பெரிய திரை

மாதத்தின் சில நாட்களில்
செல்லாத காசாகிறேன்
சில்லறைகளை பொறுக்கிப் பொறுக்கி
மூளையில் குவித்தபடி

என்னை ஒதுக்கி வைக்கும்
அந்த நாட்களினூடே
அதிகமான புழக்கமும் புழுக்கமும்
நெருஞ்சி முள்ளாய்
என் உடலெங்கும்

என் வீட்டு
பரமசிவனின் பூஜை அறை
போர்த்தப்படுகிறது பெரிய திரையால்
பார்வதிதேவி எங்கு
போவால் அந்த
மூன்று நாட்களில்

பாசி



கறையேறிய சுண்ணாம்புப் பூச்சில்
சில சில கறையான்களும்
பலவகையான பல்லிகளும்
ஓடி விளையாட
பூ நிறைந்த மைதானமாயின
நாய்க்காரக் கிழவியின் வீடு

சீக்குப்பிடித்த கோழி
சொறிப்பிடித்த நாய்
ஊனமான ஆடு என
சிரிப்பும் பாட்டுமாய்
நாய்க்காரக் கிழவியின் வீடு

ஊரின் ஒட்டுமொத்த
பழைய சோற்றையும்
ஊசிப்போன குழம்பையும்
முகம் சுளிக்காமல்
தனது வட்டிலில் சேர்த்தியபடி
நிலாச் சோறு ஊட்டுவாள்
மூளை வளராது வயதிற்கு வந்த
யாரோ ஒருவனின் வாரிசான
அம்மிணிக்கு
ஊசிபாசிக்காரியின் உதவியோடு
அடிக்கடி
பட்டாபிஷேகம் செய்து பார்ப்பாள்

அடுக்குமாடி குரோட்டன்ஸ்
வரவேற்புப் பளிங்குத்தரை
என எதையும் எழுத இயலவில்லை
பாசிபடர்ந்து பாதியில் தொங்கும்
நாய்க்காரக் கிழவியின் வீட்டைத் தவிர

Pin It