சுயஇன்பம்

மூளையில்
ஒரு சொல் இவளைப் போல துன்புறுத்துகிறது
ரத்தம் கரையும் இவனுடல் நடக்கத் திராணியற்று
சுவர்களுக்குள் சுவராக
உடல் காட்டி முகம் காட்டி
மறைத்தவளின் பிம்பத்தை
நினைத்து நினைத்துப் புணர்கிறான்
தனித்த காமத்தின் மூச்சிரைத்து சரிகிறான்
இவள் ஒரு அழகுணர்ச்சி ததும்பும் தேவதை
புன்னகைத்து இவன் மதிக்குள் இறங்குகிறாள்
இவனுக்குள் ஆடை கலைந்து
மயக்கும் பார்வைகளை வீசுகிறாள்
கைகளில் முத்தமிட்டு இதழ்களைக் கவ்வி
பேரின்ப உலகைத் திறக்கிறாள்
இவள் முலைகள் பெரும் மலைகளாய் விரிகின்றன
இவள் யோனி பெரும் சுரங்கமாய் நீள்கிறது
உட்சென்று உட்சென்று
இன்பத்தின் கடைசிவரை செல்கிறான்
இவன் இவளாகி இவள் இவனாகி
துர்பாக்கியம்

துன்பமற்றவன்

துக்கத்தின் காலத்தில் உன் கரிய உதடுகள்
என் கண்களுக்கு அருகில் வந்தன
முத்தங்களின் பொழுதுகளில்
உன் உதடுகளின் சத்தங்கள்
மிக மெல்லியதாய் ஒலித்தன
உன் கடற்கரையில் உன் கவிதைகளில்
என்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாயா
உன் விருப்பத்தில் கிளைகளை விரித்து
என் உயிர்ப்பறவைகளை அமர வைத்திருக்கிறேன்
அதன் சிறகுகள் உன் தோட்டத்தில் பறக்க
அனுமதிக்கிறாய் இல்லையா
உன் வீட்டின் நிழலின் மீது
தாகமெடுத்துப் படுத்திருக்கிறது என் மனம்
நிசப்தத்தில் கேட்டுப்பார்
என் பாடலில்
உன் மீதான காதல் வெறுமை வேதனை
நிரம்புவதை
உன் கரிய உதடுகளின் வசீகரத்தில்
துன்பமற்றவனானேன்
இந்த நாட்களில்.

கரைமீன்

இரவின் கசிவிலிருந்து வந்தவள்
முத்திமிடப்படாத என் விரல்களை முத்தமிடுகிறாள்
அவள் வார்த்தைகள் நாண வைக்கின்றன
விரல்களில் விரல்களால்
மேனியின் இமை திறக்கிறாள்
உதடுகள் வழியே சிதறுகின்றன
ஈரத்துடன் அவள் மீது நட்சத்திரங்கள்
கடல் தேடிய கரைமீன் துள்ளித் துள்ளி
தாகத்தின் வெறியில்
நீர் பெருகி நீந்துகின்றது மேனியில்
மௌனப்பெரும் மழையில்
காற்றில் மறைகின்றன குடைகள்
அவள் குரல்வளையில்
அதிரும் நரம்புகளில் பதறுகிறது இசை
பேரிசையில் அயர்ந்து தூங்குகிறது
இரவு

ஒளி மாயை

கண்ணாடிக்குள்ளிலிருந்து
வெளியேறிய பெண்புறாக்களின் படபடப்புகளில்
என் தனிமையின் வெற்றிடம் நிரம்புகிறது
உதிர்ந்த வெண்இறகின் இழைகளுக்குள்
அந்தப் பட்சிகளின் உயிர் சிறகசைக்கிறது
ஆர்வமான என் விரல்களின் மீது
சுழன்று சுழன்று இறகுகள் ஒன்று கூடி
சுவர் மோதி என் கைகளுடன்
என்னுடல் சுமந்து
வெளியெங்கும் சத்தங்களால் வரைகின்றன
சுதந்திரத்தை
வானின் அகன்ற தோள் மீது கனிவான இதயங்களுடன்
நெகிழ்ச்சியான உரையாடல் நிகழ்த்துகிறேன்
ஆகாயத்தின் அதிசயங்கள்
பறவைகளிடம் இருப்பதாக
ஒரு பாடல் எழுத முயல்கிறேன்
சொற்களை சூர்யனிலிருந்து எடுக்கிறேன்
பல்வேறு நிற ஒளிகளின் மாயை பற்றியதாக விரிகின்றன
அந்திப் பொழுதில்
மரங்கள் தேடி அமர்ந்தோம்
நிலத்தின் வாசனையில் கீழிறங்கிய நான்
திரும்பவில்லை வான்வெளிக்கு

தூண்டில்காரன்

ஓய்ந்துபோன் நீரிலிருந்து
ஒரு மீனைக் கண்டெடுக்கிறேன்
மணல் வெளியெங்கும்
செதில்கள் தேய்ந்து உதிர்கின்றன
கரையில் ரத்த வாடையோடு
மீனின் உடல்
தூண்டிலோடு வந்தவன்
கைகளில் பிடித்துவிடுகிறான்
அவனைத் துரத்துகிறேன்
திடூமெனத் தோன்றிய கடலில்
மீனை விட்டெறிகிறான்
செதிலுடைந்த மீன்
நீரெல்லாம் பெரிதாகி அலைகிறது
கரையிலிருந்து நான்
அலைகளுக்குள் ஓடுகிறேன்
அலை அலையாய் என்னுடல் மாற
என் மீது நீந்துகிறது மீன்
அவன் மறு கரையிலிருந்து
கையசைக்கிறான் கேலிச்சிரிப்புடன்.

எலும்புகள் உடையும் ஜாமம்

துரோகங்களின் கூடாரங்களில்
கத்திகள் அடுக்கப்பட்டிருக்கின்றன தாறுமாறாக
நேர்மையான மூளையுடன்
ஒருதலை தடுமாறுகிறது
கெட்ட ரத்தங்களின் நடுவே
துர்பாக்கியத்தின் கைகளில் உயிரின் நடுக்கம்
செய்வதறியாமல் நடுஇரவின் தனிமையில்
இமைகள் படபடக்கின்றன
பளபளக்கும் தீய கூர்முனைகளின் எலும்புகளை
ஜாமத்தில் நொறுக்குகிறான்
பயந்த நரம்புகளின் துளைகள் வழியே
நேர்மையற்ற ஒழுக்கக்கேடான சொற்கள்
தப்பி வெளியேறுகின்றன
உண்மையின் ஆழத்தில் ஜொலிக்கும்
வைரங்களை அள்ளிக்கொண்டவன்
அவநம்பிக்கையின் இதயத்தை
வெட்டிப்புதைக்கிறான்
அநாதரவான வெளியில்
உடலைவிட்டுத் தொலைந்துபோன
பெரும் நோயைப்போல
ஆயுதங்களின் கூடாரம்
அவனைவிட்டு அகல்கிறது
அவன் ஆழ்ந்த அமைதியில் உறைகிறான்
உலகின் மீது கால்கள் தனித்து மிதக்கின்றன.

அணுகுண்டுகள்

அவள் சக்திவாய்ந்த
அணுகுண்டுகளுக்கான சொற்கனை வைத்திருக்கிறாள்
நான் மிகக் கூடுதலான அமைதியுடன் நிதானத்துடன்
அவள் வாழ்வை சூறையாடிய
ஒரு குற்றவாளியாய் நிற்கிறேன்
எந்த நேரத்திலும்
வாழ்ந்த காலங்களின் அழுகிய நினைவுகளை
என் மீது எறிந்துவிடுவாள்
மிக ஜாக்கிரதையாய்
எச்சரிக்கையுடன் அவளருகில் இருக்கிறேன்
இரவின் தூக்கத்தில் எவ்வித இடையூறுகளுமில்லை
விடிந்த கணம்
வெயிலில் மூளை சூடாகியவள்
என் சொல் ஒன்றைப் பிடித்து
அணுகுண்டுகளை வெடிக்கச் செய்கிறாள்
நான் சிதறி வெளியேறினேன்
கண்கள் ரத்தவெள்ளங்களில் மூழ்கிவிட்டன.

Pin It