நாம் தேர்ந்தெடுத்த மதுச்சாலையில்
ஒளியை மூழ்கடித்தது இசைவெள்ளம்
பனிக்கட்டியின் குளுமையில் ஊறிய மது
தன் இயல்பை இழந்துவிட்டிருந்தது.
இரு கோப்பைகள் அருந்திய பின்
இலக்கியம் நோக்கி திரும்பியது பேச்சு.
உன் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளை
சொல்ல முயன்றபோதெல்லாம்
கேட்க மறுத்தாய்.
முன்முடிவுகளோடு வந்திருந்தாய்.
போதையை கேடயமாக்கி
தப்பித்துக்கொண்டாய்.
காலியான கோப்பைகளில்
விரோத மனப்பான்மை
பொங்கி வழியத் துவங்கியதும்
இரு குடிகாரர்களாய் வெளியேறியபின்
இருக்கைகளில் மீதமாய் அமர்ந்திருந்தது
மது அருந்தும் முன்பிருந்த நீயும் நானும்

உதிர்ப்பது யாது?

அந்த வீட்டின் அருகாமை மரங்கள்
உதிர்க்கின்ற இலைகளை
வேட்டையாடிக்கொண்டிருக்கிறது பூனை
அங்குமிங்கும் ஓடி

உடல் எவ்வி
காற்றில் நீச்சலிட்டு
ஒரு பறவையைக் கவ்வி
தரையிறங்குவது போன்ற
அதன் பாவனைகளை
கவனித்த வீட்டுப்பெண்
அவை வெறும் இலைகள் என்றபடி
பூனையை மார்போடு
அணைத்துச் செல்கிறாள்.
தனது
கற்பனைப் பறவையை கலைக்க
அவளுக்கு உரிமையில்லாததை
குறித்த ஆட்சேபங்களை
மியாவ் என்று வெளிக்காட்டுகிறது
புரிதலின் பேதங்களில்
உதிர்ப்பதை நிறுத்திவிட்டிருந்தன
மரங்கள்

இருந்தும் இல்லாமல் போன இல்லத்தில்.....

கால் பதிக்கும்
ஒவ்வொரு அடியிலும்
வேதனை தகிக்க
கலையாத பொருட்கள்
காலத்தின் தூசுபடிந்து
துயர் இயம்புகின்றன.
அவர்களிடையே
பேச்சொழிந்து
சைகைகள் பாஷைகளாகின்றன.
கண்ணாடியின் நீர்மையில்
தோன்றும் நினைவு முகத்தில்
நிகழ்காலம் கல்லெறிந்து
கலைப்பதை கண்டு
தேறுதலுற்றுக் கிளம்பும்
பெருவிசும்பலோடு
வெளியேறுகிறார்கள்.
குழந்தையிருந்து பறித்த
இலைகளின் வடுக்களோடும்
சீண்டுவாரற்ற மலர்களோடும்
அதிர்ஷ்டமிழந்த செடியொன்று
நகர சாத்தியமற்று
துக்கத்தின் மணம் பரப்பியவாறு நிற்கிறது.
Pin It