ஒருவரை அவர் வகித்த பொறுப்புகளின் வழியே அல்லாமல் ஆற்றிய பணிகளைக் கொண்டு மதிப்பிடுவதே சரியாக இருக்கும். அவ்வகையில் தோழர் நந்தலாலா அவர்களை ஒரு தனிப் பேராளுமை என்றே சொல்லத் தோன்றுகிறது. குன்றாண்டார் கோவில் என்கிற சிற்றூரில் பிறந்து தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் அறியப்பட்ட ஒருவராக அவர் வளர்ந்தெழுந்ததன் பின்னே அவரது அளப்பரிய உழைப்பு உள்ளது.
வங்கி ஊழியராக தொழிற்சங்கத்திலும், கலை இலக்கிய ஈடுபாட்டினால் தமுஎகசவிலும் நந்தலாலா ஆற்றிய பணிகள் முன்னுதாரணமானவை. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களிலும் தமுஎகசவை ஒரு வெகுமக்கள் அமைப்பாக உருவாக்கி வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கி அரசியல் செறிவுடன் உரையாற்றும் ஒரு பேச்சாளர் என்கிற சித்திரம் தான் அவரைப் பற்றி முதலில் எனக்கிருந்தது. அந்த சித்திரத்தை மேலும் வண்ணமயமாக்கும் விதமாக தமுஎகச கலை இரவுகளிலும் கருத்தரங்குகளிலும் புத்தக விழாக்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவரது உரைகள் அமைந்தன. வெகுமக்களை ஈர்த்திழுத்து அருகில் வைத்துக் கொண்டு அவர்களிடம் அரசியல் பேச வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
அடுத்தொரு சமயம், இசையில் அவருக்கிருந்த ஆழ்ந்தகன்ற அறிவையும் ஈடுபாட்டையும் உணரமுடிந்தது. கிராமியப் பாடகர்களுக்கான இசைப் பயிற்சி முகாம் ஒன்றை ஒசூரில் நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டபோது அந்த முகாமுக்கான பாடத்திட்டத்தை வகுப்பதிலும் அந்தப் பாடங்களுக்கான ஆசிரியர்களைத் தெரிவுசெய்வதிலும் நந்தலாலா பெரும் பங்காற்றினார். கொரானா பொதுமுடக்கக் காலத்தில் கலை இலக்கியம் பண்பாடு சார்ந்து இணையவழியில் நாங்கள் நடத்திய தொடர் வகுப்புகளின் ஒருபகுதியாக இசைத்தமிழ், தமிழிசை பற்றிய நிகழ்வொன்றில் அவர் ஆற்றிய உரை அவரது இசையறிவுக்குச் சான்றாகும்.
நந்தலாலா தமுஎகசவின் தலைவர்களில் ஒருவர். ஆனால், அவரிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றுவதற்கான முதல் ஊழியராக மாறிச் செயல்படக் கூடியவர். தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மூவாயிரவரைத் திரட்டி நடந்த கல்வி உரிமை மாநாடு, இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழியுரிமை மாநாடு என மாநில நிகழ்வுகள் பலவும் எழுச்சியுடன் நடைபெற்றதில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
அமைப்பு பன்முகத் தன்மையுடையதாய் இருக்க வேண்டும், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களிடையே கலை இலக்கிய ஆர்வம் கொண்டுள்ளவர்களைக் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் கொண்டிருந்தார். தமுஎகச, வானம், களம், புத்தக விழாக்கள் போன்றவற்றின் வழியே இந்த இலக்குகளை அடையும் முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.
வேறுபடும் புள்ளிகளை விவாதத்திற்குரியதாய் வைத்துக் கொண்டு இணைந்து பணியாற்றும் புள்ளிகளைக் கண்டறிந்து வலுப்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் அவசியம் என்கிற புரிதல் அவருக்கிருந்ததாலேயே அவரால் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் சார்ந்த பல்வேறு அமைப்புகளுடனும் உரையாட முடிந்திருக்கிறது. கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, மகஇக பாடகர் கோவன் போன்றோரை தமுஎகச மேடைக்கு முதன்முதலில் அவர் அழைத்து வந்ததற்கும், வள்ளலார் 200, வைக்கம் 100 போன்ற நிகழ்வை நடத்தியதற்கும் இதுவே காரணம்.
உள்ளூர் சமூகத்தில் பணியாற்றுவது, மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெறுவது, ஜாதி, மதம் சார்ந்த வேலைகளுக்கு அவர்கள் ஒதுக்கும் நேரங்களை பகுத்தறிவு, அறிவியல் மனப்பாங்கு, சமூகநீதி, சமத்துவம் சார்ந்த பொதுவேலைகளுக்காக திருப்புவது என்பது ஒரு பண்பாட்டு ஊழியரின் வேலையாக இருக்க வேண்டும் என்பதில் நந்தலாலா உறுதியாக இருந்தார். அதன்பொருட்டு அவர் அடித்தள மக்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் வரை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை தனது நிகழ்ச்சிநிரலுக்காக பணியாற்ற வைத்தார். அவர் திருச்சியின் பல்வேறு இலக்கிய அமைப்புகளுடனும் ஆளுமைகளுடனும் கொண்டிருந்த தொடர்பும்கூட கருத்தியல் ரீதியிலானது தான்.
தனது அத்தனைத் தொடர்புகளையும் செல்வாக்கையும் தமிழ், தமிழர், சமூகநீதி, சமத்துவம் சார்ந்த பணிகளுக்கும், தோழர்களுக்கு உதவுவதற்கும் பயன்படுத்தினார் என்பதனால் தான் அவரது மறைவை, ஒரு நல்லத்தண்ணி கிணறு தூர்ந்து விட்டதற்கு ஒப்பாகக் கருதி தோழர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அவரைப் பற்றி அடுக்கடுக்காய் கிளம்பும் நினைவுகள் அவர் ஒரு நல்லத் தண்ணி ஊற்றாக நமக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
- ஆதவன் தீட்சண்யா