கடைசி பெட்டிக்குள் நுழையும் ரயில்

முடிவுற்று நீளும்
இவ்விரவின் அடர்த்தியைக்
கிழித்துக் கொண்டு வருகிறது ரயில்
ஒரு கணத்தில் உந்தப்பட்டு
காதலர்களாகி
கடைசிப் பெட்டியின்
கழிப்பறைக்குள்
சல்லாபித்துக் கொண்டிருக்கும் இருவரை
வளைந்து திரும்பும் வேளையில்
கவனித்துவிடுகிறது
பதற்றமும் குரோதமும்
அடைய
உடன் தடம்புரண்டு
காலைக்குச் செய்தியாகிறது.

வர்ணமடிப்பவன்

தொங்குப் பலகையில்
வெளிமாடத்திற்கு
வண்ணமடித்துக் கொண்டிருப்பவன்
வானத்திற்கும் சேர்த்து
வண்ணமடிக்கிறான்
அந்த வழியாகச் செல்லும்
மேகங்கள் திகைக்கின்றன
பின் சிரிக்கின்றன
சில கணங்களில்
மழை தூறத் தொடங்குகிறது
ஒவ்வொரு துளிக்கும்
ஒவ்வொரு வண்ணம்
அடிக்க முயல்கிறான்
தூறலுக்கிடையே வானவில்லையும்
தீட்டிவிடுகிறான் அவன்
முதல் வண்ணத்துளி விழும்
நிலத்தின் மேல்
அடுத்த வண்ணத்துளியை விழச் செய்யும்
சவாலைச் சந்திக்கிறது மேகம்.
Pin It