NCBH நிறுவனம் மார்க்ஸ் - ஏங்கல்ஸ் எழுத்துக்களின் தேர்ந்தெடுத்த படைப்பு ஒன்றை 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளதையும், அந்த ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அறிமுக / விளக்க உரையாக முத்துமோகனின் கட்டுரை ஒன்றும் முன்னுரையாக எழுதப்பட்டதையும் தோழர்கள் அறிவார்கள். சென்ற மாதம் முத்துமோகனின் இந்த விளக்க உரைகள் மட்டும் ஒரு தனி நூலாகத் தொகுக்கப்பட்டு எனது விரிவான முன்னுரையுடன் அந்த நூல் வெளி வந்தது (படைப்பின் அற்புதத் தருணங்கள், பக். 232).

na muthumohan book on marxஅந்த நூலை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

ஒன்று

(i): கார்ல் மார்க்ஸ் அடிப்படையில் ஒரு தத்துவச் செயல்பாட்டாளர். (Political scientist). அரசியல்வாதி, கோட்பாட்டாளர், ஏராளமாக எழுதிக் குவித்தவர். சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சியின் பின்புலத்தில் மார்க்சியம் பொருளற்றுப் போனதாக சாமுவேல் ஹட்டிங்டன் போன்ற வலதுசாரி எழுத்தாளர்களால் முன்மொழியப்பட்டன. “இனி வர்க்கப் போராட்டம் என்பதற்குப் பொருள் இல்லை” என்கிற கருத்தும் வலுவாக முன்வைக்கப்பட்டது.

இப்படியான முதலாளித்துவப் பிரச்சாரம் ஏற்புடையவைதானா? நோபல் பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் போன்ற அறிஞர்கள் தாங்கள் ஒரு காலத்தில் அப்படிச் சொன்னதை இன்று அவர்களே மருத்துள்ளனர். இன்று உலக அளவில் கோவிட் 19 தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகளாக இன்றளவும் ஓரளவு மார்க்சியப் பொருளாதாரத்தை முற்றிலும் உதறித்தள்ளாத சீனா, ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா முதலான நாடுகளே குறிப்பிடப் படுகின்றன. கோவிட் தாக்குதலை குறிப்பிடத்தக்க வகையில் ஒப்பீட்டளவில் அவைதாம் வெற்றிகொண்டன.

மார்க்சின் எழுத்துக்களை ஒரு தத்துவவியலாளர் எழுதிய பொருளாதார ஆய்வு எனலாம். அவற்றை முழுமையாக, நுணுக்கங்களுடன் மொழிபெயர்க்கும் அளவிற்கு இங்கே ஆட்களும் இல்லை. கட்சி வகுப்புகளிலும் கூட அவை நுணுக்கமாக விளக்கப்படுவதில்லை. சந்தித்த பிரச்சினைகளும் எல்லா நாடுகளிலும் ஒன்றேபோல இருப்பதில்லை. கால மாறுபாடுகளும் இப்படிப் புரியாமல் போவதில் ஒரு பங்கு வகிக்கின்றன. NCBH இன் இந்த 20 தொகுப்புகளும் இப்படியான பின்னணியில்தான் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் முத்துமோகன் இந்தக் கட்டுரைகளுக்கு எழுதியுள்ள இந்த விளக்கக் கட்டுரைகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.

(II): உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்பது ஓரளவில் இன்றைய சூழலை விளக்கி நின்றாலும் இந்த நாடுகள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் தொடரத்தான் செய்கின்றன. அதே போல மத, இன அடிப்படையிலான வேறுபாடுகளும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒரே நாடுகளுக்குள் உள்ள பெரும்பான்மை X சிறுபான்மை எனும் வேறுபாடுகளும் இன்று நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன.

(III). மார்க்ஸ் எல்லாவற்றையும், அன்று தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் பின்னணியில் மிக நுட்பமாக விளக்குவதை நாம் கவனமாகப் புரிந்து கொள்ளல் அவசியம். உலக இலக்கியங்களையும், உலகச் சூழலையும் ஆழமாக அவர், தனக்கு அன்று கிடைத்த சொற்பமான ஆதாரங்களின் உதவியுடன் விளக்குகிறார். வட இந்தியர்களை ‘இந்துக்கள்’ எனச் சொல்லும் மார்க்ஸ் தென்னிந்தியர்களை அப்படிச் சொல்வதில்லை. அவர்களை அதாவது மராத்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளைப் பேசுவோரை, தக்காணம் பகுதி முதலானவற்றில் வசிப்போரை அவர் வடவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது முதலியவற்றை எல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(iv). சோஷலிசக் கட்டுமானம், புரட்சிக்குப் பிந்திய சமூகம் முதலியன பற்றி, எல்லாம் பேசினாலும் ‘சோஷலிச எதார்த்தவாதம்’ என்றெல்லாம் அவர் பேசியதில்லை. அப்படி ஒரு இலக்கியக் கொள்கையை எல்லாம் கற்பித்துக் குழம்பிப், பின்னர் இப்போது அவற்றைக் கைவிட்டு நிற்பதெல்லாம் அதற்குப் பிந்திய நாம்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. ருஷ்யா முதலான சோஷலிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பின் நாம்தான் ‘சோஷலிச எதார்த்தவாதம்' எனும் இலக்கியக் கொள்கையையும். ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்' எனும் அரசியல் கொள்கையையும் கைவிட்டோம் என்பதை மறந்துவிடல் ஆகாது.

(v) ‘புரட்சிக்குப் பிந்திய சமூகம்’ குறித்த நமது கருத்துக்களை இன்று மார்க்சியர்கள் முற்றாகப் புறக்கணிப்பது கவனத்துக்குரியது. மார்க்சின் நுணுக்கமான பார்வைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. மார்க்ஸ் மிக ஆழமாக உலக இலக்கியங்களைப் படித்தவர் மட்டுமல்ல, அவற்றைத் தன் எழுத்துக்களில் பயன்படுத்தியவர். "முதலாளியம் தன் சாயலிலேயே உலகத்தைப் படைக்கிறது" என்றார் மார்க்ஸ். அது பைபிளில் இருந்து எடுத்துக் கொண்ட ஒரு கோட்பாட்டை விமர்சன நோக்கில் முதலாளியத்தை விமர்சிக்கப் பயன்படுத்திய சொல்லாக்கம். “கடவுள் தன் சாயலில் உலகத்தைப் படைத்தார்” எனும் பைபிள் வாசகத்தைத்தான் மார்க்ஸ் அப்படிக் கிண்டலாகப் பயன்படுத்தினார். ஆனால் நாம் அதை அவ்வாறு நுணுக்கமாக எடுத்துக்கொள்ளாமல் முதலாளிய பாணியிலேயே, சொல்லப்போனால் இன்னும் இறுக்கமாக சோஷலிச நாடுகளைக் கட்டமைத்தோம். அதன் விளைவு எப்படி ஆனது என்பதை இப்போது நாம் விளங்கிக் கொள்கிறோம். சோஷலிச நாடுகள் உண்மையான சோசலிஷச் சமூகங்களாக அமையவில்லை. மக்களால் அவை தூக்கி எறியப்பட்டதை நாம் 1980களில் கண்முன் கண்டோம்.

(vi). "பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம்" - என நாம் முன்வைத்த கருத்தாக்கம் எப்படி ஒரு சோஷலிச நாட்டுக்குப் பொருத்தமாக இருக்க இயலும்? சர்வாதிகாரம் என்றால் அது சர்வாதிகாரம்தானே. அதைப் பாட்டாளிவர்க்கம் செய்தால் என்ன? முதலாளிவர்க்கம் செய்தால் என்ன? ருஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்பட்ட நாடுகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் பொலபொலவென வீழ்ந்ததை நாம் இப்படிப் பார்ப்பது அவசியம். சுருங்கச் சொல்வதானால் "பாட்டாளிவர்கச் சர்வாதிகாரம்", "சோஷலிச எதார்த்தவாதம், முதலியன" மார்க்சியம் அல்ல.

இரண்டு

(i).மனிதனின் தேவைகள் வெறும் பசி ஆறுவது மற்றும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது ஆகியவற்றோடு முடிவடைவதில்லை. சுரண்டல் அநீதியானது எனச் சொல்வதோடும் அது முடிவடைவது இல்லை. மாறாக சுரண்டல் என்பது முதலாளியத்தின் தர்க்கபூர்வமான விளைவு என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். ஆக முதலாளியம் அறிவுக்குப் புறம்பானது என்பதே மார்க்சியம்.

(II).புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புகளை முதலாளியம் மக்களுக்குச் சாதமான அறிவியல் வெளிப்பாடுகளாக அது ஏற்பதில்லை. மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாகவும், மூலதனத்தைக் குவித்துக் கொண்டே போகும் வழியாகவும் மட்டுமே அது பார்க்கிறது. ஆனால் அதனால் என்ன பயன்? எந்திரங்கள் நுணுக்கமாகிக் கொண்டே போகின்றன. ஆனால் தொழிலாளிகளின் வேலை நேரம் கூடிக்கொண்டுதானே போகிறது? அதனூடாகச் சுரண்டல் அதிகமாகிக் கொண்டுதானே போகிறது? ‘சுரண்டல்’ அதிகமாவது என்பது தொழிலாளிகள் ஏதுமற்றவர்களாக, எல்லா அதிகாரங்களும் அற்றவர்களாக (precariat) ஆவதற்குத்தானே இட்டுச் செல்கிறது.

(III). நினைவிருக்கட்டும். முதலாளிகளும் இன்று நிம்மதி அற்றவர்களாகவே உள்ளனர். பொருளாதார நெருக்கடிகளை அவர்களால் தவிர்க்க இயலவில்லை. சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டபின் இங்கே (2008 இல்) என்ன நடந்தது. உலகம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியையும், வீழ்ச்சியையும் சந்திக்கவில்லையா?

மூன்று

மார்க்சியம் ஒரு தத்துவப் பாரம்பரியத்தில் முகிழ்த்த ஒன்று. மார்க்ஸ் அடிப்படையில் ஒரு தத்துவ இயலாளர் என்பதை நாம் மறக்கக் கூடாது. மார்க்சியத்தின் மூன்று பரிமாணங்கள்:

(i).ஹெகல் மற்றும் ஃபாயர்பாக்கின் தத்துவார்த்தப் பாரம்பரியத்தில் வந்தவர் மார்க்ஸ்.

(II). மார்க்ஸ் முதலாளியத் தத்துவார்த்தப் பாரம்பரியத்தில் வந்தவர். உழைப்புச் சுரண்டல் குறித்த ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.. ”உபரி மதிப்பு” உருவாக்கம் குறித்த கோட்பாட்டை உருவாக்கியவர் அவர். ஒன்றுமே இல்லாமல் முதலாளிக்கு லாபம் எப்படி வருகிறது: போட்ட முதல் முழுமையாக முதலாளிக்குக் கிடைத்துவிடுகிறது. பின் எப்படி அவனுக்கு லாபம் உருவாகிறது. தொழிலாளியின் உழைப்பிற்கு முழுமையான ஊதியம் கொடுக்கப் படுவதில்லை. கொடுக்கும் ஊதியத்தைக் காட்டிலும் உபரி உழைப்பை அவன் அளிக்கிறான். அதுவே முதலாளியில் லாபமாகத் திரள்கிறது.

(III). மார்க்ஸ் ஒரு அரசியல்வாதி. பாட்டளி வர்க்க அரசியல்வாதி.

ஹெகல், ஃபாயர்பாக் எனும் இரு தத்துவவியலாளர்களின் பாரம்பரியத்தில் வந்தவர் மார்க்ஸ் என்றாலும் இந்த இருவரின் தத்துவங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல. ஹெகலின் தத்துவம் இரு கூறுகளைக் கொண்டது. அவர் கருத்துமுதல்வாதி. கடவுளின் இருப்பை ஏற்பவர். மார்க்ஸ் அதை ஏற்பதில்லை. ஆனால் ஹெகல் ஒரு இயங்கியல்வாதி. எல்லாம் மாறிக்கொண்டும், இயக்கத்திலும் உள்ளது என்பது அவர் கருத்து. மார்க்ஸ் அதை ஏற்கிறார். “பழையன கழிதலும், புதியன புகுதலும் வலுவலகால வகையினானே “ என்பது செய்யுள்.

நவீன காலம் என்பது மதத்தின் பிடியிலிருந்து அனைத்தையும் விடுதலை செய்தது. நியூட்டன் முதலானோரின் விஞ்ஞான வளர்ச்சிகளால் ஊக்கப்பட்ட காலம் அது. மதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த பெரும் சிந்தனைக் கிளர்ச்சி ஒன்று மேற்குலகில் அப்போது ஏற்பட்டது. மிகக் கடுமையான விமர்சனங்கள் மதத்தின் மீது, குறிப்பாக மேலைச்சூழலில் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்டன. அப்படியானவர்களில் ஒருவர்தான் மார்க்சின் ஆளுமை உருவாக்கத்தில் இடம் பெற்ற இந்த இன்னொரு முக்கிய தத்துவவியலாளரான ஃபாயர்பாக்.

"மனிதனின் ஆக உன்னதமான உணர்வான 'உண்மை' குறித்த உணர்நிலையை மதம் விஷம் ஊட்டி அழிக்கிறது"; எனவும் "மதம் என்பது மனித மனத்தின் (வெற்றுக்) கனவு; இன்றைய யுகத்தில் மாயைகளே புனிதமாகப் போற்றப்படுகின்றன, உண்மைகள் அற்பமாக அலட்சியம் செய்யப்படுகின்றன." எனவும்- மதத்தைக் கடுமையாகச் சாடியவர் அவர். அவரைப் பொருத்தமட்டில் எல்லாவிதமான மத வெளிப்பாடுகளும் நிறைவேற்றப்படாத மனித ஏக்கங்களின் கருத்துருவாக்கப்பட்ட பிம்பங்கள்தான்; கடவுள் என்னும் மாயைதான்.

ஹெகலைப்போல் அல்லாமல் ஃபாயர்பாக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது..

ஹெகல், ஃபாயர்பாக் என்கிற சமகால இரு முக்கிய தத்துவ ஆளுமைகளால் உந்தப்பட்டவர்தான் மார்க்ஸ் எனில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு என்பது என்ன?

மார்க்ஸ் இந்த இரு மகத்தான சிந்தனையாளர்களாலும் ஊக்கப்பட்டவர்தானே ஒழிய அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர் அல்ல. இருவரையும் ஏற்றுக்கொண்டார், ஆனால் அப்படியே அல்ல. இருவரையும் ‘தலைகீழாக்கி’ ஏற்றுக்கொண்டார் என்பர். அவர்களின் கருத்துக்களைக் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களுடன் பொருத்தினார். ஹெகலின் கருத்துமுதல்வாதமும், ஃபாயர்பாக் முன்வைத்த கருத்துக்களை முதன்மைப்படுத்தாத அணுகல்முறையும்- இரண்டுமே ஓரம்சத்தில் இணைந்துபோவதை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். தூலமான சமூக நிலைகளை, அதாவது வரலாற்றை அவை இரண்டுமே புறக்கணிப்பதுதான் அது. சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள ஹெகலின் சிந்தனை ஒரு சிறந்த கருவிதான். ஆனால் இந்த மாற்றங்கள் என்பன சமகாலப் பொருளியல் சூழல்களிலிருந்து உருவாவதை அவர் பார்க்கத் தவறினார். அதை வெறும் ஒரு 'உலக ஆன்மா' அல்லது 'உலக இயக்கு சிந்தனை' என்பதன் வெளிப்பாடு என நிறுத்திக் கொண்டதே ஹெகலின் பிரச்சினை.

அதேபோல ஃபாயர்பாக்கின் மதம் குறித்த விமர்சனமும் தூலமான எதார்த்தங்களின் அடிப்படையில் அமையவில்லை. மனிதன் தன் ஏக்கங்களையும், எதார்த்தத்தில் நிறைவேற்றிக் கொள்ள இயலாத தன் தேவைகளையும் ஆசைகளையும் அவன் மதத்தில் ஏற்றி ஆறுதல் தேடினான் என்றார் ஃபாயர்பாக். அந்த வகையில் கடவுளும் மனிதனும் வேறு வேறல்ல. "கடவுள்தான் மனிதன்; மனிதன்தான் கடவுள்" எனவும் "இறையியல் என்பது வேறொன்றுமில்லை; மானுடவியல்தான் (anthropology) இறையியல்" எனவும் ஃபாயர்பாக் கூறியதன் பொருள் இதுதான். தான் வாழ்வில் சாதிக்க இயலாத அனைத்தையும் மனிதன் கடவுளிடம் ஏற்றி ஆறுதல் கண்டான். "மனிதன் தன் வடிவில் கடவுளைப் படைத்துக் கொண்டான்" என இறையியல் (Theology) சொல்வதன் பொருள் இதுவே. "பாவங்களிலிருந்து" விடுபட இயலாத தன் இயலாமையை அவன் கடவுளின் புனிதத்தன்மையில் ஏற்றி வைத்து ஆறுதல் கண்டான். தனது படைப்பாற்றல் தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை (அந்நியமானதை) அவன் அளவிடற்கரிய படைப்பாற்றல் மிக்கவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் தீர்த்துக் கொண்டான். சமூகத் தீமைகளை அழிக்க இயலாதத் தன் கையாலாகாத்தனத்தை எல்லாத் தீமைகளையும் அழிக்க வல்லவராகக் கடவுளைக் கற்பிப்பதன் மூலம் மறைத்துக் கொண்டான் அல்லது தன் நினைவிலிருந்து ஒளித்துக் கொண்டான்.

1841 ல் The Essence of Christianity எனும் ஃபாயர்பாக்கின் (Feuerbach) நூல் வெளிவந்தது. 'மனிதனின் கையாலாகாத் தன்மையே கடவுளின் பிறப்பிடம்' என அவர் அதில் குறிப்பிட்டார். தான் என்னவாக விரும்பினானோ அவ்வாறே மனிதன் கடவுளைப் படைத்தான். மனிதப் பண்புகளை தெய்வீகமாகக் கட்டமைக்கும்போதே மதம் என்பது உண்மையாகிறது. ‘இறையியல்’ எனும் பெயரில் கடவுளை மனிதரிடமிருந்து வேறுபடுத்திப் பிரிக்கும்போது அது பொய்யாகிறது என்று கூறிய ஃபாயர்பாக் கிறிஸ்தவம் மானுடரின் அரசியல் ஆற்றலை அழிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலைச் சூழலில் அவர் கிறிஸ்தவம் எனக் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு மனிதனின் உண்மையான இருப்பு குறித்த உணர்நிலையை மதம் அழிக்கிறது, அவனது அரசியல் உணர்வை மழுங்கடிக்கிறது என்பதை எல்லாம் ஃபாயர்பாக் மிகச் சரியாக அடையாளம் கண்டாரே ஒழிய அது எவ்வாறு அழிக்கப்பட்டுகிறது, அதன் நோக்கம், பின்னணி, செயல்முறை, அவற்றில் வர்க்கங்களின் பாத்திரம் ஆகியவற்றை அவர் பேசவில்லை என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பின்னணியில்தான் 1848 இல் மார்க்ஸ் - எங்கல்சின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' வெளிவந்தது. "இதுவரை வரலாற்றில் கண்ட சமூகங்களின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" எனும் புகழ்பெற்ற வாசகத்தை அது கொண்டிருந்தது. ஆக, வரலாற்றின் உண்மையான இயக்குவிசை என்பது உண்மையான வர்க்கங்களுக்கிடையே நிகழ்ந்த உண்மையான வர்க்கப் போராட்டங்களின் விளை பொருளே. இந்த உண்மையான வர்க்கப் போராட்டங்கள் உண்மையான வரலாற்று மாற்றங்களுக்குக் காரணமாயின. இந்த வரலாற்றின் ஊடாகப் புதிய வர்க்கங்கள் உருவாயின. இவற்றுக்கிடையே புதிய வர்க்கப் போராட்டங்கள் உருவாயின. எதை அழித்து எது முகிழ்த்ததோ அதை அழித்து அடுத்தது முகிழ்க்கும் என ஹெகல் கூறியதன் பொருள் இதுவே. இப்படிப் புதிதாக உருவான மாற்றங்களின் ஊடாகப் புதிய பார்வைகளும் புதிய சிந்தனைகளும் உருவாகும் என்பது பொருள்.

1871 இல் உருவாகி ஒரு 71 நாட்களில் கருகிப்போன முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி - பாரிஸ் கம்யூன் - குறித்துச் சில சொற்கள் இங்கே பதிவு செய்வது அவசியம். ‘பிரான்சில் உள்நாட்டுப்போர்’ எனும் தலைப்பில் அந்த இருமாத கால கம்யூனிஸ்ட் ஆட்சி குறித்து கார்ல் மார்க்ஸ் அப்போது எழுதினார். “மாபெரும் வரலாற்றுச் சம்பவம் நடந்திருக்கும்போதோ இல்லை அப்போதுதான் முடிவடைந்திருக்கும்போதோ அதன் முக்கியத்துவம், தன்மை, விளைவுகள் ஆகியன குறித்து எழுதியவர் கார்ல் மார்க்ஸ்” - என இது குறித்து எங்கல்ஸ் எழுதியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தொழிற் புரட்சிக்குப் பின், ஒரு நூற்றாண்டுகால தொழிலாளர் இயக்கங்களுக்குப் பின் தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்திய எழுச்சியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வு அது. மார்க்சியத்திற்குள் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில் உருவானது அது.

அன்றைய சூழலை சரியாக விளங்கிக் கொண்டு திட்டவட்டமான வடிவத்துடன் அரசு உருவாக்கப்படவில்லை எனும் விமர்சனமும் அதன்மீது உண்டு. இப்படிப் புரட்சி குறித்து ஆயிரம் ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கிய ஒரு வரலாறு அது.

1949 -50 காலகட்டத்தில் மார்க்சியச் சிந்தனையின் ஊடாக உருப்பெற்றிருந்த திட்டமிட்ட பொருளாதாரம் எனும் கோட்பாடு கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகியது.

கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமின்றி அன்று புதிதாக உருப்பெற்றிருந்த இந்தியா உட்பட ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு ஆளுகை வடிவமாக அன்று உருப்பெற்றிருந்தது அது. அதனூடாக பொருளாதாரத்தின் மீது அரசுக் கட்டுப்பாடுகள் செயல்பட்டன. சந்தைக்கு முழு அதிகாரம் என்கிற கருத்தாக்கம் ஏற்கப்படவில்லை.

ஆனால் இந்நிலை தொடரவில்லை. இந்தச் சூழலில்தான் ஒரு பின்னோக்கிய நகர்வாக திட்டமிட்ட பொருளாதாரம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு சுதந்திரச் சந்தை எனும் கருத்தாக்கம் மேலுக்கு வந்தது. போகப்போக அந்த நிலை உலக அளவில் அதிகமாகி இன்று மிகச் சில நாடுகள் தவிர இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் சுதந்திரச் சந்தை, அதாவது அரசுக் கட்டுப்பாடற்ற முதலாளியம் கோலோச்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாஜகவின் நரேந்திரமோடி ஆட்சி உருவானபோது முதலில் ஒழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனக்களில் ஒன்று ‘திட்ட ஆணையம்’ என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

1980 இல் ஃப்ரான்சிஸ் ஃபகுயாமா போன்றவர்களால் “End of History " என இப்படியான திட்டமிட்ட பொருளாதாரம் என்பதிலிருந்து சுதந்திரச் சந்தை உருப்பெற்ற நிலை கொண்டாடப்பட்டதையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும்.

இந்த நிலையின் ஊடாக உருவாகியுள்ள மாற்றங்களை நான் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கண்முன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளோம். இன்று மோடி அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு எனும் பேச்சில்லை. மையப்படுத்தப்பட்ட அரசு அதிகாரங்கள் அதிகமாகியுள்ளன. தடா, பொடா எதிர்க்கப்பட்டுப் பின்னோக்கித் தள்ளப்பட்ட காலம் போய் இன்று UAPA, AFPSA முதலான கொடுஞ்சட்டங்கள் இந்தியா முழுவதும் நிரந்தரமாகக் கோலோச்சுகின்றன, நிரந்தர வேலை எனும் கருத்தாக்கம் இப்போது அழிவை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. ....

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

1789 ஃப்ரெஞ்சுப் புரட்சி, ஐரோப்பிய நாடுகளில் ‘சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்' முழக்கங்கள் எழுந்தன... நெப்போலியன் வென்றான். பின் அவனும் அழிக்கப்பட்டான். பலவீனமான ஆட்சி, படை எடுப்புகள், தோல்வி முதலான பின்னணியில் பாரிஸ் கம்யூன் வெற்றி. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்.

எல்லாம் ஒரு காலம்...

நிரந்தர இராணுவம் ஒழிப்பு, பொது வாக்கெடுப்புகள் மூலம் கவுன்சிலர்கள் தேர்வு, மக்களுக்குத் திருப்பி அழைக்கும் உரிமை, போலீஸ் என்பது அரசின் கருவி எனும் நிலை நீக்கப்பட்டு, சட்டம் ஒழுங்குக்கு மட்டுமே பொறுப்பாக்கப்படுதல், நிரந்தர இராணுவம் மற்றும் அரசுப் பதவிகள் ஒழிக்கப்படுதல், மலிவான அரசு எனும் நிலை உருவாக்கப்படுதல், கல்வி இலவசம், அரசு அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டு, கம்யூன் அதிகாரம், தொண்டர் படைகள் இப்படி... பணக்காரர்களைத் தவிர பிற எல்லோராலும் ஒரு தொழிலாளிவர்க்க அரசாக ஏற்றுக் கொள்ளப்படல்,

என்ன அற்புதமான மாற்றங்கள்... அந்தச் சின்ன கால இடைவெளியில்!!!

இன்னொருபக்கம் எதிரிகள் கடும் வன்முறைகள், கொலைகள் ஊடாக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி “உழைப்பை அடிமைப்படுத்துவது” அவர்களுக்கு உடனடி முக்கிய திட்டமாக இருந்தது. ஃப்ரெஞ்சுப் படைகள் இராணுவம் என பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் ஒன்றுபட்டது.

இன்னொருபக்கம் புரட்சியாளர்கள் மீது விமர்சனங்களும் இருந்தன. பழைய அரசின் அதிகார வடிவங்கள் தொடர்ந்தது, சோஷலிச மாற்றம் குறித்துத் துல்லியமான வடிவம் திட்டமிடாதது...

இப்படி.. நெருக்கடி வரும்போது பழைய அதிகார வடிவங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை உருவானது...

இவை எல்லாம் இன்று கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு. இறுக்கமான உடனடி பதில்கள் ஏதும் எனக்குத் தோன்றவில்லை. யாரிடமும் பதில் இல்லை. ஆழமாக அந்தச் சூழலை இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும். இப்படிக் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தைப் பழம் வடிவில் பயன்படுத்தியும் கூட மிக எளிதாக 71 நாட்களில் எதிரிகளால் அதிகாரம் மீண்டும் கைப்பற்றப்படும் நிலை இருந்ததை அறியும்போது.....

பின் என்னதான் செய்வது?

40 ஆண்டுகளுக்குப் பின் ருஷ்யப் புரட்சி . அப்போது கம்யூன்கள், சோவியத்கள் எல்லாம் உருவாயின. ருஷ்யப் புரட்சி அடுத்த பல பத்தாண்டுகள் உலகின் முக்கிய இராணுவ ஆற்றல்களில் ஒன்றாக ஆட்சி புரிய முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் அதுவும் சொந்த நாட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டுதானே அழிந்தது. அந்த இடத்தில் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பது யார்? கம்யூனிஸ்டுகள் அல்லவே.

நமக்கு முன் உள்ள கேள்வி: “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை ஏற்பதா இல்லையா?”

சோஷலிச ஜனநாயகம் ஒன்றை நாம் ஏன் உருவாக்க முடியவில்லை? படை எடுப்புகளை எதிர்கொள்ள மட்டும் இராணுவம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லையா?

இந்தக் கேள்விகளை நான் 30 ஆண்டு காலமாகக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஒரு சோஷலிச அரசை உலகமே அழித்தொழிக்கக் கங்கணம் கட்டும்போது படைகளே இல்லாத ஒரு ‘உடோபியா’வை உருவாக்க இயலாததை நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் ஆயுதம் தாங்கிய படைகள் எனும்போது அந்த அரசு என்னவாக இருந்தாலும் அது ஆயுதம் தாங்கிய படைதானே.

எதுவும் செய்ய முடியாது. நிலைமை மோசமாகிறது. கோவில் திருவிழாக்களுக்குப் போய் நாமும் கடை போடலாம் என்கிற கருத்தும் இப்போது நம் தோழர்களிடம் உருவாகிறதே,

ஜனநாயகம் என்பதே லட்சிய வடிவமாக இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் புராதனப் பொது உடைமைச் சமூகத்தைத் தவிர அது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

(தொடரும்)

- அ.மார்க்ஸ்

(கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற பேராசிரியர் நா.வா. நினைவு 42வது இலக்கிய முகாமில் கலந்து கொண்டு பேராசிரியர், ந.முத்துமோகன் படைப்பாற்றல் குறித்து பேரா. அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

Pin It