ஐந்துநாள் சுற்றுப்பயணமாக (5.6.2011 முதல் 10.6.2011 வரை) டோக் பெருமாட்டி கல்லூரிப் பேராசிரியைகளான முனைவர் அஞ்சலி அன்னாபாய் முனைவர் மூ.தமிழரசி, செல்வி ஆ.பாப்பா, திருமதி ஜெயசந்திரா (கணினியியல் துறை), திரு. ராஜசேகரன் (வழக்கறிஞர்) ஆகிய நாங்கள் ஐந்தாம் தேதி காலை கொழும்பு சென்றோம். கொழும்பில் நாங்கள் தங்கியிருந்த இடம் ‘வல்லவத்தை’ என்கிற இடமாகும்.

இலங்கையைச் சுற்றிக் காண்பிக்க எங்களுடனிருந்த எங்களது மாணவி செல்வி டயானா நாங்கள் தமிழாசிரியர்கள் என்பதால் கொழும்பில் வாசம் செய்த மூதறிஞர் கா.சிவத்தம்பி அவர்களின் இல்ல முகவரி மற்றும் அலைபேசி எண்ணை முன்னரே பெற்று வைத்திருந்தார். அன்னாரது இல்லத்திற் கருகிலேயே நாங்களும் தங்க நேரிட்டது கடவுள் கிருபையே.

அலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டு எங்களை அறிமுகப்படுத்திய பிறகு அவர் நேரில் சந்திப்பதற்கான நேரத்தை வினவினோம். அப்பொழுது அவர் அறுவைசிகிச்சை செய்து பெரும் வாதையில் படுக்கையில் இருந்தபடியால் எங்களை வரவேற்றுச் சரியாக உபசரிக்க முடியாதே என்று தயங்கி மறுத்தார். நாங்களோ எங்களுக்குக் கிடைக்கப்போகும் பெரும்பேற்றை நழுவவிடத் தயாரின்றி அவர் முகத்தைப் பார்த்தால் மட்டும் போதும், பேச வேண்டாம் என்று வேண்டி னோம். ஆகவே மாலை ஆறுமணியளவில் சந்திப்பதாக இசைவளித்தார். அதுவரையிலும் அருகிலிருந்த பல்கலைக் கழகக் கலையரங்கத்தில் நடந்துகொண்டிருந்த முத்தமிழ் விழாவைக்காணலாம் என்று நாங்கள் சென்றுகொண்டிருந்த போது அறிஞரிடமிருந்து எங்களை முன்கூட்டியே சுமார் 4.30 மணிக்கே வரச்சொல்லி அழைப்பு வந்தது. உடனே நாங்களனைவரும் அவரது இல்லத்திற்குச் சென்றோம்.

முதற்பகுதியில் பூஞ்செடிகள், கொடிகள் மணக்கும் மரங்களுடன் உட்புறமாக அமைந்திருந்த தமிழ் மனைக்குள் சென்றோம். அந்த மனையில் அவரது அறை - அந்த அறையைப் புத்தகங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சிறுபகுதியை அவருக்கு விட்டுக்கொடுத்திருந்தன என்றுதான் கூறமுடியும். புத்தகங் களுக்கு நடுவே ஒரு களஞ்சியமாக அவர் படுத்திருந்தார்.

உடல் நலமின்மையால் அதிகமான நேரம் ஒருக்களித்து மட்டுமே அவரால் படுக்க முடிந்தது. நேராகப் படுக்க வேண்டுமெனில் மற்றவர் துணையும் தேவையாயிருந்தது. சிறிய உடல் அசைவும் அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அவருடன் நாங்கள் அரை மணிநேரம்தான் கலந்துரை யாடினோம். அதற்குள் பலதடவை அவ்வளவு துன்பத்திலும் தன் இரு கைகளையும் கூப்பியும், வாய்மொழியிலும், “எழுந்து அமர்ந்து உங்களுடன் பேச முடியாததற்கும் வரவேற்க முடியாமைக்கும் என்னை மன்னிக்கணும்” என்று பலமுறை கேட்டுக்கொண்ட அவருடைய தமிழ்ப்பண்பு எங்களை ஈரப்படுத்தியது. நாங்களோ அவராலோ அல்லது பலராலோ அறியப்பட்ட பிரமுகர்கள் அல்லர். அவர் எங்களிடம் வேண்டியது அவரை மேலும் உயரத்தில் கொண்டுவைத்தது.

வழக்கம்போல எங்களை நாங்கள் அறிமுகம் செய்து கொண்டோம். எங்கள் கல்லூரி பற்றிக் கூறியபோது அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு முன்பு வந்திருந்த சமயம் டோக் பெருமாட்டி கல்லூரியான எங்கள் கல்லூரி பற்றிக் கேள்விப்பட்டிருந்ததாகக் கூறியது எங்களை மகிழ்;ச்சியில் ஆழ்த்தியது. எங்கள் முனைவர்பட்ட ஆய்வுகளைப்பற்றிக் கேட்டு, சிறிதுநேரம் அது குறித்துப் பேசினார். அவருடனான கலந்துரை சங்க இலக்கிய ஆய்வுகள், அதன் பெருமைகள், தமிழ்மொழியின் சிறப்புக்கள், இலக்கியத்தில் பெண்கள், சமச்சீர் கல்வி ஆகியவை குறி;த்து அமைந்தது.

1.சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்ய இனி ஒன்றுமில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சொல்வதே தவறு. சங்க இலக்கியங்களை மறுவாசிப்பு செய்வதே மிகப்பெரிய ஆய்வு. சாதி, சமயம் கடந்து நிற்கும், காலம் கடந்து நிற்கும் அவ்விலக்கியங்களில் செய்ய வேண்டுவன எவ்வளவோ இருக்கின்றன.

2.தமிழ் இலக்கியங்கள் கற்பு என்கிற சொல்லைத் திருமணமான பெண்களோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பேசுகின்றன. ‘பெண்’ என்கிற சொல் மணமான பெண்களைத் தான் குறி;க்கிறது. ஒருவருக்குப் பிள்ளை பிறந்தால் - பெண் குழந்தை பிறந்திருக்கிறதா என்று கேட்கக் கூடாது - ‘பிள்ளை’ பிறந்திருக்கிறதா? என்றே கேட்கலாம். தவறில்லை. பெண் என்கிற சொல் குழந்தையைக் குறிக்காது. ஆக ‘பெண்’ என்கிற சொல்லாட்சி பற்றியே ஆய்வு செய்யலாம்.

3.சமச்சீர் கல்வி - புத்தகங்களை வாசித்த பிறகே முடிவு செய்யமுடியும். பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி என்றிருந்த நிலைமாறி இன்றைக்கு அனைவருக்கும் என்றாகிவிட்ட சூழலில் கல்வித் தரத்தையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடமுடியாது.

4.தமிழாய்வுக் கட்டுரைகள் தான் வைத்திருப்பதாகவும், கருத்தரங்கு நடத்தும்போது நாங்கள் தகவல் தெரிவித்தால் கட்டுரை அனுப்புவதாகவும் கூறினார். அவருடன் பேச்சும் சிந்தனையும் தமிழ், மொழி, தமிழாய்வு என்று ஆராய்;ச்சியை மையமிட்டதாகவே இருந்தது. அன்றைய உடல்நிலையில், தள்ளாத வயதிலும் ஆராய்ச்சியை நோக்கிய தளராத மனதுடையவராக இருந்தார். ஆய்வுக்கான தலைப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய வயதில் இளைய ஆய்வாளர்களுக்கு மத்தியில் வயதில் மட்டுமே முதுமையான அவரது எண்ணங்கள் அனைத்தும் ‘இளஞ்சிந்தனைகளே’.

நாங்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அவர் எழுதிய நூல்கள் சிலவற்றை எங்களுக்கும் கொடுத்தார். கிளம்புகின்ற போது அவரது இல்லத்தினர் எங்களுக்குக் குளிர்பானம் கொடுத்துத் தங்களது விருந்தோம்பலைக் காண்பித்தனர். அவரது ஆராய்ச்சிச் சிந்தனையை வியந்துகொண்டே நாங்கள் கிளம்பி வந்தோம். நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசி சரியாக ஒரு மாதகாலத்தில் அவர் இறைவனடி சேர்ந்தது எங்களைப் பொறுத்தவரை எங்களது நெருங்கிய உறவொன்று எங்களைப் பிரிந்தது போன்றதே.

Pin It