ki.raaராயங்குல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் (16.09.1922 - 17.05.2021) எனும் நீண்ட பெயர் கொண்ட மனிதர், கி.ரா. எனும் இரண்டெழுத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபெற்றார்.

கயத்தாறுக்கும் கோவில்பட்டிக்கும் இடையே நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்த இடைசெவல் எனும் கிராமத்தில் பிறந்தார். வானம் பார்த்த கரிசல் பூமியின் சம்சாரி அவர்.

விவசாய வாழ்வும் பொதுநல நாட்டமும் இசை ஈடுபாடும் மிக்கவராகவே அவரின் தொடக்ககால வாழ்க்கை அமைந்தது. பள்ளிப் படிப்பில் ஆர்வமில்லா நிலையில், மனிதர்களை அவர்களின் மன ஓட்டங்களை நுணுகிப் பார்க்கும் தன்மை இவரின் இயல்குணமாகிப் போனது.

விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். விடுதலைக்குப் பின் முழு விடுதலைக்காகப் போராடிய பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டது. அதன் மீது பற்று கொண்டார்.

நாங்குனேரியை மையப்படுத்திய விவசாயப் போராட்டங்கள் தீவிரப்பட்டக் காலமது. புகழ் பெற்ற நெல்லை சதி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவில்பட்டியிலும் சுற்று வட்டாரத்தில் இடைசெவலிலும் தலைமறைவாகி இருந்தனர்.

அத்தருணத்தில் அவர்களுக்கு உதவிய சிலர் மீது ‘கோவில்பட்டி சதி வழக்கு’ பாய்ந்தது. அதில் கி.ரா.வும் ஒருவர். கி.ரா. ரசிகமணி டி.கே.சி.யின் நண்பர். டி.கே.சி. கி.ரா.வுக்கு உதவ எண்ணி அப்போதைய முதல்வர் குமாரசாமிராசாவிடம், “இடைசெவல் நாயக்கருக்கு இந்த வழக்கில் என்ன தெரியும்? அவரையும் எதற்கு இந்த வழக்கில் சேர்த்திருக்கிறீர்கள்?” என்று முறையிட்டு, கி.ரா. விடுதலை பெற்றார். பின்னர் ஒருமுறை நாராயணசாமி நாயுடு நடத்திய விவசாயப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

கி.ரா. கோவில்பட்டி வட்டார விவசாயிகள் இயக்கத்தில் ஈடுபட்டார். பொதுவுடைமைக்கட்சி உறுப்பினராகவும் ஆனார். ஜீவா, நல்லகண்ணு, இரா. அழகர்சாமி போன்றோருடன் அணுக்கமாகத் தொடர்பு கொண்டார்.

பேராசிரியர் நா. வானமாமலை, தி.க. சிவசங்கரன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் தோழமை கிடைத்தது. சோவியத் இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினார். இசையார்வமும் பக்தி இலக்கியத் தொடர்பும் அவரை இலக்கியத்தில் தோய வழிவகுத்தன எனலாம்.

1958 இல் சரஸ்வதியில் தன் முதல் கதையை எழுதினார். அப்பொழுது சரஸ்வதி தரமான முற்போக்கு இலக்கிய இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. தொடர்ந்து தாமரை இதழிலும் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இடைசெவலில் இவரின் பக்கத்துத் தெருக்காரர்தான் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. இருவரும் பால்ய சிநேகிதர்கள். கம்யூனிஸ்ட் சார்பாளர்கள்.

பின்னாளில் உலகப் புகழ் பெற்ற கதை­யிலக்கியங்களைப் படைத்தளித்தார்கள். ஒரே ஊர், ஒரே வட்டாரம், ஒரே காலம், ஒரே கருத்து நிலை என்றாலும் ஒருவர் எழுதியதோடு மற்றவரை ஒப்பிட முடியாமல் தனித்தனி படைப்பாக்க முறைமையை அமைத்துக் கொண்டார்கள். இது பிரமிப்பு.

கி.ரா. கதை கூறும் நாட்டார் மரபை மீட்டெடுத்தார். ‘பேசுவது போலவே எழுதுதல்’ என்பதை தன் எழுத்தின் பண்பாகப் பிரகடனப்படுத்தினார். அவர் இலக்கியம் படைத்தார் என்பதைக் காட்டிலும் பண்பாட்டைப் படம்பிடித்தார் என்பதே பொருத்தமானது.

பண்பாட்டை எழுத்தில் வடித்தக் கதைசொல்லி அவர். அவரின் ஒவ்வொரு கதைக்குள்ளும் மக்களின் வாழ்வும் பண்பாடும் இரண்டறக் கலந்து நிற்கக் காணலாம். அவ்வகையில் பண்பாட்டு எழுத்து நெசவு செய்தவராக அவரைச் சுட்ட முடியும்.

‘சாவு’ என்றொரு சிறுகதை. ராமானுஜ நாயக்கர் எனும் இளைஞர். மூன்று வயதில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். மனைவி கருவுற்றிருக்கிறாள். இத்தருணத்தில் அவ்விளைஞர் மாரடைப்பால் மாண்டு போகிறார். இந்த நிகழ்வைக் காட்சிப்படுத்துவது தான் கதையின் மையம். இறப்புச் சடங்குகள் முடிகின்றன.

பதினாறாம் நாள் ‘பெண்கள் சடங்கு’, தாலி அகற்றும் சடங்கு நடைபெறுகிறது. சடங்கு நடைபெறும் போது நள்ளிரவில் ஒரு வயதான மூதாட்டி கூட்டத்தினரிடம் வந்து வெங்கலத்தட்டைத் தட்டுவதாக ஒரு காட்சி. இதற்கு என்ன பொருள்? “தாலி அறுக்கப் போகும் சுமங்கலிப் பெண் கருவுற்றிருக்கிறாள். பிறக்கப் போகும் குழந்தைக்கு இவன்தான் தந்தை” என்பதை ஊரறிய வெளிப்படுத்துவது.

இது ஒரு முக்கியமான பண்பாட்டு வழக்கம். இக்கதை முழுவதுமே மரபுகள், தொன்மங்கள், குறியீடுகள் வாயிலாக கி.ரா. அந்தச் சாவையும் அந்த இளைஞனின் குழந்தைப் பிறப்பையும் பிணைத்து ஒரு பண்பாட்டுச் சங்கிலியை உருவாக்கி விடுவதைக் காணலாம்.

கி.ரா.வின் தொடக்கக் காலக் கதைகள் யதார்த்த வாழ்வின் பிழிவாய் அமைந்தன. அவரிடம் எப்போதும் ஒரு வித இரசனை உணர்வு மீதூறி இருந்தது. அதனால் அவரின் கதைகள் கலையழகு கைவரப்பெற்று அமைந்தன. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘கதவு’, ‘வேட்டி’ ஆகிய இரு கதைகளுக்கும் நிச்சயம் இடமுண்டு. தமிழ் மக்களின் பூர்வீகத் தொழில்களான உழவும் நெசவும் குறித்து இவை அமைந்ததும் தற்செயல்தான்.

வேளாண் வாழ்வின் சிதைவை, நெருக்கடியை ‘கதவு’ ஒரு துளியளவு பதிவு செய்து விடுகிறது. ஒரு காலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ‘ஜப்திமுறை’ பற்றிய அரிய பதிவு. அரசிடமோ, வங்கியிலோ வாங்கிய கடனை மீளச் செலுத்த இயலாவிட்டால் குடியானவர்களின் பொருள்களை எடுத்துச் செல்வது இன்னும் நடக்கிற ஒன்றுதான்.

வாழ்ந்து கெட்ட சம்சாரியின் வீட்டுக் கதவை, அதுவும் கூட கதவாகப் பயன்படாமல் உள்ளதை ஊர்த்தலையாரி கைப்பற்றிச் செல்கிறார். கையறு நிலையில் தாயும் பிள்ளைகளும், அந்தத் தாயின் கதறல் “ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம்.

மூனு வருசமா மழை தண்ணி இல்லையே. நாங்க என்னத்த வச்சி உங்களுக்குத் தீர்வைப் பாக்கியைக் கொடுப்போம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைகளைக் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா?”. அதிகாரம் தர்மம், ஞாயம் பார்க்குமா என்ன?

‘வேட்டி’, நெசவு செய்து எல்லோரின் மானத்தைக் காக்கும் நெசவாளிகள் வாழ்வில் மானம் காற்றில் பறப்பதை எள்ளலோடு சொல்லும் கதை. தூங்கா நாயக்கர் நெசவாளி. அவருக்கு இருப்பதோ ஒரே ஒரு வேட்டி. அதைத் துவைத்துக் காயப் போட்டு மறுபடி மறுபடி உடுத்திக் கொள்வார். அவ்வளவு வறுமை. ஒரு நாள் காற்றாடி வரலாம் என்று வெளியே செல்கிறார்.

வழியில் ஒரு புளிய மரம். சில புளியம் பழங்கள் விழுந்து கிடக்கின்றன. வாயூர ஆசைப்பட்டு உட்கார்ந்து எடுக்க முயல்கிறார். பழைய வேட்டி ரெண்டாக ஒரு சாண் நீளத்துக்குக் கிழிந்து விடுகிறது. அப்பொழுது விடுதலைப் போராட்டத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாட நிதி வசூலிக்கச் சிலர் வருகின்றனர்.

“பரபரப்போடு எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக் கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார்” என்று எழுதிச் செல்வார் கி.ரா. தூங்கா நாயக்கர் வீட்டில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒருவர் தலைமறைவாக இருக்க, போலீசால் நையப் புடைக்கப்பட்டவர் நாயக்கர்.

ஆனால் தியாகி பென்சன் கிடைக்காமல் போய் விடுகிறது என்ற குறிப்பையும் கதை சுட்டும். கிழிந்தது நாயக்கர் வேட்டி மட்டுமா? தேசத்தின் விடுதலையும் அல்லவா?

கி.ரா. மனிதர்களைப் படித்தார். மனித அகத்தை ஊடுருவிச் சென்றார். மனித மனங்களை தன் எழுத்தில் சித்திரங்களாகத் தீட்டினார். அப்படி ஒரு மிக நுட்பமான கதை ‘கன்னிமை’. ஊரில் பெருந்தனக் குடும்பம் நாச்சியாரம்மாளுடையது. ஒரு நாள் ஒரு சிறுவன் அவர்களின் தோட்டத்தில் பருத்திச் சுளையை எடுத்து விடுகிறான். இதனைப் பார்த்துவிட்ட அவளின் தந்தை தன்னுடைய ஊணுக்கம்பால் அச்சிறுவனைப் புரட்டி எடுத்து விடுகிறார்.

மேலெல்லாம் ரத்த விளார்கள். அச்சிறுவனின் தகப்பன் சுந்தரத்தேவன் அவனோ பெரிய போக்கிரி, கொலைகாரன். காயம்பட்டச் சிறுவனை வீட்டில் அவன் தாயும் உறவினர்களும் ஒத்தடம் கொடுக்கிறார்கள். சுற்றிப் பெண்கள் கூட்டம். சுந்தரத்தேவனோ தன் பிள்ளையை இப்படி அடித்தவரை வெட்டிப் போடுவேன் என அரிவாளோடு கூக்குரல் இட்டபடி நிற்கிறான்.

அச்சூழலில் அவ்வீடு நோக்கி நாச்சியாரம்மாள் விடுவிடுவெனச் செல்கிறாள். அச்சிறுவனை வாரி அணைத்து உடலெல்லாம் தழுவி, தடவிக் கொடுத்து அள்ளி மடியில் வைத்துக் கொள்கிறாள். கதறி அழுகிறாள். இதனைக் கண்ட சிறுவனின் தந்தை சுந்தரத்தேவன் அரிவாளைக் கீழே போட்டு விட்டு உட்கார்ந்து கேவிக் கேவி அழுகிறான். ஒரு குறுங்காவியம் போலத் தீட்டி விடுகிறார் கி.ரா. மனிதத்தின் உச்சம்.

கி.ரா. இன்று நிரம்பவும் கொண்டாடப்படக் காரணம் அவரின் நாட்டார் மரபு. எழுத்து மரபில் நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளையும் வாழ்முறைகளையும் பதிவு செய்தது அவரின் முக்கியக் கொடை. தமிழில் முதல் வட்டார நாவல் எனப் போற்றப்படுவது ஆர். சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’.

1942 இல் ஆர்.சண்முகசுந்தரம் தன்னால், ஒரே மாதத்தில் எழுதப்பட்டது எனச் சொன்ன நாகம்மாள் நாவல் கொங்கு வட்டார மக்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது. இதன் முன்னுரையில் கு.ப.ரா. “கிராம புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத் தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்.

மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாக வேண்டும். கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம்பிடிக்க வேண்டுமென்று எனக்கு நெடுநாளைய அவா” எனக் குறிப்பிடுகிறார். இது தமிழில் முதல் வட்டார நாவல் என அடையாளப்படுத்தப்பட்டது.

மொழி அடிப்படையில் மட்டுமின்றி இனவியலாக, பண்பாட்டு மானிடவியலாக தனித்ததொரு வகைமை உருவாக வித்திட்டவர் கி.ரா. 1976 இல் வெளிவந்த அவரின் “கோபல்ல கிராமம்” தமிழ் நாவல் வரலாற்றில் தனித்தடம் பதித்தது. இதன் தொடர்ச்சியே கோபல்ல கிராம மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற அவரின் மற்றைய நாவல்கள்.

கி.ரா. எழுதத் தொடங்கிய பொழுது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் மேலெழுந்தது. திராவிட இயக்க மொழி நடை எழுத்தில், பேச்சில் முன்னிலை பெற்றது. தனித்தமிழ் இயக்கமும் அழுத்தம் பெற்றது. இச்சூழலில்தான் பேச்சு மரபை, மக்கள் மொழியைத் தன் எழுத்துவாகனமாக்கிக் கொண்டார் கி.ரா.

மொழிநடை என்ற ஒன்றைத் தாண்டியும் தொன்மங்கள், வழக்காறுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியனவற்றை தன் எழுத்தில் ஊடுபாவாகக் கொணர்ந்தார். இதன் வழியே தன்னை ஒரு பண்பாட்டு எழுத்துக்குச் சொந்தக்காரராக கி.ரா. உருமாற்றிக் கொண்டார்.

‘கோபல்ல கிராமம்’ நாவல் ஆந்திராவிலிருந்து தென் தமிழ்நாட்டின் கோவில்பட்டி வட்டாரத்திற்கு இடம் பெயர்ந்த கம்மாவர் நாயக்கர்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் பேசுகிறது.

ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த தெலுங்கு மக்கள் (1) நாயக்கர் மன்னர்களின் ஆட்சியில் உடன் வந்தவர்கள் (2) பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் (3) இஸ்லாமிய மன்னர்களின் கொடுமை தாங்காமல் இடம் பெயர்ந்தவர்கள் என மூன்று வகைகளில் அடங்குவர். கம்மாவர், ரெட்டியார், கம்பளத்தார், செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர் போன்ற சாதிகள் இதில் அடங்கும்.

இந்தத் தெலுங்கு மக்களில் ஒரு பிரிவினர் நாடோடிகளாகவும், அரை நாடோடிகளாகவும் இன்றும் இருக்கின்றனர். மற்றொரு பிரிவினர் வேளாண்குடிகளாகி நிலைத்த மக்களாகிவிட்டனர். இந்த நிலைத்த வேளாண் குடிகள் காடழித்து கரிசல் மண்ணைச் சீர்திருத்தி வேளாண்மை செய்து வாழ்ந்தனர்.

இந்தத் தெலுங்கு கம்மாவர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், வீட்டு அமைப்புகள், புழங்கு பொருட்கள், வேளாண் கருவிகள், நம்பிக்கைகள், மருத்துவம், தொன்மங்கள் முதலிய பண்பாட்டுக் கோலங்களை வரலாற்றுப் பின்புலத்தில் கி.ரா. பதிவு செய்வது புதுமை.

137 வயதுள்ள மங்கத்தாயாரு அம்மாவின் நினைவலையாக நாவலில் பல நிகழ்வுகள் அடுக்கப்படுகின்றன. இடப்பெயர்வும், நிலத்தைக் கண்டடைவதும் நிலை கொள்ளலும் பின்புலத்தில் கொள்ளப்படுகின்றன.

காது வளர்த்து வளையம் போன்ற ‘கம்ம’ (கம்மல்) என்ற காதணிகளை இச்சமூகப் பெண்கள் அணிவதால் ‘கம்மாவர்’ எனப் பெயர் வந்ததாக மங்கத்தாயாரு வழி கி.ரா. சொல்லுவார்.

நாகார்ஜூன மலையில் வீரம் நிறைந்த ஒரு ராட்சதப் பெண் இருந்தாள். அவளை அடக்க யாராலும் முடியவில்லை. அழகும் வீரமும் கொண்ட பிராமணன் அவளை அடக்கி அவளுடைய மூக்கில் தொரட்டியைப் போட்டு இழுத்துக் கொண்டு வந்தானாம். இதுவே கம்மாவர் பெண்கள் விரும்பி அணியும் ஆபரணம் ஆனது. அப்பெண்கள் மூக்கில் ‘தொரட்டி’ போடும் வழக்கம் உண்டானது, எனப் பல கதைகள் இந்நாவலில் இடம் பெறுகின்றன.

இந்நாவலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் நா.வானமாமலை இதனை நாட்டார் நாவல் என்று வகைப்படுத்துவார்.

1. இதன் கதாநாயகர்கள் உழைப்பாளிகள், உழைப்பை நம்பி இயற்கையை மாற்றுபவர்கள்.
2. இருவேறு காலகட்டங்களில், ராஜ்ய அதிகாரமில்லாத பகுதியில் சமுதாயத்தை அமைக்கிறார்கள்.
3. இயற்கையை அழித்து நாட்டை உண்டாக்குகிறார்கள்.
4. அச்சமுதாயத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள்.
5. அதற்காகத் தமது வரலாற்று வீரர்களைப் போற்றும் கவிதைகளைப் பண்பாட்டுச் செல்வமாகக் கருதுகிறார்கள்.
6. வீரர் கதைகள், நாட்டுப்பாடல்கள், பழமொழிகள், வழக்கங்கள் ஆகிய கலைச் செல்வங்களால் இவர்கள் ஒன்றுபடுத்தப்படுகிறார்கள்.

என்ற காரணங்களை வரிசைப்படுத்தும் நா.வா. நாட்டுப் பண்பாட்டை வெளிப்படுத்தும் இந்நாவலை “வரலாறு, இவர்களுக்கு மன்னர்கள் வரலாறு அல்ல. தங்கள் முன்னோர்களது போராட்ட வரலாறு. இவ்வரலாறு ஒலிவழியாகப் பரவுவது. உண்மையைக் கற்பனையாக மாற்றி அமைத்த உருவம் கொண்டது”. என மதிப்பீடு செய்வார்.

கி.ரா.வின் எழுத்துக்களில் அழகியல் அடிப்படையில் உச்சம் தொட்டதாக ‘கிடை’ குறுநாவல் மதிப்பிடப் படுகின்றது. தமிழில் முதல் மேய்ச்சல் சமூக இலக்கியப் படைப்பு இதுவே. சமூக உறவுகளையும் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் நுட்பமாகக் கிடையில் காணலாம்.

எல்லப்பனின் கல்யாண ஊர்வலமும், செவனியின் பேயோட்டு வைபவமும் சமூக முரணின் சித்திரங்கள். பொன்னுசாமி போன்ற ஊர்ப்புற துடியானவர்களையும் இதில் தரிசிக்க முடியும். எல்லப்பனும் செவனியும் தமிழ்ச் சமூகத்தின் வகை மாதிரிகள் தானே? வழக்கம் போல் இக்கதையிலும் ‘கதை’ வருகிறது.

இடைக்காட்டுச் சித்தரைக் கி.ரா. காட்டுவார். ஆடுகளுக்குத் தீனியாக ஆவாரந் தழைகள், இடைக்காடர் வரகரிசியையும் மண்ணையும் குழைத்துக் கோட்டைக் கட்டி ஆடுகளோடு அவரும் குடியிருக்கிறார். ஆவாரம் இலைகளைத் தின்ற ஆடுகள் தினவில் அந்தக் கோட்டைச் சுவற்றை உரசும்.

வரகு தரையில் உதிரும். பஞ்ச காலத்தில் அந்த வரகரிசித் தூளையும் ஆட்டுப்பாலையும் கலந்து சாப்பிட்டு பன்னிரண்டு வருடங்களைக் கழித்ததாக சுவையாக கி.ரா. எழுதிச் செல்வார்.

கிடையில் கி.ரா. சொல்லும் கால்நடை நுட்பங்கள் அரிதான செய்திகள். கிட்ணக் கோனார் இருபத்தேழு வகையான ஆடுகளையும், கோபால் நாயக்கர் முப்பது வகையான ஆடுகளையும் இந் நாவலில் சுட்டுவார்கள்.

ருஷ்ய நாவலாசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் ‘குல்சாரி’ எனும் நாவலைப் படைத்திருப்பார். இதில் குதிரைகள் இடம் பெறும். குதிரைகளின் குளம்படி ஓசையையும் கோதுமை வயல்களின் வாசனையையும் நாம் நுகரமுடியும்.

அப்படித்தான் கிடை நாவலும். ஆட்டுப் புழுக்கைகளின் வாசமும், கருவுற்ற சினை மாடுகளின் வீச்சமும் நம்மைக் கவ்விப் பிடிக்கும். இது கி.ரா. வின் எழுத்துக்கலையின் வெற்றி. இது ‘ஒருத்தி’ எனும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

கி.ரா. இயற்கை உபாசகர். அவர் அளவுக்கு செடி, கொடிகளை, விலங்குகளை, பறவைகளை எழுத்தில் கொண்டு வந்தவர்கள் குறைவு. கரிசல் காட்டு கடுதாசியில் தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் மகனிடம் அம்மா சொல்லுவாள் “போகும் போது புளியமரத்தின் கீழ் இளைப்பாறு, வரும் போது வேப்பமர நிழலில் இளைப்பாறு” இதன் அர்த்தம் தாவரப் பயன்பாட்டையும் பண்பாட்டையும் உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

கி.ரா. தேர்ந்த இரசனைக்காரர். இது இசையினால் வந்தது. சிறுவயது முதலே இசையில் அலாதிப்பிரியம். காருக்குறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள், ராஜரத்தினம் பிள்ளை போன்றோர்களிடம் தொடர்பில் இருந்தார். எழுத்தில் இவர் அளவுக்கு இசையைப் பயன்படுத்தியவர்கள் குறைவு.

கி.ரா.வின் மற்றொரு துறை நாட்டுப்புறவியல். புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் கி. வேங்கட சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்தபோது ஒவ்வொரு துறை சார்ந்து புகழ் பெற்ற ஆளுமைகளை வருகைதரு சிறப்பு நிலை பேராசிரியர்களாக அழைத்தார்.

அப்படித் தமிழ்த் துறைக்கு அழைக்கப்பட்டவர்கள் க.நா.சு., இந்திரா பார்த்தசாரதி, கி.ரா. ஆகியோர். க.நா.சு. இந்திய இலக்கியம், விமர்சனம் குறித்து ஒரு சில பணிகளைச் செய்துவிட்டு ஓராண்டில் வெளி வந்தார்.

இந்திரா பார்த்தசாரதி நிகழ்கலைத் துறை என்ற புதுத்துறையைக் கண்டார். கி.ரா.வோ நாட்டுப் புறவியலைக் கைக்கொண்டு நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிக்கத் தொடங்கினார். 1989 தொடக்கம் 1993 வரை இது நடந்தது. பேராசிரியர் சிலம்பு செல்வராசு அவருடன் இணைந்து பணியாற்றினார்.

கல்விப்புலத்துக்கு வெளியே நாட்டாரியக் கதை மரபில் எழுதிவந்த கி.ரா. கல்வித் துறைத் தொடர்பில் செயல்பட முனைந்தார். இவரால் நாட்டுப்புறவியல் வெகுமக்கள் கவனத்தைப் பெற்றது. நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு, கதைக்களஞ்சியம், பெண்கள் கதைகள், சிறுவர் விளையாட்டுகள், வழக்காறுகள் தொகுப்பு... என விரிவடைந்து வட்டார வழக்குச் சொல் அகராதி வரை அது ஆழப்பட்டது. கரிசல் காட்டு கடுதாசி, வயது வந்தவர்களுக்கு மட்டும், பாலியல் கதைகள் போன்றவை வணிக, வெகுஜன வரவேற்பைப் பெற்றன. இரசனை

விஞ்சிய இம்முயற்சிகள் “Folklore” அல்ல “Fakelore” என்றெல்லாம் கூட விமர்சிக்கப்பட்டன. அது பற்றி அவர் கவலைப்படவில்லை.

கழனியூரன், பாரத தேவி போன்றவர்களை ஊக்கப்படுத்தி, களஆய்வில் ஈடுபடுத்தி கதைகளை, வழக்காறுகளை ஆவணப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. கதை சொல்லி இதழ் வழி செய்த பணியும் முக்கியமானது.

எழுத்தில் வாய்மொழி மரபைப் பின்பற்றியதும், வாய்மொழி இலக்கியங்களை எழுத்துப் பெயர்ப்பு செய்ததும், வட்டார வழக்குச் சொல் அகராதி வரைந்ததும், நாட்டுப்புறவியல் துறையை வெகுஜனப்படுத்தியதும் இத்துறையில் கி.ரா.வின் சாதனைகள் என்றே சொல்லலாம்.

கி.ரா. தொடக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய இரு அமைப்புகளோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். புதுச்சேரியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கி.ரா. இல்லாமல் நடந்ததில்லை. மாநிலத் தலைவர் எல்லை. சிவக்குமார் மிக நெருங்கி இருந்தார்.

“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உடைஞ்சதற்கான காரணத்தை ஒண்ணு + ஒண்ணு = 11ன்னு ஒரு கட்டுரை எழுதினேன். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று சொன்ன ஒரு சங்கம் இப்படி ரெண்டா உடைஞ்சிடுச்சு. உடைச்சது முதலாளிகள் சங்கம் தான்.

அவங்களுக்குள்ள ஒற்றுமை கட்சியில் இருந்திருந்தா கட்சி உடைஞ்சிருக்காது” என்று அப்போது எழுதியவர் கி.ரா. கடைசி வரை இரு கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற விருப்பையும் வேண்டலையும் வெளிப்படையாகவே சொல்லி வந்தார்.

கி.ரா. தன் நீண்ட வாழ்வில் எல்லோராலும் கொண்டாடப்பட்டார். கரிசல் எழுத்தாளர்கள் எனப் பெரும் படையே உருவானது மட்டுமல்லாமல் நிலவியல் சார்ந்த திணை வாழ் எழுத்து தமிழ்நாடெங்கும் முகிழ்த்துக் கிளைத்தது.

எழுத்துக்கும் வாழ்வுக்கும் வேறுபாடில்லாத மனிதர். மனித விடுதலையே அவரின் இலக்கு, மனித மகிழ்ச்சியையே அதன் வழிமுறையாகக் கொண்டார். அவரோடு பேசுவது இன்பம். அவர் எழுத்தை வாசிப்பது இன்பம். அவரே இன்பம். மனிதத் துன்பங்களை தூர நிறுத்தவே இறுதிவரைப் போராடினார், வென்றார்.

நன்றிக்கடன்

கி.ரா. எனும் நம் காலத்து கலைஞன் இவ்வளவு காலம் பூரிப்போடு உலகில் நிலைத்திட துணை நின்றவர் அவரின் துணைவியார் கணவதி அம்மையார் (2019 செப்டம்பர் 25 இல் காலமானார்). திவாகரன், பிரபாகர் ஆகிய இரு மகன்கள். கி.ரா.வுக்கு வளர்ப்பு மகன் போல ஆகிவிட்ட ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான கே.எஸ். இராதாகிருஷ்ணன், எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம், பேராசிரியர் க. பஞ்சாங்கம், திரைப்படக் கலைஞர் சிவக்குமார் குடும்பம், முதலில் கி.ரா. வை அடையாளப்படுத்திக் கொண்டாடிய கவிஞர் மீ.ரா., தொடர்ந்து கி.ரா.வின் ஒட்டுமொத்தப் பதிப்பாளராக விளங்கும் “அன்னம்’ கதிர் ஆகியோரை கி.ரா.வின் தோழமை அடையாளமாகச் சுட்டலாம். பட்டியல் பெரிது.

கி.ரா.வின் மறைவையட்டி அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததுடன் இடைசெவல் பள்ளியில் நினைவரங்கமும் கோவில்பட்டியில் திருவுருவச் சிலையும் நிறுவும் அறிவிப்புகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் கலை இலக்கிய உலகம் கரம்கூப்பி நன்றி சொல்கிறது.

இவற்றுக்குப் பின்புலமாக துணை நின்ற தொழில் துறை, தமிழ் வளர்ச்சிப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம். தென்னரசு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தலைமைச் செயலாளர் எழுத்தாளர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். போன்றோருக்கும் நன்றிகள். இது தமிழின் வரலாற்று முன்னெடுப்பு. இந்த நற்பணி தொடர வேண்டும்.

- இரா.காமராசு

Pin It