முறுக்கு மீசையுடனும்
முண்டாசுக் கட்டுடனும்
கருப்புக் கோட்டுடன்
கையில் தடிஏந்தி
நிற்கும் அவன்
நெற்றியில் குங்குமம்
நினைவில் கவிதை
சுட்டும் விழிச்சுடரில்
சொற்பூவின் சுகங்காட்டும்
சூரிய உதயம்
அவன்
பிரெஞ்சுக் கலாச்சாரத்தின்
பிச்சேரித் தெருக்களில்
கைவீசும் கந்தகமாய்
காலாற நடந்த காலம்
"புதிய கோணங்கி" எனும்
புதிய படைப்பை
சிறுகதை முயற்சியென
செய்து பார்த்ததில்
"குளத்தங்கரை அரசமரம்"
எழுதிய
ஐயருக்கும் அவனுக்கும்
யார் முதலில் எழுதியதென
இலக்கிய சர்ச்சை
இன்னமும்
இருந்துகொண்டிருக்கும்
இரண்டு பேரில்
எவர் எழுதியிருந்தாலும்
தமிழ்ச் சிறுகதையின்
தாய்வீடு பிச்சேரி என்பது
பிச்சேரியின் பெருமைகளுள்
பிரதானமானது
"வேதபுரத்தில்
ஒரு புதுமாதிரி குடுகுடுப்பைக்காரன்
புறப்பட்டிருக்கிறான்
நல்லவேளை வேட்டி உடுத்தி
வெள்ளைச் சட்டை போட்டு
தலையிலே சிவப்புத் துணியால்
வளைத்துவளைத்து
பெரிய பாகை கட்டியிருக்கிறான்
நெற்றியிலே பெரிய குங்குமப்பொட்டு"
என்றவன் சிறுகதைக் குறியீட்டின்
சித்தரிப்புகள் யாவும்
அவனை வைத்து அவனே எழுதிய
இன்னொரு எழுத்துப் பிரதியாக
இருக்குமோ எனும் நினைப்பு
இலக்கியத்தின் பெரும் அதிசயமாய்
இப்போது தெரிகிறது
ஒரு புதிய திசையின்
ஒரு புதிய தேடலின் வழியாய்
அவனை அணுகுகிறபோது
பிச்சேரியின்
வேறு பெயரான
வேதபுரத்தில் அவன்
புதிய கோணங்கியாய்ப்
புறப்பட்டதும்
வேதங்களின் நரகமான
காசிக்குப் போனதில் அங்கே
வேதங்களை மீறிய
ஞானக்கிறுக்கனாய்ப்
பூணூலை அறுத்தெறிந்து
புது நெருப்பாய்ப் பூத்ததும்
கங்கை நதியின் அழுக்குகளைக்
கழுவிப்போன அந்தக்
கவிதைப் பிரகடனத்தை
இன்னமும்
எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன
அவன் செய்த
அக்கினிப் பிரவேசங்கள்
கருப்புக் கோட்டும்
கைத்தடியும்
மீசையும் முண்டாசும்
காசியிலே வாழும்
"பாரதி" எனும் தலித்துகளின்
பரம்பரை அம்சங்களென
நமக்கு
இப்போதுதான் தெரிகிறது
அவனுக்கு
அப்போதே தெரிந்திருக்கிறது
அவன்
பார்ப்பானாக இருக்கச் சம்மதியாமல்
அந்தப் "பாரதி"யாகவே
வாழச் சம்மதித்து
பிறர் அறியாக் காசிநகர்ப்
புதிராக வெளிப்பட்டான்
தமிழ்நாடு
சுப்பிரமணியனை வெறும்
"சுப்பையா" ஆக்கியது
காசித்
தலித்துகளின் தரிசனம் அவனை
"பாரதி" ஆக்கியிருக்கிறது
அந்த பாரதி வாழ்ந்த
பிச்சேரியில்
இந்த பாரதிவசந்தன்
எழுதுவது கண்டு
"பறையன் பாரதிவசந்தன்
பார்ப்பான் பெயரில்
எழுதுகிறான்" என்றெல்லாம்
வயிற்றெரிச்சல் தாளாது
வசைபாடித் திரிகிற
சாதிவெறி முண்டங்களை
"பார்ப்பான் பாரதியே
தலித்துகளின் பெயரில்தான்
தமிழின் மகாகவி ஆனான்"
என்று சொல்லிக்
காலம் அந்தக் கழிசடைகளைத்
தேடிப்பிடித்துத் தன்
தேய்ந்துபோன
செருப்பால் அடித்திருக்கிறது
தலித்துகளால்
"பாரதி" எனும் பெயர்
தகுதி பெற்றதும்
பாரதியால்
தமிழ் எனும் மொழி
புதுமை பெற்றதும்
பிரிக்க முடியாததென
இனியொரு வரலாறு
எழுதும் பேசும்
அவன்
முதல் சிறுகதையில்
"படிச்சவன்
சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான்
ஐயோவென்று போவான்" என
குடுகுடுப்பை அடித்துக்கொண்டு போகும்
"கோணங்கியின்
முதுகுப்புறத்தை நோக்கி
தெய்வத்தை நினைத்து
ஒரு கும்பிடு போட்டேன்" என்கிறான்
கும்பிடப்பட வேண்டியவன்
தான்தான் என்பதை இந்தச் சாதிவெறித்
தமிழ்ச் சமூகத்துக்கு
ஒவ்வொரு நாளும்
உணர்த்தியபடி
பாரதியின்
கருப்புக் கோட்டும் கைத்தடியும்
பெரியாரின்
கருப்புச் சட்டையும் கைத்தடியும்
வெறும் அடையாளங்கள் இல்லை
அவை இன்னமும் இங்கே
சாதி வெறிக்கும்
மதங்களின் கொடுமைக்கும்
மனிதகுலத்தின் விடுதலைக்கும்
தேவைப்படுகின்ற
மகத்தான ஆயுதங்கள்
"ஆயுதங்கள் அழகு பார்ப்பதற்கல்ல
பயன்படுத்துவதற்குத்தான்" என்பதை
கொலைகாரனே சொல்லியிருப்பினும்
உண்மை ஒருபோதும்
பொய்யாகிவிடாது என்பதைப்
புரிந்துகொண்டால்
சரிதான்


(குறிப்பு: ஜனவரி-பிப்ரவரி 2006 கவிதாசரண் இதழில் ஆசிரியர் எழுதி வெளியான "பாரதியின் ஆளுமை" எனும் கட்டுரையில் "பாரதி எனும் பெயர் இந்தியாவின் வடக்கே காசிக்கு அருகே வாழும் ஒரு தலித் சமூகக் குழுவின் பரம்பரையான குலப்பெயர்" என்பதைப் படித்தபோது ஏற்பட்ட மனஅதிர்வுகளின் வடிவமே இக்கவிதை - பாரதிவசந்தன்)
Pin It