early india book 450விரிவான, நீண்ட நெடிய வரலாற்று வாழ்க் கையை உள்ளடக்கிய நாடு இந்தியா.  இது பன்முகத் தன்மையில் ஒருமுகத் தன்மையை உள்ளடக்கியே வரலாற்றில் வாழ்ந்து வளர்கிறது, இதைக் கூர்ந்து நோக்கி ஆழமாகப் புரிந்து கொண்ட மகாகவி பாரதி, “பாரத பூமி பழம் பெரும் பூமி! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!” என்று வியப்புடன் அறைகூவல் விடுத்தான்.

உலக வரலாற்று வளர்ச்சியில் இந்தியாவின் வாழ்க்கையை கி.மு. 1000 முதல் கி.பி. 1300 வரை சுமார் 2300 ஆண்டு அளவில் ஆய்வு செய்து அவற்றை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்.  ‘முற்கால இந்தியா’ என்ற இந்த வரலாற்றை இவர், மீள் உருவாக்கம் செய்துள்ள முயற்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் தெளிவாகத் தொடக்கத்தி லேயே குறிப்பிடுகிறார்:

வரலாறு எழுதும் பணியைத் தொடங்கிய காலத்தில் உள்ளபடியே எழுதிய புத்தகத்தை, இப்போது வாழ்க்கையின் பிற் பகுதியில் திருத்தி எழுதும்போது தன் வரலாற்றுக் கூறுகளைப் பெற்று விடுகிறது.  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூலிற்குத் திரும்புதல், வரலாற்று வாசிப்பில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள பழங்கால இந்தியா என்னும் இல்லத்திற்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

வரலாற்று வாசிப்பு மாற்றங்கள் சில புதிய தரவுகள் கிடைத்ததால் எழுந்தவை. இன்னும் பல ஏற்கனவே இருக்கின்ற தரவுகளைப் புதிதாகப் பொருள் கொண்டதால் எழுந்தவை. அந்த வாசிப்புக்கள் பற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. அவற்றில் நான் பங்கெடுத்துக் கொண்டதன் மூலம் அவ்விவாதங்கள் அக்கால கட்டத்தைப் பற்றிய என்னுடைய சொந்தப் புரிதல்களைச் செதுக்கின.

“என்னுடைய இந்த முயற்சி முற்றிலும் வேறொரு புத்தகத்தை எழுதாமல், தகவுடையது என நினைக்கும் வாசிப்புக்களை உள்ளே நுழைப்பது தான்.  ஆயினும் தவிர்க்கவியலாத வகையில் இப் புத்தகத்தில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துள்ளன.”  இதை நிறுவும் நோக்கத்தில் வியக்கத்தகுந்த விதத்தில் சாதனையாக்கியிருக்கிறார் வரலாற்றாசிரியர்.

காலந்தோறும் வரலாறு வாசிக்கப்படுகிறது.  நிகழ்கால வெளிச்சத்தில் வரலாறு புதிய புதிய தோற்றங்களில் மிளிர்கின்றன.  தொடர்ந்து வரலாறு புதிய உண்மைகளைப் புலப்படுத்துகின்றன.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவில் வரலாறு மதிப்பிற்குரியதாகவே தோன்றுகின்றன.  மனிதனை அவனுடைய வரலாற்றுச் சூழலிலிருந்து பிரிக்க முடியாது அவன் தொடர்ந்து வரலாற்றில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக் கிறான்.  இதைப் புலப்படுத்துவதுதான் வரலாற்றின் தனிச்சிறப்பு. ஒவ்வொருவரும் தன்னிலிருந்தே தான் சார்ந்துள்ள புற உலகை உணர்ந்து அவனின் விருப்பு வெறுப்பு அடிப்படைகளிலான உறவை மையப்படுத்தித் தன்னுடைய வரலாறு பற்றிய கருத்தை வடிவமைத்துக் கொள்கிறான். இதனால், வரலாறு குறித்த கருத்துக்களும், மதிப்பீடுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டும், முரண்பட்டும் வாத விவாதங்களுக்கு உள்ளாகிறது.  இது, அறிவியல் கண்ணோட்டத்திலிருந்து விலகி, கற்பனையான மதிப்பீடுகளுக்கு உள்ளாவதோடு தவறான ஊகங் களை வடிவமைக்கிறது.

இது தொடர்பாக, வரலாற்றாசிரியர் தன்னுடைய கருத்தை இப்படி முன்வைக்கிறார். “அந்த வரலாற்று ஆசிரியர்கள் யார், ஏன் அவர்கள் எழுதினார்கள்.  அவர்கள் எழுதிய வரலாறுகளை வடிவமைத்த அறிவுசார், கருத்து நிலைகள், செல் வாக்குகள் என்ன ஆகிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.  இதுவே, இப்போது சுருக்கமாக வரலாற்றெழுதியல் என்று அழைக்கப்படுகிறது.  வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல் வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல.  வரலாற்றுச் சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. விளக்கங்கள் விவாத தருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பொதுமைகளை வழங்கும் சான்றுகளைப் பகுப்பாய்வு செய்வதி லிருந்து வருகின்றன.  புதிய சான்றுகளால் அல்லது ஏற்கனவே இருக்கின்ற சான்றுகளுக்குப் புதிய பொருள்கள் கொடுப்பதால் பழமையைப் பற்றிய ஒரு புரிதலை நாம் அடையமுடியும்”

அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் வரலாற்றின் வளர்ச்சியை விளக்க முன்வரும் வரலாற்றாசிரியர் மனித சமுதாய இயங்குதலை அதன் இயல்புகளோடு விளக்க முயற்சிக்கிறார்.  இந்த அடிப்படையிலேயே இவர் தமக்குக் கிடைத்த எல்லாவிதத் தகவல்களையும் ஒருங்கிணைத்து வரலாற்றை வடிவமைக்க முயற்சிக்கிறார். இந்த தனிப்பட்ட முயற்சியை ‘முற்கால இந்தியா’ ஆய்வு நூலில் முழுமையாகக் காணமுடியும்.

தன்னுடைய தெளிவான, உறுதியான கண் ணோட்டத்தின் வாயிலாக வரலாற்றை அறிவியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறார். “மனித அறிவியல்களில், வலியுறுத்தப்படுவது போன்று, யதார்த்தத்தை எண்ணிப்பார்த்தல் சமூக அளவிலும், பண்பாட்டு அளவிலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் (மனிதச்) செயல்பாடுகள் பல்வேறு காரணி களைக் கொண்டுள்ளன என்றும் வாதிடப்படுவது மிக முக்கியமானது.  அறிவு முன்னேற முன்னேற இந்த நோக்குகள் சில தவிர்க்கவியலாத வகையில் மாறும். நிகழ்காலத்தின் மீது கடந்த காலமும், கடந்த காலத்தின் மீது நிகழ்காலமும் எவ்வாறு மோதிக் கொள்கிறது என்ற விழிப்புணர்வை வரலாற்று விளக்கமே உருவாக்குகிறது.

மேலும், பழங்கால இந்திய வரலாறு, தொல்லியல் தரும் சான்றுகளைச் சார்ந்து, அதாவது மேற்பரப்பு ஆய்வின் வழியாகவும் அகழ்வாய்வின் வழியாகவும் கண்டுபிடிக்கப்பட்ட புழங்கு பொருள் எச்சங்கள் தொல்பொருள்கள் போன்ற பருப் பொருட் தன்மை உள்ள முப்பரிமாண ஆதாரங் களைச் சார்ந்து எழுதுவது அதிகரித்து வருகிறது.

தொல்லியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் அறிவியல் துறைகளிலிருந்து பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றால் அளிக்கப்படும் தகவலின் வளவாய்ப்பு, கால நிலை, சுற்றுச்சூழல், குடியிருப்பு அமைவு முறைகள், தொல் - நோய்க் கூறியல், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவை பற்றிய தரவை உள்ளடக்கியதாக விரிந்து உள்ளது!

தொடர்ந்து, இவரே தொல்லியல் ஆய்வு முறைகளுக்கும்,  தொன்மங்களை ஆய்வு செய்யும் முறைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறார்.  “மானிடவியலாளர்களால் தொன்மங் களைப் பகுப்பாய்வு செய்வதற்கும், இரத்த உறவு முறைகளை ஆய்வதற்கும் ஆதாரப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகிற வாய்மொழி மரபுகள் பற்றிய ஆய்வுகள் - ஆய்வோடு தொடர்புடையது.  தொன் மங்கள் பழைய காலத்திற்குப் பின்னோக்கிப் போகத் தேவைப்படுகின்ற ஒன்று மட்டுமல்ல, சில நேர்வுகளில் அவை பழைய கருத்துக்களைச் சுமந்து வருதல் கூடும்.  ஆனால், அவற்றினுடைய உறுதி யற்ற கால வரிசையினாலும், அவை பொதுவாக நடந்த நிகழ்வுகளின் ஆவணங்கள் இல்லையென்ற உண்மையாலும், தொன்மங்களை வரையறுக்கப் பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த முடியும்.  தொன்மமும், வரலாறும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையானவை, தொன்மம் மெய்யாக நடந்தவை பற்றியது அல்ல.  ஆயினும் தொன்மத்தில் மறைந்து கிடக்கிற சமூக எதிர்பார்ப்புக்களை வெளிக் கொணருதல், சில வகையான வரலாறுகளை மீள் உருவாக்கம் செய்வது பயனுள்ளதாக அமையும்.  மிக எச்சரிக்கையுடன் கையாளாவிட்டால், தொன்மங் களைப் பொருள் கொள்ளுதல் அவற்றை எழுதி யோரின் கற்பனை, ஆழ்மனநிலை, நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கும்.  அதன் விளைவாக, சமூக இணைப்பிலும் மோதலிலும் மறைந்திருக்கும் தொன்மத்தின் கட்டமைப்பு தொன்மமாகவே சமூகத்தில் தங்கிவிடும்”

இதுபோல, ஆழமாகவும், விரிவாகவும், துல்லிய மாகவும், வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் உள்ள நெருக்கடிகளையும், சிக்கல்களையும் இவர் புரிந்து கொண்டு ‘முற்கால இந்தியா’ என்ற வரலாற்றை இனம் காட்டுகிறார்.  வாய்மொழி மரபுகள் சார்ந்த தகவல்களைப் பற்றிய தனது மதிப்பீடுகளையும் இவர் சுட்டிக் காட்டுகிறார்:-

“இன்னொரு வகையாக மனப்பாடம் செய்தல் - மகாபாரதம் போன்ற இதிகாசப்பாடலை மனப் பாடம் செய்தல் இறுகிப் போய் விடுவதில்லை; மிகவும் இளகிய நிலையில் உள்ள ஒன்று.  அதனால், மகாபாரத இதிகாசப் பாடல் தொகுப்பில் பல இடைச் செருகல்கள் தோன்றுவதும் சாத்திய மாயிற்று.  இத்தகைய பனுவல்களை அணுகுவதற்கு வாய்மொழி மரபுகளில் தொழிற்படும் வழிமுறைகள் பல அணுகுமுறைகளை வழங்கியுள்ளது.”

இவர், குறிப்பிடுவதும் ஆய்வு செய்வதும்.  ஓலைச்சுவடிகள், மண்பானைப் பதிவுகள், தோல்கள், மரப்பட்டைகள், கண்டறியப்பட்டுப் பயன்படுத்தப் படாத காலத்தில் வாய்மொழி மரபுகள் எவ்வாறு மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாகியிருக் கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், இவர், ஆஸ்ட்ரோ - ஆசியாடிக் மொழிகள் குழு, திராவிட மொழிகள் குழு ஆகியவை பற்றியும் விளக்குகிறார்: “ஆஸ்ட்ரோ - ஆசிய மற்றும் திராவிட மொழிக் குடும்பத்தின் சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டு ஆரிய இந்தோ - ஆரிய மொழிக்குடும்பம் படிப்படியாக வட இந்தியாவில் பரவியுள்ளது.  இந்தோ - ஆரியர் உண்மையில், இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியைப் பேசிய ஒரு மொழிக்குழு.  அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்பதைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டியுள்ளது.  ஆகவே, ஆரியர்களை ஓர் இனமாகக் குறிப்பிடுவது சரியானதல்ல.  இந்தோ- ஆரிய மொழிகளைப் பேசியவர்களின் இன அடை யாளங்கள் அறியப்படவில்லை.”

“ஒவ்வொரு நாட்டின் தனித்தன்மைகளும் பலவகையான தொடர்புகளாலும், எதிர்ப்புக் களாலும் தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளா கின்றன.  வரலாற்று வளர்ச்சி என்பது இது போன்ற தொடர்ச்சியான மாற்றங்களால் தான் நிகழ்ந்து வருகிறது.  இந்த வகையில் தற்கால வரலாறுகள் எப்படிப் புதிய புரிதல்களுக்கு உள்ளாகின்றன என்பதையும் இவர் அடையாளப்படுத்துகிறார்: இந்திய வரலாற்றின் தொடக்கத்தோடு தொடர் புடைய இப்போதைய விவாதம் ஒன்றில் - மண்ணின் மைந்தர்களையும், அந்நியர்களையும் வேறுபடுத்திக் காணும் முயற்சியில் - தொல்லியலும், மொழி யியலும் ஈடுபட்டு உள்ளன.  ஆனால், சமூகங் களும், அவற்றினுடைய அடையாளங்களும் நிரந்தர மானவையோ நிலைத்திருப்பவையோ அல்ல என்று வரலாறு காட்டுகிறது.  ஒரு காலத்தில் ஒரு பகுதிக்குப் புதிய மக்கள் வருகையாலோ அல்லது வாய்ப்பான புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றதாலோ அல்லது நீண்ட

காலம் பாதிப்பு ஏற்படுத்துகின்ற உள்ளூர் மாற்றங் களாலோ சமூகங்களுடைய கட்டுமானம் மாற்றம் அடைகின்றது.  எல்லைப் புறங்கள், மலைக் கண வாய்கள், வளமான சமவெளி போன்றவற்றால் மாற்றம் அடைவதற்கு அதிக சாத்தியப்பாட்டைச் சில பகுதிகள் கொண்டுள்ளன.”

தன்னுடைய ‘முற்கால இந்தியா’ குறித்துத் தான் மேற்கொண்ட முயற்சிகளையும் நோக்கங் களையும் பற்றி வரலாற்றாசிரியர் இப்படிக் குறிப்பிடு கிறார்:-

“காலவரிசை எப்போதும் உறுதியற்றே உள்ளது என்றாலும், காலவரிசை நிலையை வழங்குகிற வரை கோடு சட்டகமாக அரசியல் வரலாற்றைப் பயன்படுத்துவதற்கு இந்தப் புத்தகத்தில் முயன்று உள்ளேன்.  பழங்கால இந்திய வரலாற்றின் நன்கு அறியப்பட்ட அம்சமாகச் சில ஆட்சியாளர்களின் பெயர்களையும் இப்புத்தகம் அறிமுகப்படுத்தி யுள்ளது.  ஆயினும், எங்கே, ஏன் மாற்றங்கள் நிகழ்ந் திருக்கின்றன.  அம்மாற்றங்கள் ஒவ்வொரு அம்சத் திலும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தின என்பவற்றைக் காட்டும் நோக்கத்துடன், பரந்த அளவில் ஒன்று கலந்துள்ள அக்கால கட்ட அரசியல், பொருளாதார, சமூக, சமயக் கூறுகள் மீதே ஒவ்வொரு இயலின் முதன்மையான கவனக் குவிப்பும் செலுத்தப்பட்டு உள்ளது.  தொடர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படையாக இருக்கும்.

இந்தியாவின் தனித்தன்மையை இனம் காட்டு வதன் வாயிலாக, ‘முற்கால இந்தியா’வை விசால மான அளவில் ஆய்வுகளை நிகழ்த்திக் கருத்துக் களை முன்வைப்பதன் விளைவாக இந்தியாவைப் புரிந்துகொள்ளப் போகிறது.  இதை அவர் இப்படி விளக்குகிறார். “அரசு அதிகாரம் பெறுவதற்கு பொருளாதாரத்தைக் கைக் கொள்வதால், அரசு களின் வடிவங்களுக்கும் பொருளாதாரங்கள் பொருந்திப் போகின்றன.  உயிர்ச்சூழல், பயிர் முறைகள், பாசன வசதிகளின் வேளாண் நிலங் களின் மீதான படிநிலையான உரிமைப்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்து வேளாண் பொருளா தாரங்கள் வேறுபடுகின்றன.  அதிகாரத்தின் மூல வளங்கள், பொருளாதாரங்களின் வள - ஆதாரங்கள், மனித உழைப்பைப் பெறுவதிலும், கட்டுப்படுத்து வதிலும் உள்ள பலவகையான முறைகள் ஆகிய வற்றைச் சார்ந்த (சமூக, பொருளாதார- பண் பாட்டு) வடிவங்கள் வளர்ந்துள்ளன.  சில பகுதி களில் அதிக செயலூக்கம் மிக்க பொருளாதார நடவடிக்கையான வர்த்தகத்துடன் வளர்ச்சி பெற்ற நகரங்கள் வணிக மையங்கள் ஆகின.  கடந்த காலத்தில் இந்தியா பற்றிய வரலாறுகள், கடல் வணிகத்தை முக்கியமற்ற நிலைக்குத் தள்ளிவிட்டு, அடிப்படையில் நிலத்தையே மையமாகக் கொண் டிருந்தன.  இந்தியாவில் வணிகப் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகர்கள் நிலை வெறுத்தலுடன் தொடர்புடைய புதிய சமூக அடையாளங்களின் உருவாக்கம் ஆகியவற்றோடு கடல் வணிகத்திற்கும் உரிய கவனம் கொடுத்ததன் மூலம் இப்போது இது சரி செய்யப்பட்டுள்ளது.”

இவருடைய இந்த மதிப்பீடுகள் வெளிப்படை யானவை.  இந்த அடிப்படையிலேயே இந்திய வாழ்க்கையை அதன் வரலாற்றை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி இவர் வழங்கியுள்ளது ஒரு தெளி வான புரிதலுக்கு இட்டுச் செல்லுகிறது.  இந்திய வரலாறு குறித்துக் கூடுதலான தகவல்களையும், தடயங்களையும், தரவுகளையும் முன்வைத்து ‘முற்கால இந்தியா’வை உணரவைக்கிறார்.

புவியியல் அடிப்படையில் ‘முற்கால இந்தியா’ வை வடக்கு தெற்கு என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றின் தனித்தன்மைகளையும், சிறப்புக்களையும் ஆழமாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

கி.மு. 1600- 1700 கால அளவில் தோன்றிய ஹராப்பா நகரமாதலிலிருந்து ‘முற்கால இந்தியா’ வின் வரலாற்றை இவர் தொடங்குகிறார்.  அதைத் தொடர்ந்து வந்த வேத காலம். இரும்பு கை வினைப் பொருட்கள் காலம் வரை தகவல் களையும் ஆய்வுகளையும் முன்வைக்கிறார்.

தொடர்ந்து, 6ம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளி நகர்மயமாவதைப் பதிவு செய்கிறார்.

மத எழுச்சிக் காலத்தில் மகாவீரர், புத்தர் போன்ற மாமனிதர்கள் தோன்றி சமணமத, புத்த மத எழுச்சிகளை உருவாக்கி உலக நன்மைக்காக வழங்கப்பட்ட முயற்சிகளைக் குறித்துப் பேசுகிறார்.

அதன்பிறகு, பாரசீக ஆக்கியாபெனிட் மா மன்னன் சைரஸ், அலெக்சாண்டர் படையெடுப்பு பற்றிய வரலாற்றும் பின்னணியைக் காட்சிப்படுத்து கிறார்.

உள்நாட்டிலும், அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த சூழல்களையும் விளக்குகிறார்.

ஆகவே, உலக வளர்ச்சியின் விளைவாக நிகழ்ந்த நவீனமான மாற்றங்கள் இந்தியாவை எப்படியெல்லாம் மாற்றி அமைத்தன என்பதையும் விளக்குகிறார்.

அதைப் போலவே, கி.பி. 1300 வரை நிகழ்ந்த இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளையும், மாற்றங் களையும், விளைவுகளையும் இவர் ஆவணப்படுத்து கிறார்.

மௌரிய வம்சத்தின் தோற்றத்திற்குப் பிறகு, மன்னராட்சி முறை வலிமை பெற்றதும் அதன் விளைவாக இந்தியாவில் பேரரசுகள் விரிவடைந்த வளர்ச்சி முறைகளும் படிப்படியாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.

அசோகர் காலம் முதல் புத்தமதத்தில் ஏற்பட்ட வளர்ச்சியையும், அந்நிய நாடுகளில் அது நிலைபெற்று வளர்ந்த நிலைமைகளையும் இவர் விவரிக்கிறார்.

வேத, உபநிஷத், சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களின் தோற்றங்களையும், அவை நிகழ்த்திய மாற்றங்களையும் விளக்குவதன் வாயிலாக இந்தியாவின் ஆன்மீக ஆளுமையை உணர்த்து கிறார்.  அதைத் தொடர்ந்து முகம்மதிய, கிறித்துவ மதங்களின் தாக்கங்களையும், இந்தியாவில் அவற்றின் வளர்ச்சியையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் வரலாற்றின் இயல்பான மாற்றங்கள் என்பதை இவர் அடையாளம் காண்கிறார்.

வரலாற்று வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த ஒவ்வொரு அம்சத்தையும் இனம் கண்டு சொல்லுகிறார்.  காலனி ஆதிக்கத்தின் விளைவாக மேற் கத்திய அறிவியலின் தாக்கங்களையும், மாற்றங் களையும் புலப்படுத்துகிறார்.

“முற்கால இந்தியா”வின் பன்முகத் தன்மைகள் விரிசல்கண்டும், ஒருங்கிணைந்தும் வரலாற்றில் இயங்கி வளர்ந்து கொண்டிருக்கும் போக்கை விளக்கி ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து வளரும் முறைகளை அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் ஆவணப் படுத்துகிறார்.

ஒவ்வொரு தனிமனிதனின் வரலாற்றையும் உலக வரலாற்றுடன் ஒருங்கிணையும் படி அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் இந்திய வாழ்க் கையை அறிந்து கொள்ளச் செய்கிறார்.

நாடு, சாதி, மதம், இனம், மொழி, நிறம் போன்ற மனித இன அடையாளங்களை விருப்பு வெறுப்புக்கு உள்ளாகாமல் அறிவியல் அடிப் படையில் உணர்ந்து விளக்கிக் கூறி அடிப்படை வாதத்திற்கு எதிராக ரொமிலா தாப்பர்.  ‘முற்கால இந்தியா’வை வடிவமைத்திருக்கிறார் என்றே கருதலாம்.

“ஒரு துறையில் நுட்பமான சிறப்பறிவு இல்லாமல் ஒரு விடயப் பொருளைப் பற்றிய கூர்மையான ஆராய்ச்சிப் பார்வையைப் பெறுதல் சாத்தியமற்றது என்னும் நிலைமையை இருபதாம் நூற்றாண்டில் பொதுவாக எல்லா அறிவுத்துறைகளிலும் சிறப்புப் புலமைத்துவத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் தன்மை உருவாகியுள்ளது.  அத்தகைய நுட்பமான சிறப்பறிவு வல்லுநர் ஆய்வு செய்யப் படும் பொருளைப் புரிந்து கொள்ளுதல், அதனால் விளையும் உவகை ஆகிய இரண்டையும் பெருக்கு கின்றார்.

“இவையே வரலாற்றை உயர்ந்த புலமைத் துறையாக மாற்றியுள்ளன.”

“இவற்றின் விளைவாக வரலாற்றை எழுதும் கற்றுக் குட்டிகளுக்கும், தொழில்முறை வரலாற்றிய லாளருக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டு உள்ளது.  இத்தகைய வரலாற்றுச் செயல் நிலையே, வரலாற்று ஆய்வில் உயர்ந்த நாட்டமுடைய சில ஆர்வங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்கின்றது.

இதுபோன்ற தெளிவான ஆழமான நுட்ப மான புரிதல்களோடு ஏராளமான தகவல்களையும், தரவுகளையும் அடிப்படையாக வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஆணவப்படுத்தப்பட்டிருக் கிறது ‘முற்கால இந்தியா’

ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருந்து வரும் இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த அரிய ஆய்வு நூல் வரலாற்றுக் கண்ணோட்டத்தைத் தெளிவுபடுத்துகிறது.  தமிழ்ச் சூழலுக்கு இது ஒரு புதுமை.

முற்கால இந்தியா

ரொமிலா தாப்பர்

தமிழில்: அ. முதுகுன்றன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 6359906

` 850/-

Pin It