பதிவு

கண்ணாடியின் பூத்திரையில்
பதிந்திருக்கின்றன உன் முகத்தின் பிம்பங்கள்
பூக்களின் உள்ளீட்டில் கனிகிறது
உன்னிருப்பிடத்திற்கான இருக்கை
மெல்ல
பனியாகிறது கண்ணாடி
பூக்கள் நனைகின்றன
கூந்தல் கற்றையின் நுனியில்
வழிகிறது பனிநீர்
தரையில் உதிர்ந்த சொட்டில்
புலப்படுகிறது உன் பிம்பம்
ஒழுங்காய் வடிவமைந்திருக்கின்றன
உன் கண்கள்
குளிர்ந்திருக்கிறது உன் முகம்
அந்தத் தரையில்.

 
புலர்ச்சி

வடிந்த நிலவின் ஒளி கமறும்
இலைகளின் அடியில்
பதுங்கியிருக்கும் இருள்
இருத்தலின் த்வனி கிளறும்
இரவின் தட்டையான பகுதிகளை
உதிராமல் வீசுகின்ற
மரங்களிடையே கிழிந்து
சிக்குகின்றன வெளவால்கள்
சிவந்த பழங்களிலிருந்து
விடியலைக் கொத்திக் கொண்டு
செல்கின்றன கடல் மேல் பறவைகள்
சூரியனில் கரைந்த அவைகள்
மீள்கின்ற வழியில் நிலவில் தங்கிவரும்
வண்ணக் கிளிகளைப் புணர்ந்து
பிரசவிக்கின்றன
பகலின் முட்டைகளை.

இசையறை

இசையில் மிதக்கும் அறையில்
தனித்திருந்தேன்
காற்றில் படிந்த
இசைத்துளிகள் நனைத்தன என்னை
முழுவதும் தொலைந்து மூழ்கிப்
போயிருந்தேன்
மேலெழும் எண்ணம் எதுவுமற்று
கூக்குரலிட்டன இசையின் நூல்களில்
கோக்கப்பட்ட வார்த்தைப் பூச்சிகள்
அறையின் வாசல் முழுதும்
முளைத்திருந்தன இசைச் சுவடுகள்
மௌனத்தை மீறி
நீண்ட ஆலாபனை முடிந்ததும்
சுழல ஆரம்பித்தது என் இசையின் வட்டு
ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன் நான்.

கூந்தல் வழி

துயிலின் அழகில் ததும்பும் உன்னை
காணவேண்டி
இரவின் வழிகளில் அலைகிறேன்
வழிகள் மீட்டுகின்றன என்னை
ஓர் ஒற்றைப் பாதை முடிந்த கானகத்தின்
இருளில் விண்மீன்கள் உதிர்ந்து கிடந்தன
ஒவ்வொன்றாய் சேமித்துவெளியேறுகிறேன்
அடுத்த பாதையில் உன்கூந்தல் முடிகள்
சிக்கிய சீப்பொன்றைக் காண நேர்கிறது
ரத்தச் சிவப்பாய் மாறியிருந்த கூந்தல் மயிர்களை
அடையாளம் காணமுடியவில்லை என்னால்
அதன் வாசத்தின் ஞாபகம்ஆட்கொண்டது என்னை
என்விரல்கள் அளாவிய உன் கூந்தல் வழி
என்னை நடத்தியது
மெதுவாக பள்ளத்தாக்குகளில் இறங்குகிறேன்
உன் மூக்குத்தி தடுக்கி விழ
பவளங்களின் இடுக்குக்குள் சிக்குகிறேன்
மென்மையாக உறங்கிக் கொண்டிருக்கும் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய்ப் பிறந்தன முத்தங்கள்.
(இந்ராவுக்கு)
Pin It