அழைப்பின் விளையாட்டு

 காலையில் முதல் அழைப்புமணி
உன்னதாயிருக்க வேண்டும்
எனது அந்நாளைய தொலைபேசி
அழைப்பு உன்னிலிருந்து ஆரம்பமாக வேண்டும்
அப்படியொன்றும்
அவசியமாய்ப் பேசவேண்டிய காரியம்
ஏதுமில்லை என்பதை இருவருமறிவோம்
சுமையை பளுவை தாங்கிக்கொண்டே
ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாய்
வரம்பு மீறும் வார்த்தைகளுக்கு
கண்டனம் நீ சொல்ல
நிறுத்திக் கொள்ளவா எனும்
குரலுக்கு வேண்டாம் தொடருங்கள்
என்பதுவும்
அழைப்பேதுமில்லாத நாட்களில்
அடுத்த நாளில் ஏன் அழைக்கவில்லை
எனும் வதையும்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது நமக்குள்
தெரிவிக்க முடியாததை விளையாட்டாயும்
விளையாட்டை தெரிவிக்க முடியாதபடிக்கும்
உரையாடலில் தொடர்ந்து
உலா வருகிறது நம்குரல்
உரையாடக்கூடிய அவசியமான
காரியம் ஏதுமில்லை யென்ற போதும்
தொலைபேசியின் அழைப்பிற்காய்
பசியோடிருக்கும் நாயைப்போல
தவித்துக் கொண்டேயிருக்கிறது மனம்.

எழுதுகோலின் நாவு

வார்த்தைகள் சிதறிக் கிடக்கும்
என் தனிமையின் வீதிகளில் இருந்து
உன்னை அழைக்கிறேன்
எனது எழுதுகோலின் நாவசையும்
எனது உதடுகளின்றி
கனக்கும் மொழியைப் பிணமெனச்
சுமந்தலைகிறது எனது காலம்
நீர்ப்பரப்புகள் வறண்டு கிடக்கும்
எனது நிலத்திற்கு மழை போல்
வருவதாகச் சொன்ன உன்னைக் காணவில்லை
புராதன ஆலயத்திலிருந்து
பள்ளியறைப் பாடல்கள் ஒலிக்கும்போது
கோயிலின் வாசனை சுமந்துவரும்
உன் தலையைத் தேடிப் பரிதவிக்கிறது எனது
நிகழ்காலத் திடுக்கிடல்கள்
இதொரு பிறவி போதும்
நீ வந்தால் அணையும் எனது நெருப்பிற்கும்
வராவிடில் அது எழுதும் கவிதைக்கும்.


நட்சத்திரக் குறியினுள் மறைந்து கொண்டிருக்கும்
நிபந்தனைக் குட்பட்டபடி
காத்துக்கிடக்கிறது உங்களுக்கான உல்லாச ஊர்தி
ஒரு ரூபாயில்
வீடு தேடிவந்து குடித்தனம் நடத்த
கரிசனம் கொள்கிறது கணிணி வலைப்பின்னல்
சொந்த வீடா கனவு காணும் முன்னே
வாசலைத் தட்டுகின்றன வங்கிகள்
மனைவியோடு வெளிச் செல்கையில்
கழுத்துப் பட்டியணிந்தவன்
பெயர் தெரியாத ஒன்றை வாங்கும்படி
இருவரையும் பதட்டமடைய வைக்கிறான்
சாலைகள் வாகனத்திற்கு மட்டுமேயென
நம்பும் கனவான்
குறுக்காக நடந்த வயோதிகரை முட்டித் தள்ள
அவர் முகத்தில் தெளிக்கப்படுகிறது
புதிதாக வந்திறங்கிய கொக்கோ கோலா
வளைத்துப் போடப்பட்ட வேலிச் சுவர்களில்
மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆதரவான
எதிரான சுவரெழுத்து / விளம்பரங்கள்
நாயை மட்டுமே துணைக்கழைத்து
நடைபழகும் நுனிநாக்கு ஆசாமி
சூடிக்கொடுத்த மாலையாய்
அலைபேசியை கழுத்தில் அணிந்துபோகும்யுவதி
தரையெங்கும் குச்சிதட்டி நியாயம்கேட்பதுபோல
வழி தடுமாறிச் செல்லும் குருடன்
இவற்றுக்கிடையே காலிறக்காமல்
பைக்கில் அமர்ந்தபடி சிகரெட் புகைக்கும்
இளைஞர்களோடு வேடிக்கை பார்த்தபடி
விரைந்து போய்க்கொண்டிருக்கிறது மண்ணுலகின்
இருபத்தியோராம் நூற்றாண்டு.
Pin It