அடக்கி ஆள்பவளின் வழிமுறை

அவர்களின் ஊருக்கு முதலில்
ஒரு பேயை அனுப்பினார்கள்.

அந்தப் பேய்
ஒரு மனிதனின் மூளையை விழுங்கியது.

அந்த மனிதனின் பயத்தின் நிழல்
ஊரெங்கும் பரவத் தொடங்கியது.

பின்பு அவன் கண்களைத்
தன் கண்களில் பொருத்தியது.

பழைய ரசனைகளையும்
பழைய காட்சிகளையும்
பழைய வரலாற்றையும்
திருடத் தொடங்கியது.

பேய் தனது நீண்ட கையினால்
ஒரு இதயத்தைப் பிடுங்கியது.

அதை அவன் காதலென்று
பிதற்றத் தொடங்கியதை ரசித்தது.

அவன் உறவுகள்
நேசங்கள்
நிறம் மாறத் தொடங்கின.

உதடுகளில்
நாக்கினில்
பேய் மந்திரங்களை ஒட்டியது.

அவன் இரண்டு கைகளும்
பேய்களுக்கு சேவகம் செய்யத் தொடங்கின.

அந்தக் கைகளில் உருவான
ஓவியங்களின் புதையல்கள்
கைகளில் விளைந்த சிற்பங்களைப்
பேயின் அகண்ட வாய்க்குள் தள்ளின.

எல்லாம் முடிந்த நாளில்
அந்த ஊர் முழுவதும்
பேயின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பேயை அனுப்பியவன்
கடவுளோடு ஊருக்குள் புகுந்தான் ஒருநாள்.

பிறகு அந்த ஊரையும்
ஊரிருக்கிற நாட்டையும்
ஆளத் தொடங்கினான்.

ஆளத் தொடங்கி
எத்தனையோ நூற்றாண்டுகள்
உதிர்ந்து விட்டன.

இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை
அந்தப் பழைய மனிதனை
அந்தப் பழைய ஊர்களை
அந்தப் பழைய நேசத்தை.


பாராளுமன்றம்...

எங்கள் சட்டங்களின் கருப்பை
வட்ட வடிவிலானவை

அங்கேதான் சட்டங்கள் பிறக்கின்றன
தொப்புள் கொடியறுத்து.
எல்லாக் காலங்களிலும்
சுகப்பிரசவத்தை எதிர்பார்க்க முடியாது

குறை பிரசவமாக இருக்கலாம்.

பிறந்த குழந்தைகள்
ஆரோக்கியமாக இருப்பதற்காகத்தான்
ரத்த தானம் செய்கிறோம்.

அதன் வளர்ச்சி
எதிர்பார்ப்புகளிடமிருந்து வேறுபட்டிருக்கிறது.

சில கூட்டத்திற்கு முரட்டுத்தன்மையும்
கொலைகாரத் தன்மையும் வந்துவிட்டிருந்தது.

சில ஆண்தன்மையும்
பெண்தன்மையற்று வளர்ந்தன.

சில ஊமையாகவும்
சில செவிடாகவும்
சில நல்ல குழந்தைகளாய்.

அரசியல்வாதி அப்பாக்கள்.
எப்பவும் நல்லவர்களாய் இருப்பதில்லை.

எதிர்பார்த்த தருணங்களில்
கருக்கலைப்பு நடத்தி விடுகிறார்கள்
பிறப்பதற்கு முன்பே.
அவசரத்துக்கு
பிள்ளை பெறச் சொல்லி
கருப்பை கொடுமைபடுத்தும் சம்பவங்கள்
மக்களை பீதியடையச் செய்கின்றன.

சில சட்டங்கள் புத்தகங்களில்
வலிமையற்று
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கும்
நாங்கள் கருவறையைத்தான் நம்பியிருக்கிறோம்

என்றாவது பிறக்கும் பிள்ளை
எங்கள் கிழிந்து போன வாழ்க்கையை
தைத்துக் கொடுப்பானென்று.


தேகம் ஒரு...

தேகத்தை கட்டிடமென்றே
அழைக்கிறீர்கள்.

நீண்ட என் கால்களை
கட்டிடத்தை நிறுத்துவதற்கான
தூண்களென்றீர்கள்.

குறுக்கு நெடுக்காக ஓடும் எலும்புகளை
உத்திரங்களாகவும்.
சதைகளை சிமெண்ட் கலவையாகவும்
சொல்கிறீர்கள்.

அங்குமிங்கும் ஓடும் நரம்புகளையும்
தமனி சிரை ரத்த நாளங்களையும்
மின்சார ஒயர்களென்றே சொல்கிறீர்கள்.

இதயத்தை ஆழமான கிணறு என்றும்
நுரையீரலை குளிர்சாதனப் பெட்டியென்றும்
கதைக்கிறீர்கள்.

கண்களை விளக்கென்றும்
நாசிகளை ஜன்னல்களாகவும்
சொல்லி விடுகிறீர்கள் வெகு சுலபமாய்.

நீங்கள் வாயை
கழிவுநீர்க் குழாய் என்பதைத்தான்
சகிக்க முடியவில்லை.

இந்தக் கழிவுநீர்
பூந்தோட்டத்தில் பூக்களுக்காகத்தான் என்று
சமாதானப்படுத்துகிறீர்கள்.

வாழையும் தென்னையும்
இந்த நீர் குடித்துப் பெருகுகின்றன என்பதில்
எதிர்ப்பைக் குறைக்கிறீர்கள்.

நான் கஷ்டப்படுவதை
வாஸ்து நிபுணனிடம் யார் சொன்னார்கள்.

கழிவுநீர் குழாயை
வேறு இடத்திற்கு மாற்றிவிட்டான்.

சமையலறைகளும் படுக்கையறைகளும்
இடம் மாறிப் போயின.

வாசல்கள் தென் மேற்கிலும்
காற்று வடகிழக்காகவும் வீசிக்கொண்டிருக்கிறது.

சுவர்களை இடித்து சுவர்கள் அடைத்து
கதவுகளை இடித்து ஜன்னல்கள் வைத்து
களைத்துபோன வாஸ்து நிபுணர்கள்
வெளியே போயிருக்கின்றார்கள்.
கல்லை மாற்றி
பெயரை மாற்றி எழுத்தை மாற்றி
எல்லாம் முடிந்தபோது
வயதாகிவிட்டிருந்தது இந்தக் கட்டிடத்திற்கு.

நீங்கள் சொல்கிறீர்கள்.
பாதகமில்லை.
எல்லாக் கதவுகளையும் சன்னல்களையும்
சாத்திவிடுங்கள்.

எல்லாம் சரி.
கட்டிடத்தில் எங்கே வைத்திருக்கிறீர்கள்
கண்ணாடியை
நானிருந்த முகத்தைப் பார்த்துக்கொள்ள.


கொம்பு முளைத்த காலம்

கொம்பு முளைத்த காலம்
சப்தமற்று
நடிகையொருத்தியின்
காக்கை குரலடக்கி கத்தியது.
தமிழனைப் பார்த்து.

புராதன தொழிலில் மூழ்கிப்போன
குரலின் பிம்பம்
ஊதிப் பெருத்து
சிவந்த உதடுகளின் இறகு விரித்து
கண்ணகி சிலை முன்பு
வெடித்துச் சிதறியது.

பிரம்மாவின் உடலில் பிறக்காமல்
தந்தையின் விந்தால் பிறந்தவர்கள்
எதிர்க்குரலாய் மாற

சூரிய சொல் தாளாமல்
சினிமாவின் நாவு கிழித்து
உள் நுழையும் நடிகை
தப்பித்துப் போனாள் கபாலத்துக்குள்.

சில திராவிடச் சூரியன்கள்
ஆரிய நிலவின் அடிமடிக்குள் மறைய

விடியலின் நீர்ப்பரப்பில்
செத்து மிதந்தன மானத்தின் சடலம்.

ஒரு துளி கடலை வெளியேற்ற
ரகசியத்தின் குகையில்
ஊடுருவியவன் போகின்றான்
நடைப்பிணமாய்.

கேட்டால் சொல்கிறான்
அது "காற்றின் சுதந்திரம்
புழுக்கள் அறியாதென்று”

தூரத்தில் செத்து வீழ்ந்தது
இரண்டு நட்சத்திரங்கள்
ஒன்று
அவன் மூதாதையராக இருக்கலாம்.
இன்னொன்று
அவன் பால் குடித்த தாயின்
திருகியெறிந்த முலையாக இருக்கலாம்.
Pin It