பிரம்மாண்டமானதொரு யாளியைப்போல்
வாய் திறந்து காத்திருக்கிறது
மாநகரம்
உடலில் ஊறும் ரயில் பூச்சிகள்
உதறித் தள்ளும் கூட்ட மனிதரைக்
குதப்பிச் சுவைக்க
நீண்டுயர்ந்த கான்கிரீட் பற்களோடு
காத்திருக்கிறது மாநகரம் வாய்திறந்து
மனிதர் நிரம்பி வழியும்
பெருநகரத்துள்
தனியனாயிருப்பது கொடும் அவலம்
காற்றுப்புக வழியிலா
மின்ரயில் பெருங்கூட்டத்துள்
ஒருவனெனினும்
சுடுகிறது தனிமையின் தகிப்பு
பல்மொழிகள் உலவும் பிரதேசத்தில்
மவுனத்தை மட்டுமே வெளியிட்டு
பொங்கி வரும் வார்த்தைகளை
எச்சிலோடு உள்வாங்கி
ஊமையாய் வாழ்வதை எப்படிச் சொல்ல,,,?
உணர்வைப் பகிர்ந்துரையாடத் துணையின்றி
வெம்பிச் சூம்பும் ஆளுமை
மின்ரயில் துப்பும் எச்சிலில் ஒருவனாய்
நடந்தோடுகிறேன் வேகமாய் கால்பதித்து
வேறென்ன இயலும் இப்போது,,,
வேகமாய் ஊர்கின்றன மின்மரவட்டைகள்
அட்ச தீர்க்க இரும்பு நரம்புகளில்
பெரு நகரத்தை இணைத்து
நிறைந்திருக்கும் பெருங்கூட்டத்தின்
குவியலோடு நிற்கிறேன்
துணையற்ற தனிமையை
விழுங்கிச் செறித்து
பாதங்கள் அனுமதித்த இடைவெளியில்
செருகிக் கொள்வேன்
கைப்பிடியிலும் தொங்கி வருவேன்
துணிக்கடை பொம்மை போல
மூச்சிருக்கும்
ஏற்றி இறக்கித் தள்ளும் இயந்திரக் கும்பல்
கண்மூடிப் பயணித்து நுழைய
கோப்புகளுடன் வரவேற்கும் அலுவலகம்
மாநகரச் சதைக்கோளத் தாக்குதலில்
பயனற்று வழியும்
சக்தி
கால்களில் சிறகு முளைத்தவனுக்கு
கூடடையும் போது வரமறுக்கும் தூக்கம்.
உலைச்சலைத் தணிக்க உதவும்
உறக்க வில்லைகள்
ஒரு ராட்சச மிருகத்தைப் போல
விழுங்க எத்தனிக்கும்
பெருநகரப் பிடியிலிருந்து தப்பிக்க
லாகிரி நுகர்ந்து கனவுடன் தூங்கி
வாசல் திறக்க விடியலில்
கதவருகே காத்து நிற்கும்
வேகம்
Pin It