இறகுகளாய்ச் சேர்ந்து
சிறகானோம்
விண்ணில் பறந்தோம்
மேகங்களாய் மிதந்தோம்
நட்சத்திரங்களாய் மிளிர்ந்தோம்
நட்பின் இலக்கணமானோம்
வெற்றியும் தோல்வியும்
பிரிக்க இயலாது
நட்பும் பிரிவும்கூட
அதுபோலத்தான்

தோழி!
அழும்போது உன்
கரம்கொண்டு அணைத்தாயே!
துன்பம் நேரும்போது
யாழெடுத்து மீட்ட
உன் விரல்தேடி எங்கு செல்வேன்?

உனக்கிருக்கும் கவலை மறைத்து
எனக்காகச் சிரித்தாயே!
இன்பத்தினைப் பகர
உன் அன்புதேடி
உன் நட்புதேடி எங்கு செல்வேன்?

பள்ளிப் பருவ நட்பு
பூக்களைப் போல
உதிர்ந்து போகும்
உதிரும் நாள் வந்ததே தோழி!
உதிரம் கொதித்து அழுகையாகிறதே தோழி!

பாலைவனத்துச் சோலையாய்
நாம் சிரித்து மகிழ்ந்த
வகுப்பறை
நமக்குப் பின் வருவோரின்
இருப்பிடமாக மாறுகிறது
ஆனால் நம் இதயம்
அங்கேயே
இருப்பு கொண்டதை
யாரறிவார்?

ஏழாண்டு நட்பு
ஏழு பிறவி தொடருமோ?
பின் என்றேனும்
உனைச் சந்திப்பேனோ?
உன் திருமண அழைப்பிதழ்
என் வீடுதேடி வருமோ?

வாழ்வில் நிலைகொண்டது
மாற்றம் மட்டுமே!
மாற்றம் என்பது
மானிட தத்துவம் எனில்
நம் நட்பு மாறுமோ?

வழியில் எங்கேனும்
குழந்தைகளைக் கண்டால்
உன் வெள்ளந்தி சிரிப்பு
கண்ணில் வரும்,

வழிதனில் மலர்கின்ற
பூக்களைக் கண்டால்
உன் அழகிய முகம்
நினைவிற்கு வரும்

இனி -
புகைப்படத்தில் மட்டுமே
நான்
உன் பக்கத்தில்
அன்பினால் ஒரு தாயாக
அறிவினால் எந்தையாக
பொறுப்பினால் விந்தையாக
விளங்கினாயேõ
நம் பாதை விலகும்
சந்தி வந்ததே!

கல்லாக இருந்த என்னை
மண் ஆக்கினாய்!
மேகமாகத் திரிந்த என்னை
மழை ஆக்கினாய்!
உன் சுவடுதாங்கிய
ஒற்றையடி பாதையாய்
என் இதயம்,,,

நாம் -
அல்ல,
நானே நீயானபோது
அது என்ன “நாம்”?

உன்னால்தான்
அழகு பேரழகானது
உலகம் இனிதானது
வாழ்வு சுகமானது தோழி

நேற்று பார்த்த மேகம்
இன்று வருவதில்லை
நேற்று கேட்ட வார்த்தை
இன்று ஒலிப்பதில்லை
நேற்று கண்ட கனவு
இன்று நிலைப்பதில்லை

ஆம்
நட்பில் எதுவும் நிரந்தரமில்லை
உன்னையும் என்னையும் தவிர

நாளை
நாம் பிரியும் நாள்
உன்னைப் பார்த்து
சிரிக்கத் தோன்றும் -
புன்னகையும் இழையாது

அழத்தோன்றும்
பேசத் தோன்றும்
காற்று மட்டுமே வரும்
நாம் பிரியும் நேரத்தில்
எங்கோ மீண்டும்
சந்திப்போம்
என விடை கொடுக்கிறது
ஒரு துளி கண்ணீர்
நம் நட்பின் முகவரியாய் -
Pin It