பூக்காரி

அதிகம் பேசப்படாத
மலைக்கோயிலொன்றிற்கு
நான் சென்றிருந்த நேரத்தில்
யாரையுமே காண முடியவில்லை

கோயிலருகே ஒரேயொரு
பூக்கடை மட்டும் மேலே
ஏகாந்தமாய் நின்றிருந்தது

நடுத்தர வயது பூக்காரியொருத்தி
பக்கத்தில் வேடிக்கைப்பார்த்தபடி
ஆறு வயது சிறுவனொருவன்.
எங்களைத்தவிர யாருமில்லை

சிரித்தபடியே கடந்து சென்றேன்
கோயிலுக்குள்ளும் யாருமில்லை
பூசை செய்யவும் ஆளில்லை
ஏமாற்றமாய் திரும்பினேன்

என்ன விஷேசம் இந்தக்கோயிலில்
என்று விசாரித்தேன் பூக்காரியிடம்
சண்டை போட்டு
சிவனை பிரிந்த பார்வதி
கைக்குழந்தையுடன்
வந்தமர்ந்த மலையென்று
சலிப்பாக சொல்லியபடி
கோயிலுக்குள் நுழைந்தாள்

என்ன சண்டையென்று
நான் கேட்கவுமில்லை.
அவள் சொல்லவுமில்லை.


மீந்துப்போகும் சொற்கள்

ஹைதராபாத் செல்லும்
ரயில் பயணமொன்றில்
என் சகபயணி கையில்
முப்பது நாளில் தெலுங்கு
கற்றுக்கொள்ளும் புத்தகம்
வைத்திருந்தார்.

பேச்சினூடாக தான்
ஐந்து நாட்கள் மட்டுமே
தங்கப்போவதாகவும் சொன்னார்

விடைப்பெற்று இறங்கும்போது
மீந்துப்போகும் சொற்களை
என்ன செய்வார்
என்று யோசித்தேன்.

தொலைந்தப் பறவை

பெருநகரில் தொலைந்துப்போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது

புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்

குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்

இந்த ஸ்பரிசம் போலென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்

மூன்றையும் ஒன்று சேர்த்து
காட்ட முடிந்ததேயில்லை.

தனிமையில் ஒரு நட்பு

காலியாக வெறிச்சோடி
கிடந்த காலைப்பொழுதில்
ஒரு ரயில் நிலையத்தின்
தனித்து நின்ற
எடைபோடும் எந்திரத்தில்
ஏறி எடை போட்டேன்

வந்து விழுந்த அட்டையில்
எடையை பார்த்து
பின்புறம் திருப்ப
நண்பர்களிடம் பழகுமுன்
எடைபோடவும் என்று
அச்சாகியிருந்தது

சிநேகமாக சிரித்து
வைத்து நடந்தேன்.

- என்.விநாயக முருகன்

Pin It