கல் யாளி

என் மேல் பாய
கல்லாகிக் காத்திருக்கிறது யாளி
எப்போதும் தூணருகில்
பின்னங்கால்களால் எழுந்து நின்றிருப்பது
நான் நுழையும் கணத்துக்கு
கண்களில் பார்வை திறக்க
பிடரி காற்றில் சிலிர்க்க
உடலில் குருதி ஓடுகிறது
நீண்ட காலத்தால் உருமாறாது
கானகத்தின் ஆழத்தில் வாழ்ந்து
கற்பனையில் வெளியாகும் விலங்கு
இவ்வேளைக்கே காட்சியாகிறது
விரியும் மண்டபம் தாங்கி
ஆயிரம் கால்களில் ஒளிந்து
சொல்லும் பாவனையில் பாவைகள்
வெறும் சாட்சியாகக் சமைந்திருக்கிறார்கள்
எதிரில் கண்டிருக்கும் என்னிடம்
உறுமிப் பிளிறும் ஒலியாக
பெரும் சீற்றத்தால் பாய்கிறது
அதன் திறந்த கோரைப் பற்கள்
என்னைக் கொன்று தின்கிறது
உள்ளிருந்து நீளும் துதிக்கை
எனக்குப் புத்துயிர் ஊட்டி
மறுபுறம் தாவி மறைந்ததும்
மிகுதி யாளி கல்லாயிருக்கிறது

வாயிற் புறம்

நீங்கள் தொலைவில் சிறிய
எல்லா வழிகளும் முடியும்
கோபுரத்தை நோக்கி செல்கிறீர்கள்
நெருங்கும் கணங்களில் வளர்ந்து
வானுக்கும் பூமிக்குமாக தோன்றி
நிழல் கீழே விழாதிருக்கிறது
உங்களோடு ஒட்டிய காலணிகளை
வெளியில் கழற்றி நுழைந்தால்
உள்ளே மதில்கள் சூழ்ந்து
திசைகளில் தெரியும் கோபுரங்கள்
மண்டபத் தூண்களினூடே தேடி
கருவறையடைந்த தரிசனத்தில்
உங்களின் ஓட்டம் நிற்கிறது
மீண்டும் வலம் வருகையில்
கோயில் வழியில்லாமல் சுற்றுகிறது
ஒவ்வொன்றிலும் யானைகள் அசைய
நான்குபுறங்களும் ஒன்றாகின்றன
எங்கும் மனித கூட்டத்தில்
நீங்கள் புகுந்ததை மறந்து
நீண்ட ஆயுட்காலங்களாய்
ஆலயத்தில் சுழன்று கொண்டிருக்கிறீர்கள்
ஏதோவொரு கோபுரத்தில் வெளிப்பட்டு
தொலைவிற்கு விலகிச் சென்று
அப்போது காலணிகளைக் காண்கிறீர்கள்

பேய் ஆட்டம்

தினம் நள்ளிரவின் அமைதியில்
தலைமயிர் வீதிகளில் விரிய
அவள் கால்பாவாது ஓடுகிறாள்
யோனியில் எழும்பும் கூக்குரல்
வானில் கருத்து எதிரொலித்து
உறங்கும் வீடுகளை எழுப்புகிறது
குழந்தைகளின் காதுகளைப் பொத்தி
கனவில் ஒலிக்கும் கூவலை
விழித்து வெளியே காண்கின்றனர்
அகாலத்தில் இறந்த உரையாடலையும்
மயக்கும் புதிய சொற்களையும்
அவர்கள் புரியாமல் கேட்கிறார்கள்
பெண்கள் உள்ளுணர்வின் பயத்தில்
அவள் வார்த்தைகளை வழிபடுகிறார்க்ள
அவள் தற்கொலையுண்ட நாவால்
ஆண்குறிகள் அழிய சாபமிடுகிறாள்
அவற்றை நீட்டிப் புகைத்து
ஒழுகும் மதுவைக் குடிக்கிறாள்
அவளின் பற்பல குரல்களை
வேப்பிலைகளை வீசி நெரித்து
மந்திர சாட்டையால் சுருட்டி
ஊர் எல்லைக்கு விரட்டுகிறார்கள்
மீண்டும் இருட்டில் மோகித்து
நெருங்கும் செவிகளில் அறைந்து
அவள் இரத்தம் கக்கவைக்கிறாள்.
Pin It