mirasu 450“இலக்கிய இனவரைவியல் என்பது இலக்கியத்தை மானிடவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான ஒரு முறையியல் ஆகும்”. (2017 : 23), என்பார்

ஞா. ஸ்டீபன். இலக்கியம் எனும் எழுத்து ஊடகத்தின் வழியாக ஒரு குழுவின் (இனத்தின்) வாழ்வை, வரலாற்றைப் பண்பாட்டை முழுமையாகவோ, பகுதியாகவோ பதிவு செய்தல். ஓர் படைப்பாளி

தான் சார்ந்த மக்கள் திரளின் வாழ்வியலையும், பண்பாட்டையும், மரபுகளையும் நிகழ்வுகளாகவும், சித்திரிப்புகளாகவும் படைப்பில் தருகின்றார். “குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினரின் சமூக பண் பாட்டு வாழ்க்கை முறையை ஒரு வகைத் திட்ட வட்டமான முனைப்புடன் களப்பணியின் மூலம் உற்றுநோக்கித் திரட்டும் தரவுகளைக் கொண்டு ஓர் ஆய்வாளன் படைக்கும் பண்பாட்டுச் சித்திரிப்பாக அமையும் ஒரு தனி வரைவு நூலே இனவரைவியல்” (2017 : 10). என்பார் ஆ. தனஞ்செயன்.

தஞ்சாவூர் வட்டாரம் வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ஊர்ப்புறங்களை மையமிட்டது. உழைப்புப் பண்பாடும் தொல் வாழ்வுக் கூறுகளும் நிறைந்தது. திணை சார் வாழ்வியலும், நாட்டார் பண்பாட்டுக் கூறுகளும் இங்கு பெருமளவில் நிலவுகின்றன. நாட்டுப்புற வழக்காறுகள், தெய்வங்கள், கலைகள், விழாக்கள், கைவினைப் பொருட்கள் ஆகிய நாட்டார் பண்பாட்டு விழுமியங்களை ஆவணப்படுத்துவதில் எழுத்திலக்கியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

எழுத்தாளர் சி.எம்.முத்து தஞ்சை வட்டார எழுத்தாளர். சிறுகதைகளும், நாவல்களும் படைத்து உள்ளார். இவரது படைப்புகள் யாவும் தஞ்சை வட்டாரப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.

இவரது அண்மைப் படைப்பு “மிராசு” (2016) எனும் நாவல். 850 பக்கங்கள். மேலத் தஞ்சைப் பகுதியில் வாழும் வேளாண்குடிகளான “கள்ளர்” இன மக்களின் வாழ்வியலைப் பேசுகின்றது இந்நாவல்.

நிலவுடைமை வளர்ந்து, உச்சமடைந்து, சரியத் தொடங்குவதை, விடுதலைக்குப் பிந்தைய ஐம்பதாண்டுகளை மையமாக வைத்து நாவல் பதிவு செய்கின்றது. இந்நாவல் முழுவதும் இனவரைவியல், பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் அமைந்து உள்ளது.

* வாழிடங்கள்

* ஊர்ப்புற விளையாட்டுகள்

* வாழ்க்கை வட்டச் சடங்குகள்

* உணவுப் பண்பாடு

* புழங்கு பொருள் பண்பாடு

* வேளாண்மரபு தொழில்நுட்பம்

* தெய்வங்கள், நம்பிக்கைகள், விளையாட்டுகள்

ஆகிய இனவரைவியல் பண்பாட்டுக் கூறுகள் அடிப் படையில் “மிராசு” நாவலை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

சி.எம்.முத்து தன் படைப்பில் கையாளும் வாய்மொழி பேச்சு மரபு முக்கியமானது. கூடவே, இந்நாவலில் விவரிக்கப்படும் வேளாண் வாழ்வியல் நாட்டார் பண்பாட்டு விவரிப்பாக மிளிர்கிறது. இந்நாவலில் இடம் பெறும் இடப்பெயர்கள், ஊர்ப் பெயர்கள், மாந்தர் பெயர்கள், புழங்கு பொருட்கள் ஆகிய யாவும் இனவரைவு அருங்காட்சியகம் (ணிtலீஸீஷீ விusமீuனீ) போல காட்சிப் படுத்தப்படுகின்றது.

ஆக, “மிராசு” நாவல் தஞ்சை வட்டார வேளாண் சார் பண்பாட்டைப் பிரிதிபலிக்கிறது. கள்ளர் இன மக்களின் பண்பாட்டு எழுதுகையாக இந்நாவலை மதிப்பிடலாம்.

“தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மிராசுதாரர்களைப் பற்றி என் சிறு பிராயத்திலிருந்தே ஏராளமாக அறிந்து வைத்திருக் கின்றேன். அவர்களின் வாழ்க்கை முறையானது அபாரமானது, ரசிக்கத்தக்கது, நேர்த்திமிக்கது, மிடுக்கானது, கொஞ்சம் சூசகமானதும் கூட. அப்படி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் வாழ்க்கையே இந்நாவல்” என்பார் சி.எம்.முத்து.

ஆக, கண்டு, கேட்டு, உற்று நோக்கி, உள்வாங்கி எழுதப்பட்ட இனவரைவுப் பனுவலாக இந்நாவல் அமைகின்றது.

இனவரைவு எழுத்தானது 1. சுய அனுபவம் 2. கள ஆய்வு 3. நூலறிவு ஆகிய மூன்று வழிமுறை களில் ஓர் படைப்பாளியால் புனைவாக்காப்படும். “மிராசு” நாவலில் சி.எம்.முத்து தன் சுயஅனுபவம் ஒன்றையே படைப்பில் கையாண்டுள்ளார். “சுய அனுபவம் என்பது நாவலாசிரியன் தான் பிறந்து வளர்ந்த சமூகச் சூழலையோ, தான் வாழ்ந்து கொண் டிருக்கும் சமூகச் சூழலையோ, தான் மேற்கொண் டிருக்கும் தொழில் அடிப்படையில் பெறும் அனுபவங்களையோ மையமாகக் கொண்டு நாவல் எழுதுவதாகும். இம் முறையில் நாவலாசிரியனுக்கு மிகவும் இயல்பாக இனவரைவியல் தரவுகள் கிட்டி விடுகின்றன” (2014 : 10). என்பார் ஆ.சிவசுப்பிர மணியன். தான் பிறந்து வளர்ந்து வாழ்கிறச் சூழலையும், தான் மேற்கொண்டிருக்கும் வேளாண் தொழிலையும் மையமிட்டே சி.எம்.முத்து இந் நாவலைப் படைத்துள்ளார்.

மேற்குத் தஞ்சையின் நடுவில் அமைந்த காவிரி பாயும் ஊர்களை மையமிட்டே நாவல் இயங்குகிறது. இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கள்ளர் இன மக்கள்தான் நாவலை இயக்குகிறார்கள். என்றாலும் உழுகுடிகளான பள்ளர்களும், சேவை குடிகளும் சமூக இயங்கு சக்திகளாக நாவலில் வலம் வருகிறார்கள்.

இந்தளூர் சேது காளிங்கராயர் பல வேலி நிலங்கள் கொண்ட நிலவுடைமைக்குடும்பம். தாத்தா சோமு காளிங்கராயர், அப்பா மருது காளிங்கராயர் அவரைத் தொடர்ந்து சேது காளிங்கராயர் என்று நில மரபுரிமை “மிராசு” எனும் பட்டத்தை உயிர்ப்பித்து வருகின்றது. சேது காளிங்கராயர் அவர் மனைவி ராஜாமணி, மகன்கள் அசோகன், வெங்கடேசன், மகள் கிருஷ்ணவேனி அவர்களின் பிள்ளைகள் என்று மூன்று தலைமுறையின் வாழ்க்கையாக நாவல் விரிகிறது. ஓமந்தூர்ரெட்டியார் தொடங்கி எம்.ஜி.ஆர் வரை விடுதலைக்குப் பின்னான தமிழ்நாட்டின் அரசியல், சமூகப் பண்பாட்டு விளைவுகளை நாவல் பதிவு செய்கின்றது.

நாட்டின் விடுதலை வந்தபொழுது தன்னைக் காணவரும் தன் சாதியினரையே நிற்க வைத்துப் பேசி அனுப்பும் மிராசு, பின்னாளில் எல்லோரையும் சமமாக உட்கார வைத்துப் பேசும் பக்குவத்தைக் காலமும் சனநாயகமும் அவருக்குத் தருகின்றது. என்றாலும் காங்கிரஸ் பேராயக்கட்சி, அதன் அரசு, தலைவர்களுடன் நிலவுடைமையாளர்களுக்கு உள்ள உறவுநிலை காரணமாக மிராசுகள் மையத்திலேயே இருக்கிறார்கள்.

நிதிக் கணக்கு வழக்குகளுக்கு கணக்குப்பிள்ளை (அய்யர்), நில மேற்பார்வைக்கு கார்வாரி (இடைநிலைச் சாதியர்), உடல் இளைப்பாற வைப்பாட்டிகள், பயணத்துக்கு குதிரை ரேக்ளாவண்டி, உடம்பெங்கும் பெருநகையணிகள் (நரிப்பல், சிங்கப்பல் செயின், புலித்தலை தங்கக்காப்பு, கல்மோதிரம்) பெரிய மிதியடி, பரந்து விரிந்து கிடக்கும் பண்ணை வீடு, தேங்காய்ப்பூ துண்டு, தேக்குமரப்பீரோ, சாப்பிட வெடக்கோழி, ஒருமரத்துக் கள்ளு, வீசை ஆட்டுக்கறி, விரால் மீனு, கைக்குத்தல் அரிசி, ஊர் பஞ்சாயத்தில் கோவில் திருவிழாவில் முன்னுரிமை... எனக் குறுநில மன்னர் வாழ்வு நடக்கின்றது.

நிலமே செல்வம். நிலக் குவியல் உள்ளோர் பெருந்தனக்காரர்கள். பள்ளி வேண்டாம். கல்வி பற்றிக் கவலை இல்லை. பிறர் பற்றிய அக்கறை கூடாது. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம். மன மகிழ்ச்சிக்கு, பெரிய மனிதத்தன வெளிச்சத்துக்குத் தானதர்மம். இவை தான் நிலவுடைமையின் வெளிப்பாடு இன்னொரு முகமும் இவர்களுக்கு உண்டு. ஆணவம், அதிகாரம், ஆதிக்கம், தீர்ப் பெழுதுதல், தண்டனை வழங்கல், பெண் சூறையாடல், அழித்தொழித்தல்... ஆனால் இந்நாவல் மிக மென்மையான மிராசையே - ஏழைகளுக்கு இரங்கும் - அநீதிக்கு அச்சப்படும் - பிரபலத்தனம் விரும்பாத - சரிக்கும் தவறுக்குமிடையே சஞ்சலப் படும் மனம்படைத்த ஒருவரையே நாயகனாக்கி உள்ளது.

மேடு பள்ளங்கள் நிறைந்த மண் சாலைகள் கப்பிச் சாலைகளாகி, தார்ச் சாலைகளாகவும் மாறுகின்றன. கட்டுச் சோறு கட்டிக் கிளம்பிய பயணங்களை அடிக்கடி வந்து செல்லும் பேருந்துகள் மாற்றிவிடுகின்றன. ஊருக்குள் பள்ளிக்கூடம் வந்து ஆடு, மாடுகள் மேய்த்த பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள். இருண்டு கிடந்த ஊரும், தெருவும், வீடுகளும் மின்சாரத்தால் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன. வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. பித்தளைச் சாமான்களுக்குப் பதில் எவர்சில்வர் பாத்திரங்கள். ஊரில் பெரிய பங்களாக்கள், மாடி வீடுகள். பல ஏசி கார்கள் மாற்றமும் வளர்ச்சியும் வாழ்க்கையைத் திருப்பிப் போடுகின்றது.

காவிரி மடைதிறந்து ஓடியது போக, கர்நாடகா கட்டிய அணைகளால் முறைப்பாசனம் வருகின்றது. ஆற்று நீரை நம்பிப் பலனில்லை என பம்ப் செட்டுகள் வருகின்றன. முப்பது அடியில் கிடைத்த தண்ணீர் முன்னூறு அடிக்குச் செல்கிறது. முப்போக சாகுபடி ஒரு போகமாகச் சுருங்குகிறது. வீரிய விளைச்சல், பசுமைப் புரட்சி, பிராய்லர் கோழி, விதையில்லா பழங்கள், காய்கறிகள், வங்கிக் கடன்கள், கட்டா விட்டால் சப்திகள்... எல்லாம் அரங்கேறுகின்றன.

ஊர்ப்புறங்களில் உள்ள டீக்கடைகள் அரசியல் விவாத அரங்குகளாகத் திகழ்கின்றன. காங்கிரசும், காமராசரும் தோற்று, தி.மு.கவும், அண்ணாவும், கலைஞரும், எம்.ஜி.ஆரும் ஆள்கிறார்கள். உரிமை களுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடுகிறது. பா.ம.க, வி.சி, தே.மு.தி.க எனப் பல அரசியல் கட்சிகள் முகிழ்க்கின்றன.

சேது காளிங்கராயர் தன் இரு மகன்களுக்கும் தன் தங்கை மகளையும், தன் மனைவியின் அண்ணன் மகளையும் மணமுடிக்கிறார். குடும்ப நிர்வாகம், பெட்டி சாவி பிள்ளைகள் கைகளுக்குச் செல்கிறது. அவர்கள் தனியே வீடுகள் கட்டி, கார்கள் வாங்கி, கடன்கள் பட்டு வாழ்கிறார்கள். மிராசு தன் பழைய வீட்டில் பேரப்பிள்ளைகள் அன்பிற்கு ஏங்கித் தவிக்கிறார். கைச் செலவுக்குக் கூட மகன்களை நம்பி இருக்க வேண்டிய அவலம். மூத்த மகன் அசோகன் மிராசு சோக்கில் வைப்பாட்டிகள், ஊதாரித்தனம், வெற்று அதிகார, ஆடம்பரத்தில் தன் நிலை தாழ் கிறான். இளைய மகன் வெங்கடேசன் நல்ல சம்சாரி ஆகிறான். மகள் கிருஷ்ணவேணியோ கணவன் வைப்பாட்டியோடு எல்லாவற்றையும் இழக்க, பிள்ளைகளோடு பிறந்தகம் வந்துவிடுகிறாள். மிராசுவின் கண்முன்னே அவர் கட்டி எழுப்பிய கோட்டை சரியத் தொடங்குகிறது.

ஓர் மழை நாளில் மிராசுவின் பெரிய வீட்டின் பின்பகுதி இடிந்து விழுகிறது. மகள் பதறி வருகிறார். ஊரே கூடி வந்து விசாரிக்கிறது. மகன்கள் எட்டிப் பார்க்கவில்லை. மிராசு சேது காளிங்கராயரும் - ராஜாமணியும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். திடீரென சேது மயங்கி விழுகிறார். அதனை அறிந்த ராஜா மணிக்கும் உயிர் பிரிகிறது. இருவரும் இணைந்தே இறக்கிறார்கள்.

பெற்றோர் இறந்தபின் பிள்ளைகள், அவர்களின் பெற்றோரின் நற்குணங்களை, சமூகப் பெருமதியை உணரத் தலைப்பட்டு நல்நிலையில் வாழத் தொடங்குகிறார்கள்.

மிராசுவின் மகள் கிருஷ்ணவேணியின் மகள் வடிவுக்கரசியை அசோகன் மகன் ஞானசேகரனுக்கு மணமுடிக்க யோசிக்கையில், எப்போதும் மடிக் கணினி, செல்பேசி சகிதமாக இருக்கும் அசோகன், வெங்கடேசன் ஆகியோரின் பிள்ளைகள் ஞான சேகரன் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லிப் படத்தையும் காட்டுகிறார்கள். மொத்தக் குடும்பமும் திகைத்து நிற்கிறது. கிருஷ்ணவேணி நீண்ட நாட் களாக பிறந்த வீட்டில் இருப்பதை கூச்சமாக உணர்ந்தவள், தன் பிள்ளைகளோடு எவ்வித உறுதியும் இல்லாத புகுந்த ஊருக்குச் செல்வதோடு நாவல் நிறைவு பெறுகின்றது.

இது சேது காளிங்கராயர் என்ற தனியரு மிராசின் கதை மட்டுமல்ல. தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான மிராசுகளின் வாழ்வியல். சி.எம்.முத்து வகை மாதிரியாக இதனைப் படைத்துள்ளார். தத்துவ விசாரங்கள், சமூக அரசியல் காரணிகள் பற்றி யெல்லாம் கவலையின்றி தன்மனம் எனும் காமிரா கொண்டு படைப்பாளி ஒரு பெருந்திரை விருந்தைப் படைத்துள்ளார் எனலாம்.

நாட்டார் வழக்காறுகள்

சி.எம்.முத்து அடிப்படையில் ஓர் கலைஞர். நாடகம், கூத்து ஆகியவற்றில் நடித்தவர். நீண்டக் கூந்தலுடன் பெண் வேடமிட்டு நடித்ததாகக் கூறுவார். நாட்டுப்புறப் பாடகர். கதை சொல்லி. எனவே அவரின் படைப்புகளில் நாட்டார் வழக்காறுகள் இயல்பாக சூழலுக்கு ஏற்ப வந்தமையைக் காண லாகும். மிராசு நாவலில் பழமொழிகளாக உவ கதைகளாக, வட்டார வழக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளவற்றை இங்கு சுட்டலாம்.

“ஒரு ஈ காக்காய் குருவியைக்கூட காணுமே” (ப.47)

“மலை போல் வருமென்று நினைத்தது

  பனிபோல் விலகியது”           (ப.49)

“மச்சினன் இல்லாத வூட்டுல

 பொண்ணுக்கட்டக் கூடாது”               (ப.57)

“மோட்டுக்கு இழுத்தால் பள்ளத்திற்கு”         (ப.62)

“ஓ கைய ஊனித்தான் கரணம் பாஞ்சாவனும்” (ப.85)

“எரியிறத இளுத்தா கொதிக்கிறது

   அடங்கிப்போயிரும்”             (ப.104)

“மயிரு உள்ள சீமாட்டி அள்ளி முடிஞ்கிக்குறா” (ப.107)

“கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்

கொரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணும்” (ப.107)

“ஏ தலமுடிய எண்ணுனாலும்

எண்ணிப்புடலாம் நா வாங்கி வச்சிருக்கிற

கடன எண்ணமுடியுமா”           (ப. 173)

“முட்ட வுடற கோழிக்குத்தான் சூத்தெரிச்சத்தெரியும்”

“ஆடாய்தான் பிறந்தோமா”                (ப.177)

“போடி போக்கனம் கெட்டவுள”       (ப.267)

“எளவுக்கு வர்றவள்ளாம் தாலியறுக்க மாட்டா” (ப.288)

“வெண்ண தெறண்டு வர்றப்ப தாளி ஒடஞ்ச கதையா” (ப.314)

“வெறப்பு சறப்பும் வீராப்பும் எம்புட்டு நாளைக்கு” (ப.343)

“பணம் ஈசப்பூத்துக் கெடக்குதாம்”   (ப.359)

“எச்சித்துப்பி எச்சி காயிரதுக்குள்ள”              (ப.371)

“ராவுத்தரு கொக்கா பறக்குறாராம் குதுர

கோதும ரொட்டி கேட்டுச்சாம்”            (ப.381)

“வெட்டிப் போட்ட வாழைப் போத்து மாதிரி” (ப.411)

“கெணத்த வெட்டுனா ஊத்து வாயில நெல்லி

  மரத்த வைக்கனும்”  (ப.529)

“மடையான் மடையான் பூப்போடு

மட்டைக்கு ரெண்டு பூப்போடு

ஒன்ன ஒருத்தன் புடிக்க வாரான்

அதுக்கு ரெண்டு பூப்போடு”

(குழந்தைப்பாட்டு ப.586)

“தாலியறுத்தவளுக்கு தானா வரும் ஒப்பாரி” (ப.696)

“கையெழுத்து மறைகிற நேரம்”        (ப.700)

“குருடன் கிழித்த துணி கோவணத்துக்கு ஆவும்Ó (ப.736)

“அணில் கொம்பிலும் ஆமை கிணத்திலும்

   என்கிற மாதிரி”        (ப.740)

“மயிருள்ள சீமாட்டி அள்ளி முடிஞ்சிக்கட்டும்” (ப.751)

“துரியோதனன் கெட்டது வீம்பால”               (ப.752)

“ஜாடிக் கஞ்சியை மூடிக் குடிக்கணும்”          (ப.775)

“அடிச்சிகிட்டு போற வெள்ளம் கடல்ல

   போயி கலக்குறக்குள்ள” (ப.841)

இப்படி ஏராளமான வழக்காறுகள் நாவலில் இடம் பெறுகின்றன. தெருக்கூத்துப் பாடல், நாட்டுப்புறப் பாடல், நவீனக் கவிதை ஆகியவற்றையும் சி.எம். முத்து நாவலில் பொருத்தமான இடங்களில் கையாள்கிறார்.

நாட்டுப்புறக் குழந்தை விளையாட்டுக்கள்

காலம் காலமாக நாட்டுப்புறங்களில் பல விளையாட்டுக்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பெரியவர்களின் விளையாட்டுக்களை வீர விளை யாட்டுக்கள், பொழுது போக்கு விளையாட்டுக்கள் எனப் பகுப்பர். குழந்தைகள் பொழுது போக்கவும், வேடிக்கைக்கும் பலவித விளையாட்டுக்களை மேற்கொள்வர். பெரும்பாலும் மன மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் இவை தரவல்லவை. குழு விளை யாட்டுக்களாக அமையும். இறுக்கமான விதிகள் இன்றி நீக்குப் போக்குடன் அமையும். குழந்தை களின் இயல்பூக்கங்களை நிறைவு செய்யும் விதத்தில் இவை அமைகின்றன. இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், பறவைகள், காய், கனிகள், குச்சிகள், கயிறு போன்றவை விளையாடப் பயன்படு பொருள் களாக விளங்குகின்றன. பாடல்களும் கதைகளும் கூட இடம்பெறுகின்றன.

மிராசு நாவலில் பலவித குழந்தை விளை யாட்டுக்கள் சுட்டப்படுகின்றன. “கள்ளான் கள்ளான் தாப்பட்டி”, “ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது”, “குலை குலைக்காய் முந்திரிக்காய் நரிய நரிய சுத்திவா” (ப. 25).

“கொல கொலக்க முந்திரிக்காய், ஓடிபிடித்து ஆடுவது, சில்லுக்கோடு, நொண்டிக்கோடு, உப்பு மூட்டை தூக்குவது” (ப.568), “கிட்டிப்புல்”, “பளீஞ்சடுகுடு” (ப. 327) என்று குழந்தைகளின் விளையாட்டை சுட்டும் நாவலாசிரியர் ஊரில் சாதாரணக் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட மிராசுவின் பிள்ளைகள் வீட்டுக்குள்ளே ஏங்கித் தவிப்பதை கீழ்க்காணுமாறு பதிவு செய்கிறார்.

“ஒரு பட்டம் திருபட்டம் ஒரிய மங்கலம் ஒக்கா துரும்பி ஒம் பேரு என்ன”? தண்ணீருக்குள் மூழ்கி விளையாடுகிற கண்டுபிடிக்கிற ஆட்டம் அதுதான். “கொட்டான் கொட்டான்” ஈச்சம் பழம் பறிப்பது, கலாக்காய் பறிப்பது தின்னுவது, சொடக்குப் பழம் பறித்து வந்து நெற்றியில் குத்தி சொடக்கு போட்ட வுடன் துவர்ப்பும் புளிப்பும் கொஞ்சம் போல் இனிப்புமாய் இருக்கிற அந்தப் பழத்தை தின்று ருசிப்பது, வெண்டைக் காய்களின் அடிப்பாகத்தை அறிந்து முகம் உடம்பென்று ஒட்டிக்கொண்டு பயம் காட்டுவது, நுனாக்காய் பறித்து வந்து வாருகோல் குச்சிகளை குத்தி குத்தி தேர் செய்வது, நுனாப்பழம் தின்னுவது, புளியம் பிஞ்சியை கை நிறைய பறித்து வந்து கருங்கல்லில் இழைத்து இழைத்து விரலால் தொட்டு நக்குவது, ஓணான் பிடிப்பது, செத்துப் போன நாயை அதன் கால்களில் கயிற்றைக் கட்டி தெருவுக்குத் தெரு இழுத்துக்கொண்டு ஓடுவது, இலுப்பை மரப் பொந்துகளில் கை நுழைத்து கிளியும் அதன் குஞ்சுகளையும் பிடிப்பது, வண்ணத்துப் பூச்சி களைப் பிடித்து அதன் றெக்கைகளை உள்ளங்கையில் தேய்த்து மினுமினுப்பைக் காட்டுவது, போலீஸ் காரன் திருடன் விளையாட்டு விளையாடுவது, கூட்டாஞ்சோறு ஆக்குவது, ரயில் வண்டி விளை யாட்டு, கோலி குண்டடிப்பது, கிட்டிப்புல் ஆடுவது” (ப. 568 - 569).

இவை குழந்தைகள் தமக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, நினைத்த விதத்தில் விளையாடும் தன்மையன. தனித்தோ, குழுவாக ஆண்கள், பெண்கள் மட்டுமே சேர்ந்தோ விளையாடக் கூடியவை. பொழுதுபோக்கு, மனமகிழ்ச்சி, உடற் பயிற்சி, மனவளர்ச்சி சார்ந்து இந்த நாட்டுப்புறக் குழந்தை விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை நாவலில் அழகாகப் பதிவாகின்றன.

கோலங்கள்

கோலம் என்பதற்கு “அழகு” என்றும் “ஒப்பனை” என்றும் பொருள் கூறுவர். வீடுகளின் வாசல்களில் கோலமிடுவது பெண்கள் சார்ந்த ஓர் கலையாக வளர்ந்துள்ளது. தொடக்கத்தில் வீட்டை அலங்காரம் செய்யும், வீட்டுக்கு வருவோரை வரவேற்கும் அழகுக் கலையாக இருந்தது. பின்னர் சமய நம்பிக்கைகளின் படி கோயில்களில், திருவிழாக்களில் முக்கியத்துவம் பெற்றது.

பெரும்பாலும் மழை, பனிக் காலங்களில் மாக்கோலமிடுவது, இரைதேடி வரும் எறும்பினங் களுக்கு உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தான். எனவே மாக்கோலமிடும் முறை தமிழர்களின் உயிர் இரக்கச் சிந்தனை எனவும் கொள்ள இடமுண்டு.

கோலங்கள் இன்று வண்ணக் கோலங்களாகி, ஸ்டிக்கர் கோலங்களாகி வணிகக் கலையாக உருவெடுத்துள்ளது. மிராசு நாவலில் மார்கழி மாதம் கோலமிடும் தமிழ்ப் பண்பாட்டு மரபு பதிவாகி உள்ளது.

“மார்கழி மாசமாக இருக்கும் பட்சத்தில் பெண்கள் இரவு நேர சங்கூதி வந்துவிட்டுப்போன நாழிக்கெல்லாம் எழுந்து கொள்வார்கள். அவர்கள் அப்படி எழுந்து கொள்வதற்கு அப்புறம்தான் தலைக் கோழியே கூவ ஆரம்பிக்கும். எழுந்ததும் என்ன கோலம் போடுவதென்று இரவே திட்டம் போட்டிருப் பார்கள். மாட்டுக் கொட்டிலுக்குப் போய் வாசல் தெளித்து கூட்டிப் பெருக்கிய கையோடு கொட்டாங் குச்சியில் அரிசிமாவை எடுத்துக் கொண்டுவந்து கோலம் போடுவார்கள். ஒருமணி நேரத்துக்குமேல் ஆகும் அவர்கள் கோலம் போட்டு முடிக்க. தெரு வடைத்து பெரிய கோலம் போடுவார்கள். புள்ளிக்குப் புள்ளி கோடுகளை இணைப்பதே கண் கொள்ளாக் காட்சியாகும். அப்படி இப்படி இழுத்து தேரைக் கொண்டு வந்து விடுவார்கள். மான், மயில், குருவி, மிட்டாய் தட்டு என்று விதவிமான கோலங்கள்... கோலம் வரைந்த கையோடு தோட்டத்துக்குப் போய் பறங்கிப்பூ, பூசனிப்பூ பறித்து வந்து கோலத்தின் நடுவில் வைப்பார்கள். ஒரு சிலர் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல் சொருகி விளக்கேற்றியும் வைப்பார்கள்” (பக். 252 - 253).

என்று கோலமிடுவதை பதிவு செய்பவர், கோலம் எனும் கலை அழகை மிக நுட்பமாக, “புள்ளி வைத்து கோல நர்த்தனம் புரிவார்கள். விரலிடுக்கில் மாவு கசிந்து கசிந்து ஓவியம் உருக்கொள்ளும். ஒருத்தர் வீட்டு வாசலை ஒருத்தர் வீட்டு வாசல் தொட்டுக் கொள்ளும்படியாய் கோல நர்த்தனங்கள். உயர்ந்த ஸங்கீதத்தில் மேல் ஸ்தாயியிலேயே நின்றுவிடாமலும் கீழ்த்தாயியில் இருந்துவிடாமலும் மூன்று ஸ்தாயி களையும் பிடித்து அழகு பண்ணுகிறமாதிரி மேல், கீழ், மத்திமம் என்கிற மாதிரி அழகழகாய் கோலப் படிமம் வித்தை பண்ணும். இந்த வித்தையில்லாத கோலம் அலங்கோலமாய் ஆய்விடுமல்லவா?” (ப. 761) என சி.எம்.முத்து விதந்து எழுதிச் செல்கிறார்.

மரபு தொழில் நுட்பம்

எந்த ஓர் இனமும் தனக்கான சுயாதின அறிவைக் கொண்டே இயங்கும். தொழில் அடிப்படைச் சாதிகள் உருவானபோது, இனக்குழு மக்கள் தங்கள் மரபறிவின் துணையினூடே தங்கள் அடையாளங்களைக் காத்தனர். தொழில் நுட்பக் காலமான இத்தருணத்தில் தொழில் மரபறிவின் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணரலாம். மரபுரிமை, காப்புரிமை என்றெல்லாம் பேசுகிறோம். நவீனக் கல்வி முறைமை உருவாகு முன்பே பன்னெடுங்காலம் செழுமையான ஓர் அறிவு மரபு இருந்ததை நாட்டார் மரபிலிருந்தே அனுமானிக்க இயலும். மிராசு நாவலில் கோழி பிடித்தல் தொடங்கி எலி பிடித்தல், சுண்ணாம்பு செய்தல், வண்டி செய்தல், விதைக் கோட்டை, சேர்கட்டுதல் வரை பல மரபு தொழில் நுட்பக் கூறுகள் எழுத்தாளரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோழி பிடித்தல்

ஊர்ப் புறங்களில் கோழி வளர்த்தல் முக்கிய மான ஒன்று. பெரும்பாலும் வணிக நோக்கின்றி முட்டை, இறைச்சி ஆகியவற்றுக்காக நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டன. கோழி முட்டைகளை அடைகாத்தல் தொடங்கி குஞ்சி பொறிப்பது, வளர்ப்பது வரை அநேகம் நுட்பங்கள் உண்டு. வளர்ப்புக் கோழிகள் வீட்டையட்டியே வளரும். இரை தேடும். காலை திறந்துவிடப்படும் கோழி களை இடையில் பிடிப்பது கடினம். மிராசு நாவலில் வெடக்கோழி (முட்டையிடும் பருவத்தில் உள்ள இளம் கோழி) பிடிப்பதை அழகாக் காட்சிப் படுத்துவார்.

மிராசுதாரர் வீட்டின் வேலைக்காரர் அம்புஜம் கோழிகளைப் பிடிக்க முயற்சிக்கிறார். வாயால் கூப்பிட்டால் வாரா. அரிசியையும் நெல்லையும் வீசி யெறிகிறார். “கோழிகள் இரை கிடைத்த மகிழ்ச்சியும் முன்னே முன்னே என்று தின்று கொண்டே வீட்டுப் பக்கம் வந்துவிட்டது. இப்போது அம்புஜம் புறக்கடை வாசலுக்கு வந்து “போ போ” என்று கூப்பிட்டு தானியங்களை இரைத்துவிட்டு திறந்திருந்த கதவின் ஒண்டியில் மறைந்து நின்றாள். தானியம் தின்ற ருசியில் கோழிகள் அத்தனையும் மறுபடியும் தானியம் தின்ன வீட்டுக்குள் படைபோல் வர ஆரம்பித்து விட்டது. சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த அம்புஜம் பொசுக்கென்று கோழிகள் வெளியில் போய்விடாதபடி கதவை சாத்திவிட்டு அவைகளைப் பிடிப்பதில் வேகம் காட்டினாள். கோழிகள் தன்னைப் பிடிக்க வருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு தானியத்தைத் தின்னாமல் அங்கும் இங்குமாய் ஓடிஓடி பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்தது. அம்புஜம் லபக்கென்று கோழியை தாவிப்பிடிக்க முற்படுகையில் கோழியின் ஒரு இறகு மட்டும் பிய்த்துக் கொண்டு அவள் கையில் இருந்தது. மறுபடியும் பாய்ச்சல் துரத்தல்தான். இந்த நாடகம் ஒரு கால் மணி நேரத்திற்கு ஆட்டம் காட்டியதும் கோழிகள் அசந்து போய் துவள ஆரம்பித்துவிட்டது. அம்புஜத்திற்கு இப்போது கோழிகளைப் பிடிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை” (ப. 134).

மிக எளிமையான செயல். சாதுவானப் பறவை. இதைப் பிடிக்கவே இத்தனை எத்தனம் என்பதை இப்பகுதி உணர்த்துகிறது.

எலி பிடித்தல்

அறுவடை சமயத்தில் வயலில் எலி பிடிப்பதும் நடக்கும். வேலை செய்யும் நேரத்தின் ஊடே மண் வெட்டியைக் கொண்டு வரப்புகளில் எலியைப் பிடிப்பார்கள். எலிக்கறி உணவாகவும் மருந்தாகவும் பயன்படும். மிராசு நாவலில் எலி பிடிக்கும் தருணத்தை சி.எம்.முத்து பதிவு செய்துள்ளார்.

“ஐந்தாறு ஆட்கள் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வரப்பை வெட்ட ஆரம்பித்தார்கள். மண் தள்ளியிருக்கிற வலையில் எலிகள் கூட்டமாக இருக்கும் என்று பேசிக்கொண்டுதான் வெட்ட ஆரம்பித்தார்கள். வலை போகிற திசையைப் பார்த்துப் பார்த்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். பந்து பந்தாய் நெற்கதிர்களை வலைக்குள் கொண்டு போய் வைத்திருந்தது எலி. கதிர்களை எடுத்து சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டார்கள். எலிகள் எங்கும் ஓடி விடாதபடி இரண்டு ஆட்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து பார்த்துக் கொண்டார்கள். எலியின் வால் தெரிந்தது. வாலைப் பிடித்து இழுக்க எலி வெளியில் வந்தது. வாலாலேயே எலியின் பற்களை அகற்றி விட்டு சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டு மறுபடியும் வெட்ட ஆரம்பித்தார்கள். பத்து எலிகளுக்கு மேல் அகப்பட்டுவிட்டது. சின்னஞ் சிறிய எலிக்குஞ்சுகளும் முப்பது நாற்பது இருந்தது. அவைகளையும் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டார்கள். ஆசை விடவில்லை போல. மேலும், இன்னொரு வலையைத் தேடி வெட்ட ஆரம்பித் தார்கள். அந்த வலையில் ஐந்தாறு எலிகளும் குஞ்சுகளும் இருந்தன” (ப. 477).

எலிகள் பிடித்து உண்பது உழைக்கும் மக்களின் உணவு வழக்கம். இதனை இப்பகுதி சுட்டி நிற்கின்றது.

சுண்ணாம்புச் சாந்து

அக்காலத்தில் சிமென்ட்டுக்குப் பதிலாகச் சுண்ணாம்புச் சாந்தே பயன்பாட்டில் இருந்துள்ளது. கோயில் கட்டுமானப் பணிக்குச் சுண்ணாம்பு பயன் படுத்தல் பற்றிய பதிவு நாவலில் இடம்பெறுகின்றது.

“தஞ்சாவூர் அம்மன்பேட்டைக்கும் அடுத்தாப்புல இருக்கிற அரசூர்லதான் வாங்கணுங்கய்யா. அந்த ஊரு சுண்ணாம்பு ரொம்ப பேர் பெத்ததுங்கய்யா. அவுங்களே சுண்ணாம்பக் கொண்டு வந்து கொளச்சி போட்டுட்டு போயிடுவாங்க. அத நாம புளிக்க வச்சி சித்தாளுங்கள வுட்டு ஒலக்கையால குத்தி மணலும் சுண்ணாம்பு ஒன்னா சேர்றமாறி குடுத்துட்டா கட்டுற கட்டடம் ஆயிரம் வருசம் ஆனாலும் அசையாதுங் கய்யா. அம்புட்டு கெட்டியா பிடிச்சுக்கும்” (ப. 285).

கட்டிடக் கலையில் செங்கல்லோடு சுண்ணாம்புச் சாந்து சேர்த்துக் கட்டிட வேலை செய்வதன் நுட்பத்தை இப்பகுதிச் சுட்டுகின்றது.

வண்டி செய்தல்

பந்தயக் குதிரைப் பழக்குவது குறித்து மிராசு நாவலில் இடம் பெறுகின்றது. குதிரை வாங்குதல், குதிரை வகை, குதிரைக்குத் தீனி பற்றியெல்லாம் அரிய கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

குதிரை வண்டி செய்வது, வண்டிக்கு ஏற்ற பூவரசு மரம் தேர்வது, சக்கரக்குடங்களுக்கு ஏற்ற மரம் தேர்வது, தச்சாசாரி வரை ஏராளம் செய்திகள் நாவலில் இடம் பெறுகின்றன.

ரேக்ளா வண்டி செய்ய பூவரச மரம் ஏற்றது. அதுவும் முதிர்ந்த “வைரம் பாஞ்ச மரம்” வேண்டும். அப்படி ஒரு மரத்தை மிராசு வீட்டில் தருமன் வெட்டுகிறார். “ரேக்ளா வண்டிக்கி போறுமாடா மரம்?” மிராசு கேட்கிறார்.

“அடி மரத்துல ஆசாரி ரெண்டு சக்கரத்துக்கும் வட்டாவய தயாரு பண்ணிக்கிட்டாருன்னா போதுங் கய்யா கெளையெல்லாம் வலுவா இருக்கு. வண்டிக்கு ஆயிரும்”.

“கொடத்துக்கு என்ன பன்றது?"

“பூசரையில கொடத்துக்கு போட மாட்டாங்க ஆண்ட. ‘வம்மார’ மரத்துலதான் கொடம் செய் வாங்க. வம்மார மரம் நம்ம பக்கத்துல கெடையாதுங் கய்யா. ஆசாரிகிட்ட சொன்னா அவுரு எங்கயாச்சும் வாங்கிப் போட்டுருவாருங்கய்யா”.

“ஆரத்துக்கு என்ன பண்றது?”

“கெளையில எடுத்துக்கலாங்கய்யா... பொதுவா வண்டிக்கான ஆரம் வட்டாவெல்லாம் கருவ மரத்துல தான் போடுவாங்கய்யா. இந்த மாறி வைரம் பாஞ்ச மரமா இருந்துட்டா வட்டா ஆரமெல்லாம் நல்லா ஊக்கமா இருக்குங்கய்யா. பூசரயிலயும் போடலாம் மரம்தான் நல்லா ஊக்கமா இருக்குங்களேய்யா” (ப.328).

வண்டி, வண்டிக்கால், வண்டிக்கொடம் என்று அதன் உறுப்புகள் அதற்கு ஏற்ற மரம் என்று விலா வாரியாகச் சொல்லப்படுகின்றது. வண்டி செய்வது தச்சாசாரியின் வேலை. அதைப் பற்றிய பதிவு இல்லை.

வீடு அமைப்பு

அக்காலத்தில் ஊர்ப் புறங்களில் எளிய மக்களின் வீடுகள் வெயில், மழை, இரவு, பகல் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஓர் எளிய ஏற்பாடாக மட்டுமே அமைந்தது. தங்களுக்கு எளிதில் கிடைக்கும் கீற்று, வைக்கோல், மண் போன்ற பொருள் களை வைத்து வீடுகளை உருவாக்கிக் கொள்வர். ஆனால் “மிராசு” போன்ற நிலவுடைமையாளர்கள் தங்களுக்கென்று வசதியான பெரிய “பண்ணை” வீடுகளை அமைத்துக் கொள்வது வழக்கம். நாவலில் மிராசுவின் வீட்டைப் பற்றிய பதிவு.

“சேதுவின் தாத்தா சோமு காளிங்கராயர் கட்டிய வீடுதான் இது. விசாலமான ஆலோடி, ஆலோடியைத் தாண்டியதும் ரேழி, ரேழியைத் தாண்டியதும் பெரிய கூடம். அந்த கூடத்தின் மத்தியில் மிகப் பெரிய முற்றம். முற்றத்தின் வழியாய் காக்கைகளோ குருவி களோ மற்ற மற்ற பறவையினங்களோ வீட்டுக்குள் வந்து விடாத படிக்கு முற்றத்துக்கு மேல் கம்பிவேலி இருக்கிறது. முற்றத்தைச் சுற்றியுள்ள நான்குபுற கூடத்திலும் நூறு பேர்கள் வரை தாரளமாய் உட்கார்ந்து சாப்பிடலாம். கூடத்தை ஒட்டி விசால மான அறைகள். ஒரு அறை சேதுவின் படுக்கை அறை. இடது பக்கமிருக்கிற அறை முக்கிய உறவினர் வந்தால் அவர்கள் தங்குவதற்காக அமைக்கப் பட்டது. கட்டில், மெத்தை, பீரோல், சோபா, நாற்காலிகள், மேஜையென்று ஏக அமர்க்களம் பண்ணி வைத்திருக்கிறார் சேது. விருந்தாடிகளின் சௌகரியத்தின் பொருட்டு பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். இதையடுத்த அடுத்த கட்டுகளில் தான் சாப்பாட்டு அறை, குழந்தை களுக்கான அறைகள் என்று ஐந்தாறு அறைகள் இருக்கின்றன” (ப. 59).

விதை நெல் பாதுகாப்பு : கோட்டை

வேளாண் வாழ்வில் மிக முக்கியமானது விதைகளைப் பாதுகாப்பது. முற்றிய தானியங்களை நன்றாகக் காயவைத்து, பூச்சிகள் தாக்கா வண்ணம், ஈரப்பதம் ஏறாவண்ணம் கோட்டைகளாகக் கட்டுவர். இது குறித்து மிராசு நாவலில் பின்வருமாறு பதிவாகி உள்ளது. “கோட்டை கட்டுவதில் தருமன், முத்தன் இருவருமே கில்லாடிகள். ஒரு கோட்டைக்கு எட்டு பிரிகள் வீதம் எத்தனை கோட்டை கட்டுகிறார்களோ அத்தனை பிரிகள் விட்டு வைத்துக் கொள்வார்கள். ஒரு கோட்டைக்கு ஆகிற எட்டுப் பிரிகளில் இரண்டு பிரிகளை மட்டும் வட்டமாக முடிந்து கொள்வார்கள். இந்த வட்டப் பிரிகள் இரண்டையும் தரையில் வைத்து அதன்மேல் வைக்கோலை லாவகமாக உதறி, உதறிய வைக்கோலின் மேல் ஆறு மரக்கால் விதை நெல்லை அளந்து கொட்டுவார்கள். கொட்டிய நெல்லின் மேல் லாவகமாக ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு வைக்கோலுக்கும் அடியில் போட்டிருந்த வட்டப்பிரிகளை மெது மெதுவாக மேலே ஏற்றிக் கொண்டு வருவார். இப்போது உதறிப் போட்ட வைக்கோல் கூடை வடிவத்திற்கு வந்திருக்கும். இப்போது மறுபடியும் ஒரு ஆறு மரக்கால் நெல்லை அளந்து போட்டு மறுபடியும் இரண்டு பிரிகளையும் மேலே கொண்டு வருவார். நான்கு விரற்கடை அளவுக்கு மேலே கொண்டு வந்ததும் மறுபடியும் ஆறுமரக்கால் நெல்லை அதனுள் கொட்டிவிட்டு இப்போது வட்டப் பிரிகளில் ஒன்றை அப்படியே விட்டுவிட்டு ஒரு பிரியை மட்டும் மேலே ஏற்றிக் கொண்டு வருவார். இப்போது மறுபடியும் ஒரு ஆறு மரக்கால் நெல்லைக் கொட்டி உபரியாக இருக்கிற வைக்கோலை கச்சிதமாய் சுருட்டிவைத்துக் கொண்டு மீதமுள்ள ஆறு பிரிகளையும் ஒவ்வொன்றாய் எடுத்து கோட்டையைச் சுற்றி கட்டிவிட்டால் கோட்டை பம்பரம் மாதிரி ஆகிவிடும். ஒரு நெல் கூட கோட்டைக்குள்ளிருந்து சிந்தாது சிதறாது. என்ன மழை பெய்தாலும் கோட்டைக்குள்ளிருக்கிற நெல் சேதப்படாது. ஒரு கோட்டைக்கு ஒரு மூட்டை நெல்தான் அளவு. கோட்டையை கட்டி முடித்ததும் அடிப்பாகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதி முழுவதையும் சாணத்தால் மெழுகி இரண்டு நாட்கள் காய வைப்பார்கள். காய்ந்ததும் மறுபடியும் கோட்டையை தலை குப்புற கவிழ்த்துப் போட்டு அடிப்பாகத்தை மெழுகி இரண்டு நாள் காய வைப்பார்கள்” (பக். 461 - 462).

மிராசு சேது காளிங்கராயருக்கு நூற்றி ஐம்பது கோட்டைகள் வரை கட்டுவார்கள் என நாவல் சுட்டுகின்றது.

சேர்

கோட்டைகள் பலவற்றைச் சேர்த்து அதைப் போலவே பக்குவமாகப் பாதுகாக்கும் முறைக்கு “சேர்” என்று பெயர். இதுவும் வைக்கோல், வைக் கோல் பிரிகளால் உருவாக்கப் பெறும். பெரிய குதிர் போல காட்சி தரும். சுமார் ஐம்பது கோட்டைகளை ஒன்று சேர்த்து ஒரு “சேர்” உருவாகும். எண்ணிக் கைக்கு ஏற்ப அளவு சிறிதாகவோ, பெரிதாகவோ அமையும். மிராசு நாவலில் “சேர்” கட்டுதல் இப்படிப் பதிவாகி உள்ளது.

“சேர் எவ்வளவு நீள அகலத்திற்கு வேண்டுமோ அந்த அளவிற்கு தரையில் மண்ணைக் கொட்டி முக்கால் முழம் அளவுக்கு மேடுபடுத்துவார்கள். கோட்டை கட்டியது மாதிரி நான்கு பிரிகள் நீள அகலத்திற்குத் தகுந்தாற்போல் சதுர வடிவில் கட்டி மேடுபடுத்திய இடத்தில் வைத்துவிட்டு பிரிகள் மூடுகின்ற மாதிரி சுற்றிலும் கனமாக வைக்கோல் உதறுவார்கள். உதறிய வைக்கோலின் மேல் வரிசைக்கு பத்து கோட்டைகள் வீதம் இருபது கோட்டைகளை வைத்துவிட்டு சுற்றிலும் ஐந்தாறு ஆட்கள் நின்று கொண்டு சதுர வடிவில் கட்டப் பட்ட பிரிகளை லாவமாக மேல் ஏற்றிக் கொண்டு வருவார்கள். பிரிகள் கோட்டைகளின் முக்கால் பகுதிக்கு மேலே வந்ததும் வைக்கோலை உதறாமல் கன்னு கன்னாக கட்டி பாந்தமாக கோட்டையின் மேல் அடுக்குவார்கள். இப்போது அடுக்கி வைத்த கோட்டைகளின் மேல் மேலும் இருபது கோட்டை களை தூக்கி வைத்து பிரிகளை ஒவ்வொன்றாய் தூக்கி மேலே ஏற்றுவார்கள். ஏற்றி முடித்ததும் மேலும் வைக்கோல் கன்னைப் பிடித்து பிடித்து கோட்டையின் மீது பரப்பிவிட்டு மேலும் பத்து கோட்டைகளை ஒரே வரிசையாக நடுமையத்தில் வைத்துவிட்டு வைக்கோலைப் பரப்பி சேரை மூடி விடுவார்கள். மூடிய சேரின் மேல் முழத்திற்கு ஒரு பிரி வீதம் சேரின் மேல் போட்டு இரண்டு முனைகளையும் அடிப் பாகத்தில் சொருகிவிடுவார்கள். சேர் கட்டி முடிந்ததும் ஏனங்களில் சேற்றை அள்ளிக் கொண்டு வந்து கட்டிய சேர் முழுவதும் மெழுகுவார்கள். மெழுகிய சேரில் வேப்பிலைக் கொத்தை சொருகிவிட்டு வேலையை முடித்துக் கொள்வார்கள். விதை விடுகிற காலத்தில் தான் சேரைப் பிரித்து கோட்டைகளை வெளியே எடுப்பார்கள்” (பக். 462 - 463).

இது மரபான விதைப் பாதுகாக்கும் முறைமை. சில இடங்களில் நொச்சி போன்ற இலைகளையும் கோட்டை, சேர்களுக்கு வெளியே பூச்சிகள் வராத வகையில் போட்டு வைப்பார்கள்.

பெயர்கள்        

மிராசு நாவல் கள்ளர் இன மக்களை மையமிட்டு இயங்குவதால், மனிதர்களுக்குப் பின் பட்டப் பெயர்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. சில இடங்களில் பட்டப்பெயரே ஆகுபெயராகவும் நிற்கிறது.

“இடங்காப்பிறந்தார், கொத்தப்பிரியர், அம்மானைத் தேவர், நாயக்கர், வன்னியர், நாட்டார், வம்பாளியார், குச்சிராயர், சோழகர், வாண்டையார், காளிங்கராயர்.... என்று பலவிதப் பட்டப் பெயர்கள் நாவலில் இடம் பெறுகின்றன. இவை கள்ளர் இனப் பட்டப் பெயர்களாக அமைகின்றன.

வயல் - பெயர்கள்

மனிதர்களுக்கு மட்டுமல்ல விளையும் வயல் களையும் பெயர் சுட்டி அழைப்பது நாட்டுப்புற வழக்கம். பெரும்பாலும் காரணப் பெயராகவும், சூழல் சார்ந்தும் இப்பெயர்கள் அமைகின்றன. மிராசு நாவலில் சேது காளிங்கராயரின் வயல்களின் பெயர்கள் இடம் பெறுகின்றன.

“சுந்தரி காணி, சொக்கங்காணி, முக்கடத்தான் காணி, சீவட்டி, செட்டிக்காணி, ராமநாதன், எள்ளடி கரையரத்தான் காணி, சோளமுட்டி சாமியார் குண்டு... நெட்டை, சம்பா வட்டம், தேவஸ்தானம், சுப்பிரமணியன்” (ப. 166).

“அரிச்சினங்காணி, சீவிட்டி” (ப. 459).

மீன்கள்

வேளாண் வயல்களில் நெல்லோடு மீன்களும் விளையும். இது வளத்தின் குறியீடு. வயலில் பயிரை ஒதுக்கிவிட்டு, தோண்டிக்கால் போட்டு கச்சால் வைத்து நீரை இறைத்துவிட்டு குழிமீன் பிடிப்பர். நாட்டு மீன்களின் வகைகளை நாவலில் சுட்டி உள்ளார். “குரவை, ஆரால், கெளுத்தி, கெண்டைப் பொடி, உளுவை, விலாங்கு மீன், சிலேப்பி” (ப. 167).

செடிகள்

வயல் வெளிகளில் குறிப்பாக வரப்புகளில் தானாய் முளைத்து வளரும் காட்டுச் செடிகள் பல உண்டு. தாவர இனங்கள் பற்றிய அறிவு நாட்டுப் புறத்தில் நிரம்ப உண்டு. நாவலில், “பூல், பூண்டுகள், காஞ்சிராணி, நெருஞ்சிமுள், நாயுருவி செடி, ஊமத்தை, எருக்கன், தஞ்சாவூரான் பூண்டு” (ப. 164). என்று பல தாவரப் பெயர்கள் இடம் பெறுகின்றன. தொட்டால் சுருங்கி, மீன்முள் செடி, கோரைப்புல் போன்ற பலவும் இவற்றில் அடங்கும்.

சடங்குகள் - நம்பிக்கைகள்

வழிபாடும் நம்பிக்கைகளும் மனித வாழ்வில் பெரும் பங்கு வகிப்பவை. அதே போல விழாக்களும் ஊர்ப்புற வாழ்வில் பெருமதி மிக்கவை. வேளான் சடங்குகள் யாவும் நம்பிக்கை சார்ந்தே நிகழ்கின்றன.

வேளாண்மைத் தொழிலைத் தொடங்கும் பொழுது விதை முகூர்த்தமும், நல்லேர் பூட்டுதலும் நடைபெறுவது நாவலில் சுட்டப் பெறுகின்றது.

நல்லேர் கட்டுவது ஆகட்டும், விதை மூகூர்த்தம் செய்வதாகட்டும், ஊர் பொது நிலத்தில் தான் அவ்வைபவம் நடைபெறும். நிலம் வைத்திருப்பவர் களாட்டும் இல்லாதவர்களாகட்டும் கண்டிப்பாய் அந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும்.... ஊரில் உள்ள எல்லாப் பிரிவினரும் பங்கேற்பர். முதல் நாளே தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப் படும். தேங்காய், பூ, பழம், சூடம், சாம்பிராணி, பத்தி ஆகியவற்றை வாங்கிக் கொள்வர். நல்லேர் பூட்டும் காளைகளை கழுவி குளிப்பாட்டி சுத்தம் செய்வர். மஞ்சள், குங்குமம் வைப்பர். ஏர் கலப்பை களையும் கழுவி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், திருநீரு பூசுவர்.

“ஊர் வெட்டியான் வந்து விதை முகூர்த்தம் செய்கிற நிலத்தில் சனி மூலைப் பக்கம் கொஞ்ச இடத்தை மண் வெட்டியால் நச்சுக் கொத்தாகக் கொத்தி ஐந்தாறு பாத்திகள் கட்டி சனி மூலையில் தாழம்பூவின் குருத்து மடல்களை நட்டு வைத்து விட்டு தயாராகக் காத்திருப்பர். கோயில் பூசாரி வந்ததும் அபிஷேகம் செய்து தேங்காய் உடைத்து சாம்பிராணி சூடம் காட்டி முடிந்ததும் அங்கே கூடி யிருக்கிற அத்தனைப் பேருக்கும் விபூதி குங்குமம் கொடுப்பர். அதற்கு பிறகு எல்லோரும் “நல்லேர்” உழப் போவார்கள். நூறு நூற்றைம்பது ஏர்களுக்குக் குறையாது. வரிசைக்கட்டி நிற்கும் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும். கொஞ்ச தூரம் உழுததும் ஏர் இல்லாதவர்கள் கலப்பைகளை ஆளுக்கு ஒன்றாக மாற்றி மாற்றிப் பிடித்துக் கொண்டு உழுவார்கள். நல்லேர் உழுது முடித்ததும் ஏற்கனவே வந்திருந்த விதைகளைத் தூவுவார்கள். விதை தெளித்து முடிந்தவுடன் குடங்களில் கொண்டு வந்த நீரை தெளிப்பார்கள். எல்லோருக்கும் சந்தனம் கொடுத்து விட்டு, தேங்காய், பழம், அவல், பொறிகடலை வெல்லம் போட்டு ஊறவைத்த அரிசி விநியோகம் நடக்கும்” (ப. 156 - 157). என விதை முகூர்த்தம், நல்லேர் பூட்டுதல் குறித்தப் பதிவுகள் உள்ளன.

கோடுகிளி முணியாண்டவன் பற்றிய நம்பிக் கைகள் (பக். 257- 259), நெல் தூற்றுவது குறித்த நம்பிக்கைகள் (ப. 451), சாம்பலாயம்மன் (சியாமளா தேவி) அம்மை போடுதல், பொங்கல் விழா, மாட்டுப் பொங்கல் (பக். 426 - 429). என்று பலவித நாட்டார் நம்பிக்கைகள் நாவலில் இடம் பெறுகின்றன.

வாழ்க்கை வட்டச் சடங்குகள்

வாழ்க்கை வட்டச் சடங்குகளில் முக்கியமாக இறப்புச் சடங்கு மிக விரிவாக நாவலில் பதிவாகி உள்ளது.

மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் பல்வேறு சடங்குகளையும் வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்பர். ‘மிராசு’ நாவலில் திருமணம், இறப்பு ஆகியவை பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

திருமணச் சடங்குகள்

மிராசு வீட்டுத் திருமணம். சேது காளிங்கராயர் மகன் அசோகனுக்கும், பெருமாக்கூர் தங்கவேல் தொண்டைமான் மகள் கஸ்தூரிக்கும் திருமணம். ஊர் மட்டும் அல்ல. வட்டாரமே கூடிவிட்டது. விருந்து. தவில் நாதஸ்வரம் கே. பி. சுந்தராம்பாள், எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரிகள். ஊர் உழைக்கும் மக்களின் சீர் செனத்திகள் என அமர்க்களப்படுகின்றது.

திருமணம் முடிந்ததும் ஓர் சடங்கு நடைபெறு கின்றது. “அந்த வைபவத்தை நடத்தி வைப்பவர் நாவிதர் ரெத்தினம்தான். ரெத்தினம் பெரிய புதுப்பானைக்குள் மஞ்சள் நீரை ஊற்றி வெள்ளி பாலாடையையும் தங்க மோதிரத்தையும் போட்டு மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஒரே சமயத்தில் கையைவிட்டு எடுக்கச் சொல்வார். இதில் யார் ஒருவர் தங்க மோதிரத்தை எடுக்கிறாரோ அவர்தான் கெட்டிக்காரரென்று நாவிதர் சொல்வார். மாப்பிள்ளையும் பெண்ணும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு பானைக்குள் கையைவிட்டு தங்க மோதிரத்தை எடுக்கத் தேடுவார்கள், தேடுவார்கள், அப்படித் தேடு வார்கள். இப்போதும் அப்படிதான் அசோகனுக்கும் கஸ்தூரிக்கும் தேடுதல் வேட்டை நடந்து கொண் டிருந்தது.” (ப. 626)

இப்படிப் பலமுறை நடக்கும். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க எண்ணி இருவருமே எதையும் எடுக்காமல் வெறுங்கையோடு வருவார்கள். சுற்றி இருப்பவர்கள் ஏதாவதொன்றை எடுத்துதான் ஆகவேண்டும் என்பர். சில சமயம் இரண்டையும் ஒருவரே எடுக்க, ஒருவர் வெறுங்கையோடு வருவர். ஆளுக்கொன்று எடுக்கும் போது மோதிரம் எடுத்தவரைக் ‘கெட்டிக்காரர்’ என்பது வழக்கம். இச்சடங்கு புதுமணத் தம்பதியர் கூச்சம் போகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை வலியுறுத்தியும் அமைகின்றது எனலாம். பாலியல் குறியீடாகக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

இதனைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வு நடக்கும். இந்த வைபவம் முடிந்ததற்கும் பிற்பாடு மாப்பிள்ளையையும் பெண்ணையும் குளத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் மாப்பிள்ளை கையில் ஒதியன் போத்தைக் கொடுத்தார்கள். பெண்ணின் கையில் மண் குடத்தைக் கொடுத்தார்கள். பெண்ணைக் குளத்தில் இறங்கி குடத்தில் நீர் எடுக்கச் சொன்னார்கள். கஸ்தூரி மண் குடத்தில் நீர் எடுத்து முடித்ததும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேளதாளத் தோடு வீட்டின் புறக்கடைப் பக்கம் அழைத்துக் கொண்டு வந்தார்கள். புறக்கடையில் மாப்பிள்ளை ஒதியன் போத்தை நட்டு முடித்ததும் பெண் கொண்டு வந்த நீரை ஒதியம் போத்துக்கு ஊற்றினார்கள். இந்த சம்பிரதாயத்தை முடித்துக் கொண்ட பிற்பாடு மாப்பிள்ளையையும் பெண்ணையும் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டுபோய் ஊஞ்சலில் உட்கார வைத்து ஆட்டிவிட்டார்கள். பாடத்தெரிந்த பெண்மணி யருத்தர்

“பாலாலே கால் கழுவி

பட்டாலே துடைத்து

மணி தேங்காய் கை கொடுத்து

மாப்பிள்ளையை உள்ளே அழைத்து”

என்று நலுங்கு பாடிக்கொண்டிருந்தார். பின்னர் மாப்பிள்ளையையும் பெண்ணையும் தரையில் பட்டுப்பாய் விரித்து உட்கார வைத்து பால் பழம் கொடுத்தார்கள். ஒரு தம்ளரில் இருந்த பாலைப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஆளுக்கு பாதியாய் குடித்து முடித்ததும் தனித்தனியே எழுந்து போனார்கள். ( பக். 627 - 628 )

இதில் ஒதியன் போத்து நடுதல், நீர் ஊற்றுதல் என்பவை வளமையின் குறியீடுகள். ஆணும் பெண்ணும் இல்லறம் ஏற்று, மறு உற்பத்தியில் ஈடுபடுவதின் குறியீடு. பால்பழம் இருவரும் சேர்ந்துண்பது வாழ்வு முழுக்க இன்பம் பெருகி இரண்டறக் கலந்து வாழ்வதன் குறியீடு எனக் கொள்ளலாம்.

இறப்புச் சடங்குகள்

இறந்த உடன் இறந்த உடலுக்குச் செய்ய வேண்டியவைத் தொடங்கி சுடுகாட்டில் கொள்ளி போடுவது வரை பல்வேறு நிலைச் சடங்குகள் நாவலில் இடம் பெறுகின்றன.

“வம்பாளியாரை (பிணத்தைக்) குளிப்பாட்டி அவர் எப்போதும் பிரியமாய் அணிந்திருக்கிற உடைகளை போட்டுவிட்டு நெற்றியில் சந்தனத்தை கொஞ்சம் கெட்டியாகக் குழைத்து அகலப் பொட்டு போல் வைத்துவிட்டு நாணயத்தை சந்தனத்தில் பதித்து வைத்தனர். வெற்றிலை, சீவல், புகையிலை மூன்றையும் கசக்கி வாய்க்குள் திணித்துவிட்டு ‘வாய்கட்டு’ போட்டனர். மூக்குத் துவாரங்களில் கொஞ்சம் போல் பஞ்சை திணித்து வைத்தனர். இரண்டு கால் கட்டை விரல்களையும் கை கட்டை விரல்களையும் வேஷ்டியில் கொஞ்சம் போல் கிழித்துக் கட்டி பலகையில் படுக்க வைத்துவிட்டு தலைக்கு அணைவாய் வைக்கோலில் ‘சுருணையைக் கட்டி வைத்தனர்’ (ப. 691).

பிணத்தை எடுத்துச் செல்ல பாடை கட்டுதல், பாடையை ஜோடித்தல் முக்கியமான ஒன்று. ஊருக்கு ஓரிருவர்தான் இதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பூக்களை தனியாகவும், தோரண மாகவும் பயன்படுத்துவர். பிணத்துக்கு விழுந்த மாலைகளையும் பயன்படுத்துவர். ஜோடனைக் குறித்து, “நமசு வம்பாளியார் எதிர் வீட்டு திண்ணையில் அமர்ந்து தென்னங்குருத்தோலையை லாயக்காய்

சீவி வாழைக்கன்றின் அடியையும் முனையையும் சீவி விட்டு குடங்களை செப்பனிடுவதில் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருந்தார். பாடையை எவ்வளவு தான் பூக்களால் ஜோடித்தாலும் பாடையின் உச்சியில் ஓலையால் செய்த குடங்கள் வைத்தால் தான் பாடை தேர்போல் ஜொலி ஜொலிக்கும்” (ப. 708).

அதே போல உறவு முறையில் எடுக்கப்படும் கோடி, கோடி ஊர்வலத்தில் எடுத்துவரப்படும் பொருள்கள் பற்றியெல்லாம் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணத்தைக் குளிப்பாட்டும் முறை,

“நாவிதர் ரெத்தினம் பந்தலில் மரப்பலகை (பெஞ்ச்)யைப் போடச் சொல்லி முடித்ததும், திண்ணையில் வைத்திருந்த பிணத்தை பலகையில் கிடத்தச் சொன்னார். கிடத்தியதும் நாவிதர் பிணத்திற்கு முதல் நாள் போட்டிருந்த கால் கட்டு கை கட்டை அவிழ்த்துவிட்டு நெற்றிக் காசை எடுத்தவர் அங்கே சுற்றி நின்றவர்களைக் கூப்பிட்டு பிணத்தைச் சுற்றி (மறைப்பு) பண்ணச் சொன்னார். அவர்கள் அந்தக் காரியத்தை செய்து முடித்ததும் பிணத்திற்குப் போட்டிருந்த ஆடைகளை களைத்து ஒதுக்குப் புறமாய் வைத்துவிட்டு பிறகு குடங்களில் இருந்த நீரைக் கொண்டு வரச் சொல்லி இரண்டு குடம் நீர்விட்டு குளுப்பாட்டியதும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்து மறுபடியும் பிணத்தை குளிப் பாட்டிவிட்டு புதுத்துணியால் பிணத்தை போர்த்திக் கட்டிவிட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த பெண் களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “அம்மாவுக்கு தாலி களட்டற வேலயப் பாத்துட்டு புள்ளைங்க ரெண்டு பேரையும் ஐயாகிட்ட திரவியத்தையும் பணத்தையும் குடுத்து வாங்கிட்டு போயி வூட்டுக்குள்ள வைக்கச் சொல்லிட்டு திரும்பிப் பாக்காம வந்துடச் சொல்லுங்க” (பக். 710 - 711).

அடுத்து வாய்க்கரிசி போடும் சடங்கு. தொடர்ந்து இசை முழங்க பிணத்தைத் தூக்கிச் செல்லல் சுடுகாட்டில் கொள்ளி வைத்தல் எனும் பிணத்துக்கு தீமூட்டுதல் நடைபெறுகின்றது. அதனை,

“நாவிதர் சத்தியமூர்த்தியின் (மகன்) தோளில் நீர் நிரம்பிய கலயத்தை தூக்கி வைத்து அரிவாள் முனையால் கலயத்தில் ஒரு துளை போட்டு சுற்றி வரச் சொல்லி விட்டு பரமசிவத்தை கலயத்திலிருந்து பீய்ச்சியடிக்கும் நீரை புறங்கையால் விசிறிக் கொண்டே வரச் செய்தார். மூன்றாவது சுற்றுக்கு உடன்பட்ட பங்காளி ஒருத்தர் அந்தக் காரியத்தை செய்து முடித்ததும் சத்தியமூர்த்தியின் கையில் கொள்ளிக் குச்சியைக் கொடுத்து தலைமாட்டில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்விடும்படி சொன்னார். பக்கத்தில் இருந்தோர்கள் வைக்கோல் பந்தத்தைக் கொளுத்தி சிதையை சுடர்விட்டு எரியச் செய்தனர். பரமசிவமும் (இன்னொரு மகன்) முக்கியப்பட்டவர்களும் பிணத்தின் கால்மாட்டருகே விழுந்து வணங்கிவிட்டு கூட்டத்தோடு நடக்க ஆரம்பித்தனர். பினம் சுடர் விட்டு எரிய ஆரம்பித்துவிட்டது” (ப. 713).

இப்படி வாழ்க்கை வட்டச்சடங்குகள் நாவலில் இடம் பெறுகின்றன. இவை களளர் இன மக்களின் சடங்குகள் என்றாலும் இடத்திற்கு இடம் மாறுபடுவதைக் காண முடியும்.

ஆக, மிராசு நாவலில் சி.எம்.முத்து தஞ்சை மாவட்டத்தின் நிலவுடைமை சார்ந்த கள்ளர் இன மக்களின் வாழ்வியலைப் பண்பாட்டுப் பனுவலாகப் படைத்தளித்துள்ளர். “இனவரைவியலாளரைப் போன்று எழுத்தாளர்களும் வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளையும் அதிகம் பொருட்படுத்தாத நிகழ்வு களையும் கவனிக்கிறார்கள். ஏனென்றால் இவைதான் சமூகத்தை ஒழுங்குபடுத்துகின்றன. தங்களுக்குள்ளும் மற்றவரையும் கவனிப்பதன் மூலமும் எழுத்தாளர்கள் பண்பாட்டின் அடிப்படையை வெளிக்கொணர முடியும். எழுத்தாளர்கள் அவர்கள் வர்ணிக்கும் பண்பாட்டிற்குள்ளேயே வாழ்வதால் பண்பாட்டைக் குறித்து இனவரைவியலாளருக்கு இல்லாத புரிதல் எழுத்தாளர்களுக்குண்டு. இவர்கள் அப்பண்பாட்டின் மொழி, வரலாறு, விழுமியங்கள் மற்றும் கோட்பாடு களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்” (மறுமேற்கோள் ஆ.சிவசுப்பிரமணியன், 2014 : 34). என்ற ஜோனட் டாலிமனின் வரையறை மிராசு நாவலின் படைப் பாளர் சி.எம்.முத்துவுக்கு மிகவும் பொருந்தி நிற்கிறது.

மிராசு நாவலில் சி.எம்.முத்துவே இரத்தமும் சதையுமாக வாழ்கிறார். இந் நாவலை ஓர் இன வரைவு பண்பாட்டுக் காட்சியகம் எனச் சுட்டலாம்.

பயன்பட்ட நூல்கள்:

  1. மிராசு, சி.எம்.முத்து, அனன்யா, தஞ்சாவூர், 2016
  2. இனவரைவியலும் தமிழ் நாவலும், ஆ. சிவசுப்பிர மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2014.
  3. இலக்கிய இனவரைவியல், ஞா. ஸ்டீபன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2017.
  4. தமிழ் இலக்கிய மானிடவியல், ஆ. தனஞ்செயன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2014.

மிராசு

சி.எம்.முத்து

வெளியீடு: அனன்யா பதிப்பகம்

தஞ்சாவூர் - 5

தொலைபேசி எண் : 9442346504

ரூ 780/-

Pin It