழில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

முன்னுரையிலேயே இவரைப் பற்றிய சுருக்க மான அதே சமயத்தில் தெளிவான அறிமுகத்தைச் செய்கிறார் ஸி.எஸ்.சுப்பிரமணியம்: “தோழர் அமீர் ஹைதர்கான் சென்னையில் 1931/32, 34-இல் கட்சி முறையில் பணியாற்றும் ஒரு குழுவை ஏற்படுத்தி அது ஒரு கட்சி அமைப்பாக இயக்கப் பழக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு மூலகர்த்தாவாக இருந்தவர். 1946-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி களுக்குப் பின்னர் 1947-இல் நம் நாடு இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட பின் பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.”

“அங்கே பற்பல இடையூறுகளுக்கும் கஷ்டங் களுக்கும் ஆளானார். அவற்றிற்கிடையிலும் அவர் உயிர்வாழ்ந்து தன்னால் இயன்ற பணியைச் செய்து வந்து கொண்டிருந்தார்.

“சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப் பதில் மூலகர்த்தாவாக இருந்தற்கு முன்னரே அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆனார். அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகளில் அனுபவம் பெற்றவர். பல இடைஞ்சல்களுக்கிடையே தலைமறைவாகப் பணியாற்றுவதில் அனுபவம் பெற்ற தோழர்”

சென்ற நூற்றாண்டில் 20களும் 30களும் மிக மிக முக்கியமானவை.

“கடந்த 1921-ஆம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையில் பரிபூரண சுதந்திரம் நமது லட்சியம் என்ற கருத்து அஹரத் மோஹொனியால் முன்வைக்கப் பட்டது. 1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபையில் பண்டித ஜவஹர்லால் நேரு மீண்டும் அப்பிரச் சினையை முன்வைத்தார். பரிபூரண சுதந்திரத்தை நாடிநின்று போராடத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், சைமன் கமிசன் நியமனம் செய்யப் பட்டது, சுதந்திரப் போராட்ட வேட்கையை மேலும் தீவிரமாக்கியது.”

“அந்தக் கமிசன் 3.2.1928-இல் இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததும், இந்தியாவில் உள்ள இந்தியர்கள் பெரும்பாலோர் மனதில் ஒரு ஆத்திரத்தை ஏற் படுத்தியது. மிதவாதிகள், தீவிரவாதிகள், புரட்சி யாளர்கள் அனைவருமே” அதை எதிர்த்தார்கள். அதன் விளைவாக இந்திய விடுதலைப் போர் மிகுந்த அளவில் தீவிரமடைந்தது.

அந்தக் கால கட்டத்தில் குறிப்பாக 1924-இல் கான்பூர் நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் ‘கான்பூர் போல்ஹிவிக் சதி வழக்கை தொடர்ந்து நடத்தியது. நாட்டிலிருந்த தொழிலாளி வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் அரசியல் அரங்கில் முக்கிய மான பகுதிகளாக வளர்ந்து வந்தனர். 1925 டிசம்பர் மாதத்தில் கான்பூர் நகரில் முதலாவது கம்யூனிஸ்ட் மாநாடு நடத்தப்பட்டது. அங்கே இந்தியாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் பரவலாகத் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் நடை பெற்றன. ‘தென்னிந்திய இரயில்வே ஸ்ட்ரைக்’ போராட்டத்தை தோழர் ம.சிங்காரவேலர் தலைமை யேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற 1929-மார்ச்சு மாதத்தில் இந்தியா முழுவதுமாக 32 பேர்களைக் கைது செய்து அவர்கள் மீது மீரத் சதி வழக்கு ஒன்றை அன்றைய இந்திய அரசாங்கம் நடத்தியது. அந்த வழக்கு 3ஙூ ஆண்டு காலம் நடைபெற்றது. அதில் வாபேர் தண்டிக்கப்பட்டனர். 3 பேர் விடுதலையடைந்தனர். கைதாகாமல் தப்பியவர் அமிர் ஹைதர்கான்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற அவருடைய துன்ப துயரங்கள் நிறைந்த அனுபவங்களின் குறிப் பிடத் தகுந்த தொகுப்பே இந்தச் சொந்த வரலாற்று நூல். இதன் பின்னணியில் இந்தியாவில் நிகழ்ந்த மாறுபட்ட பல அரசியல் போக்குகளை இனம் கண்டு கொள்ள முடிகிறது. அத்துடன் உலக அளவில் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும், உலகத் தொழிலாளர்களின் வாழ்க்கை வளர்ச்சியையும் தெளிவாகக் காணமுடிகிறது. அமிர் ஹைதர்கான் சோவியத் யூனியனுக்குச் சென்று காமிண்டர்னில் தன்னைப் பினைத்துக் கொண்டு இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தை வளர்க்க அரும்பாடுபட்ட அனுபவங்களையும், அவரது அயராத உழைப் பையும், அளவற்ற துணிச்சலையும் இந்த நூல் உணர்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறது.

வாழ்நாளில் பலமுறை கைது செய்யப்பட்டு தென்னிந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப் பட்டார். சித்திரவதைப்படுத்தப்பட்டார். இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பலருடனும் தொடர்பு கொண்டு இயங்கினார். அன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மைத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடன் சிறைக்குள் இருந்து துன்பதுயரங்களை அனுபவித்தார். தொழி லாளர் இயக்கங்களை உருவாக்கினார். குறிப்பாக, இந்தியாவில் கம்யூனிஸ இயக்கத்தைத் தோற்று வித்துப் பரவலாக்கி அதை வளர்த்ததோடு அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாளர்களையும், பாட்டாளிகளையும் ஒருங்கிணைத்துப் போராட வைத்தார். மொழி தெரியாத சூழ்நிலைமைகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட போதிலும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி இளைஞர், மாணவர், தொழிலாளர் இயக்கங்களை அங்கங்கே உருவாக்கினார்.

காமின்டர்னில் தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் கம்யூனிசத்தைத் தோற்றுவித்து வளர்க்கப் பலரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைத்தார். தானே சோவியத் யூனியனில் பணியாற்றிய போது அங்கிருந்த இரஷ்யப் பெண்ணான லோலியா. என்பவரால் நேசிக்கப்பட்டார். ஆனால், திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் கட்சிப்பணி செய்தபோது தன்னுடைய பெயரை ‘சங்கர்’ என்று வைத்துக்கொண்டு தன்னுடைய தலை மறைவு வாழ்க்கையை நடத்தினார். காங்கிரஸ் பேரியக்கத்திலிருந்து விலகி விடுதலைப் போரை நிகழ்த்திய சுபாஷ்சந்திரபோஸ் அவர்களுடன் சிறையில் வாழ்ந்திருக்கிறார். வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருடன் கப்பலில் பயணம் செய்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பலவகையான அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் இயக்கத்தைக் கட்டிப் போராட்டக் களங்களில் இறங்கியிருக்கிறார். சிறைக்குள் இருந்தாலும், சமுதாயத்தில் இயங்கினாலும் அமீர் ஹைதர்கான் மனித உரிமைகளுக்காக ஓயாமல் போராடிக் கொண்டிருந்தார். மார்க்ஸிய, லெனினியக் கோட் பாடுகளும் வழிமுறைகளும்தான் மனித குலத்திற்கு முழுமையான விடுதலையை அளிப்பவை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு வாழ்க்கையையே ஒரு போராட்டக்களமாக அமைத்துக் கொண்டு தொடர்ந்து இயங்கினார். அவர் தன்னைப்பற்றி இப்படிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்:

“ஒருநாள் நான் இராஜமகேந்திரபுரம் சிறையில் இரும்புக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன். மேலாளர் வந்தார். அவர் என்னிடம் சலிப்படைந் தவர். என் தொல்லைகளை அவரால் தாங்க முடிய வில்லை. கையில் தட்டச்சுப் பொறி இருந்தது. “நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சில வாக்கியங்கள் எழுதுகிறேன். நீர் கையொப்ப மிட்டால், உமக்கு விடுதலை கிடைக்கும்,” என்றார். ஹிச்சென் என்பது இவர் பெயர்.

“இயக்கத்துக்குத் தலை முழுகிவிட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதி மொழி அளித்தால் நான் விடுதலை செய்யப்படுவேன் என்பது சென்னை அதிகாரிகள் விடுத்த செய்தி. மேலாளரைப் பார்த்துச் சொன்னேன். “நீரோ ஆங்கிலேயர் நல்ல ஆங்கிலம் எழுதுவீர். ஆனால், எனக்கு அவ்வளவு தெரியாது, என்றாலும் என்னாலான வரை எழுதுகிறேன்.” ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, நான் தொடர்ந்தேன்.

“நான் ஒரு முறைதான் வாழமுடியும். நான் வஞ்சகனாக வாழ மாட்டேன்;” என்றேன். “வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே, சிறையிலன்று. சிறை வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?” என்றார். எனக்கு இவ்வாழ்க்கையே சரியானது. காகிதத்தை வைத்து விட்டு வெளியே போய்விடுங்கள்” என்றேன் இவ்வாறு எழுதினேன்:

“பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ள தென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காக வாவது உரிமை உண்டு. என்னைப் பொருத்தவரை பஞ்சாப், பம்பாய் போல இந்தியாவின் ஒரு பகுதி. எனக்கு வாழ்வதற்கு உரிமை இல்லை என்று இந்திய நிலத்தின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டேன். என் வாழ்க்கையிலிருந்து என்னுடைய செயல்பாடுகளைப் பிரிக்கமுடியாது. நான் வாழும் வரை அவை உடனிருக்கும். ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.”

அதன்பிறகு, சென்னை அரசு, மத்திய இந்த அரசுக்குச் செய்தி அனுப்பியதன் விளைவாக ராஜ மகேந்திரபுரம் சிறையிலிருந்து 1936-ம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்துக்கு அருகிலுள்ள முகாபர்கர் சிறைக்குக் காவல் கைதியாக அனுப்பி வைக்கப் பட்டார்.

புதிய தலைமுறையினர் கவனத்திற்கும், வாசிப் புக்கும் உள்ளாக வேண்டிய இந்நூல் நாட்டுப் பற்றையும், விடுதலைப் போராட்டத்தையும் நினைவு படுத்துகிறது. ‘உலகமயமாதல்’, ‘தாராளமயமாதல்’ போன்ற பொருளாதாரக் கொள்கைகளின் நடை முறை நவீன காலனியாதிக்கத்தைப் படிப்படியாக உருவாக்கி வரும் இந்தக் காலகட்டத்தின் போக்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தூண்டுதலாக இது அமையும். சோசலிசப் பொருளாதாரப் பாதையின் அவசியத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்தும். சந்தைப் பொருளாதாரம் இயற்கை வளங்களையும், சுற்றுப்புறச் சூழ்நிலை களையும், கலாசாரப் பண்பாட்டு வாழ்க்கை முறைகளையும் அடியோடு தகர்க்கும் நடைமுறைகளைப் பற்றிச் சிந்திக்க இதுபோன்ற வாழ்க்கை வரலாறுகள் ஒரு தூண்டுதலாக அமையும்.

தென்னிந்தியாவைக் கண்டேன்

ஆசிரியர் : அமீர் ஹைதர்கான்

மொழிபெயர்ப்பாளர் : ஆர்.பார்த்தசாரதி

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.160.00

Pin It