ஒரு நாட்டின் பெருமை என்பது அதன் செழித்திருக்கும் இயற்கை வளத்தையும், தொழில் வளத்தையும், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொள்ளும் மனித வளத்தையும், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் திறம் படைத்த அரசாங்கத்தையும் பொறுத்தது.
இந்தப் பெருமை அச்சு அசலாக நமது இந்திய தேசத்திற்குப் பொருந்தும் என்றாலும், காலங்காலமாக இந்திய தேசத்தின் இப்படிப்பட்ட அறிவார்ந்த முகத்தைத் திரித்து இது ஆன்மீக தேசம் என்பது போன்ற ஒரு போலி முகமூடியை வலிந்து உருவாக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இத்தகைய முயற்சியில் ஈடுபடுவோரிடமே தற்போது ஆட்சியும் அதிகாரமும் குவிக்கப்பட்டிருப்பதன் விளைவு இது ஆன்மீகதேசம் என்பதை, குறிப்பாக இந்துக்களின் தேசம் என்பதை நிர்மாணிப்பதிலேயே முன் சொன்ன அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழின் முன்னணி அறிவியல் எழுத்தாளரும், சிறுவர் இலக்கியத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான ஆசிரியர் ஆயிஷா நடராசன் என்கிற வில்லிலிருந்து புறப்பட்டிருக்கும் "அறிவியல் தேசம் - ஓர் இந்திய அறிவியல் பயணம்" என்கிற அம்பானது இந்திய தேசத்தின் முகத்தின் மீது வலிந்து பூணப்பட்டு வரும் ஆண்மீகதேசம் என்கிற போலி முகமூடியைக் குத்திக் கிழித்திருக்கிறது.
பாரம்பரியச் சின்னங்களாக உள்ள கோவில்களும், பள்ளிவாசல்களும், தேவாலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மத வழிபாட்டு சுதந்திரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய அடிப்படை உரிமை. அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால் இந்திய தேசத்தின் அடையாளமே ஆன்மீகம்தான் என்கிற வகையில் கட்டமைக்கப்பதற்காக காயத்திரி மந்திரம் கேட்டால் கொரோனா குணமாகிவிடும், செல்போன் கதிர்வீச்சை (அது கதிர்வீச்சே அல்லாதபோதும்) மாட்டுச் சாண வட்டை தடுத்து விடும், மாட்டு மூத்திரமே சர்வரோக நிவாரணி என்பவை போன்ற எண்ணற்ற மூடத்தனங்களை கட்டவிழ்த்து விடுவதும் சகிக்க முடியாத செயல்களாக உள்ளன.
அறிவியல் தேசம் என்கிற புத்தகத்தில் ஆன்மீகப் போர்வையில் நடைபெறும் மூடத்தனங்களுக்கு எதிராக விளக்கங்கள் கொடுத்து எந்த இடத்திலும் கருத்தாடாவில்லை.
மாறாக, இந்தியாவின் நீள அகலங்களில் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள ஆக்கங்களை, நிறுவனங்களை, தொழில்களை, விஞ்ஞானிகளை ஒரு வழித் துணைவன் போல விவரிப்பதன் வழியாக அறிவியல் தான் இந்திய தேசத்தின் அடையாளம் என்கிற பேருண்மையை நிறுவுகிறார்.
அதாவது தவறானதைச் சுட்டிக்காட்டாமல், சரியானதின் மீது மட்டும் கவனத்தைக் குவியச் செய்து தவறாக சித்தரிக்கப்பட்டு வரும் பிம்பத்தை உடைத்திருக்கிறார்.
அறிவியல் தேசம் என்ற புத்தகத்தையே டிக்கெட்டாகக் கொண்டு அறிவியல் எக்ஸ்பிரஸில் பயணப்படும் குழந்தைகளுக்கு 15 அத்தியாயங்களிலும் குறையாத அறிவுச் செல்வமும், அறிவியல் அனுபவமும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
சாகிபு, சுல்தான், சிந்து என்ற முதல் மூன்று ரயில் எஞ்சின்கள், கீழடி, மொஹஞ்சதாரோ, ஜந்தர் மந்தர், ஸ்புட்னிக், ஆரியப்பட்டா, சந்திராயன் என்று அடுத்தடுத்த சுவாரசியங்களுக்குக் குறைவில்லாமல் எக்ஸ்பிரஸ் செல்கிறது.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா என்பதை அறிந்த பலருக்கு முதல் ராக்கெட் நைக் அப்பாச்சே என்பது தெரிய வாய்ப்பு குறைவே.
மெட்டல் டிடெக்டரை ரயில்வே ஸ்டேஷன்களில் சர்வசாதாரணமாகக் கடந்து செல்லும் நாம் அது எத்தனை ஆபத்துகளைத் தடுத்து, எத்தனை உயர்களைக் காத்திருக்கிறது என்பதை எத்தனை முறை சிந்தித்திருப்போம்?
விஜயந்தா டாங்கி, வருணாஸ்திரா கடற்கணை, திவ்யதிருஷ்டி ரேடார், பிருத்வி, நாக், அக்னி ஏவுகனைகள், பிஎஸ்எல்வி என்று இந்தியாவின் அறிவியல் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
உலகிலேயே இந்தியா பருத்தி ஆடை உற்பத்தியில் இரண்டாம் இடம். நவீன லேசர் ஆய்வகம் இரண்டு மட்டுமே உலகில் உள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. காமா கதிர்வீச்சு ஆய்வில் இந்தியாவும் ஈடுபடுகிறது.
அனல், நீர், வளி, ஒளி, அணு என்று 5 வகையிலும் மின் உற்பத்தியைச் செய்யக்கூடிய உலகின் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்னும் ஏராளமான புகழ் இந்திய அறிவியல் தேசத்திற்கு உள்ளது எண்ணி எண்ணி மெச்சத் தகுந்தன.
விக்ரம் சாராபாய், மேக்நாத் சாகா, பீர்பால் சகானி, பி.சி.ரே, டி.என்.வாடியா, ஹோமி பாபா, சலீம் அலி, வைனு பாப்பு, விஸ்வேஸ்வரையா, ஜிடி நாயுடு, சுந்தர்லால் பகுகுணா, யஷ்பால், நம்மாழ்வார் போன்ற எண்ணற்ற அறிவியல் மற்றும் சமூக அறிஞர்களை போகிற போக்கில் அவர்களின் சாதனைக் குறிப்புகளுடன் அறிவியல் தேசத்துக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறார். "ரயிலை கார்டுகள் காப்பது போல இந்த தேசத்தைத் தங்கள் அறிவால் காப்பவர்கள் இவர்கள்", என்கிறார் ஆசிரியர்.
இந்திய ரூபாய் நோட்டுகளையும், காசுகளையும் அச்சடிக்கும் அறிவியல் விவரணை மதிப்புமிகுந்தது.
எங்கள் சிட்டுகள் மைய குழந்தைகளிடம் இந்த காசுகளின் பிரிவுகளை எடுத்துக் கூறியதும் அவர்கள் மும்பையின் டைமண்ட், ஹைதராபாத்த்தின் 5ஸ்டார் வடிவ, நொய்டாவின் கருப்புப் புள்ளி உள்ள மற்றும் கொல்கத்தாவின் எதுவுமற்ற காசுகளைப் பிரித்தெடுப்பதை ஒரு விளையாட்டாகவே மாற்றி நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி விட்டனர்.
மேலும் மேலும் புத்தகங்களை வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதுவதும், அதிலும் குழந்தைகளுக்காக பெரிய பெரிய விஷயங்களை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதும், ஒரு நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும் கதைப் பாங்கில் கட்டுரைகளை எழுதுவதும் ஆயிஷா நடராசனின் சீரிய பண்பு. இப்புத்தகமும் அதற்கு எவ்வகையிலும் குறைவில்லாத வகையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடிக்கும்படியான சுவாரசியமான புத்தகமாக உள்ளது.
புத்தகத்தின் பெயர்: அறிவியல் தேசம்
ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம்: அறிவியல் வெளியீடு
முதல் பதிப்பு: பிப்.2021
பக்கங்கள்: 128
விலை: ₹100
- மாணிக்க முனிராஜ்