2700 கோடி மதிப்பீட்டில் புதுவையில் துறைமுகம் கட்டிக்கொள்ள சுபாஷ் புராஜட்க்ஸ் அண்டு மார்கெட்டிங் லிமிடெட் (SPML) என்ற தனியார் நிறுவனத்துக்கு 1.2.2007 அன்று புதுவை அரசு அனுமதி அளித்தது. கப்பல் வந்து செல்ல கடலில் 16 மீட்டர் ஆழத்துக்கு 10 லட்சம் கியூபிக் மீட்டருக்கு மண் தோண்டப்படும். கடலுக்குள் 2 கி. மீட்டர் தூரத்துக்கு கற்கள் கொட்டி துறைமுகத்தளம் அமைக்கப்படும். மாதத்திற்கு 30லிருந்து 50 கப்பல்கள் வந்து செல்லும். தினமும் கப்பல்களுக்கு அரசு 3 லட்சம் லிட்டர் குடிநீர் கொடுக்க வேண்டும். கப்பலில் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் தினமும் 300 லாரிகள் துறைமுகத்துக்கு வந்து செல்லும். சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற நாற்கர சாலைகளை அரசு அமைத்துத் தரும். இத்திட்டத்தின் மூலம் புதுவை மக்களுக்கு 5000 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் சொகுசுக் கப்பல்கள் விடுவதன் மூலம் சுற்றுலாத்துறை முப்பதிலிருந்து நாற்பது சதம் வரை வளர்ச்சியடையும். இத்திட்டத்தை ஒட்டி அரசும் சுபாஷ் நிறுவனமும் தந்துள்ள சில முக்கிய தகவல்கள் இவை.

அரசின் முறைகேடான ஒப்பந்தம்

ரூபாய் 100கோடி மதிப்புக்கொண்ட துறைமுகக் கட்டிடங்களையும் பொருட்களையும் 153 ஏக்கர் நிலத்தையும் எவ்வித ஈட்டுத் தொகையையும் பெறாமல் அரசு சுபாஷ் நிறுவனத்துக்கு முறைகேடாக கொடுத்துள்ளது. 99 வருடத்திற்கு ஒரு சதுரஅடி 5 பைசா குத்தகை மதிப்பில் 153 ஏக்கர் நிலத்தையும் வழங்கியுள்ளது. துறை முகத்துக்கான மீதி நிலத்தை கையகப்படுத்த தேங்காய்த்திட்டு கிராமத்தின் 700 குடும்பங்களின் மனைப்பட்டாக்களையும் விளைநிலங்களையும் விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட 50 சதவீத மான்யம் அளிப்பதாக அறிவித்து வீராம்பட்டினம் ராஜீவ்காந்தி நகர் 300 மீனவக் குடும்பங்களையும் அவர்களின் பாரம்பரியமான வாழ்விடத்திலிருந்து வெளியேற சொல்கிறது.

அரசு துறைமுகம் கட்ட பொது ஒப்பந்த டெண்டர் கோரமலேயே இக்கம்பெனிக்கு அனுமதி அளித்தது. ஆனால் இந்த சுபாஷ் நிறுவனத்துக்கு இதுவரை துறைமுகம் கட்டிய முன் அனுபவம் கிடையாது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் ஏமாற்றியதால் 2002ல் மும்பை அரசு இந்த நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு அரசுடன் எந்த ஒப்பந்தத்திலும் ஈடுபடக் கூடாது என தடைவிதித்து கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. மும்பை அரசின் இந்த ஆணையை அவமதித்து இந்நிறுவனம் 2004ல் புதுவையில் துறைமுகம் கட்ட தனது விருப்பத்தை தெரிவித்து தலைமைத் செயலகத்துக்கு கடிதம் எழுதியது. நம் அரசும், அதிகாரிகளும் மும்பை அரசு விதித்துள்ள தடையை மீறி இந்த நிறுவனத்துக்கு துறைமுகம் கட்ட அனுமதி அளித்துள்ளனர். பிரஞ்சுக்காரர்கள் புதுவையை காலனியாட்சி செய்யும்போது கடற்கரையை ஆய்வு செய்து இங்கு பெரிய துறைமுகம் உருவாக்குவதற்கு ஏற்ற இயற்கையான சூழ்நிலை இல்லை என்று பெரிய துறைமுகம் கட்டுவதை கைவிட்டனர்.

நமது இந்திய அரசு நிறுவனமான தேசிய துறைமுக மேலாண்மை நிறுவனம் (NIPM) புதுவையை விரிவாக ஆய்வு செய்து பாறைகளற்ற பிடிப்பற்ற மண்வளம் பெரியத்துறைமுகம் கட்டுவதற்கு ஏற்றதல்ல என்று ஏற்கனவே அரசுக்கு அறிக்கையும் கொடுத்துள்ளது. ஆனால் புதுவை ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தோ மத்திய அரசிடமிருந்தோ அனுமதி பெறாமலும் மக்களின் ஆலோசனை கேட்காமலும் இத்திட்டத்துக்கு முறைகேடாக அனுமதி அளித்து இத்திட்டத்தை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் அவசரப்படுவது ஏன்? சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகட்டித்தர கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பைசாக்கூட அரசு செலவழிக்கவில்லை. (சுனாமி நிவாரண நிதி கிட்டத்தட்ட 1200கோடிக்கு மேல் புதுவைக்கு வழங்கப்பட்டது.)

தொண்டு நிறுவனங்கள் நிலம் கிடைத்த தென்பகுதியில் மட்டுமே 7000 வீடுகளைக் கட்ட முடிந்தது. ஆனால் புதுவை நகரின் வடக்கு மீனவ கிராமங்களுக்காக ஒரு அடி நிலம் கூட அரசால் வாங்க முடியவில்லை. அதனால் மீனவர்களுக்கான மேலும் 7000 வீடுகள் கட்டிதர முடியாமல் தொண்டு நிறுவனங்களும் பின்வாங்கிவிட்டன. ஆனால் மீனவர்களுக்கு நிலம் வாங்கி வீடுகட்டித்தர முன்வராத அரசு, சுபாஷ் நிறுவனத்துக்கு 400 ஏக்கர் நிலத்தை ஏழை எளிய விவசாயிகளிடமிருந்தும் மீனவர் களிடமிருந்தும் கைப்பற்ற தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அரசு தனது அதிகார வன்முறையின் மூலம் மக்களைப் பணிய வைத்து இத்திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என நினைக்கிறது.

ஆபத்துகள்

புதுவையின் நிலத்தடி நீர்மட்டம் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர்வரை வெறும் 10 அடிகளே. கடலை 16 மீட்டர் ஆழப்படுத்தினால் கடல்நீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்பாகும். புதுவை மக்கள் எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்காமல் தமிழக மக்களைப்போல் அவதிப்பட வேண்டும். ஏற்கனவே சிறிய மீன்பிடி படகுகள் நிற்க முகத்துவராத்தை 4 மீட்டர் அளவு 1989ல் ஆழப்படுத்தியதால் வில்லியனுர் சங்கராபரணி ஆறு உப்பாராக மாறிவிட்டது. வில்லியனூரில் இருந்த இரண்டு பெரிய குடிநீர்த்தேக்கத் தொட்டிகள் (2 லட்சம், 1.5 லட்சம் லிட்டர்) குடிநீருக்குப் பயன்படுத்த முடியாததாகிவிட்டது. அந்நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் பெற்றுவந்த புதுநகர் 1, புதுநகர் 2, புதுநகர் 3, கனுவாப்பேட்டை, கோட்டைமேடு கிராம மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். தற்போது தினமும் அப்பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் ஊற்றப்படுகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த 5000 குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையால் தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது புதுவை கிராமப்பகுதிகளில் பரவலாக குடிநீர்தட்டுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புதுவையின் கடற்கரையை ஒட்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நிலத்தடி நீரும் கடந்த மூன்று ஆண்டுகளாக உப்பாகிக்கொண்டு வருகிறது. புதுவையில் வசதிபடைத்த நகர மக்கள் உப்பு நீரைக் குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் வாங்கும் கலாச்சாரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல குடிநீருக்கு பெயர்பெற்ற புதுவை நகரப்பகுதியில் தண்ணீர் வியாபாரம் தற்போது பெருகிவிட்டது.

கடலுக்குள் 2 கி.மீ. தூரம் கற்கள்கொட்டி காங்கிரீட் தளம் அமைப்பதால் கடல் நீர் மீனவ கிராமங்களுக்குள் நுழையும் ஆபத்து. இச்செயற்கையான தடுப்பால் ஆண்டு முழுதும் நடக்கும் வடக்கு/தெற்கு (அ) தெற்கு/வடக்கு கடல் நீரோட்டம் தடைபடுவதலால் ஒவ்வொரு ஆண்டும் வடக்குநோக்கி நகரும் 9 லட்சம் கியூபிக்மீட்டர் மணல் மட்டும் அரித்துக் கொண்டே சென்று புதுவையின் நிலப்பகுதி விரைந்து கடலுக்குள் இழுக்கப்படும். புதுவையில் கடலரிப்பைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக ரூ.1000 கோடிக்கு மேல் செலவழித்து தொடர்ந்து கடலோரத்தில் கொட்டப்பட்டு வரும் கற்களால் புதுவை மற்றும் தமிழக வடக்கு மீனவ கிராமங்களான குருசுகுப்பம், வைத்திக்குப்பம், சோலை நகர், சோதனைக்குப்பம், கோட்டக் குப்பம், நடுக்குப்பம், தந்திராயன் குப்பம் என ஒவ்வொரு குப்பமாக கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.

மீனவர்கள் மீன்பிடி கருவிகளை வைக்கவோ வசிக்கவோ இடமில்லை. மகாபலிபுரம் கடற்கரை வரை இக்கடலரிப்பின் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மகாபலிபுரத்தின் வரலாற்று சின்னங்களுக்கும் இதனால் ஆபத்து.

மாதம் 30 முதல் 50 சரக்குக் கப்பல்கள் வந்து செல்வதால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அல்லது மீன்பிடிப்பை ஒரு சில மணிநேரத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப் படும். மீன்பிடித் தொழிலை மீனவர்கள் சுதந்திரமாக செய்ய முடியாது. தப்பித்தவறி மீனவர்கள் அப்பகுதிக்குள் நுழைந்துவிட்டால் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் தொழில் கருவிகள் பிடுங்கப்படும் அபாயமும் உள்ளது. புதுவைக்கு வந்து போகும் கப்பல்களுக்கு தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் புதுவை அரசு கொடுக்க வேண்டும். இதற்காக நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் பூமியின் உட்பகுதி உதிர்ந்து நிலம் சரியும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே புதுவை பூகம்ப ஆபத்துப் பகுதியில் ஆபத்தான 3வது இடத்தில் உள்ளது. இயற்கையான கடலையும் நில அமைப்பையும் நாம் அளவுக்கதிகமாக தொந்தரவு செய்வதால் இப்பகுதியில் பூகம்பம் வரும் வாய்ப்பு அதிகப்படுத்தப்படுகிறது.

கப்பலிலிருந்து ஏற்றி இறக்கும் சிமெண்ட், எண்ணெய், பெயிண்ட், வேதியியல் திரவங்கள், உரம் மற்றும் இரும்புக் கழிவுகள் கடலில் சிந்துவதால் கடல் மாசடைந்து மீன் உற்பத்தி குறையும். மீன் வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் மீன் கிடைக்காமல் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சரக்குகளை ஏற்றி இறக்க தினமும் 300 லாரிகள் வருவதால் ஏற்கனவே வாகன நெரிசலில் திணறிக் கொண்டிருக்கும் புதுவை சாலைகளில் நெரிசலுடன் விபத்துகளும், புகை மற்றும் இரைசல் மாசும் அதிகரிக்கப்போகிறது.

2700 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் திட்டத்தால் 1500 பேருக்கு மட்டுமே வேலை தரப்படும் என சுபாஷ் நிறுவன வலைதளம் சொல்கிறது. புதுவையிலுள்ள 15 மீனவ குப்பத்தைச் சேர்ந்த 30,000 மீனவர்களில் 10% பேர்கூட அரசு வேலைகளிலோ வேறு பெரிய தனியார் வேலைகளிலோ இல்லை. 90% மீனவ மக்கள் மீன்பிடித்தொழிலையும் அதன் துணைத் தொழிலையுமே நம்பி வாழ்கின்றனர். கடல் மாசாலும் சுனாமிக்குப்பிறகு மீன்வளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மீனவர் வாழ்வில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. துறைமுகம் வரும் தேங்காய்திட்டு கிராமத்தில் 70% பேர் சிறு விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகளே. அரசு வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் அமுல்படுத்த துடிக்கும் துறைமுகத்திட்டம் கிட்டத்தட்ட 30000 மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து 1500 பேருக்கு வேலைக்கொடுக்கும் திட்டம். என்ன தொலைநோக்குப் பார்வை நம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்.

இத்திட்டத்துக்கு 10 லட்சம் புதுவை மக்களும் தங்கள் நிலத்தடி நீர் ஆதாராத்தை தாரை வார்க்க வேண்டுமாம். 20 ஆண்டுகளாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் அரசு, புதுவை மாநிலத்தின் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் 42 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளைநிலங்கள் இன்று ரியல் எஸ்டேட் மற்றும் இரசாயன தொழிற்சாலைகளின் வரவால் 32 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கி விட்டது. வடமாநிலங்களில் தடைசெய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகைளுடன் புதுவைக்குள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கபட்டன. புதுவையை வளப்படுத்திய 80 ஏரிகளும், 500 குளங்களும், இரண்டு ஆறும் நச்சு கழிவுநீர் தேக்கங்களாகி காணமல் போய்க் கொண்டிருக்கின்றன. தற்போது சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சிறுவிவசாயி களிடமிருந்து சொற்பவிலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் கோடி கோடியாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். சென்ற ஆண்டு ரூ 400க்கு விற்ற சதுர அடி நிலம் இன்று ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

போராட்டங்கள்

1. காணாமல் போகும் குளம் மற்றும் ஏரிகளை பாதுகாக்கக்கோரியும் நிலத்தடி நீரில் கலக்கும் நச்சுக் கழிவுகளை தடுக்கக்கோரியும் அவ்வப் போது மக்கள் சிறு சிறு போராட்டங்களை நடத்தினர். கடந்த பத்தாண்டுகளில் இந்த ரசாயன தொழிற்சாலைகளால் ஏற்பட்ட அழிவு அதிகம் என்று புள்ளவிபரங்கள் பயமுறுத்திய தால் கடந்த ஆண்டு அரசு, இனிமேல் புதுவைக்குள் புதிய ரசாயன ஆலைகள் தொடங்க அனுமதி அளிக்க மாட்டோம் என உறுதியளித்தது. ஆனால் இன்றும் பழைய ஆலைகளின் நச்சுக் கழிவுகள் பூமிக்கடியிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும், கடலிலும் கலந்து கொண்டுதானிருக்கிறது.

2. துறைமுகத்திட்டம் வரபோகிறது என அறிந்தவுடனேயே அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பாலமோகன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து தடை ஆணை பெற்றார். உயர்நீதி மன்றம் சுற்றுசூழல் அமைச்சக அனுமதியின்றி இத்திட்டத்தைத் தொடரக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதை மீறிதான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 10ந்தேதி தேங்காய்திட்டு கிராமமக்களும் மீனவர்களும் இத்திட்டத்தை எதிர்த்து கண்டன ஊர்வலம் நடத்தினர். பிப். 14ல் மாசுக் காட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மீனவ, விவசாய மக்களின் எதிர்ப்பையும் மீறி ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறு சிறு கண்டன கூட்டங்கள், சுவரொட்டி, துண்டு பிரசுர வினியோகம் என கிட்டத்தட்ட மீனவ மற்றும் தேங்காய்திட்டு கிராமத்தினர் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட துணிந்தன. அரசியல்வாதிகளிடம் திட்டத்தைக் கைவிடக் கோரி மக்கள் சார்பில் மனுக்களும் அளிக்கப்பட்டன. மார்ச் 17ந் தேதி தேங்காய்த்திட்டு கிராம மக்கள் சுபாஷ் துறைமுக அலுவலகத்தை காலிசெய்துவிட்டுó வெளியேற கோரி அந்த அலுவலகத்தின் முன் மறியல் செய்து அதன் பெயர்ப்பலகைகளை அகற்றி போராடினர். இப்போராட்டத்தை புதுவையிலும் நந்திகிராமம் மாதிரி மக்கள் எழுச்சி என எல்லா பத்திரிக்கைகளும் எழுதின. திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு தனி தனியாக துறைமுகத்திட்டதை நிறுத்த கோரி ஆயிரக்கணக்கில் தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.

மார்ச் 27 சட்டசபை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் முதல்வர் ரங்கசாமி போராட்டக்குழுவை அழைத்துபேசினார். தேங்காய்த்திட்டு மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோம் என்று தெரிவித்தார். வல்லுநர் குழு அமைத்து, அக்குழு பரிந்துரையின் பேரில் அரசு செயல்படும் என்றார். முறைகேடாக அரசு கொடுத்த நிலத்தை திரும்பப் பெற வேண்டும். அத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட வேண்டும் அதுவரை எங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என அறிவித்தோம். 5000 மக்கள் திரண்டு சட்டசபை முற்றுகை போராட்டமும் குடும்ப அட்டை நகல் எரிப்பு போராட்டமும் நடந்தது. ஆண்கள் 3000பேர் பாஸ்கரன், காளியப்பன் தலைமையிலும் பெண்கள் 2000பேர் விமலா மற்றும் என் தலைமையிலும் கைதாகி விடுதலையானோம். ஏப்ரல் 12ந்தேதி தேங்காய்த்திட்டு கிராமத்தினர் இத்திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் அமைச்சர் வல்சராஜின் உருவபொம்மை பாடைக்கட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றபோது கண்மூடித்தனமாக போலீஸ் தடியடி நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் காயமடைந்தனர்.

தடியடி நடத்த தலைமையேற்ற ஆய்வாளர் மீது மிளகாய்பொடி தூவியதாகக் கூறி 307 மற்றும் பல பிரிவுகளில் ஐஸ்வர்யா, வைசூரி, ராஜலஷ்மி போன்ற பெண்கள் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்ட ஆண்கள் மீதும் நிறைய பொய்வழக்குகள் போடப்பட்டுள்ளன. அன்று 257பேரை போலீஸ் கைது செய்து மக்களின் போராட்டங்களுக்கு பிறகு விடுதலை செய்தது. புதுவை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தாலும் மத்திய அரசு புதுவை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க முன்வரவில்லை. மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் தேசத்தின் கவனத்தை புதுவை மக்களின் பிரச்சினை நோக்கி திருப்ப வேண்டும். அதற்காக மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களைச் சந்தித்து எங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு வலுசேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர் நம் ஏழை மீனவ, விவசாய மக்களின் வாழ்வுரிமைக்காக போராட தான் எங்கும் வருவதற்கு தயார் என உறுதியளித்தார். மே 15 அன்று தேங்காய்த் திட்டில் பயிரடப்படாத விவசாயநிலங்களை சீர்படுத்தி வாழைக் கன்றுகளை நட்டு கிராமத்தினரின் கைகளுக்கு நிலத்தை திருப்பும் புதியசெயல் முன்மாதிரியை உருவாக்கினோம்.

மே 17 அன்று காலை மேதா பட்கர் பாதிக்கப்பட்ட தேங்காய்த்திட்டு, வீராம்பட்டினம் மற்றும் தமிழக மீனவ கிராமமான தந்திராயன்குப்பத்திற்கு சென்று பார்வையிட்டு மக்களைச் சந்தித்து உரையாடினார். அன்று இரவு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். “புதுவை அரசு மீனவ, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது. முறைகேடாக போடப்பட்ட துறைமுகத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். சுபாஷ் கம்பெனிக்குக் கொடுத்த 153 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற வேண்டும். தேங்காய்த்திட்டு கிராம மக்களின் மீது போடப்பட்ட பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வளர்ச்சித்திட்டம் என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் முதலாளிகளும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் மக்களின் சொத்தை கொள்ளையடிப்பதற்காக இருக்கக்கூடாது. திட்டம் வேண்டாமா வேண்டுமா என்பதற்கு அரசு இதற்காக தனியாக ஒரு வல்லூனர் குழு அமைக்கத் தேவையில்லை. இது மக்கள் மன்றம். மக்களின் தீர்ப்பு துறைமுகம் வேண்டாம் என்பது. அரசு எப்போதும் மக்களின் தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும். இல்லை யென்றால் அரசு வாழாது” என எச்சரித்தார். புதுவை மக்களின் பிரச்சினையை இனி தேசிய அளவில் எடுத்துச் சென்று பேராடுவோம் என போராட்டத்துக்கு ஒரு உத்வேகம் கொடுத்தார்.

சிறிய நிலப்பகுதியான புதுவையில் ஆயிரக்கணக்கான மக்களும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இந்நாள் முன்னாள் சட்டசபை உறுப்பினர்களும் 30க்கும் மேற்பட்ட மக்கள் இயக்கங்களும் சேர்ந்து புதுவை அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தும் மக்கள் விரோத திட்டத்தை அரசு செயல்படுத்த முனைகிறது என்றால் நம் கிராம மக்களின் வாழ்க்கை பிரச்சினையை விட முதலாளிகளின் நலனை காக்க நினைக்கும் சக்தியின் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது புதுவைவாசிகளுக்கு புரியத் தொடங்கிவிட்டது. ஊழல் கப்பல் கப்பலாகவும் ஐந்து நட்சத்திர விடுதிகளாகவும் நங்கூரமிட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தலித், பழங்குடி, மீனவ மற்றும் விவசாயிகளுக்கு விரோதமான பல லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களைத் தனியார் முதலாளிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு வங்கிக்கு வசதியற்ற மக்கள் வேண்டும் ஆட்சி மட்டும் வசதிபடைத்த மனிதர்களுக்கானது. அரசு என்பது ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவும் முதலாளிகளுக்கு ஆதரவனதாகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தால் ஓட்டுப்போடும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தமது எளிய அறவழிப் பேராட்டத்தை மட்டுமே இனி எதிர்காலத்தில் நடத்திக்கொண்டிருக்க மாட்டார்கள் என்ற பாடத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கற்றுக்கொள்ள நேரம் வந்துவிட்டது. மக்களை அமைதியானவர்களாகவோ அல்லது ஆயுத பாணிகளாகவோ வைத்திருப்பது அரசுகள் அவர்களை வைத்திருக்கும் முறையைப் பொருத்தது.

- மாலதி மைத்ரி

Pin It