எது கவிதையென்று நீ நம்புகிறாயோ
அது உன் கவிதை
எது கவிதையென்று நான் நம்புகிறேனோ
அது என் கவிதை
எது கவிதையென்று அவன் நம்புகிறானோ
அது அவன் கவிதை

*******************
எழுதத்தான் தோன்றியது
எழுதினேன்
எழுதாமல் இருக்க முடியாது
எழுதுகிறேன்
எழுதத்தான் தெரியும்
எழுதுவேன்

*******************
துண்டு போடுகிறவர்கள்
துண்டு போடுகிறார்கள்
முண்டாசு கட்டுகிறவர்கள்
முண்டாசு கட்டுகிறார்கள்
இடைக்கிடை அப்போதைக்கப்போது
எல்லாமும் மாறுகிறது

*******************
நிற்கத்தான் வேண்டும் கதவு
கிடக்கத்தான் வேண்டும் கட்டில்
இருக்கத்தான் வேண்டும் அடுப்பு
தொங்கத்தான் வேண்டும் கயிறு
நானூறு பேருக்குள்தான்
நவீன இலக்கியம்

*******************
அனுபவங்கள் கவிதையாகின்றன
உணர்வுகள் கவிதையாகின்றன
வார்த்தைகள் கவிதையாகின்றன
புனைவுகள் கவிதையாகின்றன
என்னென்னவெல்லாமோ
கவிதையாகின்றன

*******************
பார்க்கத்தான் தோன்றியது
பார்த்தான்
கேட்கத்தான் தோன்றியது
கேட்டான்
பார்க்கத்தான் தோன்றியது
பார்த்தான்
பேசத்தான் தோன்றியது
பேசினான்
முகரத்தான் தோன்றியது
முகர்ந்தான்
எழுதத்தான் தோன்றியது
எழுதினான்

*******************
கற்றைக்குழல் விரிக்கும் கவிதையை
எற்றைக்கு எழுதப் போகிறாய் விக்கி?
Pin It