கடல்வாழ் பாலூட்டி விலங்குகளான சீல்களில் (Seal) சில, உண்ணும் உணவில் கலந்திருக்கும் நஞ்சை சமாளித்து உயிர் வாழும் திறன் பெற்றுள்ளன. இந்தத் திறன்  பற்றிய ஆய்வு மனிதர்களுக்கான மருத்துவத்தில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹ்ஃவான் ஃபெர்னாண்டஸ் மிருது உரோமம் உள்ள சீல்கள் (Juan Fernandez fur seal) மிக ஆபத்தான காட்மியம் உள்ளிட்ட உலோகத்தை உணவுடன் சேர்த்து உண்கின்றன என்றாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மனிதனின் செயல்களால் பூமியில் இருந்தே அழிந்து விட்டன என்று கருதப்பட்ட இந்த உயிரினம் இப்போது சூழலில் கலந்திருக்கும் மிக மோசமான உலோக நச்சுகளை சமாளித்து வாழ்கின்றன. ஆர்த்தோஸ்பேலஸ் பிலிப்பியை (Arctocephalus Philippii) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இவை உலகின் மிகத் தனிமைப்பட்ட இடங்களில் வாழ்பவை.

இவை காட்மியம், பாதரசம் போன்ற நச்சு உலோக மாசுகளை உண்டு ஆபத்தில்லாமல் உயிர் வாழ்கின்றன. பிலிப்பியை என்ற இந்த இனம் உலகின் இரண்டாவது மிகச்சிறிய மிருது உரோம சீல் வகையைச் சேர்ந்த இனம். இவை சிலி நாட்டின் கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வான் ஃபெர்னாண்டஸ் வளைகுடா மற்றும் அதற்கு அருகில் இருக்கும் ஒரு சில பசுபிக் கடல் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன.Juan Fernández fur sealsஇங்கு இவற்றின் வாழிடத்தை அலெக்சாண்டர் செல்கர்க் (Alexander Selkirk) என்ற கடற்பயணி 1704-1709 ஆண்டுகளுக்கு இடையில் கடலில் மூழ்கி ஆராய்ந்து அறிந்தார். இந்நிகழ்வு டானியல் டிஃபோ (Daniel Defoe) என்பவரால் ராபின்சன் க்ரூஸோ (Robinson Cruso) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த வளைகுடாப் பகுதியின் முக்கியத்தீவு ராபின்சன் க்ரூஸோ என்று பெயரிடப்பட்டது.

ஆனால் அதன் பிறகு இந்த விலங்குகள் மிகத் தீவிரமாக அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இப்பகுதியில் இருந்த நான்கு மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டன. இதனால் 19ம் நூற்றாண்டில் இவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயின. 1960களில் இவற்றின் சிறிய காலனி இத்தீவுப்பகுதியின் ஒரு குகைக்குள் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்வரை இவற்றின் இனம் அழிந்து விட்டது என்றே கருதப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட உயிரினம்

இதன் பின்னர் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இப்போது இத்தீவின் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை 80,000.

வளர்ச்சியடைந்த சீல்கள் கடலில் வாழ்கின்றன. நவம்பர் டிசம்பர் மாதங்களில் குட்டிகள் மிருதுவான கறுப்பு நிற உரோமத்துடன் பிறக்கின்றன. பிறகு இந்த நிறம் சில ஆண்டுகளில் மங்கி பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த உயிரினங்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ஆராயத் தொடங்கும் முன்புவரை இவை பற்றி மிகக் குறைவான விவரங்களே அறியப்பட்டன. இத்தகைய ஆய்வுகளின்போதே நஞ்சு உண்டாலும் பாதிக்கப்படாத இவற்றின் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மலம் ஆராயப்பட்டபோது அதில் மிக அதிக அளவு காட்மியம், பாதரசம் மற்றும் பிற நச்சு உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு. காட்மியம், பாலூட்டிகளுக்கு நச்சுத் தன்மையை தரக் கூடியது. ஆனால் இந்த சீல்கள் இந்த நஞ்சை எவ்வாறு செரிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக உள்ளது.

தங்கள் உடலின் செரிமான உறுப்புகள் வழியாக இவற்றை சீல்கள் செல்ல அனுமதித்தாலும் அதனால் இந்த உயிரினங்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் வாழ்கின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சூழல் பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கான்ஸ்டண்ச டோரோ-வால்டிவிசோ (Constanza Toro-Valdivieso) கூறுகிறார்.

இந்த உயிரினங்கள் இந்த நஞ்சுகளை எங்கிருந்து பெறுகின்றன என்பதும் ஆய்வாளர்களை வியப்படையச் செய்தது. இத்தீவில் உள்ள மண் மற்றும் சுற்றியுள்ள நீரில் இருக்கும் காட்மியத்தின் அளவு மிகக்குறைவு. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது உணவின் மூலமே சீல்கள் இந்த நஞ்சுகளைப் பெறுகின்றன என்று கண்டறியப்பட்டது.

பெருவட்ட கடல் நீர்ச்சுழற்சி

அண்டார்க்டிக் மிருது உரோம சீல் போன்ற சில சீல் இனங்கள் அவை வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் நீரில் உள்ள மிதவை உயிரினங்களையே (krill) உண்கின்றன. ஆனால் இந்த சீல்கள் ஏராளமான ஸ்குவிட் (Squid) மற்றும் இதர மீன்களை உட்கொள்கின்றன. பெண் சீல்கள் 500 கிலோமீட்டர் வரை கடலில் பயணம் செய்து தங்கள் இரையை வேட்டையாடுகின்றன. இதற்காக இவை தெற்கு பசுபிக் பெருவட்ட கடல் நீரோட்ட சுழற்சியை (Gyre) கடந்து செல்கின்றன.

பெருவட்ட கடல் நீரோட்டச் சுழற்சி என்பது அதிவிரைவாகச் சுழலும் கடல் நீரோட்டம். இச்சுழற்சியில் சகலவிதமான கழிவுகளும் சிக்கிக் கொள்கின்றன. இங்கிருந்தே சீல்கள் காட்மியம் போன்ற நஞ்சுகளை உணவின் மூலம் பெறுகின்றன என்று கருதப்படுகிறது. அதிவேகமாகச் சுழலும் கடல் நீரோட்டத்தில் மனிதன் உருவாக்கும் காட்மியம், பாலிமரால் ஆன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை ஸ்குவிட் மற்றும் மீன்கள் உணவுடன் உண்கின்றன. இவற்றிடம் இருந்து சீல்களின் உணவில் இந்த நஞ்சுகள் சேர்கின்றன என்று நம்பப்படுகிறது.

பல ஆண்டுகளாக இந்த வகை உயிரினங்கள் பற்றி ஆராய்ந்து வரும் வால்டிவிசோ அடங்கிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் Royal Society open science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருக்கும் காட்மியம் போன்றவற்றை இந்த உயிரினங்கள் எவ்வாறு செரிமானமடையச் செய்து அதிக பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பது பற்றி தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இவற்றின் மலம் தவிர இயற்கையாக உயிரிழந்த இவற்றின் எலும்புகளிலும் நச்சு மாசுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எலும்புகளில் காணப்படும் அதிகப்படியான சிலிகான் காட்மியம் போன்ற நஞ்சுகளை சமாளிக்க இவற்றிற்கு உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது நம் மருத்துவத் துறையில் முக்கியப் பயன்களைத் தரக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மனிதன் அறியாத பல அதிசயங்கள்

நஞ்சை சமாளிக்கும் இதன் பண்பு இதன் உடலில் இருக்கும் மரபணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அல்லது முற்றிலும் மனிதன் அறியாத வேறு காரணத்தால் இவ்வாறு நிகழலாம். இது பற்றி வரும் ஆண்டுகளில் தீவிரமாக ஆராயப்படும் என்று வால்டிவிசோ கூறுகிறார். மனித குலம் அதிகம் அறியாத இந்த உயிரினங்கள் இதுவரை நாம் அறியாத பல அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தலாம்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/apr/29/seals-mystery-ability-to-tolerate-toxic-metal-could-aid-medical-research-say-scientists?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It