பழத்தின் கட்டளை

ஓர் இரவைப் பிட்டு உண்ணத் தெரியாதவன்
விழித்துக் கொண்டு நிற்கிறான் அதைக் கைகளில் ஏந்திக் கொண்டு
துயரப்பட்டு வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்தவன்
இந்தக் கிளையற்ற மரத்தடிக்கு வந்து சேர்ந்து
பெருமூச்சோடு ஆகாயத்தை அண்ணாந்தபோது
மரத்திலிருந்து உதிர்ந்தது இந்த இரவு
கருநிறக் கனியாகிய அது அவன் கைகளில் தஞ்சமடையவே உதிர்ந்திருக்கிறது
ஒரு கடவுளின் தலையைப் போன்றே
எடை குறைவு என்றாலும் அது உலக வாழ்வின்
ஓர் இரவைக் கனவுபோல் கொண்டிருக்கவே செய்கிறது
விசித்திரங்களை யாரும் யோசிப்பதே இல்லை
அது நிகழ்வதின் மூலமே திகைக்கச் செய்கிறது
அந்தப் பழம் கட்டளையிடுகிறது தன்னை அவனைப் பிடச் சொல்லி
பிட்டவன் அவன் இல்லை கட்டளைதான்
உள்ளே நார் நாராய்த் தொங்கும்
அம்மனின் மழிக்கப்படாத மீசை தாடிக் கேசமாய் மஞ்சள் வெயில்
அதிலிருந்து பெருகி வீசும் பனம்பழ வாசனை
அவனை அழைத்துச் செல்கிறது அதன் ஆழத்தில்
தவழ்ந்து கொண்டிருக்கும் அவன்தன் குழந்தைமைப்
பருவத்திற்கு.

ஒரு கதவும் இல்லை

அறை வாசலில் உன் நிழலாடியது
விளக்கொளி சற்றே மங்கியதில் உணர்ந்தேன் அதை
நீ நுழைவதற்கும் முன்பே திடுக்கிட்டு விளக்கை
அணைத்து விட நினைத்தேன்
விளக்கணைவதால் எந்த அறையும் மூடிக் கொள்வதில்லை
உள்ளே நுழைந்து விட்ட நீ மிகவும் பிரகாசிக்கிறாய்
உன் பிரகாசத்தில் கூசி விளக்குத் தானாய் அணைந்தது
அவ்வெளிச்சத்தில் உள்ள உடல் பேதமில்லை
தாழிடவோ உன் உடலில் ஒரு கதவும் இல்லை
அது அழைக்கிறது எதிரே
பசுமையால் போர்த்தப்பட்ட பள்ளத்தாக்கு ஒன்று பரவசமூட்டுகிறது
நான் பயணிக்கிறேன்
அது ஒரு புனித யாத்திரையாகிறது
மூச்சுத் திணற மலைமுகடு அடைகிறேன்
சடாரென ஒரு பேரலை என்னைத் தாக்குகிறது
பாலைவன மணற்புயலாய் ஒரு சுழற்சி பின் மரக்கிளையின் உச்சி
எப்போதும் விழலாம் என்ற தவிப்பில் பேய் மழை கொட்டுகிறது
கிளை நழுவுகிறது பேரருவியில் விழுந்து கொண்டிருக்கிறேன்
வந்து சேர்ந்த இடம் பலயுகமாய் நீர்வற்றா பழங்குளம்
அதன் நிச்சலனத்தின் பாசி மீது ஒரு பச்சைத் தவளையென
மிதந்திருக்கிறேன் மிதந்தவாறே இருக்கிறேன்
சில காலத்திற்குப் பின்தான் உணர்கிறேன்
அந்தக் குளத்துக்கு ஒரு கதவும் இல்லை நான் வெளியேறிட

வெயிலுக்கும் ஒரு வாழ்விருக்கிறது

நான் சந்தோஷப்பட்டுக் கொள்ளவே செய்கிறேன்
என்னைப் போன்றே இந்த வெயிலுக்கும் அதைச் சுமந்து
அலையும் இந்த காற்றுக்கும் ஒரு வாழ்விருக்கிறது
ஒரு புத்தகத்தைப் போலவே
மலையிலிருந்து கொண்டு வந்த வரையறையில்லா
இந்தச் சிறு கல்லுக்கும் கூட
நான் அழுகிறேன்
இந்த நவநாகரிகமான வாழ்வை அணிந்து திரியும் மனிதர்களுக்காக
ஒரு சில்லரையைத் தன் மலத்தில் கூட வெளியேற்றாதவன்
ரூபாய் தாள்களைக் கழுதையைப் போலத் தின்று திரிவதற்காக
கடந்து செல்லும் அநேக முகங்களில்
ஒன்றின் சாயிலில் துயரம் வழிகிறது
மற்றெல்லாம் போலிப் புன்னகைகள்
புத்தகங்களைக் கடந்து வந்தவன் நான் சபிக்கவே மாட்டேன்
ஏனெனில் நான் அறிந்து கொண்டு விட்டேன்
நான் கொண்டு வந்துவிட்ட சிறு கல்லிற்காக
பாறைகள் சில தேம்பிக் கொண்டிருப்பதை
மலையும் துக்கத்தில் மௌனித்துக் கிடப்பதை
அவற்றின் துயரம் எனக்குத் தெம்பளிக்கிறது
அதனால் நான் சந்தோஷப் பட்டுக் கொள்ளவே செய்கிறேன்.
Pin It