மிக அடர்ந்த தனிமையினூடாக செல்லும் அவளுக்கு

புலிகள் குறித்து
அத்துப்படியாகியிருக்கும்
உன் ஆன்மாவின்
கீறலையொத்த கிழிசலின் வழியே கழிவிரக்கம் வேண்டி நுழைகிறது
பற்களைப் பிரயோகிக்கும்
சூத்திரம் மற்றதாய்ச்சொல்லும் என் புலி
தொலைந்து போய்விட்ட
வெளிர்நிறப் பூனைக்குப் பகரமாகவோ
இருள் படர்ந்த இரவுகளில்
அக்குள்களுக்கிடையே புகுந்து நிகழ்த்தும்
கதகதப்புக்காகவோ
தனிமையின் நெடுவழிகளில்
அதை துணை சேர்க்கிறாய்
வலியும் சுகமும் பிணைந்த நீளங்களில்
இடையிடையே இருட்டு
களைப்பின் கறை படிந்த சாயங்காலங்களில்
உலர்ந்து போன உன் சருமத்தை
தன் நாவால் வருடுகிறது
சுகிக்காதே
அதற்குத் தெரியும்
நாவுகளால் மாம்சம்
தின்னும் மந்திரம்.

கடற்பெரு வெளிச்சம்

நிகழ்வுகளுக்கும் ஆசைக்குமான
பந்தயத்தில்
இடைக்கயிறாய் மாட்டிக் கொள்வது
மிகக் கொடுமையானது
மேற்பரப்பில் மிதந்து பரவிய
வெங்காயத் தாமரைக்கடியில்
தேங்கிக் கிடக்கிறதென்
பாயத் துடிக்கும் பெருநதி.
காலம் தன் சுழிகளைச்
சாதுர்யமாய் காற்றில் வரைகிறது
ரகஸ்யங்களைப் புலப்படுத்தாது
பள்ளங்களில் பாய்ந்து
தேங்கி
நிரமபி
மேலாக வழிந்து
தாவரந்தழுவி
ஓட ..... ஓட .....
என்றாவது தெரியும்
புத்தனின்
கடற் பெரு வெளிச்சம்
Pin It