"நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே"- எனத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் டாக்டர் மு.வ. தமது, ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் த.நா.குமாரசுவாமியின் எழுத்தாற்றலை புகழ்ந்துரைத்துள்ளார்.

    தண்டலம் நாராயண சாஸ்திரி குமாரசுவாமி 1907 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தந்தையார் தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி, தாயார் ராஜம்மாள். சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும்போதே சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு படித்தார். கல்லூரியில் தத்துவம், உளஇயல் முதலிய பாடங்களைப் படித்து 1928 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

    வங்கத்திற்கு 1930 ஆம் ஆண்டு சென்று, மகாகவி இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்து, அவரது வாழ்த்தைப் பெற்று, அவருடைய நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்திட உந்துதல் பெற்றார். இந்தச் சந்திப்பு வங்கத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்ட இலக்கியப் பாலத்தின் அடித்தளம் ஆகும்.

    இந்திய சுதந்திரப் போரில் 1930களில் ஈடுபட்டு, சென்னையில் ஆந்திர பிரகாசம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடைய பாடி இல்லத்தில் காங்கிரஸின் மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட ஆங்கிலேய காவல் துறையினர், காங்கிரஸின் மூவர்ணக் கொடியை அகற்றி, கொளுத்தினர். இந்த நிகழ்ச்சி அவரது உள்ளத்தில் தேசப்பற்றை மேலும் வளர்த்தது.

    நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். நேதாஜி சென்னைக்கு வருகை புரிந்தபோது, அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வங்க மொழி எழுத்தாளர் ஸ்ரீதாராசங்கர் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில் த.நா. குமாரசுவாமி கலந்து கொண்டார்.

    த.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை ‘கன்யாகுமரி ’ 1934 ஆம் ஆண்டு தினமணி இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவரது சிறுகதைகள் ‘சுதேசமித்திரன்’, ‘கல்கி’, ‘அமுதசுரபி’, ‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள் ’ முதலிய இதழ்களிலும் வெளியானது.

    த.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார்.

    ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி தயாரித்த ஆவணப்படத்துக்கு விளக்கவுரை எழுதி அளித்தார்.

    சாகித்திய அக்காதெமி சார்பில், 1960-61 – களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவையொட்டி, அவரது நூல்கள் சிலவற்றை தமிழில் மொழி ஆக்கம் செய்தார். 1962 ஆம் ஆண்டு எழுத்தாளர் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அஸ்ஸாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, அன்டன் செக்கவ் முதலிய எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

    வங்க அரசின் ஆதரவில் தமிழ், வங்க மொழி முதலியவற்றிற்கு த.நா. குமாரசுவாமி செய்த தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (நேதாஜி இலக்கிய விருது) விருது அளிக்கப்பட்டது.

    கன்யாகுமரி, சந்திரகிரகணம், நீலாம்பரி, இக்கரையும் அக்கரையும், கற்பவல்லி முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். இதழ்களில் வெளிவந்து நூல் வடிவில் வெளிவராத இவரது சிறுகதைகள் நூற்றுக்கு மேல் உள்ளது.

    இவரது சிறுகதைகள் மனித மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உள இயல் தளத்தில் அமைந்தவை. மேலும், முதியவர்களின் மனப்போக்கு, கணவன்- மனைவி உறவு, கணவனை இழந்த பெண்களின் மனக்குமுறல்கள், குழந்தைப் பருவம் முடிந்து இளமைப் பருவம் தொடங்கும் காலத்தில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சிகள், குழந்தை மனம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தவைகளாகும்.

    சிறுகதை எனும் சிறிய சாளரத்தின் மூலம் பரந்த உலகையும், அதில் உலவும் பல்வேறு வகையான குண இயல்புகள் கொண்ட மனிதர்களையும், அவர்களுடைய விசித்திர வெளிப்பாடுகளையும், நுண்ணிய இயல்புகளையும், உணர்வு நிலைகளையும், நம் கண் முன் முழுமையுடனும், நிறைவுடனும் அவருக்கே உரிய தனிச்சிறப்பான நடையில் எழுதி அளித்துள்ளார்.

விடுதலை, ஒட்டுச்செடி, குறுக்குச் சுவர், வீட்டுப்புறா, அன்பின் எல்லை, கானல் நீர் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். ‘ஒட்டுச் செடி’ நாவல் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளி வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

    மேலும், “ஒட்டுச் செடி நாவல், பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது தங்களது வீடுகளை இழந்து - கிராமத்தை விட்டுவிட்டு வெளியே வரும்-ஏழை விவசாயிகளின் அளவறியா சோகத்தை, பிரச்சாரமின்றி மிகவும் செட்டான சம்பவங்களாலும், சொற்களாலும் நாவலாகப் படைத்துள்ளார். சொல்லப்பட்டதற்கு மேலே சொல்லப்படாத வாழ்க்கையும் சோகமும் நாவலின் அடித்தளமாக உள்ளது” - என எழுத்தாளர் சா.கந்தசாமி கருத்துரைத்துள்ளார்.

    த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது.

    அக்காலத்தில் வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய பங்கிம் சந்திரர். சரத் சந்திரர், இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    இரவீந்திர நாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், முகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார்.

    பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம், கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார்.

    மேலும், சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

    ‘கிழக்கோடும் நதி’ எனும் சீன நாவலை ஆங்கிலத்திலிருந்தும், ‘துர்லக்’ எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், ‘காதலர்’ எனும் பர்மிய மொழிக் கதையையும் மொழிபெயர்த்து தமிழில் அளித்துள்ளார்.

    த.நா. குமாரசுவாமி வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், மூல ஆசிரியர் பற்றிய விளக்கமான குறிப்புகளையும் இணைத்து அளித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    “ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு மிகவும் தேவை பிறமொழி – தன்மொழி இவற்றில் சிறந்த பயிற்சி, இரு மொழியின் நுணுக்கங்கள், மொழி சார்ந்த மக்களின் பண்பாடு இவற்றில் ஆழ்ந்த அறிவு அவசியம்.”

    “மூல ஆசிரியரின் எழுத்தில், நடையில், உள்ளத்தில் நுழைந்து வரக்கூடிய திறமை நிரம்ப இருந்தால் தான் மொழிபெயர்ப்பில் ஒரளவு வெற்றி அடைய இயலும், வெறும் அகராதி, இலக்கணம் இவற்றின் துணை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துவிட முடியாது” – என மொழி பெயர்ப்பு குறித்து அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். அந்த அடிப்படையில் த.நா. குமாரசுவாமியின் மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன‌.

    நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் த.நா. குமாரசுவாமி மனமிரங்கினார். பாடி கிராமத்தில் நலிந்தவர்கள் மீது அனுதாபம் கொண்டு, தமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். மேலும், அவர்களுக்கு காந்தியடிகளின் கொள்கைகளை விளக்கி அகிம்சை முறையில், தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டத் தூண்டினார். ஊர் மக்கள் த.நா. குமாரசுவாமியை ‘காந்தி ஐயர்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்.

    “இவரது பன்மொழிப் புலமை இவருடைய எழுத்துக்கு அழகையும், உரத்தையும் ஊட்டியது. இவருக்கு அமைந்த நடை தனிச்சிறப்புடையது. வேறு யாருடைய நடையிலும் இந்தப் பாணியைக் காண இயலாது. இயற்கையின் எழிலை ஒவியமாகக் காட்டுவதில் இவர் வல்லவர்” - என இவரைப் பாராட்டியுள்ளார் கி.வா. ஜகந்நாதன்.

    தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.

Pin It